தலையில் தேய்க்கும் எண்ணை விஷயத்தில் மலையாளிகளுக்கு உள்ள அதீதமான கவனம் ஒரு முக்கியமான பண்பாட்டுக் கருப்பொருள். தினமும் தலையில் எண்ணை தேய்த்துக் குளிப்பது அவர்களின் வழக்கம். பழைய கால ஆவணங்களில் ஒரு நபருக்கான குறைந்தபட்சச் செலவைக் குறிப்பிடும்போது இரண்டுநேர உணவு, தலைக்கு எண்ணை, வருடத்திற்கு இரு துணி என்று சொல்லும் வழக்கம் இருந்தது. பொதுவாக இது தேங்காய் எண்ணைதான். பச்சை எண்ணை தேய்க்கும் வழக்கம் அனேகமாக கேரளத்தில் கிடையாது. தினமும் எண்ணைதேய்த்துக்குளிக்காத பிற மானுட விரிவை முழுக்க ஏளனமாகப்பார்ப்பது மலையாளப்பழமைவாதம்.
எண்ணையைக் காய்ச்சி அதில் உள்ள நீரின் அம்சத்தைக் களைந்து சற்றே கெட்டியாக ஆக்கித்தான் தேய்ப்பார்கள். இதைத்தவிர ஆயுர்வேத மூலிகை எண்ணைகள் ஏராளமாக உண்டு. அவற்றில் காயத்திருமேனி எண்ணை ஓர் அரசன். கேரள மருத்துவத்தில் எண்ணைதேய்த்தல் ஒரு முக்கியமான கூறு. பழங்கால கேரளம் எந்நேரமும் மழையும் சாரலுமாக இருக்கும் பூமி. மேலும் நீர்நிலைகளில் தினம் இருவேளை மூழ்கிக்குளிக்கும் வழக்கமும் உண்டு. அன்றெல்லாம் நனையாமலிருக்கவும் வழி இல்லை. ஆகவே இந்த எண்ணை தேய்க்கும் வழக்கம் வந்திருக்கலாம். எண்ணை இல்லாவிட்டால் நீர்த்தோஷம்– சளி, தலைவீக்கம்- வரும் என்பது கேரளத்துக் கூற்று.
கைதோநி -இலை
பொதுவாக தேங்காயெண்ணையை கொதிக்கச் செய்யும்போது கொஞ்சம் சீரகமும் ஒருசில நல்லமிளகும் போட்டு அவை பொரிந்ததும் எடுப்பது வழக்கம். அதை புட்டியில் ஊற்றி வைத்திருப்பார்கள். தேவைக்கு உள்ளங்கையில் அரைக் கரண்டி விட்டு தேய்த்துக்கொள்வார்கள். எண்ணையை உடலில் தேய்த்துக்கொண்டு சற்று நேரம் கழித்து குளிப்பார்கள். பொதுவாக சருமத்தை வரட்சியடையாமல் வைத்திருக்கவும் முடி உதிராமல் தடுக்கவும் இது உதவியது. பழங்கால கேரளத்தில் மயில்தோகைபோல கூந்தலில்லாத பெண்ணைக் காண்பதே அபூர்வம். இப்போதும் இந்தியாவிலேயே அழகிய கூந்தல் கேரளத்தில்தான் அதிகம் காணக்கிடைக்கும்.
மலர்
இயற்கை சமன் செய்கிறது. பொதுவாகவே கேரளத்தில் ஆண்களுக்கு தலையில் முடி இருப்பதில்லை. அந்த முடி மார்பிலும் கைகால்களிலும் இருக்கும். வழுக்கையும் தொப்பையும் இல்லாதவன் நாயரே அல்ல என்றுகூட அக்காலத்தில் சொல்வார்கள். வழுக்கை காரணமாக தலைநீர் இறங்கி சளி மற்றும் தலை நோய் வரும் என்பதனால் ஆண்களுக்கு எண்ணைதேய்ப்பது இன்னும் முக்கியமானது. கேரளத்தின் நீர்வெக்கை மிக்க தட்பவெப்பத்தில் குளியல் ஒரு பெரிய இன்பம். என்னைப்பொறுத்தவரை நீலநீர் தேங்கிய குளிர்ந்த குளத்தில் அல்லது சுழித்தோடும் ஆற்றில் பாறைச்சரிவில் குளிக்கும்போதே கேரளம் என்ற அனுபவம் கிடைக்கிறது.
தென்குமரி நாட்டில் அன்றெல்லாம் வீட்டிலேயே தலைத்தைலம் செய்துகொள்வோம். தேங்காயெண்ணையில் சில மூலிகைகளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி எடுப்பதுதான் அது. நல்ல தேங்காயெண்ணையே போதும். ஆனால் எங்கள் வீட்டில் செக்கெண்ணையைக்கூட நம்ப மாட்டோம். முற்றத்துத் தென்னையில் தேங்காய் பறித்து, துருவி ஆட்டுக்கல்லில் அரைத்துச் சாறு எடுத்து, அதை உருளியில் விட்டு கொதிக்கச்செய்து வற்றவைத்து மேலே திரண்டுவரும் எண்ணையை மெல்ல பலாஇலைக்கரண்டியால் அள்ளி எடுத்து ஒரு புட்டியில் விட்டு நீரைத்தனியாகப்பிரித்து எடுப்போம். மணமான இந்த எண்ணைக்கு உருக்கெண்ணை என்று பெயர். எஞ்சிய தேங்காய்க்கசடில் கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் அபூர்வமான தின்பண்டம் அது.
இதனுடன் சேர்க்கும் முக்கியமான மூலிகையின் பெயர் கைதோநி. இதை வடகேரளத்தில் கய்யோணி என்று சொல்வார்கள். ஆயுர்வேத நூல்களில் கையூண்யம். நவீன அறிவியலில் Eclipta prostrate -Asteraceae. இதை வயல்வரப்புகளில்தான் அதிகமாகப் பறிக்கலாம். நாங்கள் கிளம்பிச்சென்று கைநிறைய பறித்துவருவோம். அதில் கலந்துள்ள பிற தாவரங்களை கவனமாக விலக்கியபின் உரலில் போட்டு இடித்து பிழிந்து சாறெடுத்து தனியாக நன்றாக கொதிக்கச்செய்தபின் தேங்காயெண்ணையுடன் சேர்த்து மேலும் கொதிக்கச்செய்வோம்.
கைதோநி- இலைமூட்டுகள்
அதில் நல்ல மிளகு போடும்போது அக்கணமே மிளகு பொரிந்து மேலே எழுந்து வரும்வரை கொதிக்கச்செய்வோம். அப்போதுதான் அதில் நீர் அம்சமே இல்லை என்று பொருள். வெளியேறும் ஆவியில் எவர்சில்வர் தட்டைக் காட்டி நீர்முத்து வருகிறதா என்று பார்ப்பதும் உண்டு. பின்னர் ஆற வைத்து புட்டிகளில் சேமிப்போம். மூன்று மாதம் வரை வைத்திருப்போம். பச்சைநிறமான மணமான இந்த எண்ணை மிகச் சிறந்த ஒரு ஆயுர்வேத தலைத்தைலம். பிரபலமான கேசவர்த்தினி எண்ணையில் கைதோநி உண்டு என்பார்கள். ஆனால் இப்போது ஆயுர்வேத நிறுவனங்களை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.
நிறைய நீர் தேவைப்படும் கைதோநி பொதுவாக நீரோடைகளை ஒட்டியே வளரும். இவை நிமிர்ந்து வளரக்கூடியவை. கிளைகளாக வளரும் செடி இது. தண்டு தவிட்டு நிறமாகவும் சற்றே மென்மயிர் கொண்டதாகவும் இருக்கும். மூன்று சென்றிமீட்டர் இடைவெளியில் இலைமுட்டுகள் காணப்படும். ஒரு இலைமூட்டில் இரு இலைகள் உண்டு. இலைகள் பக்கவாட்டில் மலர்ந்தவை. பச்சை நிறமான இலைகள் நீளமானவை. ஐந்து சென்றிமீட்டர் நீளமும் இரண்டு சென்றிமீட்டர் அகலமும் பொதுவாக காணப்படும்.
கைதோநியின் பூக்கள் மிகச்சிறியவை. வெண்ணிறமான சிறிய இதழ்கள் வரம்பிட்ட வட்டத்தின் நடுவே மஞ்சரி வெண்மஞ்சள் கொத்தாக காணப்படும். வெண்ணிறமான குட்டியூண்டு சூரியகாந்தி என்று சொல்லலாம். பொதுவாக மாடுகள் இதை மேய்ந்துசென்றுவிடுவதனால் தேடிப்போனால்தான் கிடைக்கும்.
காட்டுபூவான கைதோநி ஒரு முக்கியமான ஆயுர்வேதமருந்தாகும். மிகத்தொன்மையான நூல்களில் இந்த மூலிகை பற்றிய குறிப்பு உள்ளது இதை அரைத்து சாறாக்கி குடித்துவந்தால் ஈரல் வீக்கங்கள் குறையும். குடிநோய்க்கு இது சிறந்த மருந்து என்கிறார்கள். சீன மூலிகை மருத்துவத்திலும் இதை ஈரல்நோய்களுக்குப் பயன்படுத்திவருகிறார்கள். ஆயுர்வேதத்தில் செரிமானச்சிக்கல் கொண்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் நம்பகமான மருந்து இது.
கைதோநி எண்ணைக்கு முடி உதிர்தலை நிறுத்தவும், ஆரோக்கியமான முடிவளர்ச்சியை உறுதிசெய்யவும் சக்தி உண்டு. பதற்றம்,மன அழுத்தம் தொடர்பான பலவகையான தலைநோவுகளுக்கும் கண்பார்வைச் சிக்கல்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். முக்கியமாக கைதோநி எண்ணை தூக்கமின்மை நோய்க்கு மிகமிகச் சிரந்த மருந்து. நான் என் இருபது வயது வரை வேறு எண்ணையே தேய்த்ததில்லை.
திருவட்டார் கோயிலுக்கு கதகளி ஆடுவதற்காக வந்திருந்த கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் என்னிடம் கைதோநி எண்ணை வேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. நான் உடனே அவசரமாக வீட்டுக்கு ஓடி என் மாமியிடம் தகவல் சொன்னேன். அவர்கள் கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் மீதான பக்திப்பெருக்கில் ஒரு ஹார்லிக்ஸ் புட்டி நிறைய எண்ணை கொடுத்தனுப்பினார்கள். கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ”கிருஷ்ணனுக்கு என்று சொன்னாயா இல்லை கேசவனுக்கு என்று சொன்னாயா?”என்றார். கேசவன் கோயில் யானை. நான் வெட்கிச் சிரித்தேன்.
இப்போதும் தென்குமரியில் ஏராளமான வீடுகளில் கைதோநி எண்ணைதான் காய்ச்சி தேய்க்கிறார்கள். பத்மநாபபுரத்தில் இருக்கையில் புல்லறுக்கச் செல்லும் பெண்களும் வாழைவயலுக்கு நீர் இறைக்கச் செல்பவர்களும் கைதோநி பறித்துக் கொண்டு வந்து விற்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் மெல்லமெல்ல அடுத்த தலைமுறையில் இவ்வழக்கம் இல்லாமலாகும். வீட்டுமருந்துகளைச் செய்து பயன்படுத்தும் அளவுக்கு நிதானமான வாழ்க்கை கிட்டத்தட்ட மறைந்தே விட்டது.
============================================================
மறுபிரசுரம்/ முதல் பிரசுரம் 2009 பெப்ருவரி
http://www.ppws.vt.edu/scott/weed_id/eclpr.htm
http://www.ibiblio.org/pfaf/cgi-bin/arr_html?Eclipta+prostrata
மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை
நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்
நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்