கடந்த சித்திரை மாதம் வெளியான வழியின் முதல் இதழில் தொன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திரு.வி.க அவர்களின் இலங்கை பயண கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. அந்த கட்டுரை இணையத்தில் எங்குமே வாசிக்க கிடைக்காமல் இருந்தது, இணைய சேகரிப்பில் இருந்த சிறு பத்திரிகை ஒன்றில் அதன் சிறு பகுதி மட்டுமே வாசிக்க கிடைத்தது, முப்பது வருடங்களுக்கு முன் வெளியான தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாட புத்தகங்களில் அந்த கட்டுரையின் ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. கூடுதல் முயற்சி செய்து கட்டுரையின் முழு வடிவையும் கண்டுபிடித்து, முன்பு பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களை மாற்றி இன்றைய தலைமுறை வாசிக்கும் வண்ணம், நேர்த்தியான நிழற்படங்களுடன் வெளியிட்டதில் பெரும் நிறைவடைந்தோம்.
இனி வரும் இதழ்களில் தமிழ் வாசகர்களின் கவனம் பெறாமல் போன பழைய பயண கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அதன்படி இந்த ஆணி/ஜூன் மாத இதழில், 1919 இல் மகாகவி பாரதியார் எழுதிய “பாபநாசம்” என்ற பயண கட்டுரையை வெளியிடுகிறோம்.
மேலும் இந்த இதழில், பயணத்தின் மீது அளவற்ற நேசம் கொண்ட எழுத்தாளர் சுபஸ்ரீ அவர்களின் ஹிமாச்சல பிரதேச பயண கட்டுரையான “பனிக்குள் உறைந்திருக்கும் ஆத்மா” வெளியாகிறது. தமிழில் மிக நுட்பமாக எழுதப்பட்ட பயண கட்டுரை இது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த கட்டுரையில், பயணியாக அவர் அடைந்த அனுபவமும், ஆன்மீக தரிசனமும் ஒவ்வொரு வரிகளிலும் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறத, அந்த உணர்வு எல்லா வாசகர்களுக்கும் ஏற்படும் என எண்ணுகின்றேன்.
பணிவன்புடன்,
இளம்பரிதி
பதிவுகளுக்கான இணைப்புகள்