அமரர் சிவசுந்தரம் நினைவு தஞ்சைப் ப்ரகாஷ் இலக்கிய விருது- சுரேஷ் பிரதீப்

அமரர் சிவசுந்தரம் நினைவு தஞ்சைப் ப்ரகாஷ் இலக்கிய விருது தொடர் இலக்கியச் செயல்பாட்டிற்காக எனக்கு வழங்கப்பட்டது.ஞாயிறு காலை(04.06.23) நண்பர்கள் காளிப்ரஸாத் மற்றும் இராயகிரி சங்கர் இருவரும் இன்று காலை RAKS ஹோட்டலுக்கு வந்துவிட்டனர். நான் சற்று தாமதமாக ஹோட்டலுக்குச் சென்றேன். மதியம் வரை உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் மூவரும் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா மற்றும் நண்பர் கவியரசு நேசனுடன் இணைந்து செல்லம்மாள் மண்பானை சமையல் உணவகத்தில் மதியம் உண்டோம்.

ஜாகிர்ராஜா அவர்களின் வீட்டுக்கு முதன்முறையாகச் சென்றோம். ஒரு அரிய நூலினை வாசிக்கத் தந்தார். அவருடைய பேரனைப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம். நண்பர்கள் சுனில் கிருஷ்ணன் மற்றும் பிரபாகரன் இருவரும் காரைக்குடியிலிருந்து வந்திருந்தனர். நிகழ்வு சற்று தாமதமாகத் தொடங்கியது.ஆனால் அரங்கு ஏறத்தாழ நிறைந்துவிட்டது. குப்பு.வீரமணி அவர்கள் என்னுடைய பொன்னுலகம் சிறுகதைத் தொகுப்பைத் தொட்டுப்பேசி தலைமை உரை ஆற்றினார்.

விருது வழங்கப்பட்டதுடன் ஏற்புரைக்கு அழைத்துவிட்டார்கள்! சற்று தடுமாற்றமாக இருந்தது. இலக்கிய விழாக்களில் நான் ‘சொதப்பும்’ தருணம் என்று ஒன்று வருமென்றால் அது ஏற்புரையின் போதுதான். விமர்சன கூட்டங்கள், விருது ஏற்புகள் என எல்லா நிகழ்வுகளிலும் சொதப்பியே வந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஆனால் என்னுடைய முந்தைய ஏற்புரைகளைவிட ஓரளவு நன்றாகப் பேசினேன் என்றே நினைக்கிறேன். இதுமாதிரி ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்து தனக்கு இரண்டு தலைமுறைக்குப் பின் எழுத வந்த ஒருவனுக்கு ஒரு முன்னோடி விருதளிக்கும் நிகழ்வு அரிதானது.

எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா தஞ்சையில் ஒரு இலக்கிய இயக்கத்தை உருவாக்கிட தொடர்ந்து முனைகிறார். அவர் தொடங்கி இருக்கும் கீரனூர் புக்ஸ் பதிப்பகம், இது மாதிரியான இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பது போன்றவற்றை ஒரு படைப்பாளி செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழலாம். ஆனால் யதார்த்தத்தில் இலக்கிய விழாக்கள் படைப்பாளியை மையமிட்டு மட்டுமே ஒருங்கிணைக்கப்பட முடியும் என்று தோன்றுகிறது. (அல்லது பெரிய பணபலம் கொண்ட அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட முடியும்.)

கால் நூற்றாண்டுக்கு மேல் தமிழ்ச்சூழலில் வெற்றிகரமாக இயங்கிய ஒரு படைப்பாளி ஒரு இலக்கிய கூட்டத்தினை அல்லது விழாவினை ஒருங்கிணைக்கும்போது அவர் படைப்புகளின் மீது விருப்பம் கொண்ட வாசகர்கள், சக எழுத்தாளர்கள் இயல்பாகவே அந்நிகழ்வுக்கு வந்துவிடுவார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் அனைவரும் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புகள் மீது பெருமதிப்பு கொண்டவர்கள். ஒரே கட்சியில் இருப்பது, ஒரே ஜாதியில் இருப்பது, நல்ல மனிதர் என்ற நல்லெண்ணம் கொண்டிருப்பது போன்ற காரணங்களால் ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ளும்போது அங்கு இலக்கியம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. மாறாக படைப்பின் மீதும் படைப்பாளியின் மீதும் வாசிப்பினால் உருவான மதிப்பின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைவு நிகழும்போது அங்கு ஒத்த ரசனை கொண்டவர்களை கண்டுகொள்ளும் வாய்ப்பும் அமையும்.தஞ்சைப் ப்ரகாஷ் இலக்கிய விழாவை நான் அவ்வாறான ஒன்றாகவே காண்கிறேன்.

ஜாகிர்ராஜா அவர்களின் பஷீரிஸ்ட் சிறுகதை தொகுப்பின் மறுபதிப்பு வெளியிடப்பட்டது. பஷீரிஸ்ட் தொகுப்பு பற்றி ஒருசில சொற்கள் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். நிகழ்வில் அதைச் சொல்ல முடியவில்லை. கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புலகிற்குள் நுழைவதற்கு பஷீரிஸ்ட் தொகுப்பு ஒரு நல்ல வாயில். அங்கதம், இத்தகைய தருணங்களை எல்லாம் கதையாக்க முடியுமா என்று வியப்பேற்படுத்தும் கதைகள், கூர்மையான யதார்த்த சித்தரிப்பு என அவருடைய புனைவுலகின் பலங்கள் அனைத்தும் வெளிப்படும் தொகுப்பு. மேலும் சிறுகதைகளை பொறுத்தவரை நீண்ட நாட்கள் எழுதிய கைகளின் கதைகளுக்கே உரிய கனிவும் லாவகமும் வெளிப்படும் கதைகளாகவும் இத்தொகுப்பின் கதைகள் இருந்தன. பஷீரிஸ்ட் என்ற பெயரே ஈர்ப்புமிக்கது இல்லையா!

நண்பர்கள் சுனில் கிருஷ்ணன், காளிப்ரஸாத், இராயகிரி சங்கர் மூவரும் மூன்று கோணங்களில் என் படைப்புகள் குறித்துப் பேசினர். சுனிலுடன் நான் எழுதத் தொடங்கிய காலந்தொட்டு உரையாடிக் கொண்டிருக்கிறேன். பல தருணங்களில் என்னை வெகு சீக்கிரமாக பற்றிக் கொள்ளும் சோர்விலிருந்து மீட்டிருக்கிறார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையும் அத்தகையதாகவே இருந்தது. ‘களிநடனமிடும் கள்ளிச்செடி’ என்று என் படைப்புகளைப் பற்றிய ஒரு படிமத்தை முன்வைத்தார். சரியாகத்தான் இருந்தது!

காளி ப்ரஸாத் ஒளிர்நிழல் நாவல் குறித்துப் பேசினார். அந்நாவலில் வெளிப்படும் அவநம்பிக்கை தொனிக்கும் குரல் ஏன் முக்கியமானதென்றும் அதன் எல்லைகளையும் தொட்டுப் பேசினார்.

எழுத்தாளர் இராயகிரி சங்கர் நீண்ட காலமாக தீவிர இலக்கியத்தில் இயங்குகிறார். பல சமயங்களில் அவருடைய நிதானமும் அர்பணிப்பும் என்னை வியப்படையச் செய்திருக்கிறது. அவர் என் படைப்புகளை வாழ்த்திப் பேசியது மிகுந்த மனநிறைவை அளித்தது. என் படைப்புகளின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்துப் பேசினார். எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி தன்னுடைய படைப்பனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இலக்கியப் பரப்பிலிருந்து சென்று மிக அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் அவர்தான் என நினைக்கிறேன். ஆனால் அந்த மேடையில் சினிமா குறித்து அவர் ஏதும் பேசாதது ஆச்சரியமளித்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதேநேரம் நான் அஞ்சல்துறை ஊழியன் என்று சொன்னபோது தானும் அங்கு பணிபுரிந்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

பிரியா தன் தங்கையுடன் வந்தாள். அஞ்சனா கலந்து கொள்ளும் முதல் இலக்கியவிழா. அவளும் உற்சாகமாகத்தான் இருந்தாள். நண்பர் ராகவ் அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவர் என்னைக் கண்டதும் அரங்குக்கு வெளியே நிற்கவைத்து ஒரு புகைப்படம் எடுத்தார். அது அப்போதைய என் மனநிலையைச் சொல்வதாக இருக்கும் என நினைக்கிறேன். நிகழ்வு முடிந்த பிறகு ஒருவித உற்சாகம் தொற்றிக் கொண்டது. வீட்டுக்கு வந்ததும் ஒரு கதை எழுதத் தொடங்கினேன். இன்னும் முடிக்கப்படாத அந்த கதை மனதில் அலைந்து கொண்டிருக்கிறது.

சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைசதீஷ்குமார் சீனிவாசன் பேட்டி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைநா.கோவிந்தசாமி