தமிழ் விக்கி விருது- கடிதங்கள்

பெரியசாமித் தூரன் நினைவாக தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் வழங்கும் தமிழ் விக்கி -தூரன் விருது இவ்வாண்டு மு.இளங்கோவனுக்கு வழங்கப்படுகிறது. இளம் ஆய்வாளருக்கான சிறப்பு விருது எஸ்.ஜே.சிவசங்கருக்கு வழங்கப்படுகிறது. விழா விரைவில் ஈரோட்டில் முழுநாள் நிகழ்வாக நடைபெறும்

 

மு.இளங்கோவன் – தமிழ் விக்கி

மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053

மின்னஞ்சல் [email protected]

இனிய ஜெயம்

இவ்வாண்டு தூரன் தமிழ் விக்கி விருது ஒரே பொழுதில் இரண்டு ஆளுமைகளை சென்று சேருவதில் மிக்க மகிழ்ச்சி

மு. இளங்கோவன் அவர்கள் பழக இனியர். அவரது பணிகள் மதிப்பு மிக்கவை. குறிப்பாக தமிழிசை அறிஞர்கள் குறித்த நூல். விழா ஒன்றில் அந்த நூல் குறித்த துவக்க நிலை ஆய்வுகள் குறித்து இளங்கோவன் அவர்கள் உங்களுடன் பேசிக்கொண்டிருந்த போது நான் உங்கள் இருவர் பின்னால் அமர்ந்திருந்தேன், அவர் உத்வேகம் உங்களை தொற்றியதா அல்லது உங்கள் உத்வேகம் அவரை தொற்றியதா எது என்று வியக்க வைத்த உரையாடல். உங்கள் இருவர் பேச்சில் எழுந்த எந்த அறிஞர் பெயரையும் அதற்கு முன் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. அடுத்த விழாவுக்குள் இளங்கோவன் அதை நூலாக்கமே செய்து உங்கள் கைகளில் சேர்த்து விட்ட நினைவு

யெஸ்.ஜெ சிவசங்கர் அவர்களை அறிமுகம் இல்லை எனினும் அவரது அம்பேத்கார் கடிதங்கள், யாஓ மறைக்கப்பட்ட மார்க்கம் இரண்டு நூல்களை வாசித்திருக்கிறேன். இரண்டாவது நூல் மெய்யியல் ரீதியாக பௌத்தத்தில் இருந்து முகிழ்ந்தது போல தமிழ் நில மெய்யியல் ஒன்றில் இருந்து  ஜென் என ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? அதன் குரு சீட உரையாடல் போல அமைந்த நூல். வசீகரமான ஒன்று

இருவருக்கும் இவ்விருது சென்று சேர்வது என்பது தன்னளவில் இந்த விருது சூழலுக்கு சொல்லும் தனித்த சேதியும் கூடஇரண்டு ஆளுமைகளுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

கடலூர் சீனு

அன்புள்ள ஜெமோ

மு.இளங்கோவன்  குடந்தை சுந்தரேசனார், விபுலானந்த அடிகள் இருவர் பற்றியும் செய்திருக்கும் ஆய்வு மிக முக்கியமான பணி. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழிசைக்குப் பெரும்பணி ஆற்றியது. இன்று அண்ணாமலை பல்கலை கிட்டத்தட்ட செயல்படாமலேயே ஆகிவிட்டது. அது தபால்வழி கல்வி அளிக்கும் ஒரு நிறுவனமாக ஆகிவிட்டது. அத்துடன் தமிழிசைப்பணிகளும் தேங்கிவிட்டன. மு. இளங்கோவனைப் போன்றவர்கள் இத்தனை ஆர்வத்துடன் அதை முன்னெடுப்பது பெரும் மனநிறைவை அளிக்கிறது.  மு. இளங்கோவனின் இசைக்கலைஞர்கள் பற்றிய பெயர்த்தொகுப்பு ஒரு பெரும்பணி. அதை அவர் விரிவாக்கி ஓரு கலைக்களஞ்சியமாக ஆக்கலாம். குடந்தை சுந்தரேசனாரின் குறிப்புகளை அச்சேற்றவிருப்பதாக ஓரிடத்தில் சொல்லியிருந்தார். அதையும் அச்சேற்றவேண்டும். வாழ்த்துக்கள்

சிவக்குமார் எம்.

எஸ்.ஜே.சிவசங்கர்- தமிழ் விக்கி 

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100003825246295 

முந்தைய கட்டுரைசாகித்ய அகாடமி விருதுகள்
அடுத்த கட்டுரைஒரு குழந்தையிறப்புப்பாடல்- பதிவு