சமீபமாக ஒருநாள் இந்த சட்டை ஆடைகள் இவற்றையெல்லாம் கழற்றி போட்டு விட்டு வெறும் ஒற்றை வேட்டியும் ஒரு துண்டும் போர்த்திக் கொள்ள போதாதா ? என்று தோன்றியது.கொஞ்சம் கூடுதல் ஆடம்பரமாக அது இருக்கும் மற்றபடி ஒன்றுமில்லை .வேட்டியைப் போல சுகமான ஆடை எனக்கு வேறில்லை.மேலாடை உள்ளாடை இவையெல்லாம் வழியில்லாமல் அணிந்து கொள்கிற வஸ்திரங்கள் தாம்.ஜீன்ஸ் அணிவதில் உள்ள வசதி அதில் பர்ஸ் வைத்துக் கொள்ளலாம்.அலைபேசியை சொருகிக் கொள்ளலாம் ,காய்கறிகள் வாங்குவதற்கு பை எடுத்துச் செல்ல வில்லையெனில் சமாளிக்கலாம்.இத்யாதி வசதிகள் .நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு உடுப்பு போட்டுக் கொள்வது சுகமின்மையே.
நான் தோன்றுபடி மாறிக் கொண்டேயிருப்பவன்.எவன் ஒருவன் தொடர்ந்து மாறுகிறானோ அவனிடம் மட்டுமே நாம் மாற்றம் குறித்து பேச வேண்டும்,உரையாட வேண்டும்.பொதுவாக நம்மில் தலைமுறை தலைமுறையாக ஒரு மாற்றமும் பெறாதவர்கள் மாற்றங்கள் குறித்து போதனைகள் செய்கிறார்கள்.வாழ்வில் சிந்தனையில் பழக்கத்தில் எதிலும் மாற்றமில்லை ஆனால் வழிமறித்து மாற்றம் பற்றி போதிக்கிறார்கள்.வாழ்வை உன்னால் மாற்ற முடியவில்லையெனில் எதனை நீ மாற்றுவாய் ? ஆணோ பெண்ணோ மாறிக் கொண்டிரு,மாறுவதில் எவ்வளவு கடினமும் வலியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பது விளங்கும் .யாராக இருந்தாலும் நான் வாழ்வையும் சேர்த்தே பார்க்கிறேன்.
சுந்தர ராமசாமி தேங்கியவர் அல்ல.ஜெயமோகன் ஓடும் காட்டாற்றின் மாற்றம்.பெருந்தேவி துணிகிறார்.அவர் சாரதா அன்னையாகக் கூட மாறிவிடக் கூடும். லீனா மணிமேகலை வேறொரு பெண்ணையிங்கே இங்கே முன்வைக்க முயல்கிறார்.அதற்கு என்னவெல்லாமோ செய்கிறார்.அவர் பேரிலுள்ள மதிப்பிற்கு அது முக்கியமான காரணம்.விக்ரமாதித்யன் ஏழாள் மாடன் . ஒராளாக இருப்பதற்கே விழி பிதுங்கி விடும் .ஒருவன் நம் முன்பாகவே எழாளாக உலாவிக் கொண்டிருக்கிறான்.புராண பாத்திரம் போல.உள்ளூர் தெய்வம் போல .
எனக்கு என்னுடைய தாத்தாவாக மாறுவதிலேயே விருப்பம்.அது வர வர தெளிவாக புரிகிறது.அப்பாவாக மாறுவதில் எனக்கு சுவாரஸ்யம் இல்லை.அவர் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பலருக்கு கலைகளில் விருப்பம் இருக்காது.விருப்பம் இல்லாதது குறையில்லை மிதமிஞ்சிய வெறுப்பிருக்கும்.தி.க.தி.மு.க தலைமுறை அது.அவர்களுக்கு அரசியல் ஆர்வமே பிரதானமாயிருக்கும்.பிறவற்றுக்கு அர்த்தம் விளங்காது.அறத்தின் பொருளும் அவர்களுக்கு விளங்குவதில்லை. பலர் இளவயதில் அப்பாவை கடுமையாக எதிர்த்து பின்னர் அப்பாவாக மாறிக் கொண்டிருப்பார்கள்.தாத்தாவாக மாறுவது என்பதற்கு ஆடைகளை மாற்றிக் கொள்ளுதல் என்கிற சிற்றர்த்தம் இல்லை.
அப்பையா விவசாயி.வாழ்வின் பெரும்பகுதியை விவசாயத்தில் கரைத்தவர்.ஒருபோதும் அவர் சட்டையணிந்ததில்லை.இந்திரா காந்தி நாகர்கோயிலுக்கு வருகை புரிந்த போது எங்களையும் அவர் ஒரு சந்தர்ப்பம் காரணமாக அழைத்து செல்ல வேண்டியிருந்தது.அப்போது அவர் சட்டையணிந்து வந்தார் .மற்றபடி புகைப்படம் எடுப்பதற்காக குடும்ப விஷேட தினங்களில் சட்டையணியச் சொல்வார்கள்.எடுப்பார்கள் எடுத்ததும் கழற்றி வைத்து விடுவார்.அவருக்கு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக சில சட்டைகள் இருந்தன.வேட்டி ,ஒரு துண்டு அதனை அவர் தலைமுண்டு என்று சொல்வார் இவைதாம்.ஒரு நீளமான குடை உண்டு வெளியில் செல்வதற்கு.பின்னால் ஒரு சிறிய கொண்டை அவருக்கு உண்டு.இப்போது பேஷனாக சில பையன்கள் வைத்துக் கொள்கிறார்களே அது போல
என்றேனும் ஒருநாள் இந்த உடுப்புகளை கீழே போட்டு விடுவேன்.வெளியில் அவற்றை கைவிடுவதற்கு முன்பாக உள்ளத்தில் அவற்றைக் கைவிட வேண்டும் .விட்டால் இரண்டிலும் சரிந்து விழுந்து விடும்.