ஜனநாயகத்தில் செங்கோல்
அன்புள்ள ஜெமோ
செங்கோல் பற்றி ஆக்ரோஷமாக எழுதியிருந்தீர்கள். இரண்டு கேள்விகள். ஒன்று இந்தச் செங்கோல்கொடுக்கும் வைபவம், முடிசூட்டிக்கொள்ளுதல், தேரில் பயணம் செய்தல் எல்லாமே திராவிட இயக்கம் கண்டுபிடித்த உத்திகள். வடக்கே 1980 வரைக்கும்கூட இந்த வழக்கமெல்லாம் இல்லை. இவர்களிடமிருந்தே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். குறிப்பாக மு.க. இதில் இந்தியாவுக்கே முன்னோடி.
இரண்டு, குன்றக்குடி அடிகளார் இதேபோல எல்லா திராவிட இயக்க மேடைகளிலும் தோன்றி ஆசி அளித்துள்ளார்.
உங்கள் கருத்து என்ன?
கிருஷ்ணா
அன்புள்ள கிருஷ்ணா,
திராவிட இயக்கம் கொள்கை சார்ந்த இயக்கம் அல்ல, பரப்புவாத (பாப்புலிஸ்ட்) இயக்கம் என்பது என் கருத்து. அது தன் கொள்கைகளை முன்வைக்காது. மக்களை கவரும்படி கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளும். மக்களைக் கவரும் எதையும் செய்யும்.
திராவிட இயக்கத்தின் மணிமுடி செங்கோல் எல்லாம் அப்படிப்பட்ட மேடைநாடகங்களே ஒழிய அவற்றுக்குமேல் அந்நிகழ்வுக்கு முக்கியத்துவம் கிடையாது. தமிழகத்தின் செல்வாக்கு மிக்க ஒரு மதத்தலைவர் அந்தச் செங்கோலை அளித்திருந்தால்தான் அது மத அதிகாரம். அச்செங்கோல் பூசைக்குரியதாக வைக்கப்பட்டல்தான் அது விமர்சனத்திற்குரியது.
குன்றக்குடி அடிகளார் அரசியல்மேடைக்குச் சென்றதும், அரசு அளித்த விருதுகளைப் பெற்றுக்கொண்டதும் அவருடைய மடத்தின் மாண்புக்கு இழுக்கு. அதை அவரே இறுதிநாட்களில் உணர்ந்து சமூகசேவையுடன் நின்றுவிட்டார். ஆனால் அவர் திராவிட இயக்கத்தின் ஒரு மேடைக்கவற்சி தானே ஒழிய மத அதிகாரத்தை அவ்வியக்கத்துக்கு அளிக்கவில்லை.
ஜெ