வெண்முரசு நாட்கள்

இன்று வெண்முரசுநாள் கொண்டாட்டம் தொடங்குகிறது. ஜூலை 3 மற்றும் 4 அன்று குருபூர்ணிமா நாட்கள். அவை வெண்முரசு நாட்கள். வெண்முரசின் வாசகர்கள் ஓரிடத்தில் கூடி, உரையாடி, வெண்முரசை வாசித்து பிரிவது. இந்நாளை வியாசனுக்கான நாளாகக் கொண்டாடவேண்டும் என்பதே நோக்கம். வியாசன் என்பது ஓர் அடையாளம். எல்லா மகத்தான நூலாசிரியர்களும் வியாசர்களே.

சென்ற 2020 ல் வெண்முரசு முடிந்தபோது இந்த விழா தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் இணையவழி விழாவாக இருந்தது. சென்ற ஆண்டு இருந்து ஒரு மலைத்தங்குமிடத்தில் நேரடி நிகழ்வாக ஆரம்பித்தது. இவ்வாண்டு இணையவழியும், நேரடி விழாவும் நடைபெறுகிறது.

வெண்முரசு போன்ற ஒரு படைப்பு ஒரு திகைப்பை எளிய வாசகனுக்கு அளிக்கக்கூடியது. அதை நம்மால் வாசிக்கமுடியுமா, நம்மால் ஐம்பது பக்கம் வாசிக்கவே முடியவில்லையே என்னும் எண்ணம் உருவாக்கும் திகைப்பு அது. அது உண்மை, இன்று இணையமும் கைபேசியும் நம்மை அடிமைகளாக்கி வைத்துள்ளன. நம்மால் எதையுமே கூர்ந்து உள்வாங்கி வாசிக்கமுடியவில்லை.

 

ஆனால் வெண்முரசு அப்படி அல்ல. அது இந்த நூற்றாண்டுக்குரிய ஆக்கம். அது வாசிக்கக் கடுமையானது அல்ல. அதை ஒருவர் வாசிக்கத் தொடங்கினாலே போதும், முதற்கனலில் இருந்து அது உள்ளே இழுத்துக்கொண்டு செல்லும். அதன் 25000 பக்கங்களையும் அதுவே வாசிக்கச் செய்யும். பலர் அப்படி அதை வாசித்தவர்களே வெண்முரசன்றி வேறெதையுமே வாசித்திராத பலர் இங்குள்ளனர்.

நமக்குத்தேவை, துணிந்து உள்ளே செல்லும் ஒரு கணம் மட்டுமே. அந்த மொழிநடை, அதன் கதைச்சூழல் பிடிகிடைக்க சில பக்கங்களாகும். எப்படியும் ஐம்பது பக்கம் வாசித்துவிடுவேன் என உள்ளே செல்லும் ஒருவர் அதன்பின் அந்த பெருக்கில் தன்னை விட்டுவிடுவார். வெண்முரசுநாள் போன்றவை அப்படி ஒரு தொடக்கத்தை நாமே உருவாக்கிக் கொள்வதற்கான சிறந்த நிமித்தங்களை அளிக்கின்றன.

வெண்முரசின் மிகச்சிறந்த வாசகர்கள் பலர் அதை குடும்பத்தில் எவருக்கேனும் வாசித்துக் காட்டுபவர்கள். குறிப்பாக தங்கள் பெற்றோருக்கு. இன்றைய சூழலில் பெற்றோரும் நாமும் வெவ்வேறு உலகங்களில் வாழ்கிறோம். நமக்கு அவர்களுடன் பேச ஒன்றுமிருப்பதில்லை. வெண்முரசு போன்ற ஒரு நாவல்தொடர் பல ஆண்டுகள் நீளும் ஒரு வகை உறவாக அமைகிறது. நாள் ஒரு அத்தியாயம் என்றால் இருபது நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது ஒரு வழக்கமாக ஆகிறது. ஒரு மெல்லிய கட்டாயத்தை நாமே போட்டுக்கொள்கிறோம். விளைவாக அந்து நீடிக்கிறது, நடுவே நின்றுவிடுவதில்லை. அந்த இருபது நிமிடங்கள் வாழ்க்கையை அற்புதமாக நிறைவுசெய்கின்றன என பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். புகழ்பெற்ற நிர்வாகவியல் நிபுணர் ராஜேந்திரன் தண்டபாணி தன் அம்மாவுக்கு வெண்முரசை வாசித்துக் காட்டும் நிகழ்வின் புகைப்படங்கள் பரவலாக அறியப்பட்டவையாக உள்ளன.

இந்நாளில் மீண்டும் வெண்முரசுக்குள் நுழைய வாசகர்கள் பலர் உறுதிகொண்டுள்ளதாகச் சொல்லி எழுதியிருக்கின்றனர். ஏற்கனவே வாசித்தவர்களும் பலர் எழுதியுள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைசென்னையில் ஒரு கூட்டம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது, பாவண்ணன்