வாளும் கவசமும் -கடிதம்

ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க

அன்புள்ள ஆசானுக்கு,

இன்று ‘ என் பெயர் ‘ எனும் சிறுகதையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஆலோசனை கூட்டத்தில் அனைவருக்கும் காபி இடைவேளை என தலைவர் சொல்வார். அதற்கு முன்னால் பணியில் இருந்த பெண் ஒருவர் எல்லாருக்கும் காபி பிடித்து அளிப்பார். இப்போது அந்த முறைக்கு இயல்பாக வந்த பெண் பத்மா அந்த கணத்தில் தன்னைச் சுற்றி இரும்பு கவசம் ஒன்றை பொருத்திக் கொள்வார். அதன் பின்னான அத்தனை நேரமும் அவர் நிதானத்தில் இருப்பது அதனால் தான்.

படித்து முடித்த பின் எனக்கு வெண்முரசு சம்வகை நினைவு வந்தது. அவளும் தன்னை ஒரு இரும்பு கவசத்தில் நிறைத்து வைத்தாள் அல்லவா. அதை கழற்றிய பின் அவள் வேறு ஒரு பெண். ஆனால் உறங்கும் போது கூட அவள் அதை கழற்றவேயில்லை.

பெண்களுக்கு எப்போதும் அந்த கவசம் அவசியம். பொது இடங்களில் நிச்சயம் உபயோகமானது. சில நேரங்களில் வீட்டிலும் தேவைப்படும். நான் எண்ணும் எண்ணம் என்ன என காட்டிக் கொள்ள விரும்பாத நேரங்களில், வீட்டின் விழாக்களில் என் பேச்சு கேட்டு அமர்ந்து இருப்போர் மத்தியில் இந்த கவசம் மிகப் பாதுகாப்பானது.

குழந்தையின்மை சிகிச்சை செய்து கொண்டிருந்த வருடங்களில் மிக முக்கியமான விஷேசம் தவிர எதிலும் பங்கெடுக்க மாட்டேன். அப்போதும் கூட ஒரு நொடியும் கவசத்தை விட்டு வெளியே செல்லவே மாட்டேன். உறவினர்களின் பார்வைகள் என்னை துளைத்து எடுக்கும்.

ஆண்களின் பார்வைக்கு முன் இதன் தேவை அதிகம். இன்னும் சில பெண்களின் பார்வைக்கு முன்னும்.என்ன சொல்ல வந்தேனோ அதை சொல்லிவிட்டேனா தெரியவில்லை. ஆனால் உங்களிடம் சொல்ல விரும்பினேன்.

என்றும் அன்புடன்

சரண்யா.

அன்புள்ள சரண்யா

அந்த தொகுதியில் எனக்குப் பிடித்த கதைகளிலொன்று. ஆனால் அது கவசத்தைப் பற்றியது மட்டுமல்ல, அக்கவசத்தை பிளக்கும் வாள் பற்றியதும்கூட.

இன்று வாசிக்கையில் தீவிரமான சில பெண்நிலைவாதக் கதைகளை எழுதியிருக்கிறேன் என நானே பார்த்து திகைப்படைகிறேன்.

ஜெ

வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைDraupadi Swayamvaram – A Few Thoughts
அடுத்த கட்டுரைவகுப்புகள் வழியாகக் கற்றல்