வெறுப்பின் ஊற்றுமுகம்- இரு கடிதங்கள்

அன்பு ஜெமோ

இப்போது அயின் ராண்ட்.

முதலில் உங்கள் objectivism –  பற்றிய விளக்கம்.‘மண்ணில் வாழ்வதற்கான தத்துவம்’ எனப் புறவயவாதத்த்தை அயன் ராண்ட் சொன்னார். மானுட சிந்தனைகள் என நமக்கு இப்போது கிடைப்பவற்றைப் பரிசீலனைசெய்து எது உண்மையிலேயே பயனுள்ளது என்று உணர்வதற்கும் அப்படி உண்மையை உணர்ந்தபின்னர் அதை ஏற்றுக்கொள்ளவும் முன்வைத்துப் பேசவும் இருக்கக்கூடிய மனத்தடைகளை வெல்வதற்கும் உதவக்கூடிய அடிப்படையான வாழ்க்கை நோக்கே புறவயவாதம்”

உண்மையில் அவருடைய அப்ஜக்டிவிசம்  என்பது ஒரு எதிரியம் தான் என்பதை நீங்கள் அழுத்திக் கூறவில்லையோ என்று தோன்றுகிறது. அது Subjectivism – அதாவது உள்முக வாதம் (நம் சொந்த மரபில் ஆன்மிகம்) என்பதற்கு எதிரானது. இதை அவர் அட்லஸ் ஷ்ரக்ட் நூலில் வரிக்கு வரி பேசுகிறார்.

இல்லாததை உண்டு என்று கூறுவதைச் சாடுவது அவருடைய தத்துவத்தில் முக்கிய அமிசம்.. எங்கே இடிக்கிறது என்று பார்த்தீர்களா ? நம்முடைய ஆத்துமா தத்துவம் தான் இதில் அவருடைய இலக்கு. அதே போல உள்ளதை இல்லாதது என்கின்ற தத்துவமும் இந்த ஆத்துமா தத்துவத்தின் நீட்சியே என்று அயின் ராண்ட் நம்பினார். இதற்கு அரிஸ்டாட்டில் போன்றவர்களின் இருப்பு வாதம் அவருக்கு உதவியது (existence exists ) . அவருடைய எதிர்ப்பு இம்மானுவேல் கண்ட் போன்றவர்களின் படைப்புகளே என்பதையும் அவர் ஒப்புக் கொண்டே எழுதியுள்ளார். இன்னும் ஒரு இடத்தில் “கங்கைக் கரையின் மண் கூடுகளில் இந்தத் தத்துவம் உருவாகவில்லை ” என்று ஒரு வாங்கு வாங்கி விட்டுத்தான் செல்கிறார்.

இந்த  நூலைக் கருணாநிதியோ , வைகோவோ படித்தால் என்னவாகும் என்று ஒரு கணம் யோசித்தேன்.அயின் ராண்டின் “பொறுக்கி எடுக்கப்பட்ட சிலர் ” வாதம் இவர்களுக்கு வருணத்தை நினைவு படுத்தியிருக்கும். “அயின் ராண்டும் அமெரிக்கப் பிராம்மணர்களும் ” என்று முரசொலியில் கட்டுரையே வந்திருக்கும்.

இது வரையில் தாங்கள் அட்லஸ் ஷ்ரக்ட் நாவல் படிக்கவில்லை என்று எண்ணுகிறேன். படிக்க நேரமில்லாவிட்டாலும், அதில் “ஜான் கால்ட் பேசுகிறேன் ” என்ற கடைசிப் பகுதி மட்டுமாவது படிக்க வேண்டுகிறேன்.

அவரை முற்றிலும் புறக்கணிக்கும் முன் கீழ்க்கண்ட  அவரது  வாசகங்களைப் படிப்பது நல்லது. இவை என்னை மாணவப் பருவத்தில் கவர்ந்தவை.

1 .  ” எங்கெல்லாம் ஏகோபித்த கருத்து  , ஒருமனதான முடிவு, போன்ற வாசகங்களைக்  கேட்கிறாயோ உடனேயே அவை ஒரு பாசிசக் கூடாரத்தில் இருந்து வருகின்றது என்று உணர்.  ஏனெனில்  ஜனநாயகம் வேறுபடுதலையே அடிப்படையாகக்  கொண்டது .

2 . பணம் , இல்லாத பிறர்க்குப் பிரித்தளிக்கப் படுவதற்கு முன்னர், சுரண்டப் படுவதற்கு முன்னர், ஒளித்து வைப்பதற்கு முன்னர் உருவாக்கப்  பட வேண்டும். அதை உருவாக்குவோர் வெகு சிலரே.

3 . நாளையே சூரியன் இல்லாமல் போகும் நிலை வந்தாலும் மனித குலம் அதற்கும் ஒரு மாற்று தேடும்.

4 . நீ உனக்கு நிகரில்லாதவளிடம் காமப் புணர்வு கொள்ள முடிந்தால் அதில் சுகம் இருக்காது. உன்னுடைய உள்ளின் பிம்பத்தை அதன் சிறப்பை உணர்ந்து பாராட்டுபவளிடம் நீ கொள்ளும் புணர்ச்சி பூரணமானது.

அயின் ராண்டின் ஆணிவேர்க் கருத்து , என்றும்  இந்த உலகம் சிலரின் கருத்துக் கொடையாலேயே வாழ்கிறது என்பது. இது எனக்கு ஏற்புடையதே. இந்த உலகில் முதன்மையான, அசல் சிந்தனைகள் மிகச் சிலரின் படைப்புகளே. அவர்களை இந்த உலகம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை அன்பது அவரது ஆதங்கம். இது முற்றும் உண்மை.  இன்று வரை கோவையில் சுயமாகச் சிந்தித்து வடிவமைக்கப் பட்ட நீரேற்றும் பம்பு ஒன்று கூட இல்லை. இத்தனைக்கும் மாதம் லட்சக்கணக்கில் அவை உற்பத்தி செய்யப் படுகின்றன.அனைத்தும் ஐரோப்பிய , அமெரிக்க மாடல்களின் திருட்டுகள்.

கோவையின் (ஏன் இந்தியாவின் ) மிகப் பெரும் ஜவுளி எந்திர நிறுவனம் இன்னும் சுயமாக எந்த வடிவமைப்பும் செய்யவில்லை. அப்படிச் செய்த அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தன. அவர்களுக்கு இன்றும் சோறு போடுவது அவர்கள் பழைய வெளிநாட்டு நிறுவனத்தின் கூட்டுறவின் போது கிடைத்த வடிவமைப்புகளே.

நான் என்னுடைய இருபத்தி இரண்டாம் வயதில் முதன் முதலில் சொந்த வடிவமைப்பு பற்றிப் பேச ஆரம்பித்த போது என்னை ஒரு மன நோயாளனாகவே பார்த்தார்கள். “பேசாம ஏதாவது பம்போ, கம்ப்ரசரோ செய்யறதப் பாரு. எல்லாத்துக்கும் காஸ்டிங்கு  கிடைக்குது. சொந்த டிசைன் அது இதுன்னு காசைக் கரியாக்காத” இது தான் நான பெற்ற உபதேசம். என்னுடைய பொறியியல் குரு என்றும் பிறர் வடிவுகளைத் திருட மாட்டார். அவர் வழியிலேயே நானும் வந்தவன். இன்று வரை காசைக் கரியாக்கிக் கொண்டு தான் இருக்கிறேன்.

அயின் ராண்ட் அமெரிக்கத் தொழில் முனைவு கலாசாரத்தின் ( entrepreneurism) பிரதிநிதி. இன்றும் ஒரு அசல் படைப்பாளியிடம் அட்லாஸ் ஷ்ரக்ட் கொடுத்தால் , அதில் தன்னை அவன் பொருத்திப்  பார்த்து  ஆமோதிப்பான். அயின் ராண்ட் பரவலான மக்கள் பாராட்டும்  மனிதராக எக்காலத்திலும் இருக்க மாட்டார். இருக்கவும் முடியாது. அவர் படைப்பாளிகளின் பிரதிநிதி. நீங்கள் இதைத் தாங்கள் விசேஷமானவர்கள் என்று எண்ணும் சாமானியர்/ அரசு ஊழியர்  கூட்டத்தின் கூப்பாட்டுடன் ஒப்பீடு செய்ய முடியாது. அப்படி இங்கே நடந்தால் அது அவர்களது சவுகரியத்துக்காகச் செய்யப் படும் அட்ஜஸ்ட்மென்ட். அற்புதமான பெண் சிற்பம் பாராட்டவும், கவி புனையவும்  பயன்படும். முஷ்டி மைதுனத்துக்கும் பயன் படும்.

மார்க்சியம் எப்படி ஒரு தத்துவ அடிப்படையிலான பணி செய்வோர் தரப்பை நியாயப் படுத்தியதோ, அப்ஜக்டிவிசம் அவ்வாறே ஒரு தத்துவ அடிப்படையிலான ஒரு பணியை உருவாக்குவோர் தரப்பை நியாயப் படுத்துகிறது. முதல் தரப்பிற்குத் தொண்டர் பலம் அதிகம். பின்னதற்கு மன பலம் அதிகம்.  முன்னவன் கூட்டத்திலேயே தான் பின்னவனும் உருவாகிறான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள். பின்னவனுக்குத் தன் அறிவின் மீது பெருமை. முன்னவனுக்குத் தன் சதையின் மீது பெருமை.

இதற்குச் சமமான ஒரு காட்சியைப் பாரதத்திலும் காணலாம். வெள்ளாளன் தன்னை யாருக்கும் சளைத்தவனல்ல என்று காட்டிக் கொள்ளப் பல பாடு படுகிறான். ஆனாலும் கோடியில் ஒரு வெள்ளாளன் தான் அசல் சிந்தனையைக் காட்டுகிறான்.ஆனாலும் வாய்க்கு வாய் பிராம்மணன் ஒன்றும் பிறவி மேதை இல்லை என்று சொல்லிக் கொள்கிறான். பிராம்மணக் கூட்டத்தில் பத்தில் ஒன்று சுயமாகச் சிந்திக்கிறது. ஆனாலும் அவன் சுண்டு விரலால் தான் நகர்த்தப் படுகிறான்.

வேங்கடசுப்ரமணியன்

 

திரு வெங்கடசுப்ரமணியன்

அயன் ராண்ட் தமிழகத்தில் எப்படிப் பொருள்படுவார் என்பதை உங்கள் கடிதம் மூலம் அறிகிறேன். அவரை நான் முழுக்க நிராகரிப்பதற்கான காரணமே இதுதான்

வெள்ளாளன் தன்னை யாருக்கும் சளைத்தவனல்ல என்று காட்டிக் கொள்ளப் பல பாடு படுகிறான். ஆனாலும் கோடியில் ஒரு வெள்ளாளன் தான் அசல் சிந்தனையைக் காட்டுகிறான்.ஆனாலும் வாய்க்கு வாய் பிராம்மணன் ஒன்றும் பிறவி மேதை இல்லை என்று சொல்லிக் கொள்கிறான். பிராம்மணக் கூட்டத்தில் பத்தில் ஒன்று சுயமாகச் சிந்திக்கிறது. ஆனாலும் அவன் சுண்டு விரலால் தான் நகர்த்தப் படுகிறான்.

உங்கள் கணக்குப்படி வேளாளர்கள் ஒட்டுமொத்த வரலாற்றில் இரண்டுபேர் அசலாகச் சிந்திருத்திருக்க வாய்ப்பு. பிராமணர்கள் இப்போதே சில லட்சம் அசல் சிந்தனையாளர்கள் உள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டில் , இத்தனை நவீனச்சிந்தனைகளுக்குப்பிறகும் இப்படி சிந்திக்கமுடிகிறதென்பதே ஒரு வருத்தமான விஷயம்தான்.

ஜெ

 
அன்பு ஜெமோ

இந்தப் பழைய கட்டுரையை இப்போதுதான் படித்தேன். இதற்கு முன் இப்பிரச்சினையை எழுப்பியவர் பதினாறு கவனகர் கனக சுப்புரத்தினம். அவரது கவனகர் முழக்கம் என்ற மாத சஞ்சிகையை என் நண்பர்கள் கொடுத்து அவ்வப்போது படித்து வந்தேன். பின்னர் சலித்து விட்டு விட்டேன்.

ஓரிரு வருடங்களுக்கு முன், விஜயாவில் புத்தகம் வாங்கும் போது, அம்மாதத்திய கவனகர் முழக்கம் கண்ணில் பட , எடுத்துப் புரட்டினேன். அதில் இந்த வாஞ்சி நாதன் விவகாரம், திக வினரை விடக் கடுமையான வார்த்தைகளால் அவரால் எழுதப் பட்டிருந்தது. வாஞ்சி நாதனை அவன் இவன் என்று வேறு எழுதித் தன் மதிப்பைக் குறைத்துக் கொண்டார் கவனகர். அதில் தன் தந்தை ராமய்யா பிள்ளை தனக்கு இதை அதிகார பூர்வமாகத் தெரிவித்ததாக வேறு கூறித் தன் தந்தையையும் இந்தப் பொய்ச் சகதியில் சிக்க வைத்து விட்டார்.  அதோடு கவனகர் விஷயத்தில் பெரும் அவநம்பிக்கை கொண்டவனாகி விட்டேன். அவரது நினைவாற்றல் என்னுள் ஏற்படுத்திய மதிப்பைச் சிறிது சிறிதாகக் குறைத்து, இந்த விஷயத்தில் முற்றிலுமாக இழந்தார்.

என்னதான் அவர் திராவிடக் கொள்கை பேசினாலும், அவரை நான வெள்ளாளர்களின் உக்கிரமான பிரதிநிதியாகவே பார்க்கிறேன்.இன்றைக்கு வீரமணியை விட பிராமண எதிர்ப்பு செய்பவர் அவராகத் தான் இருக்க முடியும். தமிழ்நாடு மட்டுமின்றி, மலேசியா, இலங்கை முதலிய நாடுகளிலும், அவரது ஆறு நாள் நினைவுப் பயிற்சி, யோகம் குறித்த பயிலரங்குகளில், முக்கிய மறைவு நிலை ஊட்டமாக பிராமண வெறுப்பே இருக்கும். அவரது போதனையால் இரு வெள்ளாள நண்பர்கள் என்னை முதலில் பிராமணனாகவும் பிறகே நண்பனாகவும் பார்க்கும் நிலைக்கும் மாறினார்கள். அதுவும் இரண்டே வாரங்களில். பிறகு நட்பே முறிந்து விட்டது.

அவர்தான் ஆன்மீகத்திலும் இந்த பிராம்மண எதிர்ப்பு கொண்டு வந்தவர்  . இன்று மலேசியா போன்ற நாடுகளில் சைவ சித்தாந்தம் என்பது திராவிடர்களின் சொந்த சொத்து போன்ற பேச்சு எழுந்தது இவர் போன்றவர்களின் தூண்டுதலால் தான் என்று நினைக்கிறேன். நான உறுப்பினராக இருந்த ஒரு யாஹூ குழுமத்தில், மலேசியரான (இலங்கை தமிழர் ) லோகநாதன் , பத்மராஜா போன்றோர் இந்தச் சீரழிவுச் சிந்தனைகளை , மீண்டும் மீண்டும் எழுதி உண்மையாக்கியே விட்டனர்.

J.வேங்கடசுப்ரமணியன்

 

திரு வெங்கடசுப்ரமணியன்

மேட்டிமைச்சிந்தனை என்பது ஒரு மனநோய். யாருக்கானாலும். அது இருப்பவர்களிடம் ஞானமும் விவேகமும் கூடுவதில்லை. வெறுப்பு மட்டுமே தழைத்து வளரும்

தயவுசெய்து எனக்கு இனிமேல் கடிதமெழுதவேண்டாம். இது உங்களைப்போன்றவர்களுக்கான இடமல்ல. நான் எழுதுவது எதுவும்  உங்களுக்கு புரியுமென்றும் தோன்றவில்லை

 

ஜெ

முந்தைய கட்டுரைதனுஷ்கோடியும் முற்போக்கு எழுத்தும்
அடுத்த கட்டுரைஜக்கி குருகுலத்தில் இருந்து கடிதம்