நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?-2
அன்புள்ள ஜெ
நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை, சிந்தனையை தூண்டும் ஒரு கட்டுரை. இந்திய வரலாற்றை நாம் வாசிக்கும்போதும் விவாதிக்கும்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டாகவேண்டிய விஷயம், இந்திய வரலாறு இன்னமும் தெளிவாகவும் முழுமையாகவும் துல்லியமான தகவல்களுடனும் எழுதப்படவில்லை என்பதுதான். குறைவான தரவுகளே உள்ளன. ஆகவே ஊகங்களே சாத்தியம். ஜேஎன்யூவில் வரலாறு துணைப்பாடமாக இருந்தது. கிளாஸ் தொடங்குவதற்கு முன்னரே பணிக்கர் சார் கோஸாம்பியின் இந்த கட்டுரையைத்தான் உதாரணமாகச் சுட்டிக்காட்டுவார். அதுதான் அடிப்படையான புரிதலாக இருக்கவேண்டும் என்று சொல்வார்.
துரதிருஷ்டவசமாக சாதி, மதம், அரசியலுக்காக வரலாறுபேசும் கும்பல் எல்லாமே அறுதியாக எழுதப்பட்டுவிட்டது, தங்கள் தரப்பின் மேல் சந்தேகமே தேவையில்லை என்ற பாவனையிலேயே பேசுவார்கள். சரித்திரம் பற்றி ஆணித்தரமாக எவர் பேசினாலும் அது அரசியல் தானே ஒழிய சரித்திரப்பேச்சு அல்ல.
ஜே.ஆனந்த் கிருஷ்ணன்
*
அன்புள்ள ஜெ
இரண்டாவது கட்டுரையில் உலோகவியலில் நம் வெற்றி பற்றி சொல்லியிருந்தீர்கள். அதை இந்தியாவைப் பற்றிச் சொல்லும் வில் துரந்த் குறிப்பிடுகிறார். அந்த கட்டுரையில் படங்கள் வரிசையாக உலோகவியலின் வளர்ச்சியைக் காட்டுவதாக அமைக்கப்பட்டிருந்தன. நன்றி
மீனாட்சிசுந்தரம் நமச்சிவாயம்.