இலக்கியவாதிகளும் வம்பர்களும்

அம்ம நாம் அஞ்சுமாறே!

அன்புள்ள ஜெ

மனுஷ்யபுத்திரனும் நீங்களும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் கண்டு மனம் மலர்ந்தது. என் ஆதர்சக் கவிஞர் அவர். ஆதர்ச எழுத்தாளர் நீங்கள். இருவரும்தான் தமிழில் படிக்கப்படிக்க தீராத உலகை உருவாக்கி வைத்திருப்பவர்கள். அவர் உங்களைப் பற்றிய கடுமையான கருத்துக்களைச் சொன்னபோது பலரும் இருவரையும் இரு துருவங்களாக சொல்லி என்னிடம் வாதிடுவார்கள். நான் என்னால் இருவரையுமே விடமுடியாது என்றுதான் பதில் சொல்வேன். அதேபோல அண்மையில் லக்ஷ்மி சரவணக்குமார் விழாவில் நீங்கள் கலந்துகொண்டதும் மகிழ்ச்சி அளித்தது. அவருடைய ரூஹ் என்னுடைய ஃபேவரைட் நாவல்.

அன்புடன்

அன்பரசன் ஜே.ஆர்.

அன்புள்ள அன்பரசன்,

என் தளத்தில் மனுஷ்யபுத்திரன் அல்லது லக்ஷ்மி சரவணக்குமார் பற்றி, அல்லது வேறெந்த இலக்கியவாதி பற்றியும், தனிப்பட்ட முறையில்லாத தாக்குதலோ நிராகரிப்போ இருக்காது. இலக்கியம் சார்ந்த கறாரான விமர்சனம் இருக்கலாம் – சிலசமயம் அது சற்றே கடுமையாகவும் ஆகிவிடலாம். மனுஷ்யபுத்திரன் என் அகத்திற்குரிய கவிஞர். எப்போதும்.

நான் முப்பதாண்டுகளாக நான் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒன்றுண்டு- எனக்கு எந்த இலக்கியவாதியிடமும் எந்த பகைமையும் இல்லை. அவர்கள் என்னதான் சொன்னாலும், செய்தாலும் அவர்கள் எனக்கு அந்நியமானவர்களும் அல்ல. எந்நிலையிலும் என் நிலைபாடு இலக்கியவாதிக்கு ஆதரவாகவே. எந்நிலையிலும். அவர்கள் என்னதான் செய்தாலும்.

மனுஷ்யபுத்திரன் போன்ற முந்தைய தலைமுறைப் படைப்பாளிகளை கறாராக அணுகுவது போல நான் லக்ஷ்மி சரவணக்குமாரை அணுகுவதில்லை. மனுஷ்யபுத்திரன் கவிதைகளுடன் சேர்ந்து நானும் வளர்ந்துள்ளேன். அவர் உலகம் எனக்கு அணுக்கமானது. மனுஷ்யபுத்திரன் இன்று ஒரு முக்கியமான இலக்கியமரபை உருவாக்கிய ஆளுமை

ஆனால் லக்ஷ்மி சரவணக்குமார் எழுதும் இலக்கியம் என் தலைமுறைக்கு சற்று எட்டாததாககூட இருக்கலாம் என்றும், ஆகவே என்னை நோக்கி அதை இழுக்கவோ குறுக்கவோ கூடாதென்றும் நினைக்கிறேன். ஆகவே பெரும்பாலும் பிடித்திருந்தால் சுட்டிக்காட்டுவது மட்டுமே செய்கிறேன். என் நிராகரிப்பு பெரிய அடியாக இளம்படைப்பாளிகள்மேல் விழுந்துவிடக்கூடாதென கருதுகிறேன். இந்த தளத்தின் பலஆயிரம் கட்டுரைகளில் எங்கும் நீங்கள் இந்நிலைபாட்டைக் காணமுடியும்.

இலக்கியம் சார்ந்து மிகையாக தாக்கி எதிர்வினையாற்றுபவர்கள் பலர் உண்டு. சிலர் மாற்றுப்பார்வை கொண்டவர்கள். பலர் காழ்ப்பு கொண்டவர்கள். ஆனால் இரண்டுமே இலக்கியத்தில் இயல்பானவை.

அரசியல்நிலைபாடுகளுடன் என்னை மிகமிகக் கடுமையாகத் தாக்குபவர்கள், ஒருமையில் வசைபாடுபவர்கள் பலர் சமூகவலைத்தளச் சூழலில் உள்ளனர். அவதூறுகளும், திரிப்புகளும், முத்திரைகுத்தல்களும், உள்நோக்கு கண்டடைதல்களுமாக வாரம் ஒரு கட்டுரையேனும் வந்துகொண்டிருக்கிறது. அவர்களை நான் பொருட்படுத்துவதில்லை – எதற்கும் மறுமொழி சொல்வதுமில்லை. இதுவரை ஒரு வரி கூட எழுதியதில்லை -எழுதப்போவதுமில்லை.

ஏனென்றால் அன்றாடக் கட்சியரசியல் சார்ந்த விவாதங்களுக்கும் இலக்கியத்திற்கும் எந்த தொடர்புமில்லை. ஆகவே அவர்கள் என் உலகில் இல்லை. அத்துடன் அரசியல் சார்ந்த தீவிர பற்று இலக்கியத்திற்கும் கலைக்கும் தேவையான நுண்ணுணர்வை அழிக்கும் என்றாலும், அவ்வாறிருப்பது ஒன்றும் பிழையோ பாவமோ அல்ல. அது அவர்களின் உலகம், அவர்களின் உணர்ச்சிகளுக்கு அவர்களுக்கான நியாயங்கள் உள்ளன. ஆகவே அவர்களுடன் எந்த பகைமையுமில்லை. அவர்களுடன் தனிப்பட்ட முறையிலான நல்லுறவுகளுக்கு எந்த தடையும் என்னிடம் இதுவரை இருந்ததில்லை.

ஆனால் எனக்கு கடும் ஒவ்வாமையை அளிப்பவர்கள் இரு சாரார். இலக்கியத்தை தங்கள் தொழில்முறை வெற்றிகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் காரியவாதிகள். இவர்கள் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு தங்கள் காய்நகர்த்தல்களுக்காக திரிக்கிறார்கள். எந்த நேர்மையும் இவர்களின் பார்வைகளில் இல்லை. இவர்களின் சூழ்ச்சி என்பது நம் சூழலில் எந்த மெய்யான விவாதமும் நிகழாமலாக்குகிறது. மிகச்சிறந்த உதாரணமாக நான் நினைப்பது ராஜன் குறை.

இரண்டாவது, இலக்கியத்தை வம்புகளுக்கான இடமாக மட்டுமே பார்ப்பவர்கள். எந்தவகையான இலக்கியச் செயல்பாடுகளையும் அழித்துவிடும் கிருமிகள் இவர்கள். இதில் இவர்களுக்கு ஒரு கிளர்ச்சி இருப்பதனால் சலிப்பில்லாமல் அழிவுப்பணியைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் இவ்விரு சாராரையும் பொருட்படுத்தாமல் கடந்துசெல்வதே வழக்கம். ஆனால் சில தருணங்களில் ஏதேனும் சொல்லியாகவேண்டியிருக்கிறது. குறிப்பாக வம்பர்கள், என்னுடன் தனிப்பட்ட நட்பு உண்டு என்று சொல்லிக்கொண்டு என் நண்பர்களை அணுகி தங்கள் வேலையை காட்ட ஆரம்பிக்கும்போது.

இதுவரை நான் கடுமையாக என்னிடமிருந்து விலக்கிவிட்டவர்கள் அனைவருமே வெறும் வம்பர்களே. ஐயமிருந்தால் அவர்கள் பல ஆண்டுகளாக என்ன செய்திருக்கிறார்கள் என்று மட்டுமே பார்த்தால் போதும். வெறும் வம்புகளுக்கு அப்பால் செயல்பாடு, பங்களிப்பு என ஒரு வரி கூட இருக்காது. வம்பில் நேரம்போக்கும் கும்பல் மட்டுமே அவர்களைச் சூழ்ந்திருக்கும். அவர்களை ஊக்குவித்துக்கொண்டும் இருப்பார்கள்.

ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். வம்பர்களை நாம் திரும்பிப் பார்த்தாலேபோதும், நடுநடுங்கிவிடுவார்கள் என. அந்த அற்பத்தனுணர்வால்தான் அவர்கள் வம்பர்களாகிறார்கள். ஒரு வம்பர் எனக்கு அவர் நெருக்கமானவராக இருந்தாரென பொய் சொல்லி ஆண்டுக்கணக்காக அவதூறுகள் செய்துகொண்டிருந்தார். அவரை உண்மையில் எனக்கு தெரியாது, மிகமோலோட்டமான அறிமுகம்தான் உண்டு என நான் சொன்னதுமே அலற ஆரம்பித்துவிட்டார். பரிதாபம்.

அதைவிட ஆச்சரியம், இவர்கள் தொடர்ச்சியாக என்மேல் அவதூறுகளை சொரிந்துகொண்டிருக்கையில் ஒரு சொல்லும் சொல்லாத சிலர், அந்த வம்பர்களை எனக்கு தெரியாது என நான் மறுத்ததும் நடுநிலைபாவனையில் அந்த வம்பர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதுதான். அப்படியென்றால் இவர்கள் மௌன ஆதரவுடனேயே இந்த அவதூறுகள் நடந்துள்ளன.

இலக்கியம் எனக்கு ஒரு தீவிரமான பணி. நான் என் முழுவாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கும் செயற்களம். ஒருநாள் விடாமல் நாற்பதாண்டுகள் இதில் இருந்துகொண்டிருக்கிறேன். பிறிதொரு வாழ்க்கை எனக்கில்லை. இலக்கியம் என் மதம், என் மெய்தேர் வழி. ஆகவே இலக்கியத்தை வம்புகளாக ஆக்கும் எவரும் என் ஆழ்ந்த அருவருப்புக்குரியவர்களே. அவர்கள் நான் காணும் பெருங்கனவுகளை, நான் ஆற்றும் செயல்களை சீரழிக்க விடாமலிருப்பது என் கடமையும்கூட. நான் அவர்களை விலக்குவது என்னையும் என் செயல்களையும் காத்துக்கொள்ள மட்டுமே.

நான் இணையவெளியில் வம்புவளர்த்துக் கொண்டிருப்பவன் அல்ல, அதற்கு எனக்குப் பொழுதில்லை. என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மதிப்பிற்குரியது. ஒவ்வொரு நண்பரும் அரியவர்கள். நான் இங்கே சிலவற்றை செய்து நிறுவியிருக்கிறேன். இன்னும் கனவுகள் கொண்டிருக்கிறேன். காலம் இனி மிகக்குறைவு – ஆறேழாண்டுகள். காலம் கடந்துசென்றபின் எஞ்சுவது என் படைப்புகளும் செயல்களும் மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைராஜகோபாலன், கடிதம்
அடுத்த கட்டுரைவெ. சாமிநாத சர்மா