கன்னி, ஒரு பதிவு

கன்யாகுமரி வாங்க

கன்யாகுமரி மின்னூல் வாங்க

மீண்டும் ஜெயமோகன். இம்முறை கன்னியாகுமரி நாவல். ஆன்ந்த் சென்னை வருகையில் சில புத்தகங்களை கொடுத்துவிட்டுச் சென்றான். காய்ச்சல் காரணமாக படிப்பகத்திற்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் போது கையில் எடுத்த புத்தகம் கன்னியாகுமரி.

பெண்களுக்கு இச்சமூகம் அளித்திருக்கும் சிறை சமையற்கட்டு கூட இல்லை. அது அவர்களின் உடல். அந்த உடலை மறைக்க, பேணி காக்க அவள் ஓயாமல் பணிக்கப்படுகிறாள். அவள் ஆளுமை, ஒழுக்கம் எல்லாவற்றிற்கும் அதுவே அளவுகோல். ‘உடலைத் தாண்டி அவளுக்கென இவ்வுலகில் ஏதுமில்லை’ என்ற பிற்ப்போக்கிற்கு பழகிவிட்ட சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வரும் ரவி என்ற கதை நாயகன், அவளை சீண்டும் பிரவீணா, அவனால் தொட முடியாத உயரத்திற்குச் சென்று விட்ட விமலா, இவர்கள்தான் கதை மாந்தர்கள்.

இந்நாவல் ஒரு பெண்ணை அவள் உடலை வைத்தே வீழ்த்தி விடலாம் என்ற சமூக கீழ்மையைப் பட்டவர்த்தனமாக்குகிறது. ஆனால் அத்தகைய கீழ்மையால் சிறிதும் சீண்டப்படாமல் எங்கோ பறந்துகொண்டிருக்கும் விமலா கதாபாத்திரம் ஒரு நம்பிக்கை.

பல நேரங்களில் யோசிப்பதுண்டு, ஒருவனை இழிவு செய்ய அவன் வீட்டுப் பெண்களின் ஒழுக்கத்தை இழிவு செய்தால் போதுமானதாக இருக்கிறது இச்சமூகத்திற்கு. அவன் அம்மா அல்லது அக்கா அல்லது அவன் மனைவி அல்லது அவன் மகள்‌.

சமீபத்தில் பார்த்த விடுதலை படத்திலும் போலிஸ் மேல் பயம் வருவதற்காக பெண்ணுடல் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படும்படியான காட்சி. அந்த காட்சி எவ்வகையிலும் மிகைப்படுத்தப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை. இன்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் AFSPA போன்ற சட்டங்களின் வாயிலாக பெண்களின் மீதான வன்முறை ஒருவித கருவியாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வெண்ணமெல்லாம் முளைத்தெள ஆதி ஊற்று ‘கற்பு’ என்ற ஒன்றை வைத்து, அதை உடல் ரீதியாக ஒன்றவைத்ததே.

கன்னித்தன்மை, கற்பு, Virgin, என இந்த புனிதத்தன்மை மீண்டும் மீண்டும் வளர்கிறது. அவற்றில் உள்ள கீழ்மை, குரோதம் பற்றிய ஒரு புரிதல்களை உண்டாக்கிவிட்டு செல்கிறது ‘கன்னியாகுமரி’

விக்னேஷ் முத்துக்கிருஷ்ணன்

கன்னியின் காலடியில்

முந்தைய கட்டுரைமேடையுரைப் பயிற்சி தேவையா? -ஜெயராம்
அடுத்த கட்டுரைமு.இளங்கோவன், எஸ்.ஜே.சிவசங்கர்- கடிதங்கள்