மலரின் இனிமை -கடலூர் சீனு

மலர்த்துளி வாங்க

இனிய ஜெயம்

பொதுவாக உங்களை வாசிக்கத் துவங்கிய நாள் தொட்டு உங்கள் புனைவுகளில் எப்போதும் சிலவற்றை படிக்காமலேயே விட்டு வைத்திருப்பேன். ஒன்று, எல்லாமே ’தீந்து போச்சி’ என்பதை என்னால் தாங்க முடியாது. இரண்டு இன்னும் வாசிக்க சிலவை எஞ்சி உள்ளது எனும் நிலை அளிக்கும் தொடர் வாசிப்பு சார்ந்த உத்வேகம். முழு ஆற்றலுடன் இருந்து அதை செலவு செய்யாமல் இருப்பதை போல ஒரு உவகை அது.

இந்த நிலை குமரித்துறைவி நாவல் அளித்த மங்கல நிறைவு உணர்வுக்குப் பிறகு  தன்முயற்சியாக அன்றி இயல்பாகவே நிகழ்ந்து போனது. ஆம் குமரித்துறைவி நாவலுக்குப் பிறகு அந்த நிறைவின் இனிமை கூடி உங்கள் புனைவுகள் வாசிப்பது கொஞ்ச நாள் நின்று போய் இருந்தது. அட போங்கப்பா இதுக்கு மேல எதுவும் வேணாம் என்றொரு நிலை.

அஜிதனின் புனைவுகள் வழியாகவே அந்த நிலை உடைந்து முன்னகர முடிந்தது. குறிப்பாக இனி வெளி வரப்போகும் அவரது அந்த புதிய நாவல் அளித்த உணர்வுக் கொந்தளிப்பு. விட்டுப்போன உங்கள் புனைவுகள் எல்லாவற்றையும் வாசித்து தள்ளினேன். சிலவற்றை மறுவாசிப்பும் செய்தேன். அந்த வரிசையில் உங்களது நான்காவது கொலை நாவலுக்கு பிறகே உள்ளே வாசிப்பு நிலை சர்ந்த எல்லாம் நிலை மீண்டது போல ஒரு ஆசுவாசம்.

தொடர்சியாக மலர்த்துளி சிறுகதை தொகுப்பு வாசித்தேன். அத்தொகுப்பு குறித்த லோகமாதேவி பதிவு அந்த தொகுப்பு அளவே இனிமையானது. அத்தொகுப்பு வாசித்துக்கொண்டிருந்த மதியத்தில், வீட்டுவேலை முடிந்து முதுகு உளைச்சல் ஆற சற்றே படுக்கையில் சாய்ந்து அப்போது என் நினைவு எழுந்த என் வயதொத்த தோழி என்னை அழைத்து இப்படி சொன்னாள், “இப்ப மட்டும் எவனாவது ஒருத்தன் நான் கேக்காமலேயே இந்தாடி அப்டின்னு சூடா ஒரு கப் காப்பி போட்டு குடுத்தான் அப்படின்னா அவனை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவேன்” .

நான் சிரித்துக்கொண்டே அப்போது ஆசாரி தயிர்க் காரிக்கு காப்பி கொடுக்கும் தருணம் வாசித்து கொண்டிருப்பதை சொன்னேன்.  “நினைக்க சாதாரணமா தெரியும் தமிழ் நாட்டுல ஒரு பொம்பளைக்கு அது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா?” என்றார்.

யோசித்துப் பார்த்தேன். மலர்த்துளி தொகுப்பு கொண்ட இலக்கிய முக்கியத்துவம் அதுதான். பாலகுமாரன் இத்தகு விஷயங்களைத்தான் பகல்கனவு எழுத்துக்களாக மாற்றி பெண் வாசகிகளை சுரண்டினார். பகல் கனவில் இருந்து வெளியேறி கலை அளிக்கும் உன்னத, தீவிர, எழுச்சி உணர்வை மீட்டிய கதைகள் இவை.

தொகுப்பு முழுமையாகவே எனக்கு பிடித்த ஓன்றுதான் என்றாலும் இரண்டு கதைகள் மிகவும் பிடித்தமானது. ஒன்று மலர்த்துளி. அடுத்தது கேளாச் சங்கீதம். முதல் கதை மிக மிக மிக மெல்லிய தருணம் என ( தனித்த ஈசல் இறக்கை ஒன்று  தரையில் படிவது போல)  ஒன்றின் தொடக்கத்தை சுட்டுவது.

கேளாச் சங்கீதமோ நெருப்பில் கரையும் ஈசலின் வதையை சொல்வது. கண் முன்னே எரிந்து அழியும் மகனை கண்டு கண்டு எரிந்தழியும் தந்தையைப் பேசும் கதை. தொகுப்பின் இறுதி கதையான ஒரு எளிய காதல் கதை நாராயணன் ஏட்டு தலையை துண்டிக்கும் அரிவாளாக வந்து இறங்கும் காதலை பேசுவது. காதலின் வண்ணமுகங்கள்

கடலூர் சீனு

மலர்த்துளியின் பொருள்?

மாதுளை மலர்களின் தோட்டம்

காதலின் துளிகள் – கடிதம்

கள்வன், காதல் – கடிதம்

உறையும் கணங்கள்- கடிதம்

சாலமோனின் தோட்டம் – கடிதங்கள்

மதுத்துளிகளின் கனவு- கடிதம்

துளிகள் – கடிதம்

பன்னிரு காதல்கள், கடிதம்

முந்தைய கட்டுரைஓர் அன்னையின் பயணம் -கடிதம்
அடுத்த கட்டுரைஉருப்படிகளாகிய நாம்…கடிதம்