வணங்கானும் யானைடாக்டரும்

எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வாசித்துமுடித்தேன்.ஜெயமோகன் விமர்சனங்களுடன் கூடிய தவிர்க்க முடியாத மாபெரும் எழுத்தாளுமை என்பதை மீண்டும் மீண்டும் .. ..

அறம் கதைகளில் யானை டாக்டர் அனைவராலும் அடிக்கடி பேசப்படுகிறார். யானை டாக்டரை நினைக்காத ஜெ.மோ வாசகர்கள் இருக்கவே முடியாது.யானை டாக்டர் கொண்டாடப்பட்ட அளவுக்கு யானை டாக்டர் ஜெ. மோ வட்டத்தில் நினைவு கூரப்பட்ட அளவுக்கு , ‘வணங்கான்’ ஏன் நினைக்கப்படவில்லை?

வணங்கானும் யானை டாக்டர் எழுதப்பட்ட அதே அறத்தின் பக்கத்தில்தான் வணங்கானாக நம் சமகாலத்தின் ஒரு மாபெரும் வரலாற்று நாயகனாக கம்பீரமாக நிற்கிறான்.குமரி, நெல்லை மாவட்டக்காரர்களுக்கு வணங்கான் மாபெரும் சரித்திர புருஷன்.ஆனால் யானை டாக்டர் தான் நினைக்கப்பட வேண்டும். காரணம் அந்நியன் திரைப்படத்தில் பேசப்பட்டவைதான் முக்கியம்.

யானை டாக்டர் நல்லவர்தான். சூழலியல் முக்கியம்தான்,அதெல்லாம் இல்லை என்று சொல்லவில்லை.அதைக் கொண்டாடும் மன நிலையையும் சொல்லவில்லை.அதை மட்டுமே கொண்டாடிக்கொண்டிருக்கும் மன நிலைக்குள் இன்னும் இருக்கிறது.எழுதப்படாத வணங்கானின் வரலாற்றுப் பக்கங்கள்.

வணங்கான்..அளவுக்கு சமகால இந்திய வரலாற்றுஅரசியலை ஜெ.மோ வேறு எந்தக் கதையிலும் எழுதிஇருக்கிறாரா என்று தெரியவில்லை.ஆனாலும் வணங்கான்… சாய்ஸ்லில் விட்டுவிட வேண்டியவனாகவே இருக்கிறான். மீண்டும் மீண்டும்யானை டாக்டரை நினைப்பவர்களுக்கு வணங்கான் ஏன் நினைவுக்கு வருவதில்லை என்பதில்இப்போதும் இருக்கிறதுஎன்னால் புரிந்து கொள்ள முடியாத வாசகவெளி.அவரவருக்கு அவரவர் “அறம்”(சரவணா.. புரிந்து கொள்ள முடியாதஎன்பதில் இருக்கிறது

எழுத முடியாதப் புரிதல்களும் வாசகவெளியும்.)வணங்கான் பக்கங்கள் அறம் கதை தொகுப்புவாசிப்பை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது.

நன்றி ஜெ.மோ.

புதியமாதவி

*

அறம் ஆங்கில மொழியாக்கம்- அமேசான்

அறம் வாங்க  

அறம் மின்னூல் வாங்க

புதியமாதவி அறம் வாசித்துக் கொண்டிருந்தபோது தாயார்பாதம் பற்றியும் மிகுந்த நெகிழ்வுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அறம் தொகுதியில் அறம், வணங்கான், நூறுநாற்காலிகள், யானைடாக்டர் ஆகியவையே புகழ்பெற்ற கதைகள். கோட்டி, தாயார்பாதம், பெருவலி முதலிய கதைகள் அடுத்தபடியாக. மத்துறு தயிர், மயில்கழுத்து போன்றகதைகள் அவ்வளவாகக் கவனிக்கப்படவில்லை. இதற்கான காரணங்களை சமூகமனம், அதில் செயல்படும் இயக்கங்கள் ஆகியவை சார்ந்தே அணுக முடியும்.

வணங்கான் ஒவ்வொரு ஆண்டும் நேசமணி நினைவுநாளன்று நினைவுகூரப்பட்டு பரவலாக கொண்டுசெல்லப்படுகிறது. அண்மையில் அந்தக் கதை மட்டுமே ஒரு வரலாற்று நிகழ்வாக, என்னுடைய அதே சொற்றொடர்களுடன், என் பெயர் இல்லாமல் பகிரப்படுவதைக் கண்டேன். அது இன்று வாய்மொழிக்கதையாக, ஒரு தொன்மம் போல ஆகிவிட்டிருக்கிறது. பல மேடைகளில் ஒரு தொன்மம் போலவே அது சொல்லப்படுவதை நான் கண்டிருக்கிறேன். எனக்கே ஒருவர் ஒரு சிறு வெளியீட்டைக் கொண்டு வந்து அளித்தார். அதில் வணங்கான் கதையை ஒரு செவிவழிச் செய்தியாக கொடுத்திருந்தார். நான் எழுதியது அது என அவருக்குத் தெரியவில்லை.

அது இயல்பு. ஒரு கதை மக்களிடம் செல்லும்போது அது தொன்மநிலையை அடைந்துவிடுகிறது. யானை டாக்டரும் அப்படியே. தொன்மமாக ஆவதென்பதே இலக்கியப்படைப்பின் உச்சநிலை. ஓர் இலக்கியப்படைப்பு நிகழ்வின்மேல் விழுமியத்தை ஏற்றி அதை அவ்வாறாக தொன்மநிலை நோக்கிச் செலுத்துகிறது எனலாம்.

மற்ற இலக்கியப் படைப்புகளுக்கும் அறம் கதைகளுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அதன் வாசகர்கள் எவர் என்பதிலுள்ளது. பெரும்பாலான இலக்கியப் படைப்புகள் இலக்கியம் என்னும் சிறிய சூழலுக்குள் புழங்கும் வாசகர்களுக்காக எழுதப்படுபவை. அவை அழகியல்நுட்பம், பேசுபொருள் ஆகியவை சார்ந்து ரசிக்கப்படுகின்றன. அழகியல்நுட்பம் என்பது மொழி, வடிவம், உட்குறிப்புத்தன்மை ஆகியவற்றைச் சார்ந்தது.

நம் இலக்கிய ஆக்கங்களின் பேசுபொருள் பெரும்பாலும் இரண்டுவகை. ஒன்று முற்போக்கான அரசியல் கருத்துக்கள் மற்றும் சீர்திருத்தக் கருத்துக்கள். இரண்டு, தனிநபரின் அகநிகழ்வுகள் மற்றும் உறவுச்சிக்கல்கள். இவற்றின் வெவ்வேறு வண்ணவேறுபாடுகளை நாம் எழுதி- வாசித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை ரசிக்கிறோம், மதிப்பிடுகிறோம், விவாதிக்கிறோம்.

அறம் கதைகள் அச்சூழலை கடந்து இன்னொருவகை வாசகர்களைச் சென்றடைந்தவை. அவர்களில் பொதுவாக நம் சமூகச்சூழலை, வாழ்க்கையை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் பெரும்பான்மையினர். அவர்களே அக்கதைகளை பல்லாயிரக்கணக்காக வாங்கி வாசிப்பவர்கள். பதிமூன்றாண்டுகளாக அறம் முதன்மைநூலாக விற்பனையில் திகழ்வதும் அவர்களாலேதான்.

அதைவிட முக்கியமான வாசகர்கள் பல தளங்களில் களச்செயல்பாட்டில் இருப்பவர்கள். சிறுசிறு அமைப்புகளை உருவாக்கிச் செயல்படுபவர்கள். அவர்களே அறத்தை பெருமளவுக்குக் கொண்டுசென்று சேர்த்தவர்கள். அவர்கள் இலக்கியத்தை இலக்கியச் சுவைக்காக, தனிநபர் வாழ்க்கையின் உணர்ச்சிகளை அறிவதற்காக வாசிப்பதில்லை. களச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக வாசிக்கிறார்கள்.

அவர்களால் இரண்டு கதைகளே முன்னிலைப்படுத்தப்பட்டன. யானைடாக்டர் மற்றும் நூறுநாற்காலிகள். இங்கு மட்டுமல்ல, கேரளத்திலும் கர்நாடகத்திலும் ஆந்திராவிலும்கூட அப்படித்தான். இப்போது ஆங்கிலத்திலும் கூட. நூறுநாற்காலிகள் தலித் இயக்கங்கள் மற்றும் மனித உரிமை இயக்கங்களால் பரப்பப்பட்ட கதை. சூழியல் இயக்கங்களால் யானை டாக்டர் பரப்பப்பட்டது.

தமிழிலும் வே.அலெக்ஸ் தன் எழுத்து பிரசுரம் வழியாக நூறுநாற்காலிகளை மலிவுப்பதிப்பாகக் கொண்டுவந்தார். பின்னர் பல மலிவுப்பதிப்புகள் வந்தன. யானை டாக்டர் முதன்மையாக தன்னறம் போன்ற சூழியல் இயக்கங்களால் இலவசப்பிரதியாக கொண்டுசெல்லப்பட்டது. இலவசப்பிரதியாகவே இரண்டு லட்சத்துக்குமேல் வினியோகமாகியுள்ளது. பின்னர் பாடநூலிலும் இடம்பெற்றது.

இந்தவகையான அமைப்புச் செயல்பாடுகளின் ஆதரவு மற்ற கதைகளுக்கு இல்லை. ஏனென்றால் மற்ற கதைகளின் பேசுபொருளுக்குரிய களச்செயல்பாட்டு அமைப்புகள் இங்கில்லை. வணங்கான், சோற்றுக்கணக்கு ஆகியவை தனிவாசகர்களால் விரும்பப்பட்டன, அமைப்புகளால் அல்ல. இதுதான் வேறுபாடு.

அனைத்துக்கும்மேல் சொல்லப்படவேண்டிய ஒன்றுண்டு. வணங்கான் நேசமணி அவர்களின் மெய்யான வாழ்க்கையை ஒட்டிய நிகழ்வுகளை புனைவுக்குள் சொல்கிறது. நேசமணி போன்றவர்களை மானுடவிடுதலைப் போராளிகள் என்றே சொல்லவேண்டும். ஆனால் இங்குள்ள அரசியல்சூழலில் அவர் சாதியத்தலைவராக மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார். தமிழகப் பெருந்தலைவர் காமராஜரே அப்படித்தான் முன்வைக்கப்படுகிறார் என்ற நிலையில் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இந்தப்பார்வை காரணமாக மற்ற சாதியினருக்கு அக்கதையில் பெரிதாக அக்கறை இருப்பதில்லை. வணங்கான் வாசித்துவிட்டு என்னை நாடார் என நினைத்து எழுதப்படும் கடிதங்கள் வாரமொருமுறை வந்துகொண்டிருக்கின்றன. தலைவர்களைச் சாதிவட்டங்களில் இருந்து வெளியே கொண்டுசெல்ல இனி முடியுமா என்றும் தெரியவில்லை.

ஜெ

*

முந்தைய கட்டுரைசௌந்தரா கைலாசம்
அடுத்த கட்டுரைவெண்முரசின் வெற்றி