செங்கோல், கடிதம்

ஜனநாயகத்தில் செங்கோல்

அன்பு ஜெ

செங்கோல் கட்டுரை படித்த போது என்னுடைய பல கேள்விகளுக்கு அது விடை அளித்தது

என் ஊரில் இருந்து சென்ற இரு மடாதிபதிகள் இருக்கிறார்கள்.நான் பிறந்தது முதல் கேட்ட என் மொழி இந்தியாவின் அதிகார பீடத்தின் மையப் பகுதியில் உச்சரிக்கப்படுகிறது.அந்தப் பாடல்களும் உச்சரிப்புகளும் எனக்கு மிகவும் அணுக்கமானவை.இந்த நாட்டினுடைய மிக சக்தி வாய்ந்த மனிதர் இவை அனைத்துக்கும் வணங்குகிறார்.ஆனாலும் எனக்கு இந்த நிகழ்வு திருப்தியை அளிக்கவில்லை . ஏன் எனக்கு ஒவ்வாமை?

கண்டிப்பாக என்னுடைய ஒவ்வாமை தனிநபர் சார்ந்தது ஒரு கட்சிக்கு எதிரானதாகவோ நான் நினைக்கவில்லை அதற்கு மேலும் ஒரு காரணம் இருக்கலாம் என்று நான் நினைத்தபோது

உங்களுடைய செங்கோல் கடிதம் எனக்கு பதிலை அளித்தது. இந்த ஒவ்வாமைக்கு காரணம் பல நூற்றாண்டுகளாக நம்முடைய முன்னோர்கள் அடிமைகளாக இருந்து மக்களே மக்களை ஆளும் சுதந்திரம் இந்த உலகத்திற்கு கிட்டத்தட்ட இந்த நூறு வருடங்களுக்குள் தான் சாத்தியமாய் இருக்கிறது.  அதிலும் சில தவறான ஆட்சியாளர்களால் ஜனநாயகம் உலகமெங்கும் அவ்வபோது படுகொலை செய்யப்பட்டிருக்கிறது

இந்த சூழலில் எனக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கு உங்களுடைய செங்கோல் கட்டுரை விடையளித்தது.என்னைக் கேட்டால் இந்த கட்டுரையின் சாரம் உலகெங்கிலும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரையும் போய் சேர வேண்டும்

நீங்கள் அடிக்கடி கூறுவது உண்டு மனிதன் இன்றைய உலகத்தில் தான் மிகச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று அதற்கு அடிப்படை காரணம் உலகம் முழுவதும்  பரவிக்கிடக்கும் ஜனநாயகத்தின் சூழல் . அதை உருவாக்கி கொடுத்த ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை உள்ள மாபெரும் தலைவர்கள். நமது நாட்டில் குறிப்பாக நமது நாட்டில் காந்தி நேரு காமராஜர் போன்றோர்.

சுதந்திர நாட்டின் சுதந்திர குடிமகனாக நான் அனுபவித்து வரும் இந்த சுதந்திரத்திற்கு காரணமானவர்களை வணங்கிக் கொண்டே சரியான பார்வையில் என்னை போன்றவர்களுக்கு புரிய வைத்த உங்களையும் வணங்குகிறேன்

நன்றி

நடராஜன் கோவை

*

அன்புள்ள ஜெ

உங்கள் செங்கோல் பற்றிய கடிதம் கண்டேன். என்னைப்போன்ற சைவர்கள், ஆனால் சைவமென்பது கட்சியரசியல் அல்ல என்று நம்புபவர்களின் மனநிலை. ஆகா சைவம் பாராளுமன்றம் செல்கிறது என்ற பரவசம் இங்கே வாட்ஸப் குழுமங்களில் சுற்றி வருகிறது. உங்கள் கட்டுரையை பகிர்ந்தேன். உடனே இதிலே அந்த வரி தப்பு, இந்த வரி தப்பு, இந்தக்கல்வெட்டில் அப்படி இல்லை என்று ஆய்வாளர் வேடம்போட ஆரம்பித்துவிட்டனர். அடிப்படைப்பிரச்சினையை எவரும் பேசத்தயாராக இல்லை. (ஒருவர் இந்த தகவல் தப்பு என்று nitpicking செய்ய ஆரம்பித்தாலே அவருக்கு கருத்து புரியவில்லை, அல்லது சொல்ல ஒன்றுமில்லை என்றுதான்பொருள்)  நம் மடமும் மடாதிபதிகளும் இங்கே உள்ள அன்றாட அரசியலில் சிக்கிச்சீரழியவேண்டுமா என்பதுதான் மையமான கேள்வி. நம் ஆட்சியாளர்களை நம் மதத்தலைவர்களுக்கும் மன்னர்களுக்கும் உரிய இடத்தில் வைக்கவேண்டுமா என்பது இரண்டாம் கேள்வி.

நன்றி

மகாதேவன் பொன்னம்பலம்

காஞ்சி பெரியவர் சொன்னாரா?

செங்கோல், கடிதம்

முந்தைய கட்டுரைஇயல் விருது விழா
அடுத்த கட்டுரைவாண்டுமாமா