குமரகுருபரன் விருது, கடிதம்

விக்னேஷ் ஹரிஹரன்

வணக்கம் ஜெ,

என் இந்திய பயணங்கள் எப்பொழுதும் அடர்த்தியானவை. அம்மா, அப்பா, உறவினர்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், என் வாழ்வின் மிக முக்கிய நிகழ்வுகளை அரங்கேற்றிக்கொண்ட சென்னையின் தெருக்கள் சுற்றுவது என் மனதுக்கு நெருங்கிய ஒன்று. இதனுடன் படிக்க வேண்டும் என நினைக்கும் பல்லாயிரம் புத்தகங்களில் ஒன்றையாவது வாங்கி விடவேண்டும் என சில புத்தகக்கடைகளையும் நோட்டம் விட்டு வருவேன்.

கடந்த சில வருடங்களாகத்தான் இலக்கிய நிகழ்வுகளுக்கும் சென்று கொண்டிருக்கிறேன். சென்னையை விட்டு வெகு தொலைவிலும், மிக அருகிலும் இல்லாத வேலூரில் என் பெற்றோர் இருப்பதால், காலை வந்து சாயும் நேரம் வீட்டிற்கு இரவுணவிற்கு வருவது சாத்தியம் என்பதால் இது எப்பொழுதும் நடக்கும். இந்த முறை, விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது என் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இரண்டு காரணங்கள்,

ஒன்று, ஒரு இலக்கிய நிகழ்வு எப்படி ஒரு தொழில்நுட்ப கருத்தரங்கைப் போல நுனி பிசகாமல் நடக்கும் என்பதை பார்ப்பது.

இரண்டு, உங்களை எட்ட நின்று பார்த்துக்கொண்டிருப்பது.

இரண்டையும் சொல்லிக்கொடுத்தது சொல்லியபடியே செய்த குழந்தையாக செய்துவிட்டேன்.

வேல்கண்ணன் கல்பனா ஜெயகாந்திடமிருந்து பரிசு பெறுகிறார். நடுவே ஆனந்த்குமார்

கிண்டியில் இருந்து, மயிலாப்பூர் வருவதற்குள் இரண்டு இளம் படைப்பாளிகள் நிகழ்வை பார்க்கமுடியவில்லை. நான் கதவைத்திறந்து போது, உள்ளே கல்பனா ஜெயகாந்த் பேசிக்கொண்டிருந்தார். கவிதை என்பது உள்ளிருக்கும் ஜோதி என்பதை எப்படியும் இரண்டு முறைக்கு மேல் சொல்லிய நினைவு வருகிறது. என்னை ஈர்த்த கவிதைகளில் அனைத்தும் ஏதோ ஒரு முறையில் கவியின் நெருப்போ, வாசிக்கும் என் நெருப்போ இருந்து கொண்டு தான் இருந்தது. இரண்டும் சேர்ந்திருந்த கவிதைகள் எப்போதும் கனன்று கொண்டு தான் இருக்கின்றன.

அதன் பின்பு சிறிய இடைவேளை இருந்தது. என் இரண்டாவது நோக்கத்தின் படி, உங்களை எட்ட நின்று பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தேன். உங்களைச் சுற்றி எப்போதும் நான்கு பேருக்கு மேல் இருந்து கொண்டே இருந்தார்கள். அந்த இடம் எளிமையான புன்னகைகளை சுமந்து கொண்டே இருந்தது. செந்தில் ஜெகந்நாதனிடம் பேசிக்கொண்டிருந்தேன், மின்னல் போன்று ஒரு இளவல் புத்தககத்துடன் அண்ணா என்றழைத்துக்கொண்டு உரையாடிக்கொண்டிருந்தார்.

உங்களின் பதிவுகள் கொடுக்கும் தகவல் இல்லையென்றால் அவர் சதீஷ்குமார் சீனிவாசன் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துக்களுடன்   அவரின் சிறிய உரையாடலை கவனித்துக்கொண்டிருந்தேன். பயத்திற்கும், மகிழ்விற்கும், வெட்கத்திற்கும் மத்தியில் இருக்கும் புள்ளியின் மேல் அமர்ந்திருக்கும் சிறு பிள்ளையைப் போல இருப்பதாய் பட்டது. அதை நிகழ்வின் முடிவு வரை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த மனநிலையில் இருந்து வரும் அவரின் கவிதைகள் கண்ணாடி போன்று அதை நிரூபித்திருந்தன.

வேல்கண்ணன்

இதன் பின் என்னை மொத்தமாக உள்ளிழுத்த நிகழ்வு, நீங்களும் கே.சி. நாராயணனும் நடத்திய உரையாடல். கே.சி. நாராயணன் அவர்களை பற்றி உங்கள் தளத்தில் நிறைய வந்திருந்தன. அன்று காலை தான் மகாத்மா காந்தியும் மாதவிக்குட்டியும் கட்டுரையை வாசித்திருந்தேன். சொல்ல ஆயிரமிருந்தாலும், ஒன்றை மட்டும் மறக்க முடியாமலிருந்தேன். அவரின் மலையாள உரையை அல்லது கலந்துரையாடலை நீங்கள் மொழிபெயர்த்த வடிவம். மிகச்சிறிய காகிதம், அதில் நுணுக்கி நுணுக்கி தான் எழுதினீர்கள். நிறைய எழுதியது போன்றும் தெரியவில்லை. ஆனால், தமிழாக்கம் செய்யப்பட்டபோது, நீங்கள் அதை பார்க்கவும் இல்லை. நீங்கள் சொன்ன தமிழாக்கத்தை, மறுமுறை மலையாளத்தில் கூறினால், கே.சி. நாராயணன் சொன்னதை இன்னும் செறிவாக்கி சொன்னது போலத்தான் இருந்திருக்கும். ஒரு செயலின் முழு முன்னெடுப்பு, அந்த செயலுக்கான தன்முனைப்பில் இருந்து தான் வரும் என்பதற்கான ஒரு உதாரணமாக இருந்தது. தினப்படி அலுவலில், வாழ்வில் மிக முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்றாக எடுத்துக்கொண்டேன்.

அந்த நிகழ்வின் முடிவில் கேள்வி பதில் நேரத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கும் அதற்கு நீங்கள் கொடுத்த தமிழாக்கத்தில் எழுத்த சிரிப்பலை இப்பொழுதும் எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது. அந்த கேள்வி கேரளா கடவுளின் பூமி என்பதையும், கம்யூனிஸ்ட்கள் நிறைந்திருப்பதாயும், அது இரண்டையும் இணைத்தபோது வந்த சிரிப்பலை தான் அது.

மதிய இடைவேளையின் போதும் பெரும்பாலும் அங்கு என் அவதானிப்பிலேயே இருந்தேன். சுற்றிலும் சிறு சிறு குழாம்களில், குடும்ப உறவினர்கள் கூடிக்கொள்ளும் போது வெளிப்படும் உணர்வலைகளை உணர்த்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் திரும்ப நுழையும்போது உங்களைச் சுற்றி மறுமுறையும் ஒரு கூட்டம், அப்போது இலக்கியத்தை பின்னிருந்து படித்தாலும் என்ன பொருள் கொள்ளும், எவரிடம் அதை செய்யலாம், அதன் செய்தால் என்ன பலன் என்பதைக் கொண்டு ஒரு சிறிய சிரிப்பலை படர்ந்திருந்தது. ரசித்தேன், ஆனால், மிகவும் யோசனைக்குரிய ஒரு விவாதம் என்றே தோன்றியது.

நல்லதொரு இடைவேளைக்கு பின் (அவ்வளவு பெரிய இடைவேளையை கொடுத்திருக்க கூடாதோ என்று நீங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனாலும், அந்த நேரத்தில் நடந்து கொண்டிருந்த சிறு குழு விவாதங்கள் அந்த இடைவேளை இல்லையென்றால் நடந்திருக்க வாய்ப்பில்லை. என்னைப் போன்ற புதியவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவம்) விருது வழங்கும் நிகழ்வு நடந்தேறியது. என் பக்கத்தில் ஆனந்த குமார் இருந்தார், அவரிடம் சதீஷ் ஒரு குறுகிய உரையாடலில் இருந்தபோது, வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இருந்தது பல புதிய இலக்கிய ஆர்வலர்களுக்கு உண்டாகும் முக்கிய அழுத்தம். இப்போதும் நினைவிருக்கும் அந்த பதிலை என் மனதோடு வைத்துக்கொள்கிறேன்.

விருது உரைகளில் இருந்த அடர்த்தியும், கவிதைகள் பற்றிய தன்னிலை வெளிப்பாடுகளையும் தாண்டி,சதீஷின் ஏற்பு மனநிலையை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தேன். ஒரு குழந்தையைப் போல தன்னை வெளிப்படுத்துக்கொண்ட மேடையாக இருந்தது. அவரின் பாராட்டு யாரிடமிருந்து வந்தாலும், இது எனக்கானதா, இதை எப்படி எடுத்துக்கொள்வது, இது தேவையான ஒன்றா, இதற்கு மேல் என்ன செய்ய வேண்டுமென்ற பாரம், இவை அனைத்தையும் கொண்டிருந்த முகபாவனைகள் அவரிடம் இருந்தது.

நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது அவரின் உரை. அந்த நாளின் மொத்த உரைகளின் எதிர்ப்பக்கத்தில் நின்றிருந்த ஒரு உரை. மிகவும் ரசித்தேன். அவரின் விருது ஏற்பு, இன்னும் செல்ல வேண்டிய தூரம் கணக்கிடப்பட முடியாத ஒன்று என்பதை அவர் முழுவதும் அறிந்துள்ளார் என்பதைக் கூறிக்கொண்டே இருந்தது.

உனக்கெல்லாம் ஒரு விருதா என தெரிந்து கொள்ளவே அவரின் நண்பர் அங்கு வந்திருந்ததாக கூறியிருந்தார். இலக்கியம் எப்போதும் எங்கேயோ ஒருவரை ஆட்கொண்டுதான் இருக்கிறது. அந்த நண்பர் இப்போது ஆட்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது.

உங்கள் நேரத்திற்கு நன்றி,

லக்ஷ்மண் தசரதன்

முந்தைய கட்டுரைWhat place does a sceptre have in a democracy?
அடுத்த கட்டுரைகோவை. இளஞ்சேரன்