கொடுங்கோளூரன்னை

கொற்றவை நாவலுக்கான ஆய்வுகளில் இருந்தபோதுதான் நான் கொடுங்கல்லூருக்கு முதல்முறையாகச் சென்றேன். அது கண்ணகிக்கான கோயில் என்று தெரிந்திருந்தாலும், அங்கே அதற்கான தடையங்கள் இருக்காதென்றும், காலப்போக்கில் அவை மறைந்து போய் பகவதியம்மனாகவே அன்னை வழிபடப்படுவாள் என்றும் எண்ணியிருந்தேன். ஆனால் அங்கே கண்ணகி என்றே அன்னையை வழிபடுவதைக் கண்டேன். ஒவ்வொருநாளும் பலநூறு பெண்கள் அங்கே கைகூப்பி அன்னையை வணங்கி நின்றிருந்தனர். அந்த உணர்வுகள் காலத்துக்கு அப்பாற்பட்டவை, கடல் போல் மலைபோல் நின்றிருப்பவை.

கொடுங்கல்லூரம்மையை ‘அம்மே மகாமங்கலே’ என அவர்கள் வழிபடுவதைக் கண்டேன். மாமங்கலையாகச் சொல்லப்படுபவர் தமிழ்ச்சூழலில் ஒரு விதவையாகப் பார்க்கப்படுவதுண்டு. இங்கே கண்ணகிக்குக் கோயில்கள் இல்லாமலிருக்கக் காரணம் அது என்று சொல்வார்கள். சென்னை கண்ணகிச் சிலை வழியாக மங்கல நிகழ்வுகளுக்குச் செல்வதை தவிர்ப்பவர்களை நான் கண்டதுண்டு. பொதுவாக தமிழ்நாட்டில் பெண்களுக்குக் கண்ணகி என்ற பெயர் மிகமிக அரிது. சிலப்பதிகாரம் புத்துயிர்கொண்டு, ஒரு பெரிய அலையாக தமிழகத்தில் நிகழ்ந்தபோதும்கூட கண்ணகி என பெண்களுக்கு பெயர்ச்சூட்ட எவரும் முனையவில்லை.

மாமங்கலையாக வீற்றிருக்கும் கண்ணகியின் அருள் கேரளநிலப்பகுதிக்கு என்றுமுண்டு. தெற்கே திருவனந்தபுரம் அருகே ஆற்றுகால் தேவி முதல் வடக்கே பந்தலாயனி தேவி வரை கண்ணகியின் வடிவங்களே. பொதுவாக குறும்பா பகவதி என அழைக்கப்படும் எல்லா தேவிகளும் பகவதிகளே. (குறும்பர்களின் வழிபாட்டு அன்னை. கண்ணகியை மலையுச்சியில் கண்டவர்கள் அவர்களே) இன்று சில இடங்களில் திரித்து கூர்ம்பா என்று எழுதியிருக்கிறார்கள். கண்ணகி ஒவ்வொரு நாளும் கேரளம் முழுக்க வழிபடப்படுகிறாள். நல்லம்மை தோற்றம் என்ற பெயரில் கண்ணகியின் கதை தொன்மையான நாட்டார் பாடல் வடிவில் அங்கே உள்ளது.

பச்சைப்பந்தலில் அமர்ந்து இடைவிடாமல் நல்லம்மை தோற்றம் பாடுவார்கள். பலநாட்கள் இரவும் பகலும் தொடரும் பாட்டில் இறுதியில் பச்சைத்தழைகளாலான பந்தல் தானாகவே பற்றி எரியும் என்பது தொன்மம். கண்ணகியின் சீற்றத்தையும் கேரளம் இருபது நூற்றாண்டுகளாகக் கொண்டாடி வருகிறது. சித்திரை மாதம் (மீனம்) பரணி நட்சத்திரத்தில் கொடுங்கல்லூரில் நிகழும் பரணி திருவிழாவில் பல்லாயிரம் பூசாரிகள் அவிழ்ந்த கூந்தலும், சலங்கையும், குருதிதோய்ந்த பள்ளிவாளுமாக சீற்றம்கொண்டு ஆடிச் செல்வதை நான் கண்டிருக்கிறேன்.

கொடுங்கல்லூர் ஆலயம் பல வரலாற்று அடுக்குகள் கொண்டது. முன்பு அந்த ஆலயம் அருகே கோதைப்பறம்பு என்னும் இடத்தில் இருந்துள்ளது. அங்கிருந்த ஆலயம் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது என்பது தொன்மம். பின்னர் இன்றிருக்கும் இடத்திற்கு வந்தது. மேற்குநோக்கிய கருவறையுடன் தேவி ஆலயம் அமைந்தது. அக்கருவறை நிரந்தரமாக மூடப்பட்டு தெற்குநோக்கி ஒரு கருவறை அமைக்கப்படு அதில் தேவி குடியிருத்தப்பட்டாள். இன்று அதுவே வழிபாட்டு கருவறை. அக்கருவறைமுன் சிவன் சன்னிதி கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. கண்ணகி துர்க்கையாக ஆகியிருக்கிறாள். ஆயினும் மக்களுக்கு அவள் பகவதி, கண்ணகிதான்.

வி. ஆர்.சந்திரன் எழுதிய இந்நூலை கொற்றவை நாவல் வெளிவந்த காலகட்டத்தில், அந்நாவலைப் புரிந்துகொள்ள இது உதவும் என்னும் எண்ணத்துடன் நான் மலையாளத்தில் இருந்து மொழியாக்கம் செய்தேன். கொற்றவை நாவலை வெளியிட்ட தமிழினி பதிப்பகம் 2003ல் வெளியிட்டது. நீண்ட இடைவேளைக்குப்பின் இப்போது மறுபதிப்பாக வெளிவருகிறது. இவ்வாண்டே அ.கா.பெருமாள் எழுதிய கொடுங்கல்லூர் கண்ணகி குறித்த நூலும் வெளிவருகிறது. கொற்றவையின் பண்பாட்டுக் குறிப்புகள் சிலவற்றை இந்நூல்களைக்கொண்டு புரிந்துகொள்ள முடியும்.

இந்நூலை முன்னர் வெளியிட்ட தமிழினி வசந்தகுமாருக்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி

ஜெ

வி. ஆர்.சந்திரன் எழுதிய கொடுங்கோளூர் கண்ணகி நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை

கொடுங்கோளூர் கண்ணகி வாங்க

முந்தைய கட்டுரைக.சீ.சிவக்குமார்
அடுத்த கட்டுரைநாவலெனும் கலைநிகழ்வு- வெளியீட்டுவிழா