முகில்கள்- கடிதம்

அந்த முகில் இந்த முகில் வாங்க

அந்த முகில் இந்த முகில் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ,

ஒரு துயரமான சம்பவம். அல்லது கிளர்ச்சிதரக்கூடிய சம்பவம். எனக்கு உங்கள் நூல்களில் மிகப்பிடித்தமானது அந்த முகில் இந்த முகில். அற்புதமான படைப்பு. அது என் வாழ்க்கைக்கு மிகச் சம்பந்தமுள்ளது. அதேபோல ஒரு காதலும் பிரிவும் எனக்கும் உண்டு. விற்பனையாளன் வேலை எனக்கு. ஆந்திராவில் 2010 வாக்கிலே வேலைசெய்தபோது உண்டான ஒரு காதல். அதாவது அந்தக் காதல் இந்நாவல் போலவே சேரவே முடியாத காதல். அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகியிருந்தது. அவளைவிட 22 வயது மூத்தவருடன். காசுபணம் உள்ளவர். கொடுமையான ஆளும்கூட. ரைஸ்மில் ஓனர். நாங்கள் ஓர் இரவுக்குப்பிறகு பிரிந்துவிட்டோம். அதன்பிறகு நான் வேறு திருமணம் செய்துகொண்டேன்.

அந்தமுகில் இந்த முகில் வாசித்தபின் பெஜவாடா போகும்போது பழைய சினிமா தியேட்டரிலே படம்பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். அதேபோல சென்ற மே மாதம் பெஜவாடாவில் ஒரு பழைய தியேட்டரில் பழைய நாகார்ஜுனா படம் ஒன்று பார்க்கப்போனேன். மாட்டினி ஷோ. அங்கே கதையில் வருவதுபோலவே அவளைப் பார்த்தேன். விதவை ஆகியிருந்தாள். ஒரு மகன் இருக்கிறான். ரைஸ்மில்லை அவளுடைய சகோதரன் பார்த்துக்கொள்கிறான். இருவரும் சந்தித்தோம். ஆனால் பேசிக்கொள்ள ஒன்றுமே இல்லை. கொஞ்சம் ஏமாற்றமாகவும் சலிப்பாகவும் இருந்தது. அவ்வளவுதான்.

ஆனால் அதன்பிறகு நாவலை நினைத்துக்கொண்டபோது ஏக்கமாக இருந்தது. அழுகை வருவதுபோலிருந்தது. உங்களுக்கு எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டேன். யோசிக்கும்போது ஒரு futility feel வருகிறது. அதுதான் அந்நாவலின் அனுபவமா என்ற சந்தேகம் வருகிறது

அன்புடன்

கே

அந்த முகில் இந்த முகில்

முகில்கள்… கடிதம்

இரு முகில்களின் கதை -கடிதம்

இரு முகில்களின் கதை, கடிதம்

முந்தைய கட்டுரைஅமெரிக்கா பயணம்
அடுத்த கட்டுரைதியானமுகாம், கடிதம்