கன்னியின் தவம் – ஆனந்தன்

கன்யாகுமரி வாங்க

கன்யாகுமரி மின்னூல் வாங்க

கன்னிமை என்பது என்ன? என்பதை மையமாக  வைத்து கன்னியாகுமரி நாவலை வாசித்தேன். கன்னிமை என்ற கருத்து தேவையா? அல்லது அது பிற்போக்கானாதா? என்பதை நான் முக்கியமாக நினைக்கவில்லை. கன்னிமை மற்றும் கற்பு அதுவும் பெண்ணின் உடல் சார்ந்த ஒழுக்கம்  தமிழ் ஆழ்மனத்தில் பதிந்துள்ளது. அது பல கருத்துக்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒலிக்கும்.  ஆகையால், இந்த நாவல் அதை மறுவரையறைக்கு உட்படுத்துவதால் பிந்தைய கேள்விகளுக்கு முக்கியத்துவம் இல்லை.

கன்னியாகுமரியின் தொன்மம்: தேவி சிவனின் வருகைக்காக காத்திருக்கிறாள், அவன் வராததால் கோபம் கொண்டு தவத்தில் ஆழ்கிறாள். அவளை சீண்டும் பாணாசுரணை வதம் செய்கிறாள். இங்கே, அவள் தவத்தில் ஆழ்வது மற்றும் பாணாசுரனை கொல்வது என்ற செய்கைகளுக்கு அவளின் கன்னிமையோடு இணைக்கப்படுவதில் உள்ளது பிரச்சினை.   ஆனால் பெண்கள் தங்கள் சுயதர்மத்தை அடைய அவளின் உடல் ஒழுக்கம் முக்கியமானதாக கருதப்படுவதுதான் மைய சிக்கல். இத்தொன்மத்தில் உள்ளதும் தேவியின் திருமண உறவு அவள் அசுரனை கொல்வதை தடை செய்யும் என புணையப்படுகிறது. அவளில் உள்ள அந்த தவத்தின் முனைப்பை கன்னிமையுடன் இணைக்கப்படுவது தான் சிக்கல். அதாவது அவள் உடல் சார்ந்த ஒழுக்கம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி நாவலில், விமலா தன் காதலன் ரவியின் முன் மூன்று முரடர்களால் வன்புணர்வு ஆட்படுகிறாள். அதனால் ரவி அடையும் மனசிக்கல் அவளை வெறுத்து ஒதுக்க முடிவு செய்கிறான். அது தான் ஆண் என எதுவும் செய்ய முடியவில்லை என்பதின் மனநாடகமாக இருக்கலாம். அதற்கு தமிழ் ஆழ்மனம் அளிக்கும் கன்னிமை மற்றும் கற்பும் என்ற படிமங்களை அவளுக்கு எதிராக பயன்படுத்தி கைவிடுகிறான். இது அவளின் தவறே என முடிவு செய்கிறான். அவளின் சிதைந்த உடலுக்கும் மனதிற்கும்  ஒன்றும் செய்வதில்லை. அவள் தனித்து விடப்படுகிறாள். அவளில் சிதைந்த உடலை மருத்துவரிடம் சென்று தையலிட்டு சரி செய்துகொள்கிறாள். தற்கொலை முயற்சிக்கு பின் அவள் அதிலிருந்து விடுபடுகிறாள். சிதைந்த உடலும் மனமும் தேறிய பின் அவள் கன்னிமை மற்றும் கற்பு என சமூகம் அளித்த படிமங்கள் அவளுக்கு தேவையற்றவை ஆகிவிடுகின்றன.

அதிலிருந்து அவள் எளிதாக வெளியேறிவிடுகிறாள். அவள் மருத்துவம் பயின்று பின் வெளிநாட்டில் நோயெதிர்ப்பு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறாள். ஆராய்ச்சியிலிருந்து இளைபாறலாக பயணங்களை மேற்கொள்கிறாள். அப்போது ஏதோ ஒரு ஆண் துணையுடன் பயணங்கள் மேற்கொள்கிறாள். கற்பு மற்றும் கன்னிமை பற்றிய கொள்கைகள் அவளை தடை செய்வதில்லை. வன்புணர்சியில் உடல் சிதைதலும், அதற்காக மருத்துவரை அணுககூட உதவி செய்யாது ரவி விலகுவதும், அவளுக்கு ஒரு வரமாகவே அமைகிறது. அவள் உடல் பற்றிய சமூக வரையறைகளை அவள் ஆழ்மனதிலிருந்து விலக்கிவிடுகிறாள். அவள் கூவியறிவிப்பதில்லை. அவை அவளுக்கு தேவையற்றவை ஆகிவிடுகின்றண. அல்லது தானாகவே விலகிகொள்கின்றன. கண்ணகி முலையறிந்து தெய்வமாதல் போல. அவள் சுயத்தை அறிய தன் சுயதர்மத்தை அடைய அவை தேவையற்றவை. அந்நிகழ்வும் ரவியும் அவள் தெய்வமாதலின் நிமித்தங்களே.

விமலா ஒரு பயணத்தில் அவள் கன்னியாகுமரி வரும்போது, சினிமா துறையில் இயக்குனராக உள்ள ரவி, அவளை ஒரு வெள்ளையனான செஃப்வுடன் பார்க்க நேரிடுகிறது. அவள் மகிழ்ச்சியுடன் இருப்பது அவனால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவள் ஒரு வெள்ளையனுடன் இருத்தல் அவளின் ஒழுக்குறைபாடையே குறிக்கிறது என நினைக்கிறான். அவள் ஆண்களை மயக்கும் ஒழுக்கேடானாவள். அவள் நிம்ப் என அவளுக்கே சுட்டிகாட்ட சரியான தருணத்தை தேடிக்கொள்கிறான். அவன் வளர்துவரும் லட்சிய நடிகையாக ஆக நினைக்கும் பிரவீணாவை மனைவி என கூறி அவளுடன் சந்திப்பை நிகழ்த்துகிறான். ரவியின் நோக்கம் அவளை வெல்வதுதான். அந்த நிகழ்வுக்கு பின் அவள் தன்னை அழித்து கொண்டிருந்தாள் அவள் கன்னிமை மற்றும் கற்பு படிமங்களை நிலைநாட்டியவள் ஆகிறாள். அப்போது அவளை நினைத்து ஏங்கும் ஆணாக தன்னை நிறுவிக்கொள்ளலாம்.

அவள் மகிழ்ச்சியுடன் வேறொரு ஆணுடன் இருப்பது அவனை தோல்வியுற்றவனாக எண்ண வைக்கிறது. அதனால் அவளை புண்படுத்தி அவளை தன்னிரக்கம் கொண்டவளாக ஆக்கி தன்னையே அழித்து கொள்ள செய்ய வேண்டும். அவள் இல்லாமல் இருப்பதுதான் தன் இருப்பை நிலைநாட்டகூடியது. அவள் இருப்பு அவனின் ஆண்மையை எப்போதும் கேள்விக்குள்ளாக்கும் , அந்நிகழ்வில் அவன் எதையும் செய்யாத கையாலாகதவன். அவள் அதை ஒரு விபத்து என நினைத்தாலும். அதுவே அவளை துறக்க எடுக்கும் முடிவுக்கு காரணமாக இருக்க வேண்டும். அவன் செய்ய நினைப்பது கௌதம ரிஷி அகலிகையை கல்லாக்கியது போல் அவளை சாபமிடவேண்டும். அதை பிரவீணா விரும்பவில்லை. அவன் விமலாவை தாக்கி அழிக்க நினைக்கிறான், உள்ளுர அவன் வென்றுவிடுவான்னோ என அவளும் ஐயபடுகிறாள். அவர்களுடைய சந்திப்பில், விமலா அந்நிகழ்விலிருந்து எளிதாக வெளியேறியதை கூறுகிறாள். அதை பற்றி குற்றவுணர்வோ தன்னிரக்கமோ கொள்வதில்லை. ரவி அந்நிகழ்வை  உணர்ச்சி வசப்பட்டு பிரவீணாவுக்கு விவரிப்பதை , அவள் எளிதாக கூறுகிறாள்.

அது அவனை சமநிலை அற்றவனாக்கிவிடுகிறது. விமலா எப்படி ஆராய்ச்சியில் இறங்கினாள், அதில் மூழ்கி இருக்கும் போது உடல் பற்றிய கவலையே அற்று இருப்பது. அதாவது தவம் போல செய்வது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இளைபாறாலாக உலகம் சுற்றுவது அதுவும் ஏதோ ஒரு தேர்ந்தெடுத்த ஆணுடன். விமலாவுக்கு ரவியின் சாதனைகளை பற்றி தெரிவதில்லை. அவள் படங்கள் பார்ப்பதே இல்லை. அவன் அவள் முன் மிக சிறியவனாக காட்சியளிக்கிறான்.  அவள் பேச பேச அவள் விஸ்வருபம் என வளர்கிறாள். அவன் அவள் காலடியில் இருக்கும் சிறு குழந்தையை போல. அவன் ஆணவம் சீண்டப்படுகிறது.  ஆராய்ச்சியின் முனைப்பு அவளை திருமண உறவு ஏற்படுத்திகொள்வதில் தடையாக அமையகூடும் என  விமலா கூறுகிறாள். அது எல்லோருக்கும் பொருந்தாது என பிரவீணாவுடன் கூறுகிறாள். அந்த சந்திப்பில், ரவி அவளை காயப்படுத்த முனைவது கூட விமலாவுக்கு புரிவதில்லை. ஆனால் பிரவீணா தன் குழப்பங்களுக்கு பதிலாக அவளை நினைக்கிறாள்.

விமலா பிரவீணாவுக்கு உறுதி கொண்ட தேவியாக /கலங்கரை விளக்காக தோன்றுகிறாள். அச்சந்திப்பிற்குபின் பிரவீணா ரவியை விட்டு விலகுகிறாள். அவன் விமலாவை வன்புணர்வுசெய்த பெத்தேல்புரம் ஸ்டீபனை கண்டுபிடித்து அவள்முன் எதிர்பாராவிதம் நிறுத்தி அவளை நிலைகுலையசெய்ய நினைக்கிறான். பிரவீணா அதைபற்றி அறிந்தும் அவள் இம்முறை விமலாவை காக்க நினைப்பதில்லை. ஏனென்றால் அவள் தவத்தில் ஆழ்ந்த தேவி. ஒற்றை காலெடுத்தவள். யாராலும் அந்த உறுதியை அசைக்கமுடியாது என அறிகிறாள். பிரவீணாவுக்கு தேவையானவற்றை அவள் ஏற்கனவே அவளிடமிருந்து பெற்றுவிட்டாள்.  இம்முறையும் அவன் அவள் முன் தோல்வி அடைகிறான். விமலா ஸ்டீபனுக்காக வருந்துகிறாள். அவன் நோய்க்கு மருத்துவம் செய்ய உதவுதாக கூறுகிறாள். அவனின் மகள்களுக்காக உதவுவதாக கூறுகிறாள். கன்னிமையும் தாய்மையும் நாணயத்தின் இரு பக்கங்களே என்ற பிரவீணாவின் கூறுவது உலகு புரக்கும் அன்னை திருமண உறவை நீக்கி எல்லோருக்குமான அன்னையாவதுதான்.

மேலும் ரவி பிரவீணாவை காயப்படுத்த அவளால் கன்னியாக நடிக்க முடியாது என்கிறான். ஏனென்றால் அவள் உடல் ஒழுக்கம் அற்றவள் என்பதால். ஆனால் பிரவிணா கன்னிமை என்பது ஒரு பாவனைதான், அப்படியொன்றும் பாவனை செய்வது கடினமல்ல என்கிறாள். அப்படியென்றால் ஆராய்ச்சி காலத்தில் உடல் இன்பங்களை ஒருக்கி ஒரு தவம் போல விமலா ஈடுபடுவது கன்னிமை தவம்தான். அதாவது கன்னிமை பாவம். அது உடல் சார்ந்தது அல்ல. அவள் மனம் உடல் இன்பங்களிலிருந்து விடுபட்டுவிடுகிறாள். அது தேவைகளில் ஒன்றாக இருப்பதில்லை. அவள் ஆராய்ச்சிக்கு அது நிபந்தனையல்ல. அப்போது தேவையற்றவை அல்லது தானாகவே விலகிவிடுகிறது. அதாவது ரவியின் மனதின் நிபந்தனைகளுக்கு அங்கே மதிப்பேதும் இல்லை. அல்லது அதை கொண்டு அவளை மதிப்பிடவும் முடியாது. அந்த படிமங்களை மீறி வளர்ந்துவிடுகிறாள். உலகு புரக்கும் அன்னைக்கு நிபந்தனைகளை யாராலும் அளிக்கமுடியாது. அதானால் தான் முடிவில் ரவியின் கருவறையில் அவன் கன்னி தெய்வம் நீங்கிவிடுகிறது.

ஆனந்தன்

பூனா

கன்னியின் காலடியில்

முந்தைய கட்டுரைமரபிசை, கிறிஸ்தவ பாடல்கள்
அடுத்த கட்டுரைஆலந்தூர் கோ.மோகனரங்கன்