ஒரு ஞாயிறு அன்று காலை கப்பல்காரன் ஷாகுலிடம் இருந்து ஒரு செய்தி. இயல் விருது விழா முடித்து கனடாவிலிருந்து கிளம்பி எழுத்தாளர் சாம்ராஜ் லண்டனுக்கு 10 நாட்கள் பயணமாக வருகிறார் என்று. உலகின் வெவ்வேறு இடங்களில் பரவியுள்ள இலக்கிய நண்பர்களை கப்பலின் வழித்தடத்தில் இணைக்கும் ஷாகுலிடம் அன்றே எழுத்தாளரின் எண்ணை வாங்கி அவரது திட்டம் பற்றித் தெரிந்துகொண்டேன்.
முதன் முறையாக இங்கிலாந்துக்கு வரும் சாம்ராஜை பதிமூன்றாம் தேதி காலை ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்று அவரது தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார் எழுத்தாளர் கிரிதரன். அவர் வருகைக்குப் பின்னாக செல்ல வேண்டிய இடங்கள் பற்றி கிரிதரன், சிவா கிருஷ்ணமூர்த்தி, அனோஜன், முத்து கேசவன் உள்ளிட்டோர் ஏற்கனவே சில திட்டங்களை ஒருங்கிணைத்து இருந்தனர்.
ஸ்ட்ராட்போர்டில் உள்ள ஷேக்ஸ்பியரின் இல்லத்திற்கும், லண்டனில் உள்ள கார்ல் மார்க்சின் கல்லறைக்கும், தேசிய அருங்காட்சியகங்களுக்கும் நண்பர்களோடு சென்று வந்துகொண்டே இருந்தார்.
இறுதியில் ஞாயிறன்று லண்டனில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ‘புலம்பெறும் இலக்கியம்‘ பற்றியும், வேறு சில அமர்வுகளிலும் பங்குபெறும் எழுத்தாளர் சாம்ராஜை சந்திக்க கொவென்ட்ரியில் இருந்து நண்பர்கள் விக்னேஸ், பன்னீர் ஆகியோருடன் கிளம்பிச் சென்றேன்.
ஏற்கனவே கனடாவில் அவரை சந்தித்துத் திரும்பிய பழனி ஜோதி அவருடனான உரையாடல் அனுபவங்களை சனிக்கிழமை சுக்கிரி இணைய சந்திப்புக்குப் பின்னர் பெரும் உற்சாகத்துடன் கூறிக்கொண்டிருந்தார். எனவே பார்க்கச் செல்லும் முன்பே அந்த உற்சாகம் எங்களுக்குள்ளும் அதிகரித்தவாறிருந்தது.
புத்தகக் கண்காட்சி அன்று குறித்த நேரத்திற்கு முன்பே கிரிதரனோடு அரங்கத்திற்கு வந்து புத்தகங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்த மேசைகளுக்கு அப்பால் அமர்ந்து அன்றைய உரைக்காக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் சாம்ராஜ். அவரை முதல் முறையாக சந்தித்து அறிமுகமாகி விட்டு உரை தொடங்கும் முன் காலை உணவுக்காக அருகில் சிறு நடை செல்லத் துவங்கினோம். ஒரு குடும்பத்தால் நடத்தப்படும் அருகிலிருந்த ஒரு சிறு உணவகத்தில் ‘ஆங்கில காலை உணவு‘களை வாங்கி சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். அங்கு பணியில் இருந்த பெண்ணொருவரின் பரிவான கவனிப்பு உணவை இன்னும் சுவையாக்கியது.
கவிதை, நாவல்கள், வாசிப்பு, சினிமாவில் எழுத்தாளர்கள் என்று பல விஷயங்களைப் பற்றி உரையாடிக்கொண்டே திரும்பினோம். தன்னளவில் படிப்பதற்கும், எழுத்துப் பணிகளுக்குமான எதிர்காலத் திட்டங்களைப் பற்றிச் சொல்லும்போது, செயல்வழி முன்னெடுப்புகளாலும், புதிய திட்டங்களுக்கான நெகிழ்வுகளும் நிரம்பியவராகத் தோன்றினார் சாம்ராஜ். அவரது இலக்கிய ஆதர்சங்களைப் பற்றியும், நீண்டகால வாசிப்பின் விளைவாக உருவான பரிந்துரைகளைப் பற்றியும் விரிவாகவும் அதே நேரம் நொடிக்கொரு சிரிப்பினைத் தோற்றுவிக்கும் சம்பவங்கள் வழியாகவும் பகிர்ந்துக்கொண்டே இருந்தார்.
அரங்கத்தில், நடையில், உணவகத்தில் என ஒரு முழு நாள் முடிவில் அங்கிருந்து இருந்து கிளம்பி அவரது தங்குமிடம் சென்று மீண்டும் சில மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அவரைக் காணவந்த எழுத்தாளர்கள் அனோஜன் மற்றும் சயந்தனோடு இரவுணவுக்குக் கிளம்பியவரை கட்டியணைத்து விடைபெற்றோம். அன்று உரையாடியவற்றை மீண்டும் நினைவுபடுத்தி பேசிக்கொண்டே வீடு திரும்பினோம்.
ஒவ்வொரு சந்திப்பினையும் மேலும் சுவையாக ஆக்கும் சில விஷயங்கள் இங்கும் நடந்தன. புலம்பெயர் எழுத்தாளர்கள் பற்றிய தன் செறிவான உரையினை முடித்த பின்னர் சாம்ராஜை நோக்கி கேள்வி எழுப்புவதற்காக எழுந்த ஒருவர் தனக்கு இலக்கியங்கள், கவிதைகள் பற்றி எதுவும் தெரியாது என்று ஆரம்பித்து தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். கேள்வியை மட்டும் கேட்கச் சொல்லி ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்திய போது தனக்கு கேள்விகள் என எதுவும் இல்லையென்றும், ஆனால் பள்ளியில் படித்த கம்பராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திச்செல்லுமாறு கதை அமைக்கப்பட்டிருந்ததற்கு கம்பருக்கு தன் கண்டனத்தையும் வருத்தங்களையம் பதிவு செய்வதாகச் சொல்லி அமர்ந்தார்.
அமர்வுகள் முடிந்தபின் நண்பர்களோடு காலையில் சென்ற அதே கஃபேக்கு மீண்டும் சென்றோம். எங்களை அடையாளம் கண்டுகொண்டு வந்த பணிப்பெண்ணிடம் அவரது விருந்தோம்பலில் மகிழ்ந்துபோய்தான் திரும்பி வந்ததாகக் கூறியதும், சிரிப்பும் மகிழ்ச்சியுமாக எங்களுக்கான காபியையும் சிற்றுண்டியையும் அளித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அவரது குடும்பம், வியாபாரம், இங்கிலாந்தில் அவர்களது வாழ்க்கை என பல்வேறு விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார் சாம்ராஜ். இறுதியில் அந்த மாலையை அழகாக்கிய ரொமேனியாவைச் சேர்ந்த கேப்ரியாலாவிடம் விடைபெற்றுவிட்டு சிறு சாரல் மழையில் எங்களுடன் வெளியேறினார் அந்த ஒட்டுமொத்த நாளையும் அழகாக்கிய எழுத்தாளர் சாம்ராஜ்.
மீண்டும் அடுத்த சந்திப்புக்காக நண்பர்களோடு இணைந்து காத்திருக்கிறேன்.
அன்புடன்,
ராஜேஸ்.