ராஜகோபாலன், கடிதம்

நிலத்தொடு நீரே.. : ஜா.ராஜகோபாலன்

அன்பின் ஜெ,

தளத்தில் இணைப்பு அளிக்கப்பட்டிருந்த ஜாஜா-வின் ‘’நிலத்தொடு நீரே’’ கட்டுரையை வாசித்தேன். ஜாஜா எப்போதுமே ஒரு விஷயத்தை சிறு சிறு அலகுகளாகப் பிரித்து பார்வைக்கு வைத்து பின்னர் அவற்றைத் தொகுத்து ஒரு ஒட்டுமொத்த பார்வையை உருவாக்கும் திறன் படைத்தவர். புறவயமாக அணுகி அறிந்து கொள்ளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் அகவயமாக அணுக வேண்டிய இலக்கியத்தையும் குறித்து விளக்கி சமூகங்கள் வளரும் தோறும் அவற்றின் புரிதல் எவ்வாறு நிகழ்கிறது எவ்வாறு ஒரு எல்லைக்குள் அடங்குகிறது என்பதற்கான தடங்களைத் தனது கட்டுரையில் அடையாளப்படுத்தியுள்ளார்.

சாமானிய மனம் எப்படி சிந்திக்கும் என்பதை ஒரு பேச்சாளராக கட்டுரையாளராக  முழுமையாக அறிந்தவர் ஜாஜா. பல் தேய்த்தலில் எத்தனை அறிவியல்கள் இருக்கிறது என ஆரம்பித்து சூழலியலுக்கு வருகிறார். சங்க காலத்தின் இலக்கியங்கள் நுண்மையான சூழலியல் அவதானம் கொண்டிருப்பதைக் காட்டி அதே சமூகத்தின் சமகாலத்தில் மரங்கள் உதிர்க்கும் இலைகளை குப்பைகளாகக் காணும் சாமானிய மனநிலை உருவாகியிருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார்.

கட்டுரையாளர் கட்டுரையில் எந்த இடத்திலும் தொழில்நுட்பத்தை சாடாமல் இன்றைய சமூகம் சூழலியல் பிரக்ஞை கொள்ள வேண்டியது என்பது நோக்கி அறிந்து தொகுத்துக் கொள்ளும் புறவயமான அறிவால் மட்டுமே நிகழக் கூடியது என்பதை உணர்த்தியுள்ளார். ஒரு சிறு கட்டுரைக்குள் தொல்காப்பியம் தொடங்கி சமகாலம் வரை வந்து சேர்ந்திருப்பது என்பது சிறப்பான முயற்சி. ஒரு வாசகன் இந்த கட்டுரையிலிருந்து சிந்திக்கத் தொடங்கி நீண்ட தூரம் செல்ல முடியும்.

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள் பேட்டி, வனம் இதழ்
அடுத்த கட்டுரைஇலக்கியவாதிகளும் வம்பர்களும்