அன்புள்ள ஜெ,
சில மாதங்களாக நான் சூரியனை சுவைக்க தொடங்கிவிட்டேன், ஜெ. இம்மாற்றம் வெண்முரசால் நிகழ்ந்தது. முன்பெல்லாம் சூரியனை பார்ப்பேன், ஆனால் கவனித்ததில்லை.
இப்போது நிலைமை அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் அவன் எழும் முன்பே நான் எழுந்து, நீராடி, நடைசென்று கொண்டிருக்கையில் அவன் எழுவான்.
குழந்தைச் சூரியன் இரக்கங் கொண்டவன். அவன் அந்நிலையில் இருக்கும்போது மானிடர் அவனை சிறிது நேரம் கண்டு சுவைக்கலாம், கண் கூசாது. அவனுக்கு இணையான அழகை நான் எங்குமே கண்டதில்லை, இனி காணப்போவதும் இல்லை.
கதிரவனை காணும்போதெல்லாம் எனக்கு சிலவேளைகளில் கர்ணனும் நினைவுக்கு வருவான். கவசகுண்டலமும்தான். அவன் இன்னொரு அழகன். ஆனால் போகூழன். சிறிது மென்சோகம் என்னை சூழ்ந்துகொள்ளும்.
இப்படித்தான் மா.கிருஷ்ணனின் “மழைக்காலமும் குயிலோசையும்” படித்தபின் வானம் பார்க்க கற்றுக்கொண்டேன். பறவைகள் மீது ஆர்வம் பிறந்தது. தியடோர் பாஸ்கரனின் “கையிலிருக்கும் பூமி” படித்த பின் எல்லா உயிர்களின் மீதும் கவனம் சென்றது. இவையெல்லாம் எனக்கு பெருந்திறப்பாக அமைந்தன. அந்த இரண்டு புத்தகங்களும் உங்கள் எழுத்தின் மூலமாகவே எனக்கு அறிமுகம் ஆகின.
மண்ணிலுள்ள உயிரெல்லாம் சூரியன் என்பதை அறிந்துகொள்ள எனக்கு முப்பத்தியிரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது, ஜெ.
– மணிமாறன்
அன்புள்ள ஜெ,
தற்போது கிராதம் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்நூலின் இரண்டாம் பகுதியான திசைசூழ் செலவில் வரும் யமபுரி என்னுள் விதிர்விதிர்ப்பை உண்டாக்கியது. எமனின் இருண்ட நரகத்தை பற்றிய விவரிப்புகள் பெரும் அச்சத்தை எழுப்பின.
அதற்கு நேரெதிராக இருந்தது மூன்றாம் பகுதியான “பொருள்கோள் பாதை”. குபேரனின் அளகாபுரி பொன்னொளியால் மின்னியது. இப்பகுதி முழுக்கவும் புன்னகைக்க வைத்தபடியே வருடிச்சென்றது.
“நான் அன்னையிடம் சொல்வேன்…நான் அன்னையிடம் சொல்லிவிடுவேன்” என்று கால்கள் உதைத்து கதறியழும் உடல் வளர்ந்த குழந்தையான குபேரனை யாராலும் விரும்பாமல் இருக்க முடியாது.
இப்படலம் நல்லதொரு சிறார் இலக்கியத்தை படித்த நிறைவை அளித்தது. எவ்வித வன்முறையும் இல்லாமல் நகைப்பும் பொன்னொளியுமே தன் உள்ளடக்கமாக கொண்ட இப்பகுதியை பார்த்தனின் சாகசக் கதையாக குழந்தைகளிடம் கூறி மகிழலாம்.
மணிமாறன்
அன்புள்ள ஜெ,
விடிகாலையில் அருளி அவர்களின் அயற்சொல் அகராதியை புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது “ஆமென்” என்பது ஈபுரு சொல் என்று அறிந்துகொண்டேன். அவர் அச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக “அவ்வாறே ஆகுக” என்று கூறுகிறார். எனக்கு உடனே உங்கள் நினைவுதான் வந்தது.
ஒவ்வொரு முறையும் வெண்முரசில் “அவ்வாறே ஆகுக” என்ற சொல் வரும் போதெல்லாம் அது ஒரு நுண்சொல் போன்ற உணர்வையே எனக்கு அளித்தது. அது ஏன் என்று இப்போதுதான் புரிந்தது, ஏனென்றால் “அவ்வாறே ஆகுக” என்பதே ஒரு நுண்சொல்தான்.
“நுண்சொல்” என்ற சொல்லையும் நான் வெண்முரசில்தான் முதன்முறையாக கண்டடைந்தேன், பிறகு நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையை படித்தபின்புதான் தெரிந்தது அச்சொல்லை உருவாக்கியதே நீங்கள்தான் என்று.
ஒவ்வொரு முறையும் ஒரு புதுச்சொல்லை கண்டடையும் போது உள்ளம் பேருவகை கொள்கிறது, ஜெ. சொல்வங்கியும் பெருத்துக்கொண்டே செல்கிறது. ஆனால் சொல்வங்கி பெருக்க பெருக்க பேச்சு குறைகிறது, கிட்டதட்ட இல்லாமலேயே ஆகிவிடுகிறது. அமைதியை விரும்ப தொடங்கிவிடுகிறோம். என்ன ஒரு அருமையான முரண். எவ்வளவு அழகான சிடுக்கு.
– மணிமாறன்