ஒரு குழந்தையிறப்புப்பாடல்- பதிவு

தலைப்பு சொல்லி விடுகிறது இது ஒரு குழந்தை இறப்பு பாடல் அல்ல என்பதை.மெல்ல மெல்ல கதிரவன் தகிக்க தொடங்கும் காய்ச்சல் மதியம் போல தொடங்கும் கதை தேவாலயத்தின் இரவு பிரார்த்தனை போல முடிகிறது. தந்தையின் இயல்பான மொழி கை வந்திருக்கிறது இளமையான அஜிதனிடம்.

மென்சோக அல்லது மேலோ டிராமா போன்ற உலக சினிமா பார்த்த அனுபவம் போல ஒரு செவ்வியல் நெருக்கமான நல்ல சிறுகதை.ஆணின் பார்வையில் எழுதப்பட்டிருந்த கதையாக இருப்பினும்.ஆணினால் இதை அறிவின் துணை கொண்டு தான் புரிய முடியும் உணர அல்ல.கதையின் நாயகி ஜூலியா கிளாராவா என்று இன்னும் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

மேற்கத்திய செவ்வியல் இசை ரசனை அஜீதனின் விருப்பமான ஒன்று என்பதை ஜெ.மோ இணையதளத்தில் அஜீதன் பயிற்சி முகாம் நடந்ததை பற்றி படித்திருக்கிறேன்.மென்சோகம் என்று இந்த கதையை நான் புரிந்து கொண்டது.அவருடைய இளம் வயது காரணமாக கூட இருக்கலாம்..

தந்தை ஜெ.மோ.வின் ரப்பர் (டவுன்ஹால் நூலகத்தில் முதல் முறையாக எடுத்து படித்தது முதல் (1995 ஆக இருக்கலாம்) சில நாட்கள் மன நிலையே ஒரு மாதிரி ஆனது நினைவிருக்கிறது.இந்த 46 மத்திம வயதில் இரு பெண் மக்களின் தந்தையான பிறகு ரப்பர்,ஏழாம் உலகம், ஊமைச்செந்நாய் மீண்டும் வாசிக்க தயக்கம் உள்ளது.அந்த தயக்கம் அஜிதனிடம் இல்லாமல் போனது அவரின் தனிச்சிறப்பு.மிக இளமையான எழுத்து வளம் அஜிதனுக்கு அமைந்து விட்டது.ஆதலால்அஜிதன் அடுத்து மகிழ்வின் பாடல் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

கிறித்துவ சங்கீத கவிதை மொழி சிறு வயதில் என் தந்தையின் திருநெல்வேலி கிராமத்தில் மாதா கோயில் மற்றும் பெரிய ஊர்களில் இருக்கும் தேவாலயங்களில் சுற்றுப்புற மதில் சுவர்படித்து பார்த்துக்கொண்டிருக்க செய்தது உண்டு. மென் சோகமும் கூடவே அசைக்க முடியா நம்பிக்கையும் வரிகளில் உண்டு.இப்போதும் காலை அலுவலக வேக பயணங்களில் படிக்கும் தேவலாய,பள்ளி சுவர் வசனங்களில் அன்றைய நாளுக்கான ஆசீர்வாதமாக கற்பனை செய்து கொள்வது ஒரு பழக்கமாக இருக்கிறது. வார்த்தைகள் எப்போதுமே சடங்குகளை விட மேலானவை.

கதையின் முடிவில் இருந்த பிரெடெரிக் ரூக்கர்ட் பாடலின் நம்பிக்கையை இந்த உலகில் துணையாக கொண்டு செல்வோம் ..

குழந்தைகளுக்கு இரங்கட்டும் உலகின் கருணை.

ஆமென்.

ரமேஷ் சுப்ரமணியம்

ஆவநாழி இணைய இதழ்

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி விருது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவரலாறு – கடிதம்