சினிமா- வெற்றியும் ஊதியமும்

அன்புள்ள ஜெ,

அண்மையில் நடிகர், திரைக்கதையாசிரியர் மணிகண்டன் திரைத்துறையில் திரைக்கதையாசிரியருக்கு முறையாகப் பணம் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதை இணையத்தில் பகிர்ந்த பலர் உங்களை வசைபாடி தள்ளியிருந்தனர். பொதுவாக கொஞ்சம் நாசூக்கு கொண்டவர்கள்கூட பொறாமைகளை வெளிக்காட்ட தயங்குவார்கள். எனக்குப் பொறாமையெல்லாம் இல்லை என்ற வகையிலேயே கருத்துச் சொல்வார்கள். அந்த நாசூக்கெல்லாம் இப்போது இல்லை. நேரடியாக அடிதான்.

ஆனால் நான் கேட்கவிரும்புவது இதுதான். ஏன் எழுத்தாளர்களுக்கு திரைத்துறையில் ஊதியம் குறைவாக இருக்கிறது? மலையாளத்திலும் தெலுங்கிலும் அப்படித்தானா? அப்படி இல்லை என கேள்விப்பட்டேன்.நான் திரைக்கதை எழுதும் ஆசை கொண்டவன். ஆகவே இதைக் கேட்கிறேன்.

சந்தானக்குமார்

*

அன்புள்ள சந்தானக்குமார்,

சராசரித் தமிழர்களின் பொதுவான ஆசை என ஒன்று உண்டு என்றால் அது ‘சினிமாவில் நுழைவது’ தான். இதை கொஞ்சம் கவனித்தாலே நீங்கள் சுற்றிலும் உணரலாம். அனைவரிலும் உறையும் பகல்கனவு அது. அந்தக் கனவு கலைஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது.

ஆகவேதான் வேறெதை விடவும் தமிழ்மக்கள் சினிமா பற்றிப் பேசுகிறார்கள். அரசியல், புத்தகம் எதுவுமே முக்கியமல்ல. சினிமாவையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் பேசும் பாவனையில், இலக்கியம்பேசும் பாவனையில் சினிமாவையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆசைக்கான காரணம் இன்னொன்று உண்டு. வேறெந்த துறையில் சாதிக்கவேண்டும் என்றாலும் அதற்கான தகுதி, உழைப்பு தேவை. அது முகத்திலறைவதுபோல தெரிவதும்கூட. சினிமா அப்படி அல்ல. சினிமா பார்க்கும் அனைவருமே மானசீகமாக சினிமா இயக்குநர்களும் நடிகர்களும் எழுத்தாளர்களும்தான்.

ஏனென்றால்,  ஒரு நல்ல வணிக சினிமாவின் இலக்கணமே அதை பார்ப்பவர்களும் கூடவே அந்தச் சினிமாவை புனைந்து கொள்ள வாய்ப்பளிப்பதுதான். ‘இதை நானும் எடுப்பேன். இன்னும்கூட நன்றாக எடுப்பேன்’ என ரசிகனை நினைக்கவைத்தால்தான் படம் ஓடும்.

உண்மையில் இதை திட்டமிட்டே உருவாக்குகிறோம். அண்மையில் பொன்னியின் செல்வனுக்கு பாட்டெழுதச் சென்ற இளங்கோ கிருஷ்ணன் அடைந்த அதிர்ச்சியை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘பாட்டு எளிமையாக, எல்லாருமே எழுதக்கூடியதாக இருக்கணும்’ என்று அவருக்குச் சொல்லப்பட்டது. ‘அப்படியென்றால் எதற்கு நான்?” என அவர் திகைத்தார். என்னிடம் அதைச் சொன்னார். சிரித்துக்கொண்டேன்.

“எல்லாரும் எழுதிவிடலாமென நினைப்பதுபோல இருக்கவேண்டுமே ஒழிய அதை அப்படி எல்லாரும் எழுதிவிட முடியாது. அப்படி எழுதுவதே ஒரு கலைத்திறனும் பயிற்சியும்தான். அதற்குத்தான் கவிஞனும் எழுத்தாளனும் தேவை. அதற்குத்தான் அவனுக்கு ஊதியம்.’ என்று அவரிடம் சொன்னேன்.

படம் பார்க்கும் அனைவருமே அப்படத்துக்கு தங்களுடைய ஒரு மாற்றுவடிவை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆலோசனைகள் திருத்தங்கள் சொல்கிறார்கள். அய்யய்யோ கோட்டைவிட்டு விட்டார்கள் என பதறுகிறார்கள். வசைபாடவும் செய்கிறார்கள். ஆனால் இதெல்லாமே நாங்கள் திட்டமிட்டு உருவாக்கும் எதிர்வினைகள். அடித்தள ரசிகன்கூட அப்படி திருத்தம் சொல்லவேண்டும். அப்படி எதிர்வினைகளை உருவாக்காத படைப்பு விலக்கம் கொண்டு தோல்வியடையும். அறிவுஜீவிகள் மட்டும் மாற்றுவடிவம் உருவாக்கமுடியுமென்றால் அப்படத்தை அறிவுஜீவிகள் மட்டுமே பார்ப்பார்கள்.

இந்தக் காரணத்தால் சினிமா பார்க்கும் அனைவருமே தாங்களும் சினிமா எடுக்க முடியும் என நினைக்கிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் சினிமாக்கனவுகள் கொண்டிருக்கிறார்கள். சினிமா என்றால் பணம் புகழ் ஆகியவற்றுக்கான சுருக்கவழியாக கருதப்படுகிறது. சினிமா வழியாக வரும் புகழ் வேறு எவ்வகையிலும் வருவதில்லை. ஒவ்வொரு நாளும் சாமானிய மக்கள் பல்லாயிரம் பேர் சினிமாவில் சேர சென்னை வந்து இறங்குகிறார்கள். மானசீகமாக சினிமாவில் வாழ்பவர்கள் பலகோடிப்பேர்.

ஆகவே சினிமாவில் இருக்கும் எவர்மேலும் கடும் பொறாமை இங்கே உண்டு. அவர்களின் வீழ்ச்சிக்காகக் காத்திருப்பார்கள். வீழ்ச்சி அடைந்ததை அறிந்தால் நிறைவடைவார்கள். “அவரு இப்ப சோத்துக்கே கஷ்டப்படுறார்னு வாசிச்சேன்…. உண்மையா சார்? என்னா ஆட்டம் போட்டான் அந்தாளு!” என கொஞ்சம் சரிவடைந்த அனைத்து சினிமா ஆளுமைகள் பற்றியும் சாமானியர் பேசுவதை கேட்டிருக்கிறேன்.

எவருக்கும் தொழிலதிபர்கள் மேல், அரசியல்வாதிகள் மேல் பொறாமை இல்லை. பிறதுறைகளில் வெற்றிபெற்றவர்கள் மேல் காழ்ப்பு இல்லை. ஏனென்றால் அது தங்களுக்குச் சாத்தியம் அல்ல என நினைக்கிறார்கள். ஆனால் சினிமாவில் தாங்கள் வெல்ல முடியும் என நினைக்கிறார்கள் – பல்லாயிரம்பேரை அப்படி நாங்கள் நினைக்க வைக்கிறோம். இது இந்த தொழிலுக்குரிய தன்மை. ஆகவே அந்தப் பொறாமையை இந்த ‘பேக்கேஜில்’ ஒரு பகுதி என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.

என் படங்கள் வரும்போது இணையத்தில் ஒரு சிறுவட்டத்தில் உருவாகும் கொப்பளிப்பு, காழ்ப்புகளை ஒருவகை அனுதாபத்துடனேயே பார்க்கிறேன். அவர்களில் திறமையுள்ளவர்கள் வெல்லவேண்டும் என மெய்யாகவே விரும்புகிறேன்.

*

மணிகண்டன் பேட்டியை படிக்கவில்லை. சினிமாப் பேட்டிகள் எப்படி எடுக்கப்படும், எப்படி ‘ஹைலைட்’ செய்யப்படும் என தெரியும். இது இந்த தொழிலின் விளையாட்டுகளில் ஒன்று. உடன்பட்டே ஆகவேண்டும். ஏனென்றால் இது கேளிக்கைத்துறை. கருத்துரீதியாக இவற்றுக்கு எந்தப் பொருளும் இல்லை.

சினிமா ஒரு தொழில். எந்த தொழிலும் கடும் போட்டி நிறைந்தது. எல்லா தொழிலிலும் நியதி ஒன்றே. நீங்கள் ஒரு சிறு வணிகம் செய்தால் தெரியும், பணம் வாங்குவது எவ்வளவு கடினம் என்று. ஆனால் ஒரு கட்டத்திற்குப்பின் பணம் வந்துகொண்டும் இருக்கும். இரண்டுமே எங்குமுள்ளதுதான்.

மணிகண்டன் இன்று வெற்றியை அடைந்துவிட்டார். முகமறிந்தவர் ஆகிவிட்டார். வெற்றியைத்தான் பணம் பின்தொடரும். மிக விரைவிலேயே அவர் லட்சங்களில் புழங்குவார். அவரைப்பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்.

வெற்றிதான் இங்கே கணக்கு. ’நான் கடவுள்’ ‘அங்காடித்தெரு’ என இரு தொடர்வெற்றிகள் இல்லையேல் நானும் வீட்டில்தான் இருந்திருப்பேன். கடல் அல்லது காவியத்தலைவன் தோல்விக்குப் பின் உடனே அடுத்தபடம் தோல்வியடைந்திருந்தாலும் அதே நிலைதான்.  எவரும் எனக்கும் பணம் தந்திருக்க மாட்டார்கள். பதினாறு ஆண்டுகள் திரையில் நீடித்திருக்க மாட்டேன்.

(இன்று சினிமா போதும் என்னும் மனநிலைக்கு வந்துகொண்டிருக்கிறேன். விலகிவிட திட்டமிட்டிருக்கிறேன். வேறு கனவுகள், திட்டங்கள்)

நான் சினிமாவுக்குள் என் நண்பர்களால் கொண்டுசெல்லப்பட்டேன். லோகிததாஸ் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அடுத்த இரு படங்களும் என் நண்பர்களுடன் – பாலா, வசந்தபாலன். சினிமாவுக்குள் நுழைந்து இரு வெற்றிகளுக்குப் பிறகுதான் நான் எனக்கு தெரியாத ஒருவருடன் படம் செய்தேன். அது அரிதாக நிகழ்வது.

சினிமா வாய்ப்புக்காகத் தேடிச்செல்பவர்கள் தங்களை வெற்றிகள் வழியாக நிரூபிக்கும்வரை போராடியே ஆகவேண்டும். புறக்கணிப்புகள், ஏமாற்றங்கள் பல இருக்கும். அவமதிப்புகளும் இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் எந்த தொழில்துறையிலும் இறங்குபவர்கள் முதலில் சந்திக்கவேண்டியவையே. சந்தேகமிருந்தால் ஏதாவது ஓர் ஏஜென்ஸி எடுத்து செய்துபாருங்கள். ஊழியர்களுக்கு அந்தச் சிக்கல் இல்லை.

நா.முத்துக்குமார் தொடக்ககாலத்தில் ‘சிங்கிள் டீ’க்காகத்தான் பாட்டெடுதியதாகச் சொல்வார். ஆனால் இப்போது இளங்கோ கிருஷ்ணன் பாடலாசிரியராக அறிமுகமாகியிருக்கிறார். நான் இளங்கோவை அழைத்து, தயங்கியவரை நம்பிக்கையூட்டி உள்ளே கொண்டுசென்றேன். முதல் படமே அவர்மேல் மதிப்புகொண்ட மணி ரத்னம் இயக்கத்தில். அது மாபெரும் வெற்றி. இனி  அடுத்தடுத்த படங்கள் அந்த மதிப்பின் விளைவாகவே அமையும். அவர் எந்த புறக்கணிப்பையும் எங்கும் சந்திக்க நேராது. இதுதான் நடைமுறை.

அடிநிலையில் இருந்து தொடங்குபவர் தன்னை நிரூபிக்கும் வரை அவர் ‘ஆளிலி’தான். இங்கல்ல, ஹாலிவுட்டில்கூட. குவிண்டின் டொரெண்டினோவே பிறருக்காக நிழல் திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். உழைப்புச் சுரண்டல் உட்பட எல்லாமே எங்குமுண்டு. அது சரியா என்றால் இல்லை பிழை. ஆனால் அதற்கெதிராகப் போராடுபவர்கள் அந்தப்போராட்டத்தையே நிகழ்த்த முடியும்- வெற்றி வந்துசேராது. உண்மையாக திறமை உடைய ஒருவரின் பெயர் எப்படியும் வெளிவரும். வாய்ப்பும் தொடர்ந்து வெற்றியும் வந்தமையும்.

எழுத்தாளர்களுக்கு ஊதியமில்லை என்பது ஒரு மாயை. என் அளவுக்கு ஊதியம் எவருக்குமில்லை என்பது உண்மை, நான் எழுதுவன மாபெரும் படங்கள். ஆனால் தொலைக்காட்சிகளுக்கும் படங்களுக்கும் எழுதும் பாஸ்கர் சக்தி, பா.ராகவன், ப்ரியா தம்பி போன்றவர்கள் நட்சத்திர ஊதியம் பெறுபவர்களே.

முதல்படத்துக்கு லோகிததாஸ் எனக்கு நல்ல தொகை தந்தார். நான் அதை மறுத்தேன், வற்புறுத்தி பணம் தந்தார். இரண்டாம் படத்துக்கு பாலா என்னிடம் ’என்ன சம்பளம் கேட்கிறீர்கள்?” என்றார். ’நான் கேட்கமாட்டேன், எனக்கு சினிமாவில் இன்று இடமென ஏதுமில்லை. நீங்களே கொடுங்கள்’ என்றேன்.

நண்பரிடம் “டேய், இப்ப எழுத்தாளர்லே யாருக்குடா ஹையஸ்ட் பேமெண்ட்?” என்று பாலா கேட்டார். நண்பர் சுஜாதாவின் ஊதியத்தை விசாரித்துச் சொன்னதும் அதில் ஆயிரம் ரூபாய் கூடுதலாக எனக்கு அளித்தார் “ஒருபோதும் இதுக்கு கம்மியா வாங்காதீங்க…இது என்னோட ஆர்டர்” என்றார்.

அதற்கு மேலேயும் அந்தப் படத்துக்காக பணம் பெற்றேன். அன்று மிக மதிப்பு மிக்கதாக இருந்த மடிக்கணினி, காசியில் வாங்கிய பட்டுப்புடவைகள் என கிட்டத்தட்ட நான் வாங்கிய ஊதியத்தில் நேர்பாதியை மீண்டும் பாலா அளித்தார். நானும் குடும்பமும் விமானத்தில் ஒரு சுற்றுலா போனோம். அந்த முழுச்செலவும் பாலாவுடையது. நான் ஒரு வார்த்தை சொல்லவில்லை. பலசமயம் சங்கடமாகவே உணர்ந்தேன். நண்பர் என்பதனால்.

இன்றுவரை இதுவரை வெளிவராத ஒரு படத்திற்கான ஊதியம் தவிர ஒரு ரூபாய் கூட எவரும் மிச்சம் வைத்ததில்லை.  நின்றுவிட்ட படத்துக்கான ஊதியத்தைக்கூட தேடிவந்து தந்திருக்கிறார்கள். சுப்ரமணிய சிவா எடுத்த உலோகம் படம் முடிவடையவே இல்லை. ஆனால் முழுப்பணத்தையும் அளித்தார். நான் அதை மறுத்தபோது ‘அது வேறே இது வேறே… நீங்க எழுதிட்டீங்க’ என்றார்.

எந்த தொழில்துறையிலும் ஊதியம் என்பது உழைப்பு, பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அல்ல. மதிப்பு, இடம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே. வெற்றிக்குப் பங்களிப்பாற்றுவதே முதன்மையான அடிப்படை. ’டைடில் வேல்யூ’ என்று பெயர். அந்த வெற்றி வரும் வரை ஊதியத்துக்காக பேசும் நிலையில் எவரும் இருப்பதில்லை. உண்மையில், ஒரு படத்தை மறுக்கும் நிலையில் உள்ளவருக்கே மதிப்புமிக்க ஊதியம் அளிக்கப்படும்.

ஆகவே முதல்வெற்றி, அவ்வெற்றிக்குக் காரணமான பங்களிப்பு ஆகியவை வரும்வரை போராடியே ஆகவேண்டும். எழுத்தாளர்களை விடுங்கள். முதல்பட இயக்குநர், இசையமைப்பாளர், கலை இயக்குநர் அனைவருமே கிட்டத்தட்ட இலவச உழைப்பை அளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். நடிகர்களும்கூட. முதல் வெற்றியுடன் அவர்களின் இடம் மாறுகிறது.

திரைத்துறையில் நுழைவதற்கு தொடர்புகள் ஒரு நல்ல வாசல். ஆனால் நுழைந்த பின்னர் நிரூபித்தாலொழிய நீடிக்க முடியாது. தொடர்புகளை உருவாக்கியாக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் முதல் வெற்றி வரை பொறுமையுடன் போராடியே ஆகவேண்டும்.

அந்த வெற்றிக்குப் பின்னரும்கூட சில நிபந்தனைகள் உண்டு. ஒன்று, திரைத்துறையில் தங்கள் கௌரவத்தை இழக்காமலிருக்கவேண்டும். இழந்தால் பணம் வராது. கௌரவம் எவராலும் பறிக்கப்படாது. தங்கள் சொந்த பலவீனங்களால் அதை இழப்பவர்களே மிகுதி. குடி முதன்மையாக. மற்றவை அதன்பின். இது எல்லா தொழில்துறைகளிலும் உள்ள நெறி என நினைக்கிறேன்.

பதினெட்டு ஆண்டுகளாகிறது. நுழைந்தது முதல் முதல்நிலையில் இருக்கிறேன். ஆனால் எங்கும் எப்போதும் பேரம் பேசியதில்லை. எங்கும் படப்பிடிப்புகளுக்குச் சென்று நின்றதில்லை -எனக்கே பிடித்திருந்தாலொழிய. இதுவரை எவரிடமும் வாய்ப்பு கோரியதில்லை. அந்த நிமிர்வுதான் ஊதியமாகவும் ஆகிறது.

ஆனால் அதைவிட முக்கியமானது அதிருஷ்டம். 2.0 அல்லது பொன்னியின் செல்வனின் மாபெரும் வெற்றியில் என் பங்கு மிகக்குறைவு. ஆனால் அதன் வெற்றிமேல்தான் நான் பயணம் செய்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைத. பழமலய்
அடுத்த கட்டுரைபிரயாகையில் சங்கமித்தல்