ஜனநாயகத்தில் செங்கோல்
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் ஜனநாயகத்தில் செங்கோல் கட்டுரை வாசித்தேன்.
“இன்று ஓர் உறுதியான இந்துவாக எனக்கு என் மதத்தின் ஞானாசிரியர்கள் அதிகாரத்தின்முன் கையறுநிலையில் வரிசையாக நிற்கும் காட்சி பெரும் அவமதிப்பாக இருந்தது.உண்மையிலேயே கண்ணீர் மல்கினேன். இது ஒரு யுகத்தின் சாவைக் காட்டும் காட்சி என தோன்றியது.”மொத்தக் கட்டுரையின் சாரமும் இந்த வரிகளில் உள்ளதாக உணர்கிறேன்.
எனக்கு பெருவியப்பு தருவது என்னவென்றால் எப்படி பெரும் பொறுப்பில் உள்ளவர்கள் – நாடாள்பவர்களும் சரி – மதத்தலைவர்களும் சரி – இத்தகைய செயல்களைச் செய்துவிட்டு – பின் அது ஒரு இயல்பான நிகழ்வாக அவற்றைக்கடந்து செல்கிறார்கள்? என்ன மாதிரியான மனநிலை எது?
இந்தியாவின் தொடக்ககால ஆட்சியாளர்களால் இது போன்ற நிகழ்வுகள், அவற்றின்விளைவுகள் உணர்ந்து தவிர்க்கப்பட்டன. ஆனால் இன்று அவை அன்றாட நிகழ்வாகி விட்ட அவலம் நெஞ்சை வருத்துகிறது.
அன்புடன்
சு இளைய குமார்
அன்புள்ள இளையகுமார்,
ஓர் ஆட்சி மக்களிடையே உருவாக்கவேண்டியது அது அனைவருக்குமானது என்னும் நம்பிக்கையை. ஆட்சியாளர்கள் சாமானியர்கள் அல்ல, அவர்களிடம் அதிகாரம் உள்ளது. அரசதிகாரம் அடிப்படையில் ராணுவத்தாலனதுதான். ஆனால் அவர்கள் தாங்கள் சாமானியர்கள் என மக்களிடம் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு ஆக முயலவேண்டும். இவையிரண்டும் ஜனநாயகத்தின் அடிப்படைகள். இவ்விரண்டு அடிப்படைகளும் இல்லை என்றால் மக்கள் ஜனநாயகத்தில் இருந்து அகல்வார்கள். இது உலகமெங்குமுள்ள ஒரு வழக்கம். ஜனநாயகத்தில் அரசியலில் மதம், இனம் கலக்காமலிருக்கவேண்டும். எந்நிலையிலும் ராணுவம் நேரடியாக நிர்வாகத்தில் ஈடுபடாமலிருக்கவேண்டும். இவை இரண்டும் எச்சரிக்கைகள்.
ஜெ
அன்புள்ள ஜெ,
ஒரு பதிவில் உங்களை ‘இந்து விரோதி’ என்று கடுமையாக வசைபாடியிருந்தார்கள். இதுவரை இந்து வெறியராக இருந்தீர்கள். வாழ்த்துக்கள்.
செல்வக்குமார் எம்.ஆர்
அன்புள்ள செல்வக்குமார்,
நான் சொல்வதெல்லாமே இந்துவாக நின்றுதான். நாளையே பாரதியஜனதா படுதோல்வி அடைந்துவிட்டதென்று கொள்வோம், இந்து தர்மம் தோற்றுவிட்டது, அதற்கு இந்தியாவில் இடமில்லை என அர்த்தமா? அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவே மதம் இருக்கவேண்டும் என நான் சொல்வதற்கு இந்த எளிய பதிலையாவது புரிந்துகொண்டால் சரிதான்.
ஜெ