வெண்முரசு விவாதங்கள், இணையப்பக்கம்
அன்புள்ள ஜெ
வெண்முரசு வெளிவந்துகொண்டிருந்த நாட்களில் வெண்முரசு விவாதங்கள் என்னும் இணையப்பக்கம் பெரும்பாலும் எல்லா பதிவுகளிலும் இணைப்பாக அளிக்கப்பட்டிருந்தது. அதில் வெண்முரசு பற்றிய ஏராளமான கடிதங்களும் கட்டுரைகளும் பிரசுரமாகியிருந்தன. வெண்முரசு நாவல்களை புரிந்துகொள்ள அந்த இணையப்பக்கம் பேருதவியாக இருந்தது. பல்வேறு கோணங்களிலான கடிதங்கள் அதில் வெளிவந்தன. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. அவை வெவ்வேறு கோணங்களில் அந்த அத்தியாயத்தை வாசித்து பதிவுசெய்தன. இப்படியெல்லாம் வாசிக்கலாமா என்ற எண்ணம் அப்போது ஏற்பட்டது. நான் இலக்கியவாசிப்பு என்றால் என்ன என்று கற்றுக்கொண்டதே அந்த கடிதங்களால்தான்.
இன்றைக்கு பலர் வெண்முரசை நூல்களாக வாசிக்கிறார்கள். உங்கள் இணையப்பக்கம் வழியாக வாசிக்கிறார்கள். ஆனால் இந்த வாசகர்களின் கடிதங்களும், கட்டுரைகளும் இல்லாமல் வாசிப்பு குறைபட்டதாகவே இருக்கிறது என சிலரிடம் பேசும்போது தெரிகிறது. அந்த கடிதங்களில் முக்கியமானவற்றை நாவல் வாரியாக தொகுத்து வெளியிடமுடியுமென்றால் இன்று பேருதவியாக இருக்கும். அச்சில் வராவிட்டாலும்கூட மின்னூலாகக் கிடைத்தால்கூட போதும். முதற்கனல் கடிதங்கள், முதற்கனல் கட்டுரைகள் என இரு நூல்கள் இருந்தால் முதற்கனலை வாசிப்பது மிக எளிதாக ஆகிவிடும். இதை எவரேனும் செய்யலாமென நினைக்கிறேன்.
ஆர். பாஸ்கர்