«

»


Print this Post

மனமே-கடிதங்கள்


நலமாக இருக்கிறீர்களா?

மனமே கணமும் பாடலை சுப்புலக்ஷ்மியும் ஆபேரி ராகத்தில் தான் பாடியுள்ளார். ஆபேரி என்று சொல்வதைவிட பீம்பலாசி என்றே சொல்வது தகும் என்று நினைக்கிறேன். நுட்பமாக வித்யாசம் சொல்லத் தெரியாவிட்டாலும் பாவத்தைக் கொண்டு கண்டுபிடித்துவிடலாம். அதை விடுங்கள்.

எனக்கும் சஞ்சயின் பாட்டுதான் பிடித்தது. சுப்புலக்ஷ்மியின் பாட்டில்  ஒரு மிதமிஞ்சிய ஸங்கீத சுத்தம் உண்டு. அதனாலேயே மற்ற பாடகர்களை விட அவர் பிரபலமாக இருந்தார். அவருடய பெரும்பான்மையான ரசிகர்கள் அவரைத் தவிர மற்றவர்களை நிறையக் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. இவ்வளவு சுத்தமான பாட்டைக் கேட்டபிறகு  மற்றவர்களைப் பிடிக்காமல் போக வாய்ப்பு வேறு நிறைய உண்டு. சுப்புலக்ஷ்மியுடைய இந்த பிம்பம் அவருடய பதிவு செய்யப்பட்ட இசையைப் பெரும்பாலும் கேட்டதனால் விளைகிறது. அவருடய நேரடிக் கச்சேரிப் பதிவுகளைக் கேட்டால் அந்த அனுபவமே தனி.

நல்ல இசை அனுபவத்திற்கு ஸ்ருதி பிசகினாலும் பாவம் மேலோங்கி இருந்தாலே போதும். ஆனால் ஸ்ருதி பிசகாமல் பாவத்துடன் பாடக் கேட்டால் அதன் அனுபவமே தனி. அற்புதம் என்ற வார்த்தையால் வர்ணிக்க முடியாது. நாதஸ்வரமும் இந்த அனுபவத்தைக் கொடுக்கும். பெண்களில் நிறையப் பேர் அப்படிப் பாடாவிட்டாலும் பிருந்தா, வசந்தகுமாரி, பர்வீன் சுல்தானா போன்றவர்கள் இருக்கிறார்கள்.

– சீனு நரசிம்மன்


அன்புள்ள ஜெ

நலமா?

ஆபேரி(வடக்கே பீம்ப்ளாஸ்) ராகத்தைப் பற்றிய மனமே தினமும் பதிவு கண்டேன்.அற்புதமான இசை.  என்ன பாடுகிறார் என்பது கூடப் புரியவில்லை ஆனால் அதில் இருக்கும் உயிர் நம்மை ஈர்க்கிறது. ஆபேரி ராகத்தைப் பற்றிய என் பதிவு.

ஆனால் ஒரு விஷயத்தில் என் கருத்து வேறுபடுகிறது. பாடகியரிலும் அந்த ஆன்மீக வெளிப்பாட்டை எம் எஸ் சுப்புலக்ஷ்மியிடம் காணலாம். புஷ்பலதிகா ராகத்தில் அமைந்த இந்தப் பாடலைக் கேளுங்கள். அகலங்க என்ற இடத்தில் நிரவல் செய்யும் போது உச்சகட்டத்தை எட்டும் போது ஏற்படும் பரவசம் மிகவும் அபூர்வமானது

வர்ணம் போன்ற உணர்ச்சிகளற்ற இயந்திரத்தன்மை மிகுந்த உருப்படிகளைக் கூட அவர் ஆத்மார்த்தமாகப் பாடியிருப்பார். குறிப்பாக விரிபோணி என்ற பைரவி வர்ணம்.அதுவும் துரிதகதியில் பாடும் போது வேகம் கூடக் கூட அவரது மனமுருகிப் பாடும் தன்மை கூடிக் கொண்டே போகிறது.

எம் எஸ் ஒரு பஜனைப் பாடல்கள் பாடுபவராகவே பெரும்பாலும் அறியப்படுவது துரதிர்ஷ்டம் .ஆனால் தாங்கள் ஏற்கனவே எழுதியது போல்.அதற்கு அவரும் சதாசிவமும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.இருந்தாலும் அவரிடமும் உயிரின் அந்த ஆதியாற்றல் வெளிப்படுகிறது என்பது என் கருத்து. (அபூர்வமாக இருக்கலாம்). பலரும் உயிரே இல்லாமல் பாடும் குறை ஒன்றும் இல்லை என்ற பாடலைக் கூட உயிர்ப்போடு பாடுவதைக் கேட்கலாம்.

இசையைஅனுபவித்துப் பாடிய சிலர் எம்டி ஆர், மதுரை மணி ,எம் எஸ்,மஹாராஜபுரம் சந்தானம் போன்றவர்கள். இதில் எம் டி ராமநாதன், சந்தானம் போன்றவர்கள் பாடும் முறை ஒரு குழந்தை ஐஸ்க்ரீமை ரசிப்பதுபோல், ஒரு நல்ல உணவை ருசிப்பது போல் உற்சாகமானது. ஆனால் எம் எஸ் இசையை ஒரு தவமாக,ஒரு ஆன்மீக அனுபவமாக நினைத்தார் என எண்ணுகிறேன். ஆகவே அவரிடம் அந்தப் பரவச உணர்வு ஏற்படுவது இயற்கையே. ஆனால் சஞ்சயிடம்(எம் டி ஆர்,சந்தானத்திடமும்) இருக்கும் கொண்டாட்ட குதூகுல உணர்வு எம் எஸ் சிடம் இருக்ககாது (நீர் கொப்பளிக்கும் உணர்வு) என்பது உண்மையே. ஆனால் அந்த ஆன்மீக அனுபவமாதல் (sublimation) எம் எஸ்சிடம் மிகுதியாக இருக்கிறது. நுண்கலை அனுபவங்கள் அந்தரங்கமானவை என்ற தங்கள் வாக்கியம் அக்ஷர லட்சம் பெறும்.

மிக்க அன்புடன்
Dr.ராமானுஜம்
சென்னை

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/18472