கனடாவில் விருது – ஆஸ்டின் சௌந்தர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். கடந்த இருபத்து மூன்று வருடங்களாக, உலகம் முழுக்க இருக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில், வருடம் தவறாமல், புனைவு, அபுனைவு, கவிதைகள், கட்டுரைகள், என ஒவ்வொரு துறையிலும் தேர்ந்தெடுத்து உலகளாவிய விருது கொடுப்பது கனடாவில் இருந்து இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டம்தான் என நினைக்கிறேன். தமிழ் மொழியில் ஆளுமைகளுக்கு கிடைக்கும் புக்கர் விருதுக்கு இணையானது எனலாம்.

அந்த விருது கொடுக்கும் விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பு, எழுத்தாளர் அ.முத்துலிங்கமிடமிருந்து ஏப்ரல் இறுதி வாரத்தில் வந்ததுமே ராஜன் சோமசுந்தரத்திற்கும் எனக்கும் விழாவிற்கு செல்லும் ஆர்வம் தீயாகப் பற்றிக்கொண்டது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின்  நீண்டகால அங்கத்தினராகவும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திலும் இணைந்து இலக்கியப் பணியாற்றும்  நண்பர் திருவும் அந்த பரபரப்பில் இணைந்துகொண்டார். டொரண்டோவில் வசிக்கும் நம் நண்பர்களிடமிருந்து அவர்கள் வீட்டில் தங்கியிருந்து விழாவில் பங்குகொள்ள அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன.. உனக்கும் இல்லை எனக்கும் இல்லை என்று விட்டுப்போகாமல் இருக்க, திரு, வெங்கட் வீட்டிலும், ராஜன், நான், ராதா, மற்றும் சஹா, உஷா மதிவாணன் வீட்டிலும் தங்குவது என்று முடிவு செய்தோம்.

திரு,  நிகழ்விற்கு முதல் நாள் மாலையே பொறுப்பாக வெங்கட் வீட்டிற்குச் சென்று சேர்ந்துவிட்டார். ராஜன் , எனக்குக் கொஞ்சம் முன்னர் டொராண்டோ சென்று கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் காத்திருந்தார். நாங்கள் மூவரும், விமானம் தாமதமா, நாங்கள் தாமதமா என ராஜனை காக்கவைத்து விழாவின் நாளன்று காலை ஒரு மணிக்கு காரில் சென்று அமர்ந்தோம்.

“ஹில்டாப்-தானே, சௌந்தர்?” என்று ராஜன் தொடுதிரை பட்டனை தொட்டார்.

உஷா அம்மாவின் குரல், “தம்பி,  நடு ராத்திரில வேற வீட்டுக் கதவு தட்டிராத” என்று மனதில் ஒலித்தது.  ‘ஹில்டாப்,  சரிதான் ராஜன்’ என்று அமர்ந்தேன்.

பின் ஸீட்டில் ,ராதாவும் சஹாவும், இவர்கள் சரியான இடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்த்துவிடுவார்கள் என்று நிம்மதியுடன் அமர்ந்திருந்தால் அது அவர்களது தவறு. பயணத்திற்கு முன், உஷா வீட்டிற்கு விமான நிலையத்திலிருந்து தூரம் பார்த்தபொழுது 51 நிமிடம் என்று கூகுள் சொன்னதாக நினைவு. வாடகைக்காரின் தொடுதிரையில் 41 நிமிடம் என்று காட்டியது. இரண்டாவது மனதின் குரல் ஒலியையும் தவிர்த்தேன். உஷா அம்மா உறங்குவார்களோ என்று முன்னேற்பாடாக, சரியாக பதினைந்து நிமிடத்திற்கு  முன்னர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அம்மா அழைக்க, இந்தோ வந்துட்டோம்மா என்று சொல்லி போனை வைத்துத்துவிட்டேன்.

வாடகைக்காரின் தொடுதிரையில் காண்பித்தபடி, திசை, வலது, இடது என்று எல்லாம் சரியாகத் திரும்பி, சரியான வீட்டின் முன் காரை நிறுத்தியதாக நினைத்து, “Hilltop Boulevard, வந்துவிட்டோம், கதவைத் திறங்க” என்று அடங்கா பெருமையுடன் அம்மாவை போனில் அழைத்தேன்.

“என்ன தம்பி சொன்ன,  Hilltop Boulevard-ஆ, அது வேற village தம்பி! நம்மளது Hill Top Trail, Stoufvlle-ங்கற கிராமம்” என்றார்.

“சரிம்மா, நாங்க பார்த்து வந்தறோம்” என்று போனை கட் செய்துவிட்டு , காரில் அட்ரெஸை தொட்டாலே, அது Hilltop Boulevard என்றே சொன்னது. இது சமயம், பின் சீட் சகபயணிகள், எங்கள் மீது நம்பிக்கை இழந்திருந்தார்கள். சஹா,  ‘Please leave the space between Hill and Top’ என்றான்.

ராதா, எங்களுக்கு முன்னர் அவரது போனில் டைப் செய்து சரியான விலாசம் இதுதான் என்று என் கையில் அவர் போனை திணித்துவிட்டார். ராஜனும் உஷாராகிவிட்டார். இரண்டு டிஜிட்டல் உபகரணங்கள், வழி நடத்திக்கொண்டு சென்ற வீட்டில் காரை நிறுத்தினோம். ராதா, “பாருங்க, அம்மா, வெளி லைட் போட்டு நமக்காக காத்திருக்கிறார். முதலில் போன வீட்டுல இப்படி வெளி லைட் எரிஞ்சுச்சா?” என்றார்.

ஒரு ஐந்து மணி நேர உறக்கம். இட்லி, புட்டு என ஏகபோகமாக காலை உணவு. வெங்கட் வீட்டில் மதியம் சாப்பிட வயிற்றில் இடம் வேண்டும் என்று நினைத்தாலும், புட்டும், சக்கரையும், தேங்காய்த் திருகலும், பாலும் மேலும் மேலும் எனக் கேட்டு வாங்கி சாப்பிட வைத்தது. உஷா அம்மாவின் கணவர் மதிவாணன், அவர்கள் மகள் ரீங்கா, ரீங்காவின் வயிற்றில் ஒளிந்திருக்கும் வருங்காலம், மருமகன் மோகன், ஹீரோ ஐரா, என எல்லோரும் காலை வணக்கம் சொல்லி தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டார்கள்.

மதிய உணவிற்கு விருந்துக்கு அழைத்திருந்த வீட்டிற்குச் சென்று பெல்லை அழுத்தினால், கதவைத் திறந்தது ‘வெங்கட்தான்!’ முதல் நாளே அங்கு வந்து தங்கியிருந்த திருவும் ஹலோ சொல்ல, ஒரே attempt- சரியான விலாசத்திற்குத்தான் வந்திருக்கிறொம் என்று மகிழ்ந்தோம்.

வெங்கட்டை தமிழ் விக்கித் துவக்கவிழாவிற்கு அப்புறம் இப்பொழுதுதான் பார்க்கிறோம். அவர் மனைவி விஜி, புதல்வர்கள் விக்ரம்,வருண், விஜியின் அம்மா, அப்பா என அனைவருக்கும் வணக்கம் சொல்லி, வரவேற்பரையில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடினோம். யாருக்கு என்ன பிடிக்கும் எனத் தெரியாது என, வகை வகையாக விஜி சமைத்து வைத்திருந்தார். நாங்கள் வஞ்சகம் வைக்காது எல்லாவற்றையும் சாப்பிட்டோம். தண்ணீர் எதற்கு,  நீங்கள் வைத்திருக்கும் நீர் மோர் போதும் என்று ஊற்றி ஊற்றிக் குடித்தோம்.

சஹாவும், வெங்கட்டின் புதல்வர்களும் தனியாக சென்றமர்ந்து அவர்கள் உலகில் உரையாட ஆரம்பித்துவிட்டார்கள். வெங்கட்டும், விஜியும், அமெரிக்க நகரங்களுக்குச் சென்று மலிவான கேஸ், மலிவு விலையில் வாங்கும் ஷூ என அவர்களது கனடா வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார்கள். வெங்கட் அவர் எழுதிய அறிவியல் கட்டுரைகளை , தமிழினி வசந்தகுமார், புத்தகமாக கொண்டு வந்ததை சொல்லிக்கொண்டிருந்தார்.

கும்பகோணக்காரரான வெங்கட்டும், கரூர்க்காரனான நானும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடம் முதல் படித்து பட்டம் வாங்கிய முதல் பட்டதாரிகள். இப்படி பேசுவது கொஞ்சம் ஆபத்தான விஷயம். “அப்படின்னா, நீங்க, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு,  நா. பிச்சமூர்த்தி, கு.பா. ராஜகோபல் எல்லோரையும் பார்த்திருப்பீர்கள் !” என்றேன். கரிச்சான் குஞ்சு, குடியிருந்த வீட்டில் வெங்கட் வீட்டினர் பின்னர் குடியிருக்கப் போக, தி. ஜானகிராமன், எந்த ஜன்னலில் அமர்ந்து காவிரியை ஆவலாகப் பார்ப்பாரோ, வெங்கட் அங்கு அமர்ந்து படிக்கும் பாக்கியம் பெற்றுள்ளார். ராஜன் சோமசுந்தரம் இசையமைத்த ஆல்பங்களைப் பற்றி விஜி ஆர்வமாக கேட்டு அறிந்துகொண்டார்.

அங்கேயே, விழாவிற்கு என்று கொண்டு வந்திருந்த Formal Dresses அணிந்துகொண்டு, எல்லோருமாக சேர்ந்து சரியாக ஐந்து மணிக்கு விழா நடக்குமிடத்திற்கு சென்று சேர்ந்தோம்.

விழாவில் ஒவ்வொருவரும் அமருவதற்கென, டேபிள் எண் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ராஜனுக்கு விருதுபெறவிருக்கும் சிவசங்கரி அமரும் டேபிளிலும், ராதா, சஹா, மற்றும் எனக்கு கவிஞர் சேரன், ‘Disappeared’  நூலின் ஆசிரியர், Kim Echlin அவர்கள் அமரும் டேபிளிலும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தன.

விழா, ஆரம்பிக்க ஒரு மணி நேரம் இருந்ததால், பாவண்ணன், தாமஸ் ப்ரூக்ஸ்மா, சாம்ராஜ் அவர்களை கூட்டத்தில் கண்டுபிடித்து கைகுலுக்கி வாழ்த்துக்கள் சொன்னோம்.  நண்பர்கள் முத்துக்குமார், இந்துமதி, என்னையும் ராஜனையும் அடையாளம் கண்டு வந்து பேசினார்கள். வாஷிங்கடன் டி.சி-யில் தமிழ் விக்கியை துவக்கி வைத்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ப்ருந்தா பெக் வந்திருந்தார். அவருக்கும் வணக்கம் சொன்னோம்.

கூட்டம் சேரும் முன்னர், அ. முத்துலிங்கம் அவர்களைப் பார்த்து எங்கள் வருகையை அறிவித்துவிட்டு, தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். அவரைப் பார்த்ததில் எங்களுக்குச் சந்தோஷம். அவரும் அப்படித்தான் நினைத்தார் என்பது அவர் கட்டிப்பிடித்து வரவேற்றதில் தெரிந்தது.

ஐந்து மணி முதல் ஆறு மணி வரை அமர்ந்திருந்த டேபிளுக்கே  நேரடியாக வந்து, சமோசா, வெஜிடபிள் ரோல், சீஸ் ரோல் கொடுத்து உபசரித்தார்கள். ஜூஸ் டம்ளரில் குறைய குறைய நிரப்பிக்கொண்டே இருந்தார்கள். இலங்கை மற்றும் உலகெங்கும் போரில் மரணம் அடைந்த வீரர்களுக்கு ஒரு  நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பிறகு, நிகழ்வு சரியாக ஆறு மணிக்கு ஆரம்பித்தது.

செல்வி சனார்த்தா உதய் ஆன்ந்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புரவலர்கள் பேராசிரியர் சந்திரகாந்த், வழக்கறிஞர்  மேனுவல் யேசுதாசன் வரவேற்புரை வழங்கினார்கள். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கையை அமைத்தவர்களில் ஒருவரான டாக்டர் விஜய் ஜானகிராமன், நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்த் சங்கரி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

முதலில் ஒவ்வொரு விருது பெறுபவரைப் பற்றியும் தகுதியுரை வாசிக்கப்பட்டது, அடுத்து இரண்டுக்கும் மேற்பட்ட ஆளுமைகள், விருது பெருபவருக்கு பரிசுக் கேடயம், காசோலை, பூச்செண்டு கொடுத்து சிறப்பு செய்தார்கள். அதற்குப் பிறகு விருது பெறுபவர்கள் ஏற்புரை ஆற்றினார்கள்.

விழாக் குழுவினர், கனடாவில் தமிழைப் பயின்றுவரும் மாணவிகளை முன்னிறுத்தி, விழாவில் விருது பெறுபவர்களின் தகுதியுரைகளை வாசிக்க வைத்து  சிறப்பு படுத்தியிருந்தனர். மாணவி கோபிகா பாஸ்கரன், ‘மன்னார் பொழுதுகள்’ எனும் புனைவுக்குப் பரிசு பெறும் வேல்முருகன் இளங்கோ பற்றியும், கவிதைகளுக்காகப் பரிசு பெறும் சுகிர்தராணி பற்றியும் தகுதியுரைகள் வாசித்தார்.

மாணவி ஜஷோ ஜெயக்குமார், ‘மூவந்தியில் சூலுறும் மர்மம்’ கட்டுரைகள் அடங்கிய நூலுக்காக அபுனைவுப் பரிசு பெறும் சாம்ராஜ் அவர்களுக்குத்  தகுதியுரை வாசித்தார்.  சனார்த்தா உதய் ஆனந்த், வாழ்நாள் 2022-ற்கான விசேட இலக்கிய சாதனை விருது பெறும் வ.ந. கிரிதரன் அவர்களின் தகுதியுரையை வாசித்தார்.

எனக்கும் ராஜனுக்கும், கவிஞர் சாம்ராஜுக்கு பூச்செண்டு கொடுத்துச் சிறப்பிக்கும் அரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. புனைவுக்காக விருது பெறும் வேல்முருகன் இளங்கோ வராததால், சஹா,அவரது பிரதிநிதியாக அந்த விருதை மேடையேறிப் பெற்றுக்கொண்டார். கவிஞர் சுகிர்தராணியின் விருதை , ராதா ,அவரது பிரதிநிதியாகப் பெற்றுக்கொண்டார். இவர்கள் பிரதி நிதியாக பெறுகிறார்கள் என்பதை தக்க முன்னுரையுடன் அறிவிப்பாளர் அறிவித்திருந்தும், ராதா-விடம், நீங்கள் ஏன் உரையாற்றவில்லை என்று கேட்டவர்கள் உண்டு.

சிலர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு. சாம்ராஜ் பேசுமிடமெல்லாம் சிரிப்பு. அவர் ஏற்புரை ஆற்றும்பொழுது அரங்கம் முழவதும் சிரிப்பலை. அண்ணன் படித்து அமெரிக்கா போக, இலக்கியம் மட்டுமே தன்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது என்று நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தார். ஒரு காந்தியவாதியான பாவண்ணனுக்கு விசா கொடுக்க 87 நாட்களும், முன்னாள் இடதுசாரியான தனக்கு விசா கொடுக்க 43 நாட்களும் எடுத்துக்கொண்ட கனடா அரசாங்கத்திற்கு ஒரு விஞ்சானப்பூர்வமான காரணம் இருக்கலாம் என்றார்.

2001-க்குப் பிறகு கனடா வர இரண்டு காரணங்கள் – நயாகரா மற்றும் தமிழ் இலக்கியத்தோட்டம் விருது விழா என்றார். அவரது முதல் வாசகர், குடும்பத்தினர், பதிப்பாளர், இயக்குனர் மிஸ்கின், எழுத்தாளர் ஜெயமோகன் என  நீண்ட வரிசையை பெயர்கள் சொல்லி நன்றி சொன்னார். அவரை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தும் எழுத்தாளர் வண்னதாசனுக்கு விருதை சமர்ப்பிப்பதாக சொன்னார்.  அவரது அண்ணன் கௌதமன் சிக்காகோவிலிருந்து வந்து  நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பெருமை சேர்த்த, கவிஞர், மொழிபெயர்ப்பாளர், தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா,  நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றிய விருந்தினர்களில் ஒருவர்.  விருந்தோம்பலின் சிறப்பைச் சொல்லும் குறளை,

“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று “

தமிழிலும், ஆங்கில மொழியாக்கத்திலும் சொல்லி ஒரு தண்ணீர் டம்ளரை ஸ்பூனின் மூலம் அந்தரத்தில் நிற்கவைக்கும் மேஜிக்குடன் விளக்கினார்.

தமிழ் இலக்கியத் தோட்டம் கொடுக்கும் சிறப்பினைச் சொல்ல,

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.”

குறளை எடுத்துக்கொண்டார். அதன் ஆங்கில மொழியாக்கத்தை இனிமையாகப் பாடவும் செய்தார்.

S.J. ராம் தகுதியுரை வழங்க, தமிழ் இலக்கியத்தில் வாழ்நாள் சாதனையாளர் 2022-ற்கான இயல் விருது பெறும் பாவண்ணன் அவர்கள் மேடைக்கு ஏற்புரை வழங்க வந்தார். துன்பத்தை நெஞ்சில் சுமப்பதைவிட, எழுதி எழுதி கரைப்பதே வழி என தான் எழுத்தை தேர்ந்தெடுத்ததை சொன்னார். மல்லிகா அர்ஜுனின் அருள் பெற்ற நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார். ‘ மலைமீது ஒரு வீடுகட்டிய பிறகு விலங்குகளுக்கு அஞ்சினால் எப்படியய்யா’ என்ற அக்கம்மா தேவியின் பாடல் ஒன்று பெரியவர் ஒருவரின் மூலம் கிடைத்த அவதானிப்பைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

டாக்டர் ரகுராம் , இந்திய இலக்கிய தரிசண விருது பெறும் சிவசங்கரியை விழா விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பதினெட்டு மொழிகளில், 102 விருது பெற்ற எழுத்தாளர்களை நேர்முகம் செய்து , இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு தொகுப்பு நூலை வெளிக்கொணர்ந்த சிவசங்கரி மிகவும் பரவசமாக, மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது உரையை ஆரம்பித்தார். கூகுள், வாட்ஸப், யூட்யூப் இல்லாத காலத்தில் ரெஜிஸ்டர் தபாலில் மாதக்கணக்கில் காத்திருந்து வரும் பதில்களை வைத்து தொகுத்த அனுபவத்தை , பதினாறு வருட தவத்தை கேட்பதற்கு நெகிழ்வாக இருந்தது.  நான்கு குழந்தைகள் இருந்து அவர்களை போஸ்ட் டாக்டரேட் செய்யச்சொல்லி மகிழ்ந்திருப்பேன். இது அவரது நான்கு குழந்தைகள் என்றார்.

எனது டேபிள் பங்காளர்கள் கவிஞர் சேரனும், Scotiabank Giller Prize-ற்கு இரண்டாம் நிலைக்கு தேர்வாகியுள்ள Kim Echlin-னும் ஒரே பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்கள் என்று அவர்களது உரையாடலின் மூலம் புரிந்துகொண்டேன். சேரன் , விழா விருந்தினர்களுக்கு தமிழ் , ஆங்கிலம் இருமொழிகளிலும் கிம் எகிலினை அறிமுகப்படுத்தினார். அவரது Speak, Silence நாவலை அவசியம் வாசிக்கவேண்டுமென பரிந்துரைத்தார்.  கிம் எகிலின் , மறைந்திருக்கும் உண்மைகளை எழுத்தாளர்கள், இசைபோல் வெளிக்கொணர்பவர்கள், அதை வாசிக்கும் வாசகர்கள் அறிந்துகொள்வார்கள் என ஒரு அழகிய சிறுகதையுடன் விளக்கினார்.

சனார்த்தனாவின் முன்னுரை முடிந்தவுடன், மேடையேறிய விருது பெறும் வ.ந. கிரிதரன், 2000-முதல் தான் நடத்தும் பதிவுகள் இணைய இதழின் அனுவங்களைக் கூறுகையில் எழுத்தாளர் ஜெயமோகனும், யமுனா ராஜேந்திரனும் அதில் எழுதியுள்ளார்கள் என்றார். பதிவுகளில் வெளியாகி அச்சுப் பிரதிகளாக வந்த நூல்களைக் குறிப்பிட்டார். அவை archives.org-ல் கிடைப்பதாகவும் சொன்னார்.

இலக்கிய ஊடகத்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு சேவைகளைப் பாராட்டி 2022-ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் லெட்சுமணன் முருகபூபதி, அவரது எழுத்து மற்றவர்களுக்கும் சோறு போடும் என்று அவரது பெற்றொர்கள் வாழ்த்தியதாக சொன்னார். அவரது வம்சாவழிதான் காரணம் என்றார்களாம். அவரது தாத்தாமார்கள் , நாம் அறிந்த எழுத்தாளர்கள் தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான், தொ.மு.சி ரகுநாதன் அவர்கள்.

இரண்டேகால் மணி நேரத்தில் இருபது / இருபத்திரண்டு ஐந்து நிமிட உரைகள். எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தது. வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவும் பரிமாறப்பட்டது.

விருது விழாவிற்கு மறு நாள் திங்கள் கிழமை மதியம் உஷா மதிவாணன் வீட்டில் ஒரு சிறு விருந்து கொடுக்கப்பட்டது. பாவண்ணன், அவரது மனைவி அமுதா, காலம் பத்திரிகையின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம், அவரது மகள்கள் செந்தூரி, கஸ்தூரி, கவிஞர் சாம்ராஜ், அவரது அண்ணன் கௌதமன்,வெங்கட், நண்பர் சுமதி ஆகியோர் வந்திருந்தனர். பாவண்ணன் வெஜிடேரியன் உணவு வகைகளை எடுத்துக்கொண்டார். அருகில் அமர்ந்து , நான் சிக்கன் சாப்பிட்டால் பரவாயில்லையா என்று கேட்டு பக்கத்து சீட்டை எடுத்துக்கொண்டேன்.

சாம்ராஜ், தனது திரைப்படத்துறை அனுபவத்தையும், சிவாஜி ரசிகனாக ரசித்த படங்களையும் நினைவிலிருந்து சொல்ல சொல்ல சிரித்த சிரிப்பில் சாப்பிட்ட நினைவே யாருக்கும் இருந்திருக்காது. கன்னட நாவல் ‘ஓடை’ பேசுபொருளை, கதையை பாவண்ணன் மெல்லிய குரலில் சொல்லக் கேட்டோம். எப்படி இந்த நாவல் பக்கம் போனோம் என்றால், வெங்கட், பூர்வீகம் பார்க்கும் அவரது பாட்டி பற்றிச் சொல்லத்தான் என நினைக்கிறேன். சாம்ராஜ், இலக்கிய வாசகனாக, பாவண்ணன் படைப்புகளிலிருந்தும், சுந்தரராமசாமி படைப்புகளிலிருந்தும், பாத்திரங்களையும், பேசுபொருளையும் தனது நினைவிலிருந்து  நேற்றுத்தான் வாசித்ததுபோல் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கு எப்படி இந்த நினைவு சாத்தியம் என்று கேட்டதற்கு, அவர் அப்பாவிடமிருந்து வந்தது என்றார்.

அன்று இரவு, அ.முத்துலிங்கம் அவர்களின் வீட்டில் விருந்து. அதற்கும் எல்லோரும் சரியான நேரத்தில் சென்றோம். விழாவில் விருது பெற்றவர்கள் (பாவண்ணன், சாம்ராஜ், சிவசங்கரி, லெட்சுமணன் முருகபூபதி), வெளியூரிலிருந்து வந்திருந்த விருந்தினர்கள் என இருபத்தைந்து / முப்பது பேர் இருந்திருப்போம். முந்திரி பருப்பும், பிஸ்கட்களும் இருந்த தட்டுக்களை முத்துலிங்கம் அவர்களே எடுத்து ஒவ்வொருவரையும் எடுத்துக்கொள்ளச் சொல்லி உபசரித்தார்.

சஹாவிடம், publishing-ற்கு என்ன முயற்சி செய்கிறாய், ராஜன் சோமசுந்தரத்திடம், Four Seasons எப்பொழுது வெளியிடுகிறீர்கள், சாம்ராஜிடம், அவர் படத்திற்கான கதை, என்னிடம், ஜெயமோகனின் பயணத்திட்டத்தில் என்ன உள்ளது என அவரவருக்கான அணுக்கமான கேள்விகளைக் கேட்டு உரையாடினார்.  ஐந்து குட்டி அடுப்புகளை வைத்து ஆப்பம் (இனிப்பு, சைவம், அசைவம்) சுடச்சுட பரிமாறினார்கள். அ. முத்துலிங்கத்தின் மனைவி கமலரஞ்சனியும், மகள் வைதேகியும் அனைவரும் சரியாக சாப்பிட்டோமோ என்று விசாரித்து கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

நண்பர்களுடன் நிறைவான சந்திப்பு, உலகளாவிய விருந்தினர்கள், ஆளுமைகள் கலந்துகொள்ளும் விருது விழாவில் பங்குகொண்ட திருப்தியுடன் செவ்வாய் மாலை அமெரிக்கா திரும்பிவிட்டோம்.

முடிக்கும் முன் சாம்ராஜும், அவரது அண்ணன் கௌதமனும் எங்களைப் போலத்தான் என்று சொல்லியே ஆகவேண்டும். அவர்களும் உஷா மதிவாணன் வீட்டிற்குப் பதிலாக இன்னொரு வீட்டிற்குப் போய்விட்டுத்தான் வந்தார்கள்.

ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைநீலமலர்- பதிவு
அடுத்த கட்டுரையோகா சௌந்தர் -பேட்டி