மேடையுரைப் பயிற்சி தேவையா? -ஜெயராம்

மலம் என்ற ஊடகம் – ஜெயராம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் மேடையுரை பயிற்சி வகுப்பில் பேசிய உரையை கட்டுரையாக குருகு இதழுக்கு எழுதியதை வாசித்து விட்டு நன்றாக வந்திருப்பதாக மலேசிய சுவாமி பிரம்மானந்தர் அழைத்து பாராட்டினார். மொழிநடையும் கதை சொல்லும் தன்மையும் நன்றாக இருப்பதால் அடுத்து புனைவுகள் ஏதாவது முயற்சி செய்யலாம் என்று சொன்னார். சிறுகதை ஒன்று எழுதும் எண்ணம் உருவான நேரத்தில் சுவாமி அழைத்து புனைவுகள் எழுத ஊக்கப்படுத்தியதை ஆசியாக கருதுவதாக அவரிடம் கூறினேன்.

நான் ராமானுஜம், ஆதிமூலம் போன்ற ஓவியர்களுக்கு எழுதிய தமிழ்விக்கி பதிவுகளை பார்த்து விட்டு ராமானுஜம் பற்றிய நாவலை எழுத நீங்கள் ஊக்கப்படுத்திய போதும் இதே போன்ற ஒரு தருணம் வாய்த்தது. அந்த நாவலை ஆரம்பிக்கும் போது எழுந்த கேள்விகளால் அதை நிறுத்தி வைத்தேன். ஆனால் அதை எழுதி முடிப்பேன். அந்த புனைவு எப்படி உருமாறி வந்தாலும் சரி. அது பிரசுரிக்கப்படாமல் ஆனாலும் சரி.

சிறுகதை மட்டுமல்ல ஓவியத்தையும் நடனத்தையும் இணைத்து உருவாக்க நினைத்திருக்கும் ஒரு படைப்பையும் நீங்கள் அளித்த மேடை உரை பயிற்சியை மனதில் கொண்டே உருவாக்க திட்டமிட்டிருக்கிறேன். எனக்கு நடனம் கொஞ்சம் வரும் என்றாலும் ஆசிரியர்களிடம் நேரடியாகவும் முறையாகவும் ஒன்றை கற்பது அளிக்கும் தெளிவை திரும்ப திரும்ப உங்கள் பயிற்சி வகுப்புகளில் உணர்வதால் சில நாட்கள் முறையாக நடனம் கற்கும் எண்ணமும் உள்ளது. மேடை உரை பயிற்சி வகுப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் நடந்த குரு நித்யா காவிய அரங்கில் பேசியவர்களில் நான் உட்பட மேடையுரை பயிற்சியில் கலந்து கொண்ட சில நண்பர்களின் உரைகள் முக்கிய எழுத்தாளர்களின் உரைகள் மத்தியிலும் தனித்து தெரிந்தது. என் வரையில் காண்பியல் கலை பிற கலைகளுடன் அதிலும் இலக்கியத்துடன் உரையாடுவதை முக்கியமாக கருதுகிறேன். அதனால் தமிழின் மிக முக்கியமான மூத்த மற்றும் இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வில் காண்பியல் கலை பற்றி பேசியதை மிக முக்கியமான தருணமாக கருதுகிறேன். இதுபோன்ற கூடுகைகள் என்னை போன்ற இளைஞர்களுக்கு அளிக்கும் வாய்ப்புகளுக்கு உங்களுக்கு என் நன்றிகள்!

மேடையுரை பயிற்சி வகுப்பில் நீங்கள் ஒரு உரையையோ, சிறுகதையையோ எப்படி கச்சிதமாக ஆரம்பிப்பது, எப்படி தகவல்களை சொல்வது, கடைசியில் எப்படி கச்சிதமாக முடிப்பது ஆகியவற்றை பயிற்சி அளித்தீர்கள். மேடையுரை பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு நான் உங்களுக்கு எழுதிய பழைய கட்டுரைகள் கடிதங்கள் அலுவலகச் சூழலில் நிகழ்த்தப்பட்ட சில ஆங்கில உரைகள் ஆகியவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். அவைகளில் சிறந்தவை எல்லாம் கச்சிதமான துவக்கத்துடன் அனேகமாக ஒரு நிகழ்வை சொல்லித் துவங்கி நீங்கள் எப்படி சொன்னீர்களோ அதே முறையில் நிறைவு கொள்வதாக இருந்தது. வாசிப்பு பழக்கம், தொடர்ந்து Jeyamohan.in கட்டுரைகள், வெண்முரசு வாசிப்பதால் இயல்பாகவே இந்த கலை கைவரப்பட்டதாக தோன்றுகிறது. கதை சொல்லும் தன்மையும் கொஞ்சம் எனக்கு உண்டு.

அப்புறம் எதற்கு பயிற்சி வகுப்புகள்? என்ற கேள்வி எழும். ஓவியம் சிறு வயது முதல் வரைந்தாலும் முறையாக கற்க ஆரம்பிக்கும் போது குறிப்பிட்ட வண்ணங்கள் கலந்தால் இந்தந்த வண்ணங்கள் உருவாகும் விளைவுகள் இப்படி இருக்கும் என்று அடிப்படைகளை கற்கும் போது அந்த கலைக்குள் இருக்கும் formulaக்கள் பிடிபடும். formulaக்கள் எப்போதும் ஒரு துறையில் பல வருடங்கள் புழங்கும் துறை நிபுணர்களால் அந்த துறையின் அடிப்படைகளாக எளிமையான வடிவில் வரையறுக்கப்பட்டவையாக இருக்கும். formulaக்கள் எளிய வடிவில் இருந்தாலும் அதை தெரிந்து வைத்திருப்பது இதற்கு இவ்வளவு தான் என்ற தன்னம்பிக்கையை அளிக்கும். அதன் மேல் நம் கற்பனையை ஆளுமையை காட்டி உரையை மேலும்  கூரியதாக மாற்றுவதற்கு இந்த அடித்தளத்தை பற்றிய புரிதல் நமக்கு மிக அவசியம்.

Formulaக்களை தெரிந்து வைத்திருப்பதற்கு அடுத்தபடியாக உரையை பேசிப்பார்ப்பது, கட்டுரையை எழுதிப் பார்ப்பது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது முக்கியம். மேடை உரை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் ஆசிரியரால் சொல்லிக் கொடுக்கப்பட்ட formulaக்களின் படி தங்கள் உரையை தாங்களே தயாரித்து எல்லோர் முன்னும் எழுந்து நின்று பேசும் படி வகுப்புகள் இருந்தது. எனக்கு பேச்சில் உள்ள தடுமாற்றம் உரையை எல்லோர் முன்னும் பேசிய பிறகும் நீங்கள் சுட்டிக் காட்டிய பிறகும் தான் தெரிந்தது.

ஒரு உரையோ கட்டுரையோ சிறுகதையோ ஏன் நன்றாக வருகிறது? ஏன் நன்றாக வருவதில்லை என்பதற்கான காரணங்கள் அதன் அடிப்படைகளை கற்கும் போது மட்டுமே புலப்படும். அதற்கு மேல், துறை நிபுணர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் மட்டும் தான் மிக நுணுக்கமான அவதானிப்புகளை பார்க்க முடியும். ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் அங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரின் உரைகளை கேட்டு தன் அனுபவத்தை வாசிப்பை கொண்டு அவைகளை எப்படி எல்லாம் சிறப்பாக மேம்படுத்தலாம் என்று ஆலோசனை கூறுவதை பார்ப்பதே தனி அனுபவம் தான்.

நான் மேடையுரை பயிற்சிக்கு சமானமான தொடர்புறுத்தல் சம்பந்தமான வேறு ஒரு இணையவழி பயிற்சியை ரூ.18,000 கட்டி சில வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். ஆனால் அதனுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த செலவில் அதே நேரத்தில் பலமடங்கு பயனுடன் உங்களிடம் அந்த பயிற்சியை பெற்றுக் கொண்டேன்.

நீங்கள் உங்கள் குருவின் ஆணையை தலையாக கொண்டும் அடுத்த தலைமுறையின் மீதுள்ள நம்பிக்கையின் பொருட்டும் சில பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துகிறீர்கள். அதில் சில வகுப்புகள் சிறப்பாக போய் சேரும். மற்ற சில வகுப்புகள் அப்படி போய் சேராது. (எவ்வளவு சொன்னாலும் இங்கே சில நூறு எண்ணிக்கையில் உள்ள ஒரு சிறிய வட்டம் மட்டும் தான் இது போன்ற வகுப்புகளில் வந்து பயன் பெற தயாராக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்).

சில நேரங்களில் உங்கள் உயர்ந்த இலக்குகளை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமலோ கண்டு கொள்ளாமலோ போகும் போது நம்பிக்கையின்மையை உருவாக்கலாம். அதனால் மேடை உரை பயிற்சி வகுப்பை நீங்கள் தொடர விரும்பாமல் இப்போது நிறுத்தி வைத்ததை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இது போன்ற பயிற்சி வகுப்புகளை வராத சில நபர்களுக்காக நிறுத்தி வைப்பது என்பது கலந்து கொண்டு பயனடைய ஆர்வமுடன் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது கூட என்று தோன்றுகிறது.

ஜெயராம்

*

அன்புள்ள ஜெயராம்,

நான் நம்பிக்கையிழப்பதில்லை. ஆனால் நிகழ்வுகளைப் பொறுத்தவரை குறைந்தது 30 பேர் பங்கெடுக்காவிட்டால் அதற்குரிய செலவினங்களை கட்டுக்குள் வைக்க முடியாது. கைக்காசு செலவழிக்கவேண்டியிருக்கும். நாம் குறைந்த அளவு கட்டணமே வாங்குகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். முப்பதுபேருக்குமேல் கலந்துகொள்ளாத நிகழ்வுகள் மேற்கொண்டு நிகழ வாய்ப்பில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைமாட்டையும் மரத்தையும் இந்துமதம் வழிபடுகிறதா?
அடுத்த கட்டுரைகன்னி, ஒரு பதிவு