பழையநிலங்களில் முளைத்தெழல்

(வெளிவரவிருக்கும் படையல் தொகுதிக்கான முன்னுரை)

படையல் வாங்க

புனைவின் களம் என்பது வெறும் கதைப்பின்னணி மட்டும்தானா? நான் அனுபவத்தில் அப்படியில்லை என்று கண்டிருக்கிறேன். ஒரு காலகட்டத்தை கதைப்பின்னணியாக எடுத்துக்கொள்ளும்போது தரவுகள் வழியாக, அக்கலாகட்ட இலக்கியங்கள் மற்றும் கலை வழியாக நாம் அந்த உலகுக்குள் செல்கிறோம். அந்தச் சாரம் நம்மை ஒரு நுண்வடிவில் வந்தடைகிறது.அந்தக் காலட்டத்தின் எல்லா சிக்கல்களிலும், எல்லா வாழ்க்கைத்தருணங்களிலும், எல்லா ஆளுமைகளிலும் அந்த வரலாற்றுக் காலகட்டத்தின் சாராம்சமான சில விஷயங்கள் உள்ளன என்பதைக் காணமுடிகிறது. அது புனைவைத் தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது.

உதாரணமாக, சோழர்காலம் போல பேரரசு ஒன்று அமைந்து, உள்நாட்டு நிர்வாகம் வலுப்பெற்று, போரில்லாத சூழல் நிலவிய ஒரு காலகட்டத்தில் குடிமகனின் உள்ளம் எப்படி இருந்திருக்கும்? அன்றைய இலக்கியத்தை வைத்துப்பார்த்தாலே தெரியும், அது பெருமிதம், கலையார்வம், மற்றும்  ஆன்மிகம் ஆகிய மூன்று அடிப்படைகள் கொண்டதாக இருந்தது. ஆனால் அன்னியப்படையெடுப்புகளால் சீரழிந்து, பஞ்சமும் பசியும் இடப்பெயர்வும் நிறைந்திருந்த வரலாற்றுக் காலகட்டத்தில் மக்களின் மனநிலை அப்படி இருந்திருக்காது. அவநம்பிக்கை, இடப்பெயர்வின் விளைவான பண்பாட்டு இழப்பு, வெறிகொண்ட பக்தியும் மறுபக்கம் நாத்திகமும் என இருந்திருக்கும்.

திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகளை ஆயிரம் ஊற்றுக்கள் என்னும் பெயரில் ஒரு தொகுதியாக வெளியிட்டோம். தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தவையாக எழுதப்பட்ட கதைகள் நான்கு இருந்தன. அவை பிற தொகுதிகளில் இணையவில்லை. அண்மையில் இரண்டு நாட்களில் ஒரு குறுநாவல் எழுதினேன், மங்கம்மா சாலை. மிக எளிமையாக எழுத ஆரம்பித்து நானே ஒரு புதிர்நோக்கி இட்டுச்செல்லப்பட்டு, அதன் உச்சத்தில் நின்றுவிட்ட கதை அது. ஆன்மிகம், இலக்கியம் இரண்டும் உலகியலை எதிர்கொள்ளும் விதம் பற்றிய படைப்பு என அதை இப்போது வாசிக்கையில் தோன்றுகிறது. எங்கும் வெளியாகாத அந்த குறுநாவலையும் இணைத்துக்கொண்டபோது இந்நூலுக்கான கதைகள் தேறின.

நாயக்கர் ஆட்சிக்காலம் நிலையான அரசு கொண்டது, ஆனால் கொந்தளிப்பானதும்கூட. அக்காலகட்டத்தில்தான் தமிழகத்தில் ஏராளமான கண்மாய்கள் வெட்டப்பட்டு வரண்ட நிலங்கள் வேளாண்மைக்கு வந்தன. சோழர் ஆட்சிக்குப்பின் தமிழகத்தில் நிகழ்ந்த மாபெரும் பாசனப்புரட்சி அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆலயங்கள் கட்டப்பட்டன. புதிய சந்தைகளும் நகர்களும் வணிகப்பாதைகளும் உருவாகி வந்தன.

ஆனால் தொடர்ச்சியாக சுல்தான்கள், முகலாயர், மற்றும் மராட்டியரின் அயல்படையெடுப்பு வடக்கிலிருந்து வந்துகொண்டே இருந்தது. ஐரோப்பியர் ஊடுருவத் தொடங்கிவிட்டிருந்தனர். தமிழகத்திற்குள் இருந்த நவாப்களின் தாக்குதல்கள் நிகழ்ந்தன. உள்ளூரில் குடியேறிகளான தெலுங்குமக்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே சமரசங்கள் செய்யவேண்டியிருந்தது. அத்துடன் தெலுங்கு நாயக்கர்களிடையே வேறுவேறு அரசகுலச் சாதிப்பிரிவுகள் நடுவே பூசல்கள் இருந்தன. தஞ்சை, செஞ்சி, மதுரை நாயக்கர்கள் தங்களுக்குள் போரிட்டனர்.

இவையனைத்தையும் விட நிர்வாகச் சிக்கல்களும் ஊழல்களும் அரசை ஆட்டுவித்தன. சில அரசர்கள் திறனற்றவர்களாக இருந்தனர். அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு நிர்வாகிகள் ஊழலில் திளைத்தனர். மங்கம்மா போன்ற மாபெரும் ஆட்சியாளரே அவருடைய அரசவையினால் கொல்லப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. அறுதியாக ராணி மீனாட்சி சந்தாசாகிப்பால் கொல்லப்பட்டு மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்தக் கதைகள் அந்த வரலாற்றுச்சூழலில் மனித நிலைகளை ஆராய்கின்றன. வரலாற்றைவிட அங்கே வெளிப்பட்ட வாழ்க்கைச்சிக்கல்களும் , அவற்றை மனித உள்ளம் எதிர்கொண்ட விதமும்தான் இக்கதைகளுக்கு கரு. அன்றும் இன்றும் மனிதவாழ்க்கையின் கேள்விகளும், சிக்கல்களும், கண்டடையப்படும் தீர்வுகளும் ஒன்றே. மனிதன் வெவ்வேறு வாழ்நிலைகளில் எப்படி வெளிப்படுகிறான் என்பதை கற்பனை வழியாக நாம் நிகழ்த்திப்பார்க்கிறோம் என்பதே இலக்கியம் எனப்படுகிறது. இது இன்று, இங்கே நாம் வாழும் வாழ்க்கையை கொஞ்சம் அகன்றுநின்று பரிசீலிக்கவும், மதிப்பிடவும், கடந்துசெல்லவும் நமக்கு உதவுகிறது. அவ்வகையில் இக்கதைகள் இன்றுநிகழும் கதைகளும் கூட.

இக்கதைத்தொகுதியை என் பிரியத்திற்குரிய மணி ரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

ஜெ

புனைவுக் களியாட்டு நூல்வரிசை வாங்க

முந்தைய கட்டுரைலக்ஷ்மி சரவணக்குமார் இணையதளம்
அடுத்த கட்டுரைசோழர்களை மதிப்பிடுதல்