அம்ம நாம் அஞ்சுமாறே!

அன்புள்ள ஜெ

சுபகுணராஜன் என்பவரின் ஒரு பதிவிலுள்ள வரி இது

ஜெயமோகன் நூல்கள் வெளியீடு பிறழ்வுதான். பதிப்பகத் தொழிலில் பல லட்சங்களை இழந்து நின்ற போது எனக்குக் கிடைத்த வியாபார அறிவுரையின் விளைவு.

உங்கள் கவனத்துக்கு

ராஜ்

*

அன்புள்ள ஜெ,

பி.கே.சிவக்குமார் என்பவர் உங்களுக்கு மிக நெருக்கமானவராக இருந்தாரா? அப்படி அவர் வலைத்தளங்களில் எழுதி வருகிறார். அதனால் கேட்டேன். ஐயனார் ஆனந்த் என்பவரும் அவ்வாறு எழுதி வருகிறார். இவர்கள் பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விழைகிறேன்.

அருண்குமார்.

*

அன்புள்ள அருண்,

இந்த வகை விவாதங்கள் வம்புகள். இவற்றை நீட்டிச்செல்ல விரும்ப மாட்டேன். என் களம் அல்ல. ஆனால் இவை வளர்ந்துகொண்டே போவதனால் இறுதியாக சில சொல்லி முடிக்க விரும்புகிறேன்.

சுபகுணராஜன் எனக்கு 2003 முதல் தெரிந்தவர், நண்பர். அவர் கஸ்தூரிமான் படத்தில் வில்லனாக நடிக்க நான் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தேன். அப்போது திமுக ஆதரவாளர், மையஅரசுப் பணியில் இருந்தார். திமுக பிரமுகர் ஒருவரின் குடும்பத்துடன் மணவுறவு இவர் குடும்பத்திற்கு உருவாகி இவர் தீவிர திமுக தொண்டராக ஆனது பிற்பாடுதான். பதிப்பகம் ஆரம்பித்தது அவர் ஓய்வு பெற்றபின், அரசியலில் நுழைவதற்கான ஒரு முகாந்திரமாக.

கயல்கவின் என ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கவிருப்பதாகவும், அது என் நூல்களால்தான் தொடங்கவேண்டும் என்று உறுதியாக இருப்பதாகவும் சொல்லி என்னிடம் நூல்கள் கேட்டார். என் நூல்களை அன்று வசந்தகுமார் தமிழினி பதிப்பகம் வழியாக பதிப்பித்துக் கொண்டிருந்தார். இவருக்கு உதவுவதற்காக வசந்தகுமாரிடம் கேட்டு அனுமதி வாங்கியபின் சுபகுணராஜனுக்கு நூல்களை அளித்தேன். ஆசிரியர் பிரதியாக ஐந்து பிரதிகள் எல்லா நூல்களுக்கும் அனுப்பினார். அதன்பின் தொடர்பே இல்லை. அவருடைய இல்லத்திருமணத்திற்கு அழைப்பு அனுப்பினார். நான் செல்லமுடியவில்லை. இன்று என் நட்பும், நான் செய்த உதவியும் அவருக்கு அவர் செய்த பிறழ்வாகத் தெரிகிறதெனில் நன்று. அரசியல் வாழ்க.

பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த பலரில் ஒருவர். அவருடைய தந்தை பி.குப்புசாமி ஜெயகாந்தனின் நண்பர் என்பதனால் குப்புசாமியை சிலமுறை சந்தித்துள்ளேன். எனக்கு குப்புசாமி மேல் மதிப்பு அதிகம்.

திண்ணை ஆசிரியர் பரிந்துரையால் பி.கே.சிவக்குமார் நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன் – நேரில் பார்க்காமலேயே. திண்ணையின் சார்பில் எனி இண்டியன் பதிப்பகம் தொடங்கப்பட்டபோது என் நூல்களை அவர்கள் வெளியிட்டனர். அதில் பி.கே.சிவக்குமார் ஒரு பங்குதாரர். அமெரிக்கா சென்றபோது ஒருமுறை ஒரு ஹலோ சொல்லுமளவு சந்தித்துள்ளேன்.

எனக்கு பி.கே.சிவக்குமாரின் (இணையம் வழியாக அறியவந்த) தனிப்பட்ட குணங்கள் பலவற்றின்மேல் மதிப்பு உருவாகவில்லை. இலக்கியச் செயல்பாட்டை வெறும் தனிநபர் வம்பாக மட்டுமே எடுத்துக்கொள்கிறார், ஓயாது அதில் திளைக்கிறார் என்பது என் புரிதல். உணர்ச்சிகரமாகவும் அதை எடுத்துக்கொள்பவர். அவருடைய அமெரிக்க இலக்கியப்பூசல்களில் என்னை இழுக்கிறார் என தெரிந்தபின் நான் அந்த எளிய அறிமுகத்தையும் தொடரவில்லை. மற்றபடி என்னை அவருக்கோ அவருக்கு என்னையோ தெரியாது. எதை அவர் ‘நெருக்கம்’ என்று சொல்கிறார் என புரியவில்லை.

என் அமெரிக்க பயணங்களில் தான் வேறு பயணங்களை திட்டமிட்டுவிட்டு அதை இணையத்தில் வெளிப்படுத்தி தன் வேறு நண்பர்களை தக்கவைக்குமளவுக்கே இருந்துகொண்டிருக்கிறார். இன்று என் மேல் அவருக்கோ அவர்மேல் எனக்கோ மதிப்பேதும் இல்லை என்பது ரகசியமல்ல. அவர் எனக்கு அணுக்கமல்ல, என் செயல்பாடுகளுடன் அவர் இல்லை என்பதனால் ஒரு நாசூக்கான தொடர்பை மட்டுமே கடைப்பிடித்து வந்துள்ளேன். இப்போது ஏன் நெருக்கம் என்கிறார் என்பது புரியவில்லை. பொதுவாக ஒரு வம்பு, அவதூறு, தாக்குதலை வலுவாகவும் நம்பிக்கையாகவும் செய்யும் பொருட்டுதான் இப்படி நெருக்கம் என சொல்லிக்கொள்வார்கள்.

ஐயனார் (அய்யனார் ஆனந்த்) 1990ல் சுந்தர ராமசாமி அறிமுகப்படுத்தி வைத்தபோது தெரிய வந்தவர். அன்று இந்துத்துவ அமைப்பொன்றில் முழுநேர ஊழியர். சுந்தர ராமசாமிக்கு அவர் ஓர் ’கள்ளமற்ற கிராமத்து மனிதர்’ என்று எண்ணமிருந்தது. நான் அவருடன் அணுக்கமாக இல்லை, ஆனால் நானும் அதையே நம்பினேன். அவருடைய நேர்ப்பேச்சு, தோற்றம் அப்படி இருக்கும். ஆனால் அவருடன் நெருக்கமாக பழகும்படி எனக்கு வாய்ப்பு அமையவில்லை.

என்னை அவர் 1995ல் ஒரு பேட்டி எடுத்து தமிழரசி குழுமத்தின் புதியபார்வை இதழில் வெளிவந்தது. அது அன்று தமிழரசி – புதியபார்வை இதழ்களின் ஆசிரியராக இருந்த நண்பர் பாவை சந்திரன் (நல்ல நிலம் நாவலாசிரியர்) சொல்லி எடுக்கப்பட்டது. அதன் பின் ஓரிரு சம்பிரதாயச் சந்திப்புகள்.

பின்னர் ஐயனாரைப்பற்றி தெரிந்துகொள்ளுந்தோறும் இன்று நான் வந்தடைந்துள்ள புரிதலைப் பெற்றேன். தமிழிலக்கியச் சூழலில் மிகமிக அபாயமான மனிதர்களில் ஒருவர். அந்த கள்ளமற்ற கிராமத்தான் பாவனை ஒரு பெரிய நடிப்பு. அதற்குள் இருப்பது மிகப்பெரிய வம்புக்கிடங்கு. எவருடனும் எவர் பற்றியும் மிகமிக நம்பும்படியான பொய்களைச் சொல்லி மனப்பிரிவுகளை உருவாக்குவார். அதுவே அவருடைய வாழ்நாள் பணி.

2003ல் என் நூல்களின் வெளியீட்டுவிழா சென்னையில் நிகழ்ந்தது. அது அன்று ஒரு மிகப்பெரிய நிகழ்வு. அதில் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அந்நிகழ்வை பற்றி இவர் அன்று வேலைசெய்துகொண்டிருந்த காலச்சுவடு இதழில் அங்கு கூட்டமே இல்லை, ஜெயமோகன் ஏதோ உளற வந்திருந்தவர்கள் தலையில் அடித்துக்கொண்டார்கள் என்றெல்லாம் எழுதினார். பின்னர் அந்நஞ்சை காலச்சுவடு கண்ணனுக்கும் ஊட்டினார். (ஐயனார் professionally innocent என்று காலச்சுவடு கண்ணன் சொன்னதாக ஒரு பேச்சு உண்டு) நான் பின்னர் அவர் என்னிடம் ஓர் உதவிக்காக வந்தபோது, ஏன் அப்படி எழுதினீர்கள் என்று கேட்டேன். அவர் அதை எழுதவில்லை என்றும், காலச்சுவடு கண்ணனே எழுதிக்கொண்டதாகவும், தான் கள்ளமற்ற மனிதர் என்றும் சொன்னார்.

இன்று நான் சந்திப்பதையே தவிர்க்கும் நபர்களில் ஒருவர் ஐயனார். உண்மையில் சாதாரணமாக நினைத்தாலே என் நெஞ்சு கரிக்கும் ஆளுமைகளிலொன்று. அவருடைய படத்தையோ பெயரையோ கண்டாலே மனம் படபடக்கிறது. 2012 ல் விஷ்ணுபுரம் விழாவுக்கு வருவதாக என்னிடம் நேரில் அழைத்துச் சொன்னார். “நீங்கள் வரக்கூடாது. இது ஓர் இலக்கிய அமைப்பு. நீங்கள் வம்பு, கோள்மூட்டுதல், பிரிவுகளை உருவாக்குவதையே முழுநேரமாகச் செய்துவருபவர். இலக்கியம் உங்களுக்கு பொருட்டு அல்ல என உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்  உங்களைப் போன்றவர்களை உள்ளே விடமாட்டோம். அனைவரிடமும் உங்களைப் பற்றிய எச்சரிக்கையைச் சொல்லியிருக்கிறேன். தயவுசெய்து வராதீர்கள்” என்று சொல்லிவிட்டேன். அதன்பின் தொடர்புகள் இல்லை.

நான் கருத்துமுரண்களை ஏற்றுக்கொள்பவன். விஷ்ணுபுரம் அமைப்பிலேயே என் எல்லா கருத்துக்களையும் நிராகரிப்பவர்கள், அவற்றை எழுதுபவர்கள் உண்டு. பல ஆண்டுகளாக உடனிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்மேலும் எனக்கு அவர்கள் மேலும் நட்பும் மதிப்பும் நட்பும் இல்லையேல் தொடர்பு நீடிக்க முடியாது. கருத்துத்தளத்தில் எதிர்த்தரப்பு கொள்பவர்களை முழுமையான தர்க்கத்திறனுடன் எதிர்கொள்வேன், அதுவே அறிவியக்கத்தின் வழி.

நான் ஓர் அமைப்பை 30 ஆண்டுகளாக மெல்ல மெல்ல உருவாக்கி வருகிறேன். மிகச்சிறிய அளவில் சில நண்பர்களுடன் தொடங்கிய ஓர் இயக்கம் இது. நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளேன். இன்று கலை- இலக்கியம்- பண்பாட்டுக்கான ஓர் வலுவான அமைப்பாக இது நிலைகொண்டுள்ளது. இப்படி ஒன்றை பெரும் பணம், கட்சி அல்லது நிறுவனப்பின்னணி இல்லாமல் இங்கே எவரும் உருவாக்கிய வரலாறே இல்லை. பல முயற்சிகள் நடந்துள்ளன. எல்லாமே தொடக்கத்திலேயே அழிந்துவிட்டன. காரணம், அவற்றை தொடங்கியவர்கள் நடுவே உருவாகும் மனப்பிளவும் பூசலும்.

ஒவ்வொரு சிற்றிதழும் அப்படித்தான் நாலைந்து இதழ்களுக்குள் நின்றுவிடுகிறது. உதாரணங்கள் ஏராளமானவை. அவற்றில் என்ன நிகழ்ந்தது என கூர்ந்து பார்த்து நான் கற்றுக்கொண்டேன். அவற்றுக்குள் மனப்பிளவுகளை வெறும் கேளிக்கைக்காக, ஆணவத்துக்காக உருவாக்குபவர்கள் இருந்தார்கள். அவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அது என் வரையில் நிகழலாகாது என நான் மிக உறுதியுடன் இருந்தேன். ஆகவே வெற்றி பெற்றேன். இன்றும் நான் அஞ்சுவது அவர்களையே. தொடக்கத்திலேயே தயங்காமல் அகற்றிவிடுவது அவர்களையே.

சரி, என் முடிவுகள் பிழையாக இருக்கலாமே. நான் சொல்வதே அலர் ஆக இருக்கலாமே. நான் ஆணவக்காரனாக இருக்கலாமே. அப்படிக் கொள்வோர் கொள்க. ஆனால் நான் இங்கே கண்முன் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்படச் செய்துள்ளேன். முன்பிலாத ஒரு நிகழ்வு அது. பல கிளைகளாகப் பிரிந்து முதன்மையான ஆளுமைகளை உருவாக்கியது, உருவாக்குவது. வம்பு, ஆணவம் வழியாக அப்படியொன்றை உருவாக்கி நிலைநிறுத்த முடியாது. அதிலுள்ளோர் எவரும் மடையர்கள் அல்ல. அவர்களே முதன்மையான ஆளுமைகள். என் குணச்சிக்கல்கள், பலவீனங்கள் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதை என் நோக்கம், நேர்மை ஆகியவற்றின்பொருட்டு தாங்கிக்கொள்பவர்கள்.

என் சாதனையே என் சொற்களுக்குக் கண்கூடான சான்று. செய்துகாட்டியவனின் செயல்முறை குறிப்புகள் இவை. அவற்றை அவ்வகையில் புரிந்துகொள்பவர்களுக்காகவே இது எழுதப்படுகிறது. மறுப்பு என்றால்கூட இன்னொரு செயல்சாதனையாளரின் சொற்களையே நான் செவிகொள்வேன்.

நெருக்கமாக இருந்து விலகுபவர்கள் என்றுமுண்டு. நாம் எத்தனை நெகிழ்வாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் அதை தவிர்க்க முடியாது. நம்முடையது இலக்கிய- பண்பாட்டுச் செயல்பாடு. ஒருவருக்கு இலக்கியம், பண்பாடு எதை விடவும் அரசியல், சாதி, மதம் முதலிய பற்றுகளே முதன்மையானவை என்றால் அவரால் நம்முடன் நீடிக்க முடியாது. ஏதோ ஓரிடத்தில் அப்பிரிவினை உருவாகும். தனிப்பட்ட ஆணவச்சிக்கல்கள் மிக அரிதாக உருவாவதுண்டு.

உதாரணமாக, 2014ல் மோடி பதவிக்கு வந்ததுமே இந்துத்துவ நம்பிக்கை கொண்டவர்கள், பிராமணியச் சார்பு கொண்டவர்களின் இயல்புகளில் வேறுபாடு வருவதை கண்டோம். 2014ல் மோடி வென்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்றே ஊட்டியில் ஓர் இலக்கிய முகாம் நிகழ்ந்தது. நமக்கு அரசியல் முக்கியமே அல்ல என்று நான் சொன்னேன். அந்நிகழ்வை விட அந்த தேர்தல்முடிவுகளே முக்கியம் என அன்று வராமலிருந்த எவரும் இன்று உடனில்லை.

2019ல் மோடியின் மறுவெற்றிக்குப் பின் அவர்களின் தீவிரம் உக்கிரமான காழ்ப்பும் கசப்புமாக மாறிவிட்டிருக்கிறது. அவர்கள் தங்களை இந்தியாவுக்கே உரிமையாளர்களென எண்ணுகிறார்கள். நம்மைப் பொறுத்தவரை நமக்கு எஞ்சியவர்களே போதும். விலகிச்சென்ற எவரும் அந்த கசப்பு நீடிக்கும் வரை ஒன்றாக இருந்தனர். அந்தக் கசப்பு அவர்களை ஒன்றாக்கியது. அவர்கள் வேறெதையும் உருவாக்கவில்லை, எதையும் நிகழ்த்தவுமில்லை. நான் அடிக்கப்பட்டபோது கூட்டாக மகிழ்ந்து கொண்டாடியதுதான் அவர்கள் இறுதியாக நிகழ்த்திய ஒற்றுமைச் செயல்பாடு.

நானே முடிவெடுத்து விலக்கிய அனைவருமே வம்பாளர்கள் மட்டுமே. மற்ற எவரையும் எப்போதும் எந்நிலையிலும் விலக்கலாகாது என்பதும் என் கொள்கை. ஏனென்றால் இலக்கியவாசகனின், இலக்கியவாதியின் உளநிலைகள் மிகமிக சிக்கலானவை. அவற்றை நாம் புரிந்துகொள்ளாமல் எவர் புரிந்துகொள்ள முடியும்? இப்படி சொல்கிறேனே, ஓர் இலக்கியவாதி கொலையே செய்தால்கூட நான் உடனிருப்பேன். இந்தியாவில், தமிழகத்தில் எழுத்தாளனுக்கு வேறு எவர் இருக்கிறார்கள்? பெற்ற தாயோ குடும்பமோ கூட உடனில்லை.

ஆனால் வம்பாளர்கள் அவ்வாறல்ல. அவர்கள் பேரழிவை உருவாக்கிவிடுவார்கள். அவ்வழிவை அவர்கள் உருவாக்குவதற்கு முன் அவர்களை விலக்குவதே நிர்வாகத்தின் முதற்பெருங்கலை. (ஆனால் எப்படியும் ஓர் அழிவை அவர்கள் நாம் அவர்களை அடையாளம் காண்பதற்குள்ளாகவே உருவாக்கியிருப்பார்கள். ஒன்றும் செய்யமுடியாது)

எத்தனை கவனமாக இருந்தாலும் பிழை நிகழ்வதுண்டு. உதாரணம், ஒரு முதிய எழுத்தாளர், அவருடைய தன்வரலாறுக்கு நான் முன்னுரை எல்லாம் எழுதியிருக்கிறேன். நான் தாக்கப்பட்டபோது அவர் அதில் மிகத்திட்டமிட்டு ஒரு திரிபைச் செய்து பரப்பினார். இருபதாண்டுக்காலம் அவரை எனக்குத் தெரியும். அவர் செய்த வம்புகள் மற்றும் அழிவுகளை தெரிந்துகொண்டபோது ஒரு வாரம் என்னால் சரியாகத் தூங்கமுடியவில்லை.

வம்பாளர்களின் பொதுப்பாவனையே ‘நான் நல்லவன், மென்மையானவன், அனைவருக்கும் நல்லதே நாடுபவன், ஒவ்வாததை மென்மையாகச் சுட்டிக்காட்டும் பண்பாளன். அறவுணர்ச்சியால் மட்டுமே செயல்படுகிறேன். நான் அனைவருக்கும் வேண்டியவன், அவர்கள் அந்தரங்கமாக சொன்ன பல விஷயங்கள் தெரிந்தவன். அவற்றை நம்பிக்கையின்பேரில் உங்களிடம் மட்டும் ரகசியமாகச் சொல்கிறேன். ஏனென்றால் நீங்கள் நல்லவர், நேர்மையானவர்’ என்பதுதான். அதுவே அவர்கள்மேல் நம்பிக்கையை உருவாக்குகிறது. அவனை ஆற்றல் மிக்கவனாக ஆக்குகிறது. வம்பாளனை அவனுடைய செயல் வழியாக கண்டுபிடிக்க முடியாது என்பது என் அனுபவம், அச்செயல்களின் விளைவுகள் வழியாகவே கண்டடைய முடியும்.

அவ்வாறு வம்பாளர் என சிலரை விலக்கும்போது உடனிருப்போர் சிலர் நான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன் என சொல்லியதுண்டு. ஆனால் வம்பாளர்களால் நீண்டநாள் ஒளிந்திருக்க இயலாது. காலப்போக்கில் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே தீர்வார்கள். அப்படி வெளிப்படுத்திக் கொள்ளமால் என் முடிவுகள் பிழையானவை என நிரூபித்த ஒருவர்கூட இதுவரை இல்லை.

அச்சப்பத்து என மாணிக்கவாசகர் ஒரு பதிகம் எழுதியிருக்கிறார்.  ’ஆள் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!’ என நான் நடுங்குவது வம்பாளர்களை மட்டுமே. விலக்கியவர்களைப் பற்றி நான் பின்னர் பேசுவதில்லை. அவர்களை என் மூளைக்குள் வைத்துக்கொண்டால் என்னால் மேற்கொண்டு ஏதும் செய்ய முடியாது. அவர்கள் என் வரையில் ஆள் அல்லாதவர்களே.

அவர்கள் பொய்யாக நெருக்கம் எனச் சொல்லி, அவதூறுகள் அல்லது கிசுகிசுக்களை பரப்பும்போது நட்புகள் நடுவே ஐயங்கள் உருவாகின்றன என்பதனால் இந்த விளக்கம். அதுவும் தொடர்ச்சியாக நிகழ்வதனால் இதை எழுதுகிறேன். எனக்கு நேரடித்தொடர்பு இல்லாத, என்னை வாசிக்கும் நண்பர்கள் நடுவேதான் இக்குழப்பம் உருவாகிறது. நேர்த்தொடர்பு உள்ள நண்பர்கள் எவர் எனக்கு நெருக்கம், எவர் என்னால் தவிர்க்கப்படுபவர்கள் என நன்றாகவே அறிவார்கள். இதை எழுதுவதே நீங்கள் எழுதிய ஒற்றை வரி காரணமாகத்தான். நான் மண்டையைப் போடுவதற்காகக் காத்திருப்பவர்கள் இவர்கள், அதன்பின் அவதூறுகளை ‘நெருக்கம்’ என்பதன் ஆதாரத்தில் பதிவுசெய்வார்கள்.

இனி இதுபற்றி பேச்சு இல்லை. நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைநா.தர்மராஜன்
அடுத்த கட்டுரைசவார்க்கர், கடிதங்கள்