இந்துமதத்தில் மட்டும்தான் பிறப்பு சார்ந்த பிரிவினை உள்ளதா?

Otto Pliny வரைந்த அடிமை வணிகம் என்னும் ஓவியம். 18 ஆம் நூற்றாண்டு

இந்துமதம் – தொகுப்பு

இந்து மதம் அழியவேண்டும் என தொண்டை புடைக்கக் கூவுகிறவர்களிடம் ‘எதற்காக இந்துமதம் அழியவேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டால் ‘இந்துமதம்தான் வர்ணாசிரமத்தை உருவாக்கியது. வர்ணாசிரமம்தான் இந்துமதம். வர்ணாசிரமம் அழிய இந்துமதம் அழியவேண்டும்’ என்பார்கள்.

இது உண்மையில் ஓர் அழிப்பு உத்தி மட்டுமே. இவர்களுக்கு வர்ணாசிரம முறை அல்லது சாதி அழியவேண்டுமென்ற உண்மை நோக்கம் இல்லை. இருந்திருந்தால் வர்ணஅடுக்கு , சாதிமுறை எப்படி உருவாகியது, எப்படி நீடிக்கிறது என்றுதான் ஆராய்வார்கள். ஆனால் இவர்கள் அதை தவறாக இந்துமதம் மேல் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். எந்த வரலாற்றையும் கருத்தில்கொள்வதில்லை.

வர்ணாசிரம முறை என்பது பிறப்பு அடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பது. சாதிமுறை என்பதும் மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் மேல்கீழாக அடுக்குவதுதான். இந்துமத நம்பிக்கைகளின் ஒரு பகுதியாக அது நீண்டகாலமாக இருந்துவந்தது என்பது உண்மை. இன்றும் ஓர் அளவு வரை நீடிக்கிறது என்பதும் உண்மை. இந்துமத அறிஞர்களில் ஒரு சாரார் சாதிமுறை, வர்ணாசிரமம் ஆகியவற்றுக்கு ஆதரவாளர்கள் என்பதையும் மறுக்கமுடியாது.

ஆனால் முதல் கேள்வி இதுதான். இந்தவகையான பிறப்புசார்ந்த பிரிவினைகளும் ,மேல்கீழ் அடுக்கும் உலகில் வேறெங்கும் இல்லையா? இந்துமதத்தால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முறையா இது?

கொஞ்சம் வரலாறு தெரிந்தால், கொஞ்சம் மானுடவியலும் சமூகவியலும் தெரிந்தால், ஒருவர் ஆம் என்று சொல்லமாட்டார். உலகம் முழுக்க, எல்லா நாகரீகங்களிலும், எல்லா நாடுகளிலும், பிறப்பு சார்ந்த பிரிவினையும், மேல்கீழ் அடுக்கும் ஏதோ ஒரு வகையில் இருந்தது என்பதுதான் உண்மை. ஏதோ ஒருவகையில் நீடிக்கிறது என்பதும் உண்மை. மனிதகுலம் கொஞ்சம் கொஞ்சமாக அதை விட்டு விலகிக்கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே.

ஐரோப்பாவில் முந்நூறாண்டுகளுக்கு முன்புவரை நாம் இங்கே சொல்லும் வர்ணாசிரம முறைக்குச் சமானமான பிறப்பு சார்ந்த மேல்கீழ் அடுக்கு இருந்தது. மேலே பிரபுக்கள் இருந்தனர். நடுவில் விவசாயிகளும் கைவினைஞர்களும் இருந்தனர். கீழ்அடுக்கில் நாவிதர்கள் போன்றவர்கள் இருந்தனர். அதற்கும் கீழே அடிமைகள் இருந்தனர். தீண்டாமையே கூட இருந்தது. தீண்டாமையை வலியுறுத்திய  மதஞானிகள் இருந்தனர். அவர்கள் இன்றுகூட ஞானிகளாக வழிபடப்படுகிறார்கள்.

ஐரோப்பாவுக்குச் செல்பவர்களுக்கு தெரியும், அங்கே இன்றைக்கும்கூட இனப்பாகுபாடு உண்டு. இனவெறியும்கூட உண்டு. பிறப்பால் தாங்கள் மேலானவர்கள் என்று எண்ணாத வெள்ளைக்காரர்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். அரேபியாவும் துருக்கியுமெல்லாம் இன்னும் தீவிரமான இனவெறி கொண்டவை. இவர்களின் இனவெறியெல்லாம் சீனர்களின் இனவெறிக்கு முன் நிற்கவே முடியாது.

ஐரோப்பா தங்களில் ஒரு சாராரை அடிமைகளாக வைத்திருந்ததை எப்படி கைவிட்டது? வரலாற்றை ஆராய்ந்தால் தெரிவது இதுவே. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வெளியே இருந்து அடிமைகளை பிடித்துக் கொண்டுவரத் தொடங்கின. தங்களுக்குள் அடிமை முறையை இல்லாமலாக்கின. அதையேதான் அரேபியாவும் துருக்கியும் செய்தன. அவர்கள் அடிமைமுறையை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நடைமுறையில் வைத்திருந்தனர்.

கறுப்பின மக்களுக்கு ஆத்மா கிடையாது என்றும், ஆகவே அவர்களை அடிமைகளாக பிடித்து விற்கலாம், தேவையென்றால் கொல்லவும் செய்யலாம் என்றும் வெள்ளையர் நம்பினர். அரேபியா, துருக்கி முதலிய மத்திய ஆசிய நாடுகளில் மிகப்பெரிய அடிமைச்சந்தைகள் நூறாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்கூட இருந்தன. இன்றுகூட மதவாத ஆட்சிநிலவும் இடங்களில் அடிமைவணிகம் மதத்தாலேயே நடத்தப்படுகிறது.

இந்த நாடுகளில் எல்லாம் இருந்த மதங்கள் பிறப்பு சார்ந்த பிரிவினையை ஏற்றுக்கொண்டவைதான். அவற்றுக்கு மதம் சார்ந்த விளக்கங்களை அம்மதங்கள் அளித்தன. கருத்தியல் ரீதியாக அடிமை முறையை நிலைநிறுத்தின. மதநிறுவனங்களே சொந்தமாக ஆயிரக்கணக்கான அடிமைகளை வைத்திருந்தன. அடிமைமுறையின் மேல் வரி விதித்து பங்கு வாங்கின.

ஆகவே பிறப்பு சார்ந்த பாகுபாடுகளை உருவாக்கியவை அந்த மதங்களே என்று சொல்லிவிட முடியுமா என்ன? பிறப்பு சார்ந்த பிரிவினையின் பொறுப்பை அந்த மதங்களின்மேல் சுமத்தி விடலாமா?  அப்படி நான் சொல்லவே மாட்டேன். ஏனென்றால் நான் வரலாறு படித்தவன்.

ஏன் பிறப்பு சார்ந்த பாகுபாடு இருக்கிறது? ஏன் மேல்கீழ் அடுக்குமுறை உருவாகியது? ஏனென்றால் அத்தனை பழங்குடிச் சமூகங்களும் அப்படித்தான் இயங்குகின்றன. அண்மைக்கால ஆய்வுகள் காட்டுவது இன்னும் ஆச்சரியமானது. சிம்பன்ஸி குரங்குகளின் சமூகங்ளும்கூட அப்படித்தான் இயங்குகின்றன. அவற்றில்கூட அடிமைகள் போன்ற குரங்குகள் உள்ளன. ஆண்டான் குரங்குகள் உள்ளன.

மனித இனம் எப்படி வளர்ந்தது? மனிதர்கள் சிறுசிறு குழுக்களாக திரண்டார்கள். ஒரு குழு இன்னொரு குழுவுடன் மூர்க்கமாக போராடிக்கொண்டே இருந்தது. நியாண்டர்தால் குரங்குமனிதர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் ஒன்று சொல்கிறார்கள். மூளைத்திறன் மிக்க நியாண்டர்தால் குரங்குமனிதர்கள் ஏராளமான மற்றவகை குரங்குமனிதக் கூட்டங்களை கொன்றே அழித்துவிட்டனர். அப்படி போரிட்டு வென்று மிஞ்சியவர்களிடம் இருந்தே நாம் உருவாகி வந்திருக்கிறோம்.

வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் வலிமையான  இனம் மற்ற இனங்களை அழித்தது. விவசாயம் செய்ய ஆரம்பித்த பின்னர் ஆதிமனிதர்கள் மற்ற இனங்களை கொல்வதைவிட தோற்கடித்து அடிமைகளாக ஆக்கிக் கொள்வது நல்லது என்று கண்டுபிடித்தனர். அடிமைகளை உழைக்க வைத்தால் விவசாயம் லாபம் தரும் என்று புரிந்துகொண்டார்கள்.

அடிமைமுறை பாவமா, தப்பா என்பது வேறு கேள்வி. ஆனால் அடிமைமுறை வழியாகத்தான் மனிதகுலம் வளர்ந்தது என்பது வரலாறு. அப்படி அடிமைமுறை வழியாகச் செல்வம் ஈட்டிய சமூகங்கள்தான் பெரிய அரசாங்கங்கள் ஆயின. அங்கேதான் நாகரீகம் வளர்ந்தது. ரோமாபுரி நாகரீகம், பாரசீக நாகரீகம், சீனநாகரீகம், எகிப்து நாகரீகம் எல்லாமே அடிமைகளை வேலைவாங்கி உருவானவைதான். மாபெரும் ஞானியான பிளேட்டோ அடிமைமுறையை ஆதரித்தவர் என்பதை புரிந்துகொள்ளாமல் மனிதசிந்தனையை புரிந்துகொள்ள முடியாது.

பல அரசியல்வாதிகள் சொல்வதுபோல ஒன்றாக இருந்த மனித இனம் பிறப்பு அடிப்படையில் பலவாகப் பிரிக்கப்படவில்லை. எந்தச் சமூகமும் ஒன்றாக இருந்து பலவாக பிரிக்கப்படவில்லை. அப்படி எவராலும் பிரிக்க முடியாது. வரலாற்றில் தெரிவது இதுதான். பலவாறாக பிரிந்து கிடந்த சிறிய மனிதக்கூட்டங்கள் தொடர்ச்சியாக ஒன்றாகிக் கொண்டே இருந்தன. அப்படி ஒன்றாகும்போது வலிமை கொண்ட இனங்கள் தங்களை மேலே நிறுத்திக் கொண்டன. வலிமை குறைந்த சமூகங்கள் தோற்கடிக்கப்பட்டன. அவை சமூக அடுக்கில் கீழே நிறுத்தப்பட்டன. அப்படித்தான் பிறப்பு அடிப்படையிலான பிரிவினைகளும், மேல்கீழ் அடுக்கும் உலகம் முழுக்க உருவாயின.

பழங்காலத்தில் வலிமை என்பது போர்வலிமைதான். அதனுடன் அறிவும் இணைந்துகொள்ளும்போது ஆதிக்க இனங்கள் உருவாயின. நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்திலேயே அப்படித்தான். நார்மன்களும் சாக்ஸன்களும் ஜெர்மனியில் இருந்து சென்று இங்கிலாந்தை கைப்பற்றி ஆட்சியமைத்தவர்கள். அவர்கள்தான் அங்கே மேல்குடிகள். அங்கே இருந்தவர்கள் தாழ்ந்தவர்கள். இப்போதும் அப்படித்தான். அந்த வரலாற்றையே அவர்கள் உலகம் முழுக்க அப்படியே எழுதிவைத்தனர்.

எந்தச் சமூகத்தினாலும் அங்கே  அதிகார அடுக்கு (Hierarchy) உருவான பின்னர்தான் ஆதிக்கம் (Hegimony) உருவாகும். ஆதிக்கமே குடித்தலைவர் என்னும் நிலையை உருவாக்கும். அதுவே அரசனாக ஆகும். அதுவே அரசு ஆக மாறும். அரசாங்கம் உருவான பின்னர்தான் சமூகம் வளரத் தொடங்கும். எந்த ஆதிக்கத்திலும் சிலர் கீழ்மட்டத்தில் இருந்தே தீர்வார்கள். சாதி ரீதியாக கீழ்மட்டத்தினர் இல்லாமலாகும் சமூகங்களில் பொருளியல் ரீதியாகக் கீழ்மட்டத்தினர் உருவாகிறார்கள்.

உதாரணமாக இன்றைய ஐரோப்பா மானுடநேயக் கொள்கை கொண்டது. மானுட சமத்துவம் அங்கே கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாகரீகம் வாழவேண்டுமென்றால் அங்கே வலிமையான பொருளியல் அமைப்பு தேவை. அந்த அமைப்புக்கு அடிமைகளும் தேவை. இன்று பழையபாணி அடிமைகள் இல்லை. அது அங்கே பிழையானதாக உணரப்பட்டுள்ளது. ஆகவே புதிய பாணி அடிமைமுறை உள்ளது.

ஐரோப்பா ஏராளமான அகதிகளை உள்ளே அனுமதிப்பது அங்கே ஒரு நவீன அடிமைமுறையை உருவாக்கவே. மிகக் குறைந்த ஊதியத்துக்கு மிகக் கீழ்நிலை வேலைகளைச் செய்து, மிக மோசமான நிலையில் வாழும் பல லட்சம் அகதிகள்தான் ஐரோப்பாவின் இன்றைய அடிமைகள். அவர்கள் இல்லாவிட்டால் ஐரோப்பா அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும்.

இன்னொரு வகை அடிமைகள் ஆப்ரிக்கா முதல் பிலிப்பைன்ஸ் வரை மூன்றாமுலக நாடுகளில் வாழும் ஒப்பந்த ஊழியர்கள். அவர்கள் மிகக்குறைந்த ஊதியத்துக்கு ஐரோப்பாவுக்காக மறைமுகமாக வேலை செய்கிறார்கள். மிக மோசமான நிலையில் வாழ்கிறார்கள். அவர்கள் உருவாக்கும் லாபத்தால்தான் ஐரோப்பா தங்கள் குடிமக்களுக்கு இலவசக்கல்வி, இலவச மருத்துவம், உதவித்தொகைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இன்றுள்ள இவ்விரு சாராரையும் பொருளாதார அடிமைகள் எனலாம்.

இந்த அடிமைமுறையின் பொறுப்பை எந்த மதம் மீது சுமத்துவது? நேற்று கறுப்பின மக்களை பிடித்து அடிமையாக்கியதும், இன்று பொருளியல் அடிமைகளை உருவாக்குவதும் கிறிஸ்தவமதம் என்று சொல்லிவிடலாமா? அரேபியாவில் இருந்த, இன்றும் பல பகுதிகளில் நீடிக்கும் அடிமைமுறை இஸ்லாமிய மதம் உருவாக்கியது என்று சொல்லிவிடலாமா?

எந்த மதமும் பிறப்புசார்ந்த பிரிவினைகளை உருவாக்கவில்லை. எந்த மதமும் அதை தன் கொள்கையாக போதனை செய்யவுமில்லை. மதங்களின் நோக்கமே அது அல்ல. பிறப்பு சார்ந்த மேல்கீழ் அடுக்கு என்பது சமூகம் தன் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கிக் கொள்வதுதான். பழங்குடி வாழ்க்கையில் இருந்து வரலாற்றின் போக்கில் மெல்ல மெல்ல அந்த மேல்கீழ் அடுக்குமுறையும் உருவாகி வருகிறது.

அரசாங்கங்களுக்கு அந்த அடுக்குமுறை அவசியமாக இருக்கிறது. ஆகவே அவை மதங்களை அவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.அந்த மேல்கீழடுக்குகளை நியாயப்படுத்தும் கொள்கைகள் அரசாங்கங்களாலும், பொருளாதாரச் சுரண்டல்காரர்களாலும் உருவாக்கப்பட்டு அவை மதக்கொள்கைகளாக ஆக்கப்படுகின்றன. மதநூல்களில் பிறப்பு சார்ந்த பேதங்கள் புகுத்தப்படுகின்றன. மதத்தை அரசாங்கங்கள் பேணி வளர்ப்பதே அதனால்தான்.   இன்று உலகிலுள்ள எந்த மதமும் விதிவிலக்கு அல்ல. இந்துமதமும் அப்படித்தான்.

ஆகவே பிறப்பு சார்ந்த பேதத்தை ஆதரித்தது என்று குற்றம்சாட்டவேண்டும் என்றால் உலகிலுள்ள எல்லா மதங்களையும் குற்றம் சாட்டவேண்டும். ஒப்புநோக்க இந்து மதம் செய்த கொடுமைகள் மிகமிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். பௌத்தமும் சமணமும் இன்னும் குறைவான அளவிலேயே இந்த பாகுபாட்டுக்கான பொறுப்பை ஏற்கவேண்டியிருக்கும்.

ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மதங்களில் இருந்துதான் மானுட சமத்துவம் சார்ந்த கொள்கைகளும் உருவாகி வந்துள்ளன. மேல்கீழ் பேதங்களை ஒழிக்கும் குரலும் மதஞானிகளிடமிருந்தே வந்துள்ளன. அவைதான் பின்னர் ஜனநாயகவாத சிந்தனையாளர்களால் முன்னெடுக்கப்பட்டன. அங்கிருந்தே இன்றைய எல்லா சமத்துவச் சிந்தனைகளும் தோன்றின. அதாவது ,நீங்கள் எதன்பொருட்டு மதத்தை எதிர்க்கிறீர்களோ அந்த சிந்தனைகளும் மதஞானிகளால் உருவாக்கப்பட்டவையே.

ஆர்வமிருப்பவர்கள் ஒரு சினிமாவை பார்க்கலாம். The Mission என்னும் ஆங்கிலப்படம். தென்னமேரிக்கப் பழங்குடிகளிடம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப இரண்டு பாதிரியார்கள் செல்கிறார்கள். அவர்களை மதமாற்றம் செய்கிறார்கள். ஆனால் அந்த மக்களை அடிமைகளாகப் பிடித்து விற்கும் அடிமை வியாபாரிகள் அவர்களை கிறிஸ்தவர்கள் என ஏற்கவில்லை. ஏனென்றால் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றால் அவர்களை விற்க மத அனுமதி கிடையாது.

அந்த பாதிரியார்கள் மதம் மாறிய பழங்குடி மக்களை போப்பாண்டவரிடமே அழைத்துச்சென்று பைபிள் படிக்கவைத்து காட்டுகிறார்கள். ஆனால் அடிமை வியாபாரத்தில் லாபம் பார்க்கும் ஸ்பெயின் அரசின் வற்புறுத்தல் காரணமாக போப்பாண்டவர் அந்தப் பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என மறுக்கிறார். அந்த மக்கள் விலங்குகள், ஆகவே ஆத்மா இல்லாதவர்கள், அவர்களால் கடவுளை வணங்க முடியாது என அறிவிக்கிறார். ஆகவே அவர்களை அடிமைகளாக்குவதும் விற்பதும் போப்பாண்டவரால் அனுமதிக்கப்படுகிறது. அந்த பாதிரியார்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடிமை வியாபாரிகளின் ஆட்கள் கொன்று குவித்து அம்மக்களை அடிமையாகப் பிடிக்கிறார்கள்.

இந்த இரண்டு தரப்பில் எதை நீங்கள் மதத்தின் தரப்பு என்பீர்கள்? நான் கிறிஸ்த வமதம் என்பது அந்த இரண்டு தியாகிகளான பாதிரிமார்கள் என்றுதான் சொல்வேன். அதைத்தான் இந்துமதத்தைப் பற்றியும் சொல்வேன். பல்லாயிரம் ஞானிகள் இந்து மரபில் உள்ளனர்.  மதம் என்பது அதிலுள்ள ஞானமும் ஞானிகளும்தானே ஒழிய அதை பயன்படுத்திக்கொண்டவர்களின் அதிகாரம் அல்ல.

இந்துமதம் – தொகுப்பு

முந்தைய கட்டுரைஜான் பால்மர்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசுக்கூடுகை 61