ஆனந்த் குமாரின் மூன்று கவிதைகள். 2022 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது பெற்றவர் ஆனந்த்
ஆனந்த்குமார்- டிப் டிப் டிப் தொகுதி வாங்க
வானின் கீழ்
நல்லதொரு நட்சத்திர இரவில்
இவனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது
வானம் பார்க்கக் கிடைத்த படுக்கையில்
இவன் அசையாமல் கிடக்கிறான்
நட்சத்திரங்கள் எண்ணுகின்றன
இவனுடலில் காய்ச்சலை
எண்ண எண்ண
மின்னி மறைகிறது
உடலெங்கும் வெப்பம்
இடையில் ஒரு மேகம்வந்து
எல்லாவற்றையும் குழப்ப
முதலிலிருந்து துவங்கும்படியானது
குளிரேறத் தெளிவாகிறது
மழைக்கான நிமித்தங்கள்
இவன் உதடுகள் முணுமுணுக்கின்றன
சிரித்தபடி எதையோ
கொத்திக் கொத்தி
தின்று முடிக்குமா
விடிவதற்குள் இவனை
வானம்?
ஊசல்
ஊஞ்சலை
தள்ளித் தள்ளி விடுகிறாள்
அம்மா
திரும்பத் திரும்ப வருகிறாள்
மகள்
அருகில் வரும்போதெல்லாம்
முகத்தை சரித்து
அம்மாவிடம் ஒன்று சொன்னாள்
சொல்லும்போதே
தூரமும் போய்விட்டாள்
ஆடியாடி அவள் சொன்னதை
அம்மா
சின்னச் சின்னதாக சேர்த்துவைத்தாள்
சேர்ந்து புரிந்ததுபோல் கடைசியில்
சிரித்துக்கொண்டே அவளை
பிடித்திழுத்து
வானிற்கு தள்ளினாள்
நீலச்சட்டைக்காரன்
நீலச்சட்டை
அவனுக்குப் பொருத்தமென
அவள்தான் கண்டுபிடித்தாள்.
ஆனால் அவளுக்கு
கோடுகளில் விருப்பமில்லை
இவனுக்கோ
காலர் வைத்தது பிடிக்கவில்லை.
பாக்கெட்டும் பட்டனும் இல்லாமல்
இளமைக்கும் முதுமைக்கும்
நடுவில் ஒரு நீலம்
இருவருக்கும் பிடித்துப்போனது.
வெறும் நீலமென
நெளியும்யொன்றில்
அப்படித்தான் அவன் வீழ்ந்தான்.
அதிலேயே உறங்கியெழுந்து
அங்கேயே வாழ்ந்தான்
சாயம் போய்போய்
வானமென அது ஆகியிருக்கையில்
திரும்பிக்கூடப் பார்க்காமல்
தனியே அதிலேதான்
பறந்து மறைந்தான்.