காதலிப்பவர்களின் அழகு

காதலிக்கிற காலத்தில் ஒருவர் ஏன் அவ்வளவு அழகாகிவிடுகிறார் என யோசித்திருக்கிறீர்களா? வெட்கமும் பரவசமும் மகிழ்ச்சியும் முகத்தில் பாய்ச்சுகிற ரத்தத்தால்தான் காதலில் இருப்பவர்கள் அவ்வளவு பொலிவு பெற்றுவிடுகிறார்கள் என எனக்குத் தோன்றுவதுண்டு. ஜெயமோகனின் மலர்த்துளி தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளிலும் கதை முடிவில் நாயகனோ நாயகியோ புன்னகைக்கிறார்கள். அது சில சமயம் தனக்கு எதிரில் இருப்பவரைப் பார்த்துப் புன்னகைப்பதாக இருக்கிறது, சிலசமயம் தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொள்வதாக இருக்கிறது. ஆனால் புன்னகைக்கிறார்கள். அப்படியே தன்னோடு சேர்த்து அந்தக்கதைகளையும் அழகாக்கி விடுகிறார்கள்.

பரிசு, பெருங்கை, கல்குருத்து, ஒரு எளிய காதல்கதை போன்ற கதைகள் மிகப்பிடித்திருந்தன.

என்னதான் படிமங்கள் உள்ளடுக்குகள் இல்லாத எளிய கதைகள் என முன்னுரையிலேயே குறிப்பிட்டிருந்தாலும் அதற்காக இத்தனை எளிய கதைகளாக இருக்க வேண்டுமா என சிறிய ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தன என்னைஆள, மலர்த்துளி போன்ற கதைகள். சற்றே நீட்டி எழுதப்பட்ட கவிதைத் தருணங்களாகவே அவற்றை எண்ணத் தோன்றியது.

ஆனால் எல்லாக் கதைகளிலுமே ஜெயமோகனின் சுவாரஸ்யமான கதைசொல்லலின் வசீகரம் இருக்கிறது. தனக்குத்தானே புன்னகைத்துக்கொள்கிற, எல்லாப்பொருட்களின் நடுவிலும் ஒரு சிறிய பூவைக் கண்டு மயங்குகிற, காதலைச் சொல்ல நினைத்துச் சொல்லமுடியாமல் மனம் கனத்து/உடல் துவண்டு போகிற கதைமாந்தர்கள் இருக்கிறார்கள்.

கள்வன் சிறுகதையில் இன்றைய இணைய உலகத் தொடர்புகள், இணையத்தில் ஒருவருக்கு இருக்கும் ஆளுமைக்கும் நிஜ உலகில் அவருக்கு இருக்கும் நேரெதிரான குணநலனுக்குமான இடைவெளி போன்றவற்றை மிக தத்ரூபமான ஆண்-பெண் செய்திப்பரிமாறல்கள் மூலம் எழுதியிருப்பது வியக்கச்செய்வதாக இருந்தது.

காதலில் இருப்பது ஒருவருக்கு ஏன் பிடிக்கிறது! அப்போது நாம் மட்டுமே நாயக/நாயகி. சுற்றிலும் இருக்கும் எல்லாமும் மறைந்துபோய் விடுகிறது. தேன் ஜாடிக்குள் மாட்டிக்கொண்ட எறும்பைப்போன்ற அந்தத் தித்திக்கும் தருணத்தின் இனிமை யாரைத்தான் அடிமை செய்யாது! எதையெதையோ கொண்டு நிரப்ப முயன்று தோற்கும் தனிமைத்தருணங்களை ஒரு காதல்தான் எப்படிச் சட்டென மலரின் மணம் போல் நிறைத்துவிடுகிறது.

கபிலர் முதற்கொண்டு பலரும் எழுதிய அதே காதலைத்தான் தானும் எழுதியிருப்பதாக முன்னுரையில் ஜெமோ சொல்கிறார். இன்னும் இன்னும் எத்தனையோ பேரும் எழுதினாலும் தீராத சுவையுடையதன்றோ காதல்கனி.

எல்.சுபத்ரா

மலர்த்துளி வாங்க

முந்தைய கட்டுரைஅ.வெண்ணிலாவின் நீரதிகாரம் -லோகமாதேவி
அடுத்த கட்டுரைசுராவும் ஞானியும் -கடிதங்கள்