மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’

Maitreyi_Devi_pix

1994 ல் சிகாகோ பல்கலை இருநூல்களை ஒரேசமயம் வெளியிட்டது. ருமேனிய இந்தியவியல் அறிஞரும் நாவலாசிரியருமான மிர்சா யூக்லிட் [Mircea Eliade] எழுதிய பெங்கால் நைட்ஸ் [Bengal Nights] ஒன்று. வங்காள கவிஞரும் தாகூரின் சீடப்பெண்ணாக இருந்தவரும் புகழ்பெற்ற சமூகசேவகியுமான மைத்ரேயி தேவி எழுதிய ‘இட் டஸ் நாட் டை’ [It Does Not Die] இன்னொன்று. இரண்டுமே சுயசரிதை நாவல்கள். ஒரே காதல்கதையின் இரு பக்கங்கள். பலவிதமான திருப்பங்களும் உள்முரண்பாடுகளும் உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் கொண்ட ஒர் இலக்கிய நிகழ்வு இந்நூல்களுக்குப் பின்னால் உள்ளது.

மிர்சாவின் நாவல் 1930 களில் கல்கத்தாவுக்கு வரும் அலென்[ Alain] என்ற ·பிரெஞ்சு இளைஞனைப்பற்றியது. அவனுடைய முதலாளியின் வீட்டில் தங்கவைக்கப்படும் அலென் அவரது பதினாறு வயதான மகள் மைத்ரேயியுடன் காதல்வயப்படுகிறான். அவள் அவனைத்தேடி அவனது அறைக்கு இரவுகளில் வருகிறாள். அவர்களுடைய உடலுறவு மிகுந்த தீவிரம் கொண்டதாக இருக்கிறது. தன் முதலாளி அவரது மகளை தனக்கு திருமணம் செய்துவைக்க விரும்புவதாகவே அலென் நினைக்கிறான். ஆனால் மைத்ரேயியின் தங்கை அவ்விஷயத்தை அறிந்து கடுமையான பொறாமை கொள்கிறாள். அவள் வழியாக மைத்ரேயியின் அப்பா அந்தக்காதலை அறிகிறார். காதல் மூர்க்கமாக முறிக்கப்படுகிறது, அலென் வீட்டைவிட்டு துரத்தப்படுகிறான்.மைத்ரேயி கட்டாய மணம் செய்து வைக்கப்படுகிறாள். கடுமையான துயரத்தில் உழலும் அலென் மனமுடைந்து ஐரோப்பா திரும்பி அவள் நினைவாக வாழ்கிறான்.

autor-carte

இது உலகப்புகழ்பெற்ற இந்தியவியல் அறிஞர் மிர்சாவின் உண்மைக்கதை என்றே விளம்பரம் செய்யப் பட்டது. இந்திய தத்துவம் பயில மிர்சா 1930ல் கல்கத்தா வந்தார். புகழ்பெற்ற இந்தியவியலாளரான தாஸ்குப்தாவின் மாணவராக அவர்கீழ் ஆய்வுசெய்தார். தாஸ் குப்தா மிர்சாவை தன் வீட்டிலேயே தங்கவும் வைத்தார். தாகூரின் மாணவியும் இளம் கவிஞருமாக இருந்த அவரது மகள் மைத்ரேயி தேவியும் மிர்சாவும்காதல் வயப்பட்டார்கள். அது தாஸ் குப்தாவுக்குத்தெரியவருகிறது. ஐரோப்பியர்கள் பாலியல் ரீதியாக நேர்மையானவர்களல்ல என்று எண்ணும் தாஸ் குப்தா மிர்சாவை வீட்டைவிட்டு வெளியேற்றினார். நான்குவருடம் கழித்து மைத்ரேயி தேவி இன்னொருவருக்கு மணமுடிக்கப்பட்டார்.

மிர்சா 1931ல் கல்கத்தாவில் இருக்கும்போதே தன்னுடைய முதல் நாவலை ருமேனிய மொழியில் வெளியிட்டிருந்தார். 1933ல் அவர் ‘மைத்ரேயி ‘ என்ற பேரில் பெங்கால் நைட்ஸ் நாவலின் மூலத்தை ருமேனிய மொழியில் எழுதிவெளியிட்டார். அது அவரது மூன்றாவது நாவல். உடனடியாக அது பெரும் வணிக வெற்றி பெற்றது. மிர்சா நிறைய பணமும் புகழும் பெற்றார். இத்தாலிய மொழியில் 1945 லிலும் ஜெர்மானிய மொழியில் 1948லும் ·ப்ரெஞ்சில் 1950 லிலும் ஸ்பானிஷ் மொழியில் 1952 லிலும் அதுவெளிவந்தது. 1993ல்தான் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.

646x404

மிர்சாவின் நாவலைப்பற்றி மைத்ரேயி தேவி தன் தந்தையிடமிருந்தே கேள்விப்பட்டார். 1938ல் ·ப்ரான்ஸ் சென்ற தாஸ் குப்தா அந்நாவலைப்பற்றி கேட்டறிந்தார்.. ஆனால் அதன் உள்ளடக்கத்தை மைத்ரேயி தேவி அறியவில்லை.1953ல் ஐரோப்பிய பயணத்தின்போது மைத்ரேயி என்னும் பெயரைக்கேட்டதுமே பல ருமேனியர்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்வதை மைத்ரேயி கண்டார். அப்போதும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. ஏனெனில் சிறப்பான மணவாழ்க்கையும் வெற்றிகரமான பொதுவாழ்க்கையும் கொண்டிருந்த மைத்ரேயி தேவிக்கு மிர்சா என்பது ஒரு மறந்துபோன கடந்தகால நினைவு மட்டுமே.

ஆனால் 1972ல் கல்கத்தாவுக்கு இந்தியவில ஆய்வுக்காக வந்த மிர்சாவின் ருமேனிய நண்பர் செர்ஜி [Sergui al-Georghe] அந்நாவலைப்பற்றி விரிவாகக் கூறியபோது மைத்ரேயி தேவி அதன் ·ப்ரெஞ்சு மொழியாக்கத்தை வாங்கி நண்பரின் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வாசித்துப் பார்த்தார். அது அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. காரணம் அவர் மிர்சாவுடன் உடலுறவு ஏதும் கொண்டிருக்கவில்லை. சிலமாதங்களே நீண்ட அந்த உறவு சில பார்வைகள் ,தொடுகைகள், ஒரு முத்தம் ஆகியவற்றுக்கு அப்பால் செல்லவில்லை. உறவினர்களும் வேலையாட்களும் நிறைந்த ஒரு வங்காள மாளிகையில் , எந்தவித அந்தரங்கமும் அனுமதிக்கபடாத கலாச்சார சூழலில் அதற்குமேல் சாத்தியமும் இல்லை. விரைவிலேயே அந்த உறவு அனைவருக்கும் தெரியவும் வந்தது. மிர்சா தன்னை காமத்தில் வேகம் கொண்ட ஒரு கீழைநாட்டு மோகினியாகச் சித்தரித்திருந்தது மைத்ரேயி தேவியை கடுமையான மனப்பாதிப்புக்கு உள்ளாக்கியது. மிர்சாவின் அத்துமீறிய காமச்சித்தரிப்புகளை வாசித்து அவர் நோயுற்றார்.

Mircea Eliade

மைத்ரேயி தேவியின் ஆரம்பகால எதிர்வினைகள் 1972ல் அவர் எழுதிய கவிதைகளில் இருந்தன. ஆதித்ய மரீசி [ சூரியக்கதிர்கள்] என்னும் அக்கவிதைத்தொகுதியில் அவரது மனக்கொதிப்புகளை பல கோணங்களில் வெளிப்படுத்தியிருந்தார். அப்போது மைத்ரேயி தேவிக்கு ஐம்பத்தேழுவயது.மிக இளம்வயதிலேயே மைத்ரேயிதேவி தாகூரின் முன்னுரையுடன் தன் கவிதைகளை வெளியிட்டிருந்தார். வங்க இலக்கியத்தில் கற்பனாவாதக் கவிஞராக அவருக்கு ஒரு முக்கிய இடம் இருந்தது. தாகூரைப்பற்றி அவர் எழுதிய நினைவுகளும் விமரிசனங்களும் வங்க இலக்கியத்தின் செவ்விலக்கிய ஆக்கங்களாக நினைக்கப்பட்டன. அவரது கணவர் புகழ்பெற்ற அதிகாரியாகவும், நிதானமான நகைச்சுவை உணர்வுகொண்ட கனவானாகவும் அறியப்பட்டிருந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தன. அவர்களுக்கும் மணமாகி மைத்ரேயி தேவிக்கு பேரக்குழந்தைகளும் பிறந்துவிட்டிருந்தன. மலைவாசிக்குழந்தைகளுக்கு சேவைசெய்வதற்காக இரு சேவை நிறுவனங்களை அமைத்து அவற்றினூடாக அவர் புகழும் மதிப்பும் பெற்றிருந்தார். அந்த கட்டத்தில் எதிராபாராத இடத்திலிருந்து வந்த அந்த தாக்குதல் அவரது இதயத்தை ரணமாக்கியது. அதிலிருந்து இறுதிவரை அவரால் விடுபட முடியவில்லை.

1973ல் மைத்ரேயி தேவி சிகாகோ பல்கலைக்கு தாகூர் பற்றிய பேருரைகள் நிகழ்த்துவதற்கான ஓர் அழைப்பை ஏற்பாடு செய்துகொண்டார். அப்போது மிர்சா சிகாகோ பல்கலையின் இந்தியவியல் துறையில் ஆய்வாளராக இருந்தார். முன்பின் தெரிவிக்காமல் மிர்சாவின் அலுவலகத்தில் நுழைந்த மைத்ரேயி தேவி அவரிடம் உரையாடினார். ஆனால் மிர்சாவால் அவரை தலைதூக்கி கண்களை நோக்கி எதிர்கொள்ள இயலவில்லை. மைத்ரேயி என்று வேறு பெண்களும் உண்டு என்றும் தன் நாவல் ஒரு புனைவிலக்கியமே என்றும் அவர் சமாளிக்க முயன்றார். தொடர் சந்திப்புகளில் மெல்ல தணிந்துவந்து தன் நாவலில் உள்ளதெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே என்று சொன்னதாகத் தெரிகிறது. அந்தப் பகல் கனவுகள் மூலமே அவர் கடுமையான மனப்பாதிப்பிலிருந்து மீண்டதாகவும் மைத்ரேயி தேவியிடம் சொன்னார்.

index

அந்நாவலை மைத்ரேயி தேவி உயிருடன் இருப்பதுவரை ஆங்கிலத்தில் வெளியிடுவதில்லை என்ற வாக்குறுதியை அப்போது மிர்சா மைத்ரேயி தேவிக்குக் கொடுத்தார். இத்தகவலை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கு எழுதிய கடிதங்களில் மைத்ரேயி தேவி வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். அந்நாவலின் பிந்தைய பதிப்புகளில் அதிலுள்ள நிகழ்வுகள் பெரும்பாலும் கற்பனையே என்று எழுதுவதாகவும் தன் சுய சரிதையில் அந்நிகழ்வுகளின் உண்மையை வெளியிடுவதாகவும் அப்போது ஆணையிட்ட மிர்சா பின்னர் சொன்னபடி அதைச்செய்யவில்லை. உண்மையில் மைத்ரேயி தேவி இறக்கும்வரை மிர்சா தன் நாவலை ஆங்கிலத்தில் வெளியிடாமைக்குக் காரணம் அப்படி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பல கடிதங்களில் மைத்ரேயி தேவி மிரட்டியிருந்ததேயாகும். ஐரோப்பாவை விட அமெரிக்காவில் அப்படிப்பட்ட சட்ட நடவடிக்கைகள் பொதுவாக எளியவை என்பதனால் மிர்சா அஞ்சியிருக்கலாம்.

1974ல் மைத்ரேயி தேவி தன் தரப்பை ஒரு சுயசரிதை நாவலாக எழுதினார். நா ஹன்யதே என்ற பேரில் வந்த இந்நாவல் வங்கத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. புகழ்பெற்ற ஒரு நாவலாசிரியராக அவரை நிலைநாட்டியது. பற்பல ஊர்களில் பல்லாயிரம் வாசகர் நடுவே தன் நாவலை மைத்ரேயி தேவி வாசித்துக்காட்டினார். அவரது வலியையும் சீற்றத்தையும் தேடலையும் சாதாரண வங்க பெண்கள்கூடப் புரிந்துகொண்டார்கள். 1976 ல் அந்நாவலுக்கு கேந்திர சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. இந்திய மொழிகளில் எல்லாம் நா ஹன்யதே மொழியக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மைத்ரேயி தேவியே மொழியாக்கம் செய்துள்ளார். இது மிர்சாவின் நூலுக்கான எதிர்வினை என்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எடுத்துக்கொள்ளபட்டது.

1990 ல் மைத்ரேயி தேவி இறந்த பின் ஆங்கில நாவல் வெளியாயிற்று என்றாலும் மிர்சா சொன்ன சொல்லை அவரது மனைவி காப்பாற்றவில்லை. மிர்சாவின் நாவலை திரைப்படமாக்கும் உரிமையை அவர் ·பிரெஞ்சு இயக்குநர் நிக்கோலஸ் க்லோட்ஸ் [Nicholas Klotz] என்பவருக்கு விற்றார். 1986ல்தான் மிர்சாஇறந்தார். 1987 ல் கல்கத்தாவில் லெ நைட்ஸ் பெங்காலி [ Les Nuits Bengali] என்ற அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆகவே மிர்சாவே உரிமையை விற்றிருக்கலாம் என்று ஊகிக்க இடமுள்ளது. ஹூ க்ராண்ட் [Hugh Grant ] சுப்ரியா பதக் ஆகியோர் நடித்த அப்படம் மைத்ரேயி தேவியின் உண்மையான காதல்கதை என்று இலஸ்ட்ரேட்டட் வீக்லில் பெரிய அளவில்செய்தி வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியது. சுப்ரியா பதக்கின் பலவிதமான அரைநிர்வாண படங்களும் வெளியாயின

tagorefig3

ஆழமாக மனம் புண்பட்ட மைத்ரேயி தேவி தொடர்ந்து பல நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்தார். மையக்கதாபாத்திரத்தின் பெயர் காயத்ரி என்று மாற்றப்பட்டது. வங்காளப்பெண்ணைப்பற்றிய ஆபாசப்படம் எடுப்பதாக வங்கப்பத்திரிகைகள் எழுதியதைத் தொடர்ந்து வங்க மக்களின் அனுதாபம் மைத்ரேயி தேவி மீது குவிந்தது. இந்திய அரசு படத்துக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. படத்தை இந்தியாவில் திரையிடுவதில்லை என்ற வாக்குறுதியை அரசுக்கு தயாரிபபளர் பிலிப் டயஸ் [Philippe Diaz ] கொடுத்தார். 1989ல் இந்தியத்திரைப்படவிழாவில் இப்படம் ஒரே ஒருமுறை இந்தியாவில் காட்டப்பட்டது. பொதுவாக இது மோசமாக எடுக்கப்பட்ட ஆபாசப்படம் என்றே கருதப்பட்டது. எங்கும் அது ரசிகர்களைக் கவரவில்லை.

*

மேற்கண்ட தகவல்களை இப்போது இணையத்திலிருந்து பெற முடிகிறது. சிகாகோ பல்கலை வெளியீட்டகத்தில் நூல்களைப்பற்றிய தகவல்கள் உள்ளன [ The University of Chicago Press ]

சிகாகோ பல்கலை இணையதளத்தில் [http://www.press.uchicago.edu] கினு காமானி எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றில் [ A Terrible Hurt:The Untold Story behind the Publishing of Maitreyi Devi. :Ginu Kamani] இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டுள்ளார். மிர்சாவின் நாவல் இலக்கியத்தரமற்ற ஒரு கேளிக்கைப்புனைவு என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. அதற்கு அளிக்கப்பட்டுள்ள இலக்கிய கௌரவம் அதன் ஆசிரியர் ‘உலகப்புகழ்பெற்ற’ இந்தியவியல் அறிஞர் என்பதனால்தான் . மிர்சாவின் நாவலில் காலனியாதிக்க காலகட்டத்து மேட்டிமை நோக்கும் ஆணாதிக்க மதிப்பீடுகளுமே நிறைந்துள்ளன என்கிறார். நேர் மாறாக மைத்ரேயி தேவியின் நாவல் உணர்ச்சிகரமானதாகவும் நேர்மையானதாகவும் இருப்பதாக கினு எண்ணுகிறார். மேலும் கட்டுப்பெட்டித்தனமும் உறவினர் பிடுங்கல்களும் நிறைந்த இந்தியசூழலில் மைத்ரேயி தேவி துணிவுடனும் நடுநிலையுடனும் தன் வாழ்க்கையைப்பற்றியும் தந்தை உட்பட தன் குடும்பத்தைப்பற்றியும் வெளிப்படையாகக் கூறி நாவலை எழுதியுள்ளமை பற்றி பெரிதும் வியப்பு தெரிவிக்கிறார்.

இவ்விரு நூல்களையும் குறித்து எழுதப்பட்ட பல்வேறு மதிப்புரைகளை விரிவாகவே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் கினு காமானி கணிசமான மதிப்புரைகளில் மைத்ரேயி தேவியின் நாவல் தேர்ச்சியின்றி எழுதப்பட்ட முரட்டுத்தனமான [naive] மறுப்பு என்றும் மிர்சாவின் நாவல் அறிவார்ந்ததும் உணர்ச்சிகரமானதுமாகும் என்றும் சொல்லப்பட்டிருப்பதை விரிவாகவே விவாதிக்கிறார். மைத்ரேயி தேவி முக்கியமான கவிஞராக அறியப்பட்டவர். அவரது நாவல் மிர்சாவின் நாவலைப்பற்றிய எந்தவிதமான அறிதலும் இல்லாத வங்க வாசகர்கள் நடுவே தனித்தன்மை கொண்ட ஒரு நாவலாகவே வெளிவந்து பெரும் வாசகப்பரப்பையும் விமரிசன மதிப்பையும் பெற்ற ஒன்று. அதற்கு சாகித்ய அக்காதமி விருது போன்ற முக்கியமான அங்கீகாரங்கள் கிடைத்தன. ஆனால் மேலை விமரிசகர்கள் மிர்சாவின் நுலை மையப்படைப்பாகவும் மைத்ரேயி தேவியின் நாவலை அதற்கு வந்த எதிர்வினையாகவும் மட்டுமே காண்கிறார்கள்.

ஒருதலைப்பட்சமானது . சுயமைய நோக்கு கொண்டது, மூர்க்கமான அறிவார்த்த மறுப்பு கொண்டது ” என்றும் (Carmel Berkson, “Lost Love in India”, Far Eastern Economic Review, November 17, 1994) ”அவரது கோபமான எதிர்வினை முரட்டுத்தனமானதும் முற்றிலும் இந்தியத்தனமானதுமாகும்” (Ian Buruma, “Indian Love Call”, New York Review of Books, September 22, 1994) என்றும் மைத்ரேயி தேவியின் நாவல் விமரிசிக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் கினு இவை எந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமான கருத்துகள் என்று காட்டுகிறார். மைத்ரேயி தேவி மிர்சாவுடன் உண்மையிலேயே உடலுறவு கொண்டிருந்தால் கூட மிர்சா எழுதிய அந்நாவல் சுயமைய நோக்கு கொண்ட ஒருவரின் நம்பிக்கைத் துரோகமாகவே அடையாளம் காட்டப்படவேண்டும். மாறாக மைத்ரேயி தேவி தன் நாவலில் மிர்சா மீது அவர் கொண்ட தூய காதலின் அழுத்தத்தையும் அழியாத தன்மையையும்தான் காட்டியிருக்கிறார்.

surendranath
எஸ்.என்.தாஸ்குப்தா

மிர்சாவை இறுதி நாட்களில் சந்தித்தபோது மைத்ரேயி தேவி பெரிதும் ஏமாற்றமடைந்தார் என்பதை கினு எடுத்துக்காட்டுகிறார்.”அவருக்கு இந்தியா பற்றி எதுவும் தெரியாது. தவறாகப்புரிந்துகொள்வதில் அவர் நிபுணர். என்ன காரணத்தால் அவர் இந்திய தத்துவ அறிஞர் நிபுணர் என்று கருதப்படுகிறார் என்று தெரியவில்லை” என்று ஒரு கடிதத்தில் மைத்ரேயி தேவி எழுதுகிறார். புகழும் செல்வமும் பெற்றிருந்த மிர்சா மைத்ரேயி தேவி இறுதியில் தன்னை தேடிவந்தபோது தான் நோபல் பரிசு பெற வாய்ப்புள்ள ஒரு முக்கியமான மனிதர் ஆதலால்தான் அவர் தன்னைப் பார்க்க வந்ததாகவே எண்ணுகிறார். அந்த அளவுக்கு அசட்டுத்தனமான சுயமையநோக்கு அவருக்கு இருந்தது.

மிர்சாவின் நாவல் பெற்ற வெற்றியின் ரகசியத்தை தன் நோக்கில் ஆராய்கிறார் கினு. அமெரிக்க வெளியீட்டாளார் ஒருவர் அவரிடம் பாலியல் கதைகள் எழுதி அளிக்கும்படி கோர அவர் எழுதி அளிக்கிறார். அக்கதைகளை வெளியீட்டாளர் திருப்பிவிடுகிறார். காரணம் கேட்கும்போது பாலியல் கதைகள் சுவாரசியமாக அமைய அவசியமான ‘சூத்திரம்’ அவற்றில் இல்லை என்று வெளியீட்டாளர் சொல்கிறார். கினுவின் கதையில் ஏராளமான மனிதர்கள், குறிப்பாக உறவினர்கள் வருகிறார்கள். பாலியல்கதைகள் இருவரைப்பற்றி மட்டுமே எழுதப்படவேண்டும். அவர்களின் தாபம், உறவு, பிரிவு ஆகியவை மட்டுமே அவற்றில் இருக்கவேண்டும். கவற்சியூட்டும் புதிய வாழ்க்கைச்சூழல் இருக்கவேண்டும். மிர்சாவின் கதை அந்த சூத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறது. மேலும் அது உலகப்புகழ்பெற்ற நூலாசிரியரின் உண்மைக்கதை என்ற பின்னணித்தகவலும் உள்ளது. ஆனால் மனிதர்கள் உணர்வுரீதியாகவும் இட ரீதியாகவும் செறிந்து வாழும் இந்தியச்சூழலில் அப்படிப்பட்ட ஓர் உறவு நிகழ வாய்ப்பே இல்லை.ஒரு ஐரோப்பியனுக்கு இந்தியா பற்றியும் இந்தியப்பெண்கள் பற்றியும் இருக்கக்கூடிய பலவிதமான விருப்பக் கற்பனைகளை, பாலியல் சார்ந்த ஆர்வங்களை நிறைவுசெய்கிறது என்பதே மிர்சாவின் நாவலின் வெற்றி

மைத்ரேயி தேவி மிர்சாவின் துரோகத்தை எண்ணி பெரிதும் மனம் கொதிப்பதை பல கடிதவரிகளில் எடுத்துக் காட்டுகிறார் மைத்ரேயி தேவி. ”மிர்சாவின் நம்பிக்கைத்துரோகத்தை எண்ண என் மனம் உடைகிறது. என் கன்னி நாட்களில் நான் அவனுடைய படுக்கையறைக்குச் சென்றேன் என்று சொல்லும் அந்த நூலை அவன் ஆங்கிலத்தில் வெளியிட்டால் கண்டிப்பாக நான் வழக்கு தொடர்ந்து அவனை தண்டிப்பேன். எத்தகைய பச்சை அவதூறு! ” மைத்ரேயி தேவி தன் கடிதங்களில் சொல்கிறார் ”நான் அவனை இரவுகளில் தேடிச்சென்றதாக அவன் எழுதியிருப்பது பச்சைப்பொய். அது தன்னுடைய பகல்கனவே என்று அவன் எழுதுவதாக என்னைச் சிகாகோவில் சந்தித்தபோது எனக்கு வாக்குறுதி அளித்தான். ஆனால் அதைச்செய்யவில்லை. வேண்டுமென்றே இவ்விஷயத்தை புகைமூட்டமாக வைத்திருக்கிறான். ஏன் அவன் வாக்கு தவறினான்!”

ஆனால் பின்னர் மைத்ரேயி தேவி இன்னொரு மனநிலையை அடைந்தார். ஓர் இலக்கியவாதியாக ‘நா ஹன்யதே’ அவருக்கு வங்க இலக்கியத்தில் அழியாத இடம் தேடித்தருவதை அவர் கண்டார். ”இது விதி. நான் மிர்சாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவனால்தான் என் வாழ்க்கையின் பாதையையே மாற்றிய இந்நூலை எழுதும் தூண்டுதலை நான் பெற்றேன். இந்த புகழைச்சொல்லவில்லை. இது வெறுமே அகங்காரத்துக்கு தீனிதான். இந்நூலை வாசித்த எல்லா தரப்பு மக்களிடமிருந்தும் எனக்குக் கிடைக்கும் பேரன்பையே சொல்கிறேன். அது என்னை பணிவும் விவேகமும் உள்ளவளாக ஆக்குகிறது…” இறப்பதற்கு சிலநாட்களுக்கு முன் மைத்ரேயி தேவி எழுதியது இது.

*

மைத்ரேயி தேவியின் நாவலான ‘நா ஹன்யதே’ தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி மொழியாக்கத்தில் சாகித்ய அக்காதமி வெளியிட்டாக ”கொல்லப்படுவதில்லை” என்ற தலைப்பில் 2000த்தில் வெளியாகி இப்போது வாங்கக் கிடைக்கிறது. மொழியாக்கம் சிறப்பாகச்சொல்லப்பட ஏற்றதல்ல. குறிப்பாக உரையாடல்களில். மோசமான கட்டமைப்பு. ஆயினும் இந்நாவல் படிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்நாவலை மேற்குறிப்பிட்ட பின்னணி ஏதும் தெரியாமல் சாதாரணமாக நான் படித்து முடித்தேன். முடிக்கும்போதுதான் இது சுயசரிதையாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. காரணம் இதன் பின்னட்டையில் மைத்ரேயி தேவியின் வாழ்க்கைபற்றிய சில தகவல்கள் உள்ளன. குறிப்பாக அவருக்கும் தாகூருக்கும் இடையேயான குருசீட உறவைப்பற்றி. நாவலுக்குள் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும் தாகூரின் சித்திரம் அழகாக இருந்தது. இணையத்தில் தேடியபோது இந்நாவலின் பின்னணிக்கதை தெரியவந்தது. விஷ்ணுபுரம் எழுத பெரிதும் உதவியாக இருந்த நூல்களின் ஆசிரியரும் நான் அடிக்கடி குறிப்பிடும் மாபெரும் இந்திய தத்துவ ஆசிரியருமான தாஸ் குப்தாவின் மகள்தான் மைத்ரேயி என்பது ஓர் வியப்பு. இந்நாவலில் அவரும் பேராசிரியரின் சித்திரம் எழுப்பிய அதிர்ச்சி.

நாவலின் கதாநாயகி அமிர்தா. அவள் புகழ் பெற்ற சமூக சேவகி. பழைய தலைமுறைக் கவிஞர். இனிய குடும்பம் ஒன்றுக்குச் சொந்தக்காரர். அவரது பிறந்தநாள் விழாவின்போது ருமேனியாவிலிருந்து வந்த செர்ஜி செபாஸ்டின் என்பவரைச் சந்திக்கிறார். அவர் மிர்சா யூக்லிட் என்ற ருமேனிய எழுத்தாளரின் நண்பர். அவரிடம் மிர்சா எழுதிய நாவலைப்பற்றிக் கேட்கும் அமிர்தா அந்நாவலில் அவள் ஒரு காமமோகியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதையை அறிகிறார். கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்.

அமிர்தாவின் கடும் வலியும் துயரமும் நாவலில் பெரும்பகுதியை நிரப்பியுள்ளன. அவமதிக்கப்பட்ட பெண்மையின் சீற்றம். பொருக்கோடிய ரணம் மீண்டும் திறந்துகொண்டதுபோல கடந்தகால கசப்புநினைவுகள் எழுவதன் வலி. இறந்தகால ஏக்கத்தின் துக்கம். அதனூடாக அவள் மிர்சாவை நினைவு கூர்கிறாள். பேராசிரியர் தாஸ்குப்தா அவரிடம் இந்திய தத்துவம் பயில வந்த மாணவனாகிய மிர்சாவை அமிர்தாவுக்கு அறிமுகம் செய்கிறார். அவன் குறைவான பணத்துடன் கல்வி கற்க வந்தவன். ஆதலால் சேரியில் தங்கி கஷ்டப்படுகிறான். நம் வீட்டிலேயே தங்கட்டும் என்கிறார் பேராசிரியர்.

பேராசிரியர் புகழின் உச்சியில் இருந்த காலம் அது. அவரை இறைவனுக்கு நிகராக வழிபடும் பேரழகியான மனைவி. மாபெரும் நூலகத்துடன் கூடிய பங்களா. இரு அழகிய பெண்குழந்தைகள் — அமிர்தா,சாபி. செல்வம் மதிப்பு. பேராசிரியர் பேரறிஞர்களுக்கு வழக்கமான தன்முனைப்பு மிக்கவர். அவரைப்பொறுத்தவரை அவரது விருப்பமே அவரை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையாக இருக்கவேண்டும். அது மீறப்படும்போது அவர் அழிக்கவும் தயங்க மாட்டார். அன்றைய சூழலில் இந்திய அறிஞனுக்கு ஓர் ஐரோப்பிய மாணவன் என்பது மிகுந்த கௌரவமான ஒரு விஷயம். அது பிரம்ம சமாஜிகள் ஐரோப்பியர்களை அனைத்து வகையிலும் போலிசெய்து வாழ்ந்த காலம். அவர்கள் பிற இந்தியர்களை இழிவாக நோக்கினர். பேராசிரியர் கௌரவத்தின்பொருட்டே பிரம்ம சமாஜிகர்களை போலிசெய்கிறார். உள்ளூர அவர் மரபுவாதி. தன் மகளை ஆங்கிலம் கற்கவும் சுதந்திரமாக ஆண்களுடன் பேசிப்பழகவும் பொதுநிகழ்ச்சிகளுக்குச் செல்லவும் அவர் அனுமதிப்பது இதனாலேயே. அவளோ பேரழகி. மிகச்சிறுமியாக இருக்கும்போதே கவிதைகள் எழுதி பிரசுரித்தவள். தாகூரின் மாணவி. அவள் கவிதைகள் தாகூரால் பாராட்டப்படுகின்றன. ”நாங்கள் இருவரும் அப்பாவின் பொருட்காட்சி சாலையில் உள்ள விலைமதிப்பு மிக்க இரு கலைப்பொருட்கள். அவர் எங்களை பிறருக்கு முன் பெருமையாகக் காட்டுகிறார்” என்று அமிர்தா சொல்கிறாள். அப்போது அமிர்தாவுக்கு பதினைந்து வயது. மிர்சாக்கு இருபத்து மூன்று.

பிற வங்க மாணவர்கள் அமிர்தாவின் அருகே நெருங்கவோ பேசவோ கூசும்போது மிர்சா நெருங்கிபழக அனுமதிக்கப்படுவது இந்த ஐரோப்பிய மோகம் காரணமாகவே. ஆகவே அவள் நெருங்கிப்பழகும் ஒரே அன்னிய ஆணாக அவன் இருக்கிறான். அவ்வயது கனவுகள் நிறைந்தது. ஐயங்கள் அற்றது. அன்பை எவ்வகையிலும் மறுக்க தெரியாதது. அமிர்தா மிர்சாவுடன் நெருங்க அதை மிர்சா பேராசிரியர் அவனை தன் மருமகனாக்கக் விழைவதாக புரிந்துகொள்கிறான். காரணம் அவன் ‘உயர்ந்த’ ஐரோப்பியன். கவிதையும் தத்துவமும் விவாதிக்கும் இளையோர் இருவரும் மெல்லமெல்ல நெருங்குகிறார்கள். அமிர்தாவின் நோக்கில் அது ஒரு முதிராவிருப்பம் மட்டுமே. அவள் அவனை ஒருமுறை முத்தமிட அனுமதிக்கிறாள். அவர்கள் இருவரும் நெருங்குகிறார்கள். ஆனால் அவனை மணம் முடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்போ சேர்ந்து வாழவேண்டுமென்ற கனவோ அவளில் தீவிரமாக இல்லை.

அமிர்தாவின் தங்கை சாபியின் எதிர்வினைதான் இந்நாவலிலேயே மிக முக்கியமான பகுதி. மிகச்சிறுமி அவள். ஆனால் என்ன ஏது என்று அறியாமலேயே அவளுக்கு அக்காதல் புரிகிறது. பொறாமை என தெரியாமலேயே அவள் கடும் பொறாமைகொண்டு அதை உடல் தாங்காமல் வலிப்பு நோயாளி ஆகிறாள். மண்ணில் எவ்வுயிருக்கும் அன்பு எத்தனை அபூர்வமான அமுதம் என்பது தெரியும். அதன் ஒருதுளியைக்கூட பிறருக்கு அளிக்க அவர்கள் தயாராக மாட்டார்கள். சாபி மிர்சாவை அடைய நினைக்கிறாள். நோயுற்றால் மிர்சா வந்து அருகே அமர்ந்து கைகளை தழுவுவான் என்பதனாலேயே நோயுறுகிறாள். அமிர்தாவும் மிர்சாவும் ஒருமுறை தோட்டத்தில் முத்தமிடப் போவதைக் கண்ட அவளுக்கு தன்னியல்பாகவே வலிப்புவருகிறது. அவளுடைய உளறல்கள் வழியாக உண்மை வெளியே தெரிகிறது.

பேராசிரியருக்கு ஒரு ஐரோப்பியன் மகளை நெருங்கியது அதிர்ச்சியாக உள்ளது. அவருடைய உள்ளத்தில் அவர்கள் அன்னியர்கள், ஒழுக்கமில்லாதவர்கள். மிர்சா வெளியேற்றப்படுகிறான். அமிர்தாவுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை என்ற உறுதிமொழி அவனிடமிருந்து வாங்கப்படுகிறது. அவன் அவளை மறக்க முடியாமல் சாமியாராகி ஹரித்துவாரில் அலைகிறான். பின் ஊர் திரும்புகிறான். அப்போது சில கடிதங்களை அவன் அவளுக்கு எழுதினாலும் அவை அவளுக்கு கிடைக்கவில்லை.

மிர்சாவை பிரியும்போதுதான் அமிர்தாவுக்கு அவளுக்குள் மிர்சா மீது இருந்த காதல் எவ்வளவு ஆழமானது என்று தெரியவருகிறது. அவள் கடும் துயரம் கொள்கிறாள். ஆனால் மெல்லமெல்ல அதை வெறுப்பு என்ற பாறையை உருட்டி வைத்து மூடிக்கொள்கிறாள். மிர்சா தன்னை அடைய முயன்றதாகவும் பிடிக்கப்பட்டு விலக்கப்பட்டபின் அப்படியே கைவிட்டுவிட்டதாகவும் அவள் எண்ணிக் கொள்கிறாள். குருதேவ் தாகூரின் ஆசியுடன் அவள் மீண்டு வருகிறாள். கவிதைகள் எழுதுகிறாள். நான்குவருடம் கழித்து அவளுக்கு மணம் நிகழ்கிறது. அப்பா தேடிய மாப்பிள்ளை. அவர் ஒரு எஞ்சீனியர். நகைச்சுவை உணர்வும் நிதானமும் மிக்கவர். அமிர்தா அவரை மிக மதிகிறாள், காதலிக்கிறாள். மிர்சாமேலான காதல் மெல்லமெல்ல மனதின் ஆழத்துக்குள் சென்றுவிடுகிறது.ஆனால் ஒரு ரணமாகவே உள்ளது அது.

இமையமலைப்பகுதியில் அமைதியான குடும்பவாழ்க்கை வாழும் அமிர்தாவை தாகூர் வந்து சந்திக்கும்போது அப்படிப்பட்ட ஓர் இனிய குடும்பவாழ்க்கை வாழ்வதே கவிதைதான் என்கிறார். தன் அகம் முழுக்க ரத்தம் கசிந்திருப்பதைச் சொல்லும் அமிர்தாவை கண்டு தாகூர் அஞ்சுகிறார்.மெல்லமெல்ல சமூக சேவையில் ஈடுபடும் அமிர்தா வேறுவகையில் தன்னை உருவாக்கிக் கொள்கிறாள். மிர்சா மறக்கபடுகிறான்.மீண்டும் நாற்பத்திரண்டுவருடம் கழித்து செர்ஜியிடமிருந்து அம்ருதா மிர்சாவைப்பற்றிக்கேள்விப்படுகிறாள்.

உக்கிரமான துயரத்தில் தவிக்கும் அம்ருதா மெல்ல மெல்ல ஒரு மனநிறைவை அடைகிறாள். அந்தத் துயந்த்துடன் ஆழ்ந்த காதலும் கலந்துள்ளது. மிர்சா தன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனல்ல என்றே அவள் நினைக்கிறாள். அவன் மீது அவளுக்கு உயர்ந்த எண்ணமும் இருக்கவில்லை. ஆனாலும் அவன் மீதான அவளதுய் காதல் பசுமை மாறாது அவளுக்குள் உள்லது. ”யாரோ” அவள் மீது அவதூறு சுமத்தியதனால் அவள் துயருறவில்லை. அது காதலின் துயர். அந்த முதியவயதில் அப்படி உள்ளம் கொள்ளா உணர்வொன்று தனக்குள் ஊறியதே அதிருஷ்டம்தான் என்ற எண்ணம் வளுக்கு ஏற்படுகிறது.

இந்தக் கருணை யாருடையதென்று அறியேன்
யார் கையில் உள்ளது இந்த வற்றாத கருணை ஊற்று?
நீர் வடிந்து எஞ்சிய சேற்றில்
யாருடைய இசையால் வெள்ளம் அலைமோதுகிறது?
ஆகா என்ன அதிருஷ்டம்!ஆகா என்ன அதிருஷ்டம்!
யார் அழைக்கிறார் என்னை
அந்த அறியாத குறியிடத்துக்கு?

அம்ருதா மிர்சாவை சென்று சந்திக்க விழைகிறாள். ஒரு அமெரிக்கப்பயணத்தை ஏற்பாடுசெய்துகொண்டு அவள் அமெரிக்கா செல்கிறாள். அங்கே பேராசிரியராக இருக்கும் மிர்சாவை அழைப்பில்லாமலேயே சென்று பார்க்கிறாள்.

”நான் நுழைந்த அதே வினாடியில் அந்த முதிர்ந்த வயது மனிதர் ‘உஷ்’ என்றார். பிறகு எழுந்து நின்றார். மறுபடி உட்கார்ந்தார். பிறகு மறுபடி எழுந்து எனக்கு முதுகைகாட்டிக்கொண்டு நின்றார். இதென்ன விபரிதம்? என்னை இந்த மனிதருக்கு அடையாளம் தெரிந்துவிட்டதா?”

அவள் அந்நகரில் நுழைந்ததுமே மிர்சா அதை அறிந்துவிட்டிருந்தார். அவளை அவர் திரும்பியே பார்க்கவில்லை. நடுங்கும் கைகளால் புத்தக அலமாரியையே பிடித்துக் கொண்டிருந்தார்.அவளைப்பார்க்க பலமுறை அவள் சொல்லியும் அவன் திரும்பவில்லை

”அந்த அனுபவம், ஒப்பற்றது. அவ்வளவு அழகான அனுபவத்தை மறுபடி தொடமுடியும்னு எனக்கு தோணல்ல. அதனால உன்னை காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டவளா வைச்சுக்கிட்டேன்”

”என்னை பார்க்க திரும்பு மிர்சா. நான் உன்னைப்பாக்கணும்”

”நான் உன்னை எப்படி பார்ப்பேன். பியாட்ரிசை மறுபடி புறக்கண்ணால பார்க்க முடியும்னு தாந்தே நினைச்சிருப்பானா?” \

மிர்சா சொல்கிறான், அவளைப்பற்றி எழுதியவைக்கு விளக்கமாக. ”கற்பனை வெறும் கற்பனை. நான் உன்னை மர்மம் நிறைஞ்ச தேவதையா — உன் செயல்களுக்கு விளக்கம் காணமுடியாதவளாக– சித்தரிக்க விரும்பினேன்.ஆச்சரியங்களை நிகழ்த்துகிற காளி மாதிரி…”

அவள் சொல்கிறாள்”அப்போ நாம யாருன்னு தெரியாதா உனக்கு? ஆயுதத்தால துளைக்க முடியாத நெருப்பால் எரிக்கமுடியாத அந்த உன்னைத்தேடித்தான் நான் இத்தனை தூரம் வந்தேன்”

மிர்சா சொன்னான் சம்ஸ்கிருதத்தில் ”கொல்லப்படும் உடலில் அது கொல்லப்படாதது”

அவள் கிளம்பும்போது அவன் பின்னால் கூவினான் ”கொஞ்சம் நில்லு அம்ருதா. நான் உன்னைத்தேடி வருவேன். நாம சந்திப்போம். இங்கே இல்லை. அங்கே கங்கை கரையில். அப்போது நான் என் உண்மையுருவை உனக்குக் காட்டுவேன்…”

*

மைத்ரேயிதேவி தேவியின் இந்த சுயசரிதைக்கு சுயசரிதை என்ற அடையாளம் இல்லாமலேயே ஒரு முழுநாவலாக நிற்கும் தகுதி உள்ளது. மிக நேரடியான நடையில் நினைவுகளகவும் மதிப்பிடுதல்களாகவும் தன்னுரையடல்களாகவும் தன் வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கிறது இந்நாவல். இதன் புகழ்பெற்ற பூசல்  மதிப்பைவிட அதிகமான மாறுபட்ட நுண்தளங்கள் இதற்கு உண்டு. இதில் வரும் தாகூரின் ஒளிமிக்க சித்திரம் ஓர் உதாரணம். வாழ்க்கை மீது காதல் கொண்டவராகவும், கனவுகளில் ஆழ்ந்திருப்பவராகவும், அதேசமயம் வாழ்வின் குரூரங்களால் வலியுறுபவராகவும் தாகூர் காட்டப்படுகிறார். தாகூர் அம்ருதாவை சந்தித்து உரையாடும் காட்சிகள் எல்லாமே அழகாக அமைந்துள்ளன. ”கவி பிறரிடம் உரையாடும்போது நேராகப் பார்த்து பேசமாட்டார். அவரது பார்வை கீழ்நோக்கியிருக்கும், அல்லது தூரத்தில் எங்கோ பதிந்திருக்கும்.அவர் ஒரு தனி மனிதனுடன் பேசவில்லை மானுட சமூகத்துடன் அல்லது காலத்துடன் பேசுகிறார் என்ற உணர்வு ஏற்படும்…” போன்ற நுண்ணிய சித்தரிப்புகள் புனைவின் சாத்தியங்களால் உருவாகக்க் கூடியவை

தாகூர் 1938ல் அம்ருதாவுக்கு எழுதிய கடிதத்தில் ”துன்பங்களை மறப்பதனால் வாழ்க்கை முழுமைபெற்றுவிடாது.துன்பத்தை ஓர் அனுபவமாக ஜீரணித்துக்கொண்டு கடுமையை மென்மையாக , புளிப்பை இனிப்பாக மாற்றிக்கொண்டு கனிவதன் மூலமே வாழ்க்கை பக்குவம் பெறுகிறது…”என்று எழுதிய வரிகளையே அம்ருதா முப்பத்தாறு வருடம் கழித்து தன் வாழ்க்கையின் இறுதிச் சோதனையின் போது தனக்குரிய வழிகாட்டலாகக் கொள்கிறாள்.

மைத்ரேயிதேவி தேவி தன் உறவினர்களை பற்றியும் தன்னைப்பற்றியும் ஆன்மசாதகனுக்குரிய இரக்கமற்ற பார்வையுடன் தான் ஆராய்ந்துசொல்கிறார். பேரறிஞரான தாஸ் குப்தா தன் சுயமைய நோக்கினாலேயே வீழ்ச்சி அடையும் சித்திரம் துன்பியல்தன்மை கொண்டது. வயதான காலத்தில் ஓரு மாணவி மீது மோகம் கொண்டு, நற்பெயரை இழந்து அவமானப்பட்டு சிறுமை அடைந்து, பின்பு அவளால் உதறப்பட்டு, செல்வம் புகழ் மனைவி எல்லாவற்றையும் இழந்து, துன்புற்று மறையும் போது தன் அகங்காரத்தின் உள்ளீடற்ற தன்மை அவருக்கு புரிகிறது. தன் மணவாழ்க்கையின் முடிவேயில்லாத சலிப்பைப் பற்றி மைத்ரேயிதேவி தேவி கூறுமிடம் அவரது துல்லியத்துக்கும் நேர்மைக்கும் சான்றாகும்.

காதல் எப்போதுமே இலக்கியத்தில் அழியாத இடம் கொண்டதாக உள்ளது. நவீனத்துவ இலக்கியமரபு மட்டுமே காதலை ஐயத்துடன் நோக்கி விலக்கியது. இலக்கியத்தில் காதலின் இடம் என்ன? மானுடன் தன்னை முற்றாக இழந்து பிறிதொன்றில் கரையும் பெருநிலை அது. பேரியற்கையனுபவம் இறையனுபவம் ஆகியவற்றுக்கு நிகரானது. அவற்றின் குறியீடாக நிற்கும் தகுதி கொண்டது. காதல் ஒரு மீட்பு. மண்ணில் எளிய வாழ்வே விதிக்கப்பட்டுள்ள மானுடனுக்கு தன் உணர்வுகளினாலேயே மகத்தான வாழ்க்கை ஒன்றை கற்பிதம் செய்துகொள்ள இயற்கை அருளிய வாய்ப்பு. அதை உயிரியல் எப்படி விளக்கினாலும் யதார்த்தபோதம் எப்படி கட்டுபப்டுத்தினாலும் இலக்கியத்திலும் கலையிலும் அதன் இடம் அழியாதது. மைத்ரேயிதேவி தேவியியின் ‘கொல்லப்படுவதில்லை’ அத்தகைய தகுதி கொண்ட ஆக்கம் என்று சொல்லமுடியும்

‘கொல்லப்படுவதில்லை’ மைத்ரேயிதேவி. தமிழாக்கம் சு கிருஷ்ண மூர்த்தி. சாகித்ய அக்காதமி வெளியீடு 2000

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 29, 2007

முந்தைய கட்டுரைசிலைகள் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 33