காவு- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் புதிய சிறுகதை. நான் எழுதியுருவாக்கிய களத்தில் அமைந்துள்ளது. வரலாறு, பண்பாட்டுச்சூழல், தொன்மம் ஆகியவை ஏற்கனவே உள்ளவை என்றாலும் நான் அவற்றை முதலில் தமிழில் விரிவாக எழுதியமையால் என் மொழி மற்றும் பார்வையுடன் அவை இணைந்துவிட்டன. அச்சூழலில் எவர் எழுதினாலும் என் எழுத்தை நினைவூட்டுகின்றன. போகன், சுசீல்குமார் உள்ளிட்ட அனைத்து அடுத்த தலைமுறையினருக்கும் இச்சிக்கல் உண்டு. போகன் வடிவத்தையும் கூறுமுறையையும் மாற்றிக்கொண்டது வழியாக அதைக் கடந்தார். இக்கதை அந்த உலகிலேயே உள்ளது.

இத்தகைய ‘யக்‌ஷிக்கதை’களை வெறும் திகில், பரபரப்புக்காக எடுத்தாள்வது என்பது மிக எளிய செயல். யட்சி என்னும் தொன்மத்திலேயே அடிப்படையான சில மானுடநிலைகள், சில தத்துவக்கேள்விகள் உள்ளன. அவற்றை சமகாலத்தில் வைத்து ஆராய்வதற்காகவே இக்கருக்களை எடுத்தாளவேண்டும். இந்தத் தொன்மங்களில் அந்த உளநிலைகளும் கேள்விகளும் உக்கிரமாகவும், கூர்மையாகவும் வெளிப்படுவதுபோல அன்றாட உலகச் சூழலில் வைத்து எழுதப்படும் கதைகளில் வெளிப்படுவதில்லை. ஏனென்றால் அன்றாடத்தில் இவை இப்படி இல்லை. இவை ஓர் அதீத உளநிலை சார்ந்தவை. அதீத உளநிலைகள் மானுட அகத்தின் ஆழத்தில் அரிதாக மட்டுமே நிகழ்பவை, நம் வாழ்வில் மின்னிச் செல்பவை. அவற்றை தூலமாக புறவயமாக்கி, ஒரு கணத்தை விரித்துக் காலமாக்கி உருவாக்கப்பட்ட தொன்மங்கள் இவை. அவற்றை மாற்றெழுத்துக்கு ஆளாக்கும்போது அந்த அடிப்படை உளநிலை, கேள்விகள் சார்ந்து ஆசிரியர் மேலும் நகர்ந்திருக்கவேண்டும்

இக்கதையில் அந்நகர்வு உள்ளது. மனிதனின் தீராப்பெரும்பித்து உண்மையில் என்ன என்னும் வினா நோக்கிச் சென்றமைவதனால் இது குறிப்பிடத்தக்க கதை. அந்தப்பித்து அவனையும் தெய்வமாக ஆக்கிவிடுகிறது என்னும் உச்சம் அழகியல்நிறைவு கொண்டது.

காவு- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

முந்தைய கட்டுரைஅர்ஜுனனும் முதலையும்- நிர்மல்
அடுத்த கட்டுரைநன்னிலம்- லோகமாதேவி