இசைப்பாடல்கள்:கடிதம்

அன்புள்ள ஜெய மோகன்:

உங்கள் “திரைப் பாடலில் ராகங்கள்” பதிவினைப் படித்தேன். இது தொடர்பாக “ராக சிந்தாமணி” என்ற நூல் கவனத்திற்குரியது. ஆயிரத்திற்கு மேற்பட்டதிரைப் பாடல்களின் ராக சாயல்கள் இந்த நூலில் பதிவு பெற்றுள்ளன. இதற்கு முன்பாக, லட்சுமி நாராயணன் என்பவர் “க்லாசிக்கல் இளயராஜா” என்ற தலைப்பில் ஏறக்குறைய பதினைந்து பகுதிகளாக வலைப் பதிவு செய்திருந்தார்; வெகு சுவையாக எழுதப் பட்ட பத்திகள் இவை.

திரைப் பாடலில் ராகங்கள் குறித்து சில ஒலி, ஒளிப் பதிவுகளையும் நீங்கள் பார்த்து, கேட்டிருப்பீர்கள். ஜி.எஸ்.மணி, சாருலதா மணி ஆகியோரின் தொகுப்புகள். Royal carpet Karnatik என்ற வலைத் தளமும் பெரிய அளவில் திரைப் பாடல் ராகங்களைப் பதிவு செய்துள்ளது.
ஆனால் ஒன்று – ராகங்களுக்கு முடிவான ஒரு வரையறை இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு ராகத்திற்கும் அதில் பாடப்படும், பிரபல பாடல், கீர்த்தனைகளின் தொகுப்பே இறுதியான லட்சணமாய் அமைகிறது.அந்த விதத்தில் ராக அமைப்பு, செய்யுள் வரையறையிலிருந்து வேறு படுகிறது. (வெண்பாவின் இலக்கணத்தை இயற்சீர், வெண்சீர் வெண்டளைகளால் சில வரிகளில் தந்து விடலாம். திருக்குறள், நாலடியார், நளவெண்பா – இவற்றோடெல்லாம் தொடர்ப்பு படுத்தத் தேவையில்லை.)  ஆதலால், திரைப் பாடல்களில் காண்பது ராக சாயல்களே, முழு ராகச் சாறுஎன்று சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறியது.

இறுதியாக, உங்களின் இசைப் பற்றிய பதிவுகள் கர்னாடக இசை வட்டாரத்தில் தாக்கம் ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. உ-ம்: சஞ்சய் சுப்ரமணியன் தன் வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்புடன்
பைரவி

அன்புள்ள ரவிக்குமார்,
உங்கள் கருத்துக்களை நானும் ஒப்புக்கொள்கிறேன். பொதுவாக பரப்புகலைகளை — பாப் ஆர்ட்ஸ்– தூய கலை என்று சொல்லவோ ஒப்பிடவோ கூடாது என்பதே என் எண்ணம். அவை எடுத்தாள்கைக் கலைகள். அப்ளைட் ஆர்ட். தூயகலையின் சில பகுதிகளை அவை தங்கள் அமைப்புக்குள் எடுத்தாள்கின்றன. பலசமயம் மிக எளிமையான வடிவில். இளையராஜாவின் சிரப்பு என்னவென்று சுரேஷ் போன்ரவர்கள் சொல்கிறார்கள் என்றால் அவர் மிகச்சிக்கலான இடங்களை அவ்வாறு எடுத்தாண்டிருக்கிறார் என்பதைத்தான்.
இது திரைப்பாடல்களுக்கும் பொருந்தும்.. அவை கவிதைகள் அல்ல, எடுத்தாளப்பட்ட கவிதைகள் மட்டுமே. கண்ணதாசன் மரபுக்கவிதைகளில் இருந்தும் வைரமுத்து புதுக்கவிதையில் இருந்தும் கவிதைச்சாத்தியங்களை எடுத்தாண்டார்கள்.
சஞ்சய் சுப்ரமணியம் பக்கத்தின் இணைப்பை அனுப்பமுடியுமா…
ஜெ.
முந்தைய கட்டுரைக்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 6