வெண்முரசு இசைக்கோலம்

அன்புள்ள ஜெ

வெண்முரசு இசைக்கோலம் உருவாகி வெளிவந்த நாட்களில் அதை நான் விரும்பவில்லை. அதைக்கேட்கவே முற்படவில்லை. நான் வெண்முரசு வாசிப்பது ஓர் அந்தரங்கமான அனுபவம் என்றும் அதை இப்படி நிகழ்ச்சிகளாகப்பார்த்தால் அதன் அழகு மறைந்துவிடும் என்றும் நினைத்தேன். ஆகவே புறக்கணித்தேன். இத்தனைக்கும் என் வீட்டில் எல்லாருமே வெண்முரசு வாசிப்பவர்கள்.என் அம்மா, என் மனைவி, என் மகன். அவர்கள் கேட்டார்கள். நான் தவிர்த்துவிட்டேன்.

ஆனால் கடந்த நாலைந்து மாதங்களாக நான் விரும்பிக்கேட்பது வெண்முரசு இசைக்கோலம். அது வெண்முரசு வாசிப்பில் எனக்கிருந்த அந்த அந்தரங்கமான உணர்வுநிலையையே இசையாக மீட்டியதுபோல் இருந்தது. அது என்னுடைய பிரைவேட் மியூஸிக் என நினைத்தேன். குறிப்பாக சைந்தவி பாடிய பகுதிகள் நெகிழ்வாக இருந்தன. கமலின் குரல் உலகையே அறைகூவுவது போலிருந்தது.

வெண்முரசை இசையாக, நாடகமாக எவர் நடத்தினாலும் என்னால் அதில் ஈடுபட்டு திளைக்கமுடியும் என நினைக்கிறேன். நானே அதில் உணர்ச்சிகரமாக ஈடுபடுவேன். எனக்கான வெர்ஷனை உருவாக்கிக்கொள்வேன்.

வெண்முரசு முடியும்போது அதை வாசித்தவர்கள் ஒரு பெரிய தனிமையையும் துயரையும் அடைவார்கள். ஒரு காலகட்டம், ஒரு வாழ்க்கை அப்படியே முடிவுற்றுவிட்டது என்று தோன்றும். இந்த இசைக்கோலம் அந்த தனிமையையும் துயரையும் இனிமையான ஒன்றாக ஆக்கிவிடுகிறது.

இந்த குருபூர்ணிமை வெண்முரசுநாள். அன்றுமுழுக்க வெண்முரசு இசைக்கோலத்தையே கேட்கப்போகிறேன் என எண்ணிக்கொள்கிறேன்.

ரத்னவேல் முருகேசன்

முந்தைய கட்டுரைசாதியை இந்துமதம்தான் உருவாக்கியதா?
அடுத்த கட்டுரைதூரன் விருதுகள், கடிதங்கள்