இந்துமதத்தின் தெய்வத்திற்கு உருவம் உண்டா?

இந்துமதம் – தொகுப்பு

இந்துமதக் கல்வி என்பது இருநூறாண்டுகளுக்கு முன்புவரைக்கும் வெவ்வேறு வடிவில் நம் சூழலில் இருந்துகொண்டிருந்தது. ஆலயம் சார்ந்த கலைகளும் கதைசொல்லல்களும் விரிவுரைகளும் பல வடிவங்களில் மதக்கொள்கைகளை மக்களிடையே கொண்டுசென்றன. இன்னொரு பக்கம் நாட்டுப்புறக் கலைகளும் கதைசொல்லும் முறைகளும் அதற்குச் சற்றும் குறைவில்லாதபடி மதக்கொள்கைகளை மக்களிடையே விளக்கின.

அண்மைக்காலமாக தமிழக நாட்டுப்புறக் கலைகளிலும் கதைகளிலும் விளக்கப்பட்டிருக்கும் உயர்தத்துவம் மற்றும் மதச்செய்திகளை கவனித்து வருகிறேன். பிரமிப்பூட்டுவதாக உள்ளது. முழுக்க முழுக்க நாட்டுப்புறக் கதைகளில் இருந்து உதாரணங்களையும், வரிகளையும் மேற்கோள் காட்டி மொத்த இந்து மெய்ஞான மரபையும் விளக்கிவிட முடியும்.

நம் இந்தியக்கிராமங்களின் வாழ்க்கை சென்ற இருநூறாண்டுகளில் பஞ்சங்களாலும் போர்களாலும் சிதறுண்டது. பதினேழாம் நூற்றாண்டில் மராட்டியப் பேரரசும் நாயக்கர் பேரரசும் வீழ்ச்சியடைந்தபின் வலுவான அரசுகள் இல்லாமல் அராஜக காலகட்டம் அரைநூற்றாண்டு நீடித்தது. ஐரோப்பியர் இந்தியாவை கைப்பற்றினர். ஆங்கிலேய ஆட்சியின் சுரண்டலால் 1770களிலும் இறுதியிலும் 1870 களிலும் வந்த இரண்டு மாபெரும் பஞ்சங்களால் பழைய அமைப்புகள் எல்லாமே சிதைந்தன. பல லட்சம் பேர் பட்டினியால் மடிந்தனர். பலகோடிப்பேர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். பல லட்சம்பேர் அன்னிய நாடுகளுக்கு பஞ்சம்பிழைக்கச் சென்றனர்.

இந்தச் சிதறடித்தலால் முதலில் அழிந்தவை மரபான ஞானமும், கலைகளும்தான். நம் பழைய அமைப்பில் மரபான அறிஞர்களையும் கலைஞர்களையும் அரசர்களும், சிற்றரசர்களும், நிலக்கிழார்களும், வணிகர்களும் பேணவேண்டும். பஞ்சத்தால் அதிகாரமும் பணமும் கொண்டிருந்தவர்கள் நலிந்தனர். விளைவாக அறிஞர்களும் கலைஞர்களும் கைவிடப்பட்டனர். அவர்கள் கற்பித்த ஞானமும் மறைந்தது.

இன்றும் அக்கலைகளில் ஒரு பகுதி உள்ளது. அந்த நூல்களில் பெரும்பகுதி கிடைக்கிறது. ஆனால் நாம் அதிலிருந்து மானசீகமாக விலகி வந்துவிட்டோம். பிழைப்புக்கான கல்வி தவிர எதிலுமே ஆர்வமில்லாதவர்களாக ஆகிவிட்டோம். உலகிலேயே தங்கள் மதம் பற்றி அனேகமாக ஏதுமறியாத மக்கள் இந்துக்கள் மட்டுமே. ஒரு மதத்தில் இருந்தாலும் அதன் ஆன்மிகம் பற்றிய அடிப்படையே தெரியாத மதப்பிரச்சாரகர்கள் கொண்டதும் இந்து மதம் மட்டுமே. அது இந்த வரலாற்றுச்சூழலால் உருவான ஓர் அவலநிலை.

இந்து மதத்தில் தெய்வத்திற்கு உருவம் உண்டா? இக்கேள்விக்கு, ஆம் உண்டு என்றுதான் பெரும்பாலான இந்துக்கள் பதில் சொல்வார்கள். ஏனென்றால் எல்லா கோயிலிலும் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. எல்லா பக்தித்தோத்திரங்களிலும் கடவுளின் உருவம் வர்ணிக்கப்படுகிறது.

ஆனால் ஒருவர் ஏதேனும் ஒரு பக்திப்பாடலை கொஞ்சம் கவனித்தாலே இந்து மதம் தெய்வத்தைப் பற்றிச் சொல்வது வேறு என்று புரிந்துகொள்வார். பழனிக்கோ திருச்செந்தூருக்கோ சென்று முருகனை வணங்குகிறோம். அது முருகனின் உருவத் தோற்றம். ஆனால் கூடவே கந்தரலங்காரத்தையும் பாடுகிறோம். அந்தப்பாடல் சொல்வதென்ன?

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய், கதியாய் விதியாய்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே

உருவாகவும் அதேசமயம் உருவில்லாத அருவாகவும், உள்ளவனாகவும் கூடவே இல்லாதவனாகவும், அரும்பாகவும் அது மலர்ந்த மலராகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அக்கருவின் உயிராகவும், விசையாகவும் அந்த விசையின் விதியாகவும் வருவாய் முருகா என்று அருணகிரிநாதர் அழைக்கிறார்.

இறைவன் இருத்தல் இல்லாமலிருத்தல், உருவம் அருவம் என முரண்படும் இரண்டு நிலைகளிலும் இருக்கிறான் என்பதே இப்பாடலின் சாரம். ஏனென்றால் அப்படி இருந்தால்தான் அது முழுமை.

இப்படி ஆயிரக்கணக்கான பாடல்களை எடுக்க முடியும்.

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவுலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன், அம்பலத்தாடுவான்’

என பெரியபுராணத்தின் முதல் பாடல் சொல்கிறது. உலகை முழுக்க உணர்ந்தாலும் உணர்ந்துகொள்ள முடியாதவன் என அருவமான கடவுளைச் சொல்லி அதே மூச்சில் நிலவும் கங்கையும் தலையில் சூடியவன் என உருவக்கடவுளாகவும் அதைச் சொல்கிறது. அலகில்லாத ஒளி அது என சொல்லி கூடவே அம்பலத்தில் ஆடுபவன் அவன் என்கிறது.

வைணவர்கள் நம்மாழ்வாரின்

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே

என்ற பாடலை நினைவுகூரலாம். இறைவன் உள்ளான் என்றால் உள்ளான். அவனுடைய உருவம்தான் இவையெல்லாம். அவன் இல்லை என்றால் இல்லை. அவனுடைய அருவம்தான் இங்குள்ள சூனியங்கள் அனைத்தும். உள்ளவன், இல்லாதவன் என்னும் இரு குணங்களுடன் எங்கும் நீக்கமில்லாபடி நிறைந்தவன் அவன் என்பது இப்பாடலின் பொருள்.

அப்படியென்றால் இந்து மரபு என்ன சொல்கிறது. இந்துமரபு உருவகிக்கும் இறை என்பது மற்ற மதங்களுடன் ஒப்பிட மிகமிக மேம்பட்டது, மிக நுட்பமானது, தத்துவார்த்தமானது, உள்ளுணர்வு சார்ந்து புரிந்துகொள்ளப்படவேண்டியது.அதை ஒரு புதிராக இந்து மரபு சொல்கிறது. அது ஒரு முரண்நிலை உண்மை. ஆங்கிலத்தில் இதை dialectics என்கிறார்கள். பழையநூல்களில் இது யோகாத்ம சத்யம் எனப்படுகிறது. யோகம் என்றால் இணைவு. அதாவது முரண்படும் தரப்புகள் இணைந்தால் மட்டும் உருவாகும் உண்மைதான் இறை. அது ஒரு தீராத மர்மம். நடராஜ குரு “There is a lurking paradox in the heart of absolute” என்கிறார்.

மிகத்தொன்மையான ரிக்வேதத்தில் கூறப்படும் இறை என்பது பிரம்மம். அது தூய தத்துவ உருவகம். உருவமற்றது. மனிதர்கள் போடும் எந்த அடையாளங்களும் அற்றது. எந்த வகையிலும் நம்மால் புரிந்துகொள்ளவோ, அடையாளப்படுத்தவோ முடியாதது.

ரிக்வேதம் அதை பிரம்மம் என்கிறது. பிரம்மத்தை விளக்கும் சிருஷ்டிகீதம் என்னும் பாடல் ரிக்வேதம் பத்தாம் காண்டத்தில் உள்ளது. பிரம்மம் என்பது எவ்வகையிலும் அறியமுடியாதது, விளக்கமுடியாதது என்று அது சொல்கிறது.  அந்தப்பாடலின் விரிவான வடிவமே இந்து மரபின் பிற ஞானிகளின் சொற்களில் வெளிப்படுகிறது.

ஆனால் உடனே அடுத்த கேள்வி எழுகிறது. அறியமுடியாதது பிரம்மம் என்றால் அதை அறியமுடியாது என்று உணர்ந்தவர் யார்? அதுவே ஓர் அறிதல்தானே? பிரம்மம் என ஒன்று உள்ளது என்றால் இங்குள்ள எல்லா பொருட்களும் வேறானவையா?

பிரம்மம் முழுமையாக அறியவோ விளக்கவோ முடியாதது. ஆனால் ஒவ்வொருவரும் எப்படியோ அதை கொஞ்சமேனும் உணரவும் முடியும். ஒரு சின்னப் பூச்சியில் வெளிப்படும் தாய்மையில் அதை உணரமுடியும். கோடானுகோடி கோள்களும் நட்சத்திரங்களும் திகழும் வானைப் பார்க்கையிலும் அதை உணரமுடியும். நம் உடலை கவனித்தாலே உணரமுடியும். அந்த உணர்வுதான் பிரம்மம் வெளிப்படும் நிலை.

பிரம்மம் வேறெங்கோ இருக்கிறது, இங்குள்ள இயற்கையும் பிரபஞ்சமும் அதில் இருந்து வேறு என்றால் பிரம்மத்தை நம்மால் எப்படி உணர முடிகிறது? அதற்கு விடையாகத்தான் இங்குள்ள அனைத்துமே பிரம்மம்தான் என உணர்கிறது வேதம். பிரம்மம் அன்றி எதுவுமே இல்லை. அனைத்துமாகி நிற்பது அது. அனைத்தையும் கடந்தது அது.

’இறைவன்’ என ஆண் அடையாளத்துடனேயே உலகம் முழுக்க மதங்கள் இறையை சொல்கின்றன. ஆனால் நம்மாழ்வார்

ஆண் அல்லன், பெண் அல்லன், அல்லா அலியும் அல்லன்,

காணலும் ஆகான், உளன் அல்லன், இல்லை அல்லன்,

பேணுங்கால் பேணும் உரு ஆகும்

என்கிறார். இறை என்பது ஆண் அல்ல, பெண் அல்ல, இரண்டுமல்லாத நிலையும் அல்ல, காணமுடியக்கூடியவனும் அல்ல, உள்ளவன் அல்ல, இல்லாதவனும் அல்ல. ஆனால் நாம் எண்ணினால் நாம் எண்ணும் உருவில் அவனே இருக்கிறான்.

இந்த நிலையில் இருந்துதான் நாம் எதையெல்லாம் இறை என எண்ணுகிறோமோ அவையெல்லாம் இறைவடிவமே என்னும் கருத்து உருவானது. எல்லாமே தெய்வங்கள், ஆனால் தெய்வம் இவையெல்லாமும் ஆகி அப்பாலும் அமைந்தது. உருவமற்ற தெய்வத்தை நிர்குண பிரம்மம் என்றனர். அடையாளங்களோ இயல்புகளோ அற்ற தெய்வம். நம் அறிதல் வழியாக நமக்காக உருவம் கொண்ட தெய்வத்தை சகுண பிரம்மம் என்றனர். குணங்களும் அடையாளங்களும் கொண்ட தெய்வங்கள் அவை. சிவனும் விஷ்ணுவும் அய்யனாரும் சுடலைமாடலும் அவ்வகைப்பட்டவை.

அதாவது இறை உருவமற்றது, முதல்முடிவற்றது. இருத்தல் இல்லாமலிருத்தல் எனும் இருநிலைக்கு அப்பாற்பட்டது. இங்கிருக்கும் எல்லாமே இறைதான். ஆகவே இங்குள்ள எல்லா உருவங்களும் அதுதான். ஆகவே எந்த உருவில் நாம் அதை உணர்கிறோமோ அந்த உருவம் அதன் உருவமே. இந்த இருநிலை உண்மைதான் இந்துமதத்தின் இறைக்கருத்து. இதை கொஞ்சம் நுண்ணுணர்வைக்கொண்டு உள்வாங்கிக் கொண்டாலொழிய இந்துமதத்தின் இறைக்கருத்தை புரிந்துகொள்ள முடியாது.

நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடும் சுடலைமாடன் பாடலில் ஒரு வரி இப்படி சொல்கிறது.

பூவாகி வந்தானே ஏ சுடலை

பூவின் மணமாகி வந்தானே ஏ சுடலை

மணத்தின் நெனைப்பாகி வந்தானே ஏ சுடலை

இதுவும் அதையே சொல்கிறது. பூ உருவம் கொண்டது. பூவின் மணம் வெறும் அறிதல். நினைப்பு அந்த அறிதலுக்கு அப்பாற்பட்ட உணர்வு. அந்த உணர்வு எழும் உள்ளமாகி வந்ததும் சுடலையேதான். இந்து மதத்தில் மேலிருந்து கீழ் வரை எல்லா இடங்களிலும் இருப்பது இந்த இருநிலைப்பட்ட தெய்வ உருவகம்தான்.

இந்துமதம் – தொகுப்பு

முந்தைய கட்டுரைசூர்யகாந்தன்
அடுத்த கட்டுரைதேவர் மகன் -கடிதம்