கடவுளும் ஆட்சியும்

ஜனநாயகத்தில் செங்கோல்

அன்புள்ள ஆசிரியர்,

உங்கள் செங்கோல் பற்றிய பதிவை படித்தேன். ஆதிணங்கள் அதை நேருவுக்கு பரிசாக தந்தார்களா அல்லது ஆட்ச்சி மாற்றத்திற்காக தந்தார்களா அதற்கு வரலாற்று நிருபனங்கள் உள்ளனவா என்ற உங்களுடைய ஐயங்கள் நியாயமானவையாக உள்ளது. அதை நிருபிக்க வேண்டிய கடமை அச்செய்தியை கூறுபவர்களுக்கு உண்டு. அதே சமயம் செங்கோல் நேர்மையின் குறியீடாக இறைவனின் பிரதிநிதியாக ஆட்சி செய்வது என்பது தவறானதாக தோன்றவில்லை.இப்பிரபஞ்சத்தை இறைவன் ஆட்சி செய்கிறான் .அவருடைய பிரதிநிதிகள் இந்த பூமியை ஆட்சிசெய்கின்றனர்.அது ஜனநாயக முறையானாலும் சரி. மன்னர் ஆட்சி ஆனாலும் சரி.

உங்களுடைய மற்றோர் கருத்து கருத்து இந்து என்ற ஒன்றினைக்கப்பட்ட சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. சைவத்தின் நந்தி சின்னம் செங்கோலில் இருப்பதினால் பிற இந்து தர்மத்தினருக்கான அங்கீகாரம் பற்றி கேள்வி எழுப்பி உள்ளீர்கள். எங்களுக்கு நந்தி, கருடன், சிம்மம் அனைத்து சின்னங்களும் இந்துவின் சின்னங்கள்தான். ராமர் சிவனை வழிபட்டுள்ளார் இந்த வைனவனுக்கு நந்தி சின்னம் மீது எந்த ஆட்சேபனையும் இல்லை. ஷன்மக ஸ்தாபகர் அத்வைதி ஆதிசங்கரர் வழி பின்பற்றும் தங்களுக்கு தங்கள் இடத்தை பற்றிய கவலை வினோதமாக உள்ளது. என் சிற்றரிவுக்கு எட்டியதை தங்கள் முன் வைத்துள்ளேன். உங்கள் விளக்கத்தையும் எதிர்நோக்குகிறேன் .

நன்றி

தி.சதிஷ்குமார்

திருவள்ளூர்.

அன்புள்ள சதீஷ்குமார்,

நான் என்னை தளராத நம்பிக்கை கொண்டவன் என வரையறுத்து வைத்திருக்கிறேன். ஆகவே மீண்டும் என் தரப்பைச் சொல்லிவிடுகிறேன். இதன்பின் அக்கட்டுரையை நீங்கள் ஒருமுறை கூர்ந்து வாசிக்கலாம்.

நான் அக்கட்டுரையில் சொல்லியிருக்கும் மையக்கருத்தே ‘நாடுகளை தெய்வத்தின் பிரதிநிதிகள் ஆள்வதில்லை. நம்மைப்போன்ற ஒருவர்தான் ஆட்சிசெய்கிறார். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை’ என்றுதான்.

ஆட்சி செய்பவர்கள் தெய்த்தின் பிரதிநிதிகள் என்று நம்புவதுதான் பழைய மன்னராட்சிக் காலத்தின் இயல்பு. மன்னராட்சிக் காலத்தில் மிகச்சில மன்னர்களே மக்களின் நலம் நாடும் ஆட்சி செய்துள்ளனர். மற்றபடி வரி கொள்வதும், நாடுபிடிக்க போர்கள் செய்வதும்தான் மன்னர்களின் இயல்பாக இருந்துள்ளது. உலக வரலாற்றிலேயே போர்களும் அழிவுகளுமில்லாத மன்னராட்சிக் காலம் என்பது ஒப்புநோக்க மிகக்குறைவுதான்.

ஜனநாயகம் வந்தபிறகுதான் ஆட்சிசெய்பவர்கள் மக்களின் நலம் நாடவேண்டும் என்னும் கட்டாயம் உருவாகியது. இன்று நீங்கள் அனுபவிக்கும் உரிமைகள் எல்லாமே ஜனநாயகத்தால் அளிக்கப்பட்டவை. நீங்கள் ஆட்சியாளர்களை தட்டிக்கேட்கிறீர்கள், உரிமை கோருகிறீர்கள், அவர்கள் மேல் அதிருப்தி இருந்தால் மாற்றிவிடுகிறீர்கள். இதெல்லாமே ஜனநாயகம் வந்தபிறகுதான். ஜனநாயகமில்லா நாடுகளில் இந்த எந்த உரிமையுமில்லை.

செங்கோல் போன்றவை ஆட்சி செய்பவர்களை தெய்வத்தின் பிரதிநிதிகளாக காட்டி விடுகின்றன. அதன்பின் அவர்களிடம் நாம் உரிமைகளைக் கோரமுடியாது. அவர்களை வணங்கியும் மன்றாடியும்தான் நாம் வாழவேண்டும். அது அடைந்த ஜனநாயகத்தை இழப்பது. அதைத்தான் சொன்னேன். உங்கள் கடிதமும் அதையே காட்டுகிறது.

ஆட்சி செய்பவர்கள் அனைவரும் தெய்வத்தின் பிரதிநிதிகள் அல்ல. வரலாற்றுக்காலம் முழுக்கவே ஏராளமான கொடுங்கோலர்கள் இருந்துள்ளனர். இன்றைய ஜனநாயகத்திலும் கொடிய ஆட்சியாளர்கள் உள்ளனர். ஆனால் மன்னராட்சியிலோ, சர்வாதிகாரிகளின் ஆட்சிகளிலோ அவர்களை அகற்ற மக்களால் இயலாது. ஜனநாயகத்தில் அந்த அதிகாரம் மக்களுக்கு உள்ளது.

உங்களுக்கு கொஞ்சம் வரலாற்றை வாசிக்க விருப்பமிருந்தால் நீங்களே அறியலாம். ஜனநாயகத்திலுள்ள எந்த கேடுகெட்ட அரசியல்வாதியும் கொடுங்கோல் மன்னர்களை விட, சர்வாதிகாரிகளைவிட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு மேலானவர்கள்தான். ஆட்சியதிகாரம் போய்விடும் என்ற பயம் அவர்களை கட்டுப்படுத்தும். செங்கோல் முதலிய அடையாளங்கள் வழியாக ஆட்சியாளர்களை கடவுளுடன் தொடர்புபடுத்தி மக்களுக்கிருக்கும் அந்த அதிகாரத்தை மக்கள் இழந்துவிடக்கூடாது என்றே நான் சொல்கிறேன்.

செங்கோல் நேர்மையின் குறியீடு அல்ல. அது அரசனுக்குரிய அதிகாரத்தின் குறியீடு. மதம் அரசனுக்கு அளிக்கும் தெய்வீக உரிமையின் குறியீடு. நாம் அந்த அடையாளங்களை எல்லாம் உதறிவிட்டுத்தான் ஜனநாயகத்தை அடைந்துள்ளோம். மணிமுடி, சிம்மாசனம், வெண்கொற்றக்குடை, உடைவாள் ஏதும் இப்போது இல்லை. அவை ஓர் ஆட்சியாளனை நம்மைவிட மேலானவனாக காட்டுகின்றன. ஜனநாயகத்தில் நமக்குத்தேவை நம்மைப்போல இருக்கும் ஓர் ஆட்சியாளர்.

உலகத்தின்மேல் தெய்வத்தின் ஆட்சி உள்ளது என நம்பும் ஆத்திகர் நீங்கள். ஆனால் ஒன்று புரிந்துகொள்ளுங்கள். கடவுளின் அந்த ஆட்சியானது சில மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிகாரம் அளித்து மற்றவர்கள் அவர்களுக்குக் கட்டுப்படவேண்டும் என ஆணையிடுவதன் வழியாக நடைபெறவில்லை. இங்கே பிரபஞ்சத்தின் சில நெறிகள் உள்ளன. இயற்கையின் சில நெறிகள் உள்ளன. அவற்றின் வழியாகவே பூமியின்மேல் அந்த இறையாட்சி நடைபெறுகிறது. எந்த மனிதரும் தெய்வத்தின் பிரதிநிதி அல்ல. எந்த மனிதரும் தெய்வத்தின் நியதிகளுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கொண்டவரும் அல்ல. அந்த தெய்வ நியதிகளின் முன் எல்லா உயிரும் ஒன்றே. இதை உணர்பவரே ஆத்திகர்.

இந்துக்கள் அனைவரும் ஒன்றே என்று நானும் நினைக்கிறேன். அதாவது அவர்கள் ஒரே பண்பாட்டுப் பின்னணி கொண்டவர்கள். அதை பிளக்க முயல்பவர்களுக்கு எதிராக மிகக்கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறேன் – அறிவுச்சூழலில் அவ்வாறு எழும் ஒரே குரல் என்னுடையதே. அதற்காக எல்லா வசைகளும் எனக்கு வருகின்றன. அன்றெல்லாம் எந்த துணைக்குரலும் எழுவதில்லை. ஆனால் இந்து மதம் என்பது ஒரே மையம் கொண்ட, ஒரே நம்பிக்கை கொண்ட , ஒற்றைப்பேரமைப்பு அல்ல. அதையும் சொல்லி வருகிறேன். இந்தும்தம் பல மரபுகளின் பொதுக்களம். அவர்களின் மதநம்பிக்கைகளும் வழிபாட்டுமுறைகளும் வேறுவேறு. அவை ஒருபோதும் ஒன்றாவதில்லை. அப்படி ஒன்றாக்கினால் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் அதை எதிர்ப்பார்கள். ஏனேன்றால் அந்த வேறுபாடு அழிந்தால் இந்து மதம் அழியும்.

இந்து மரபுக்குள் பலவகையான இறைவழிபாடுகள் உள்ளன. வெவ்வேறு தத்துவப்பார்வைகள் உள்ளன. அவற்றுக்கிடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டே உள்ளன. இந்த வேறுபாடுகள்தான் இந்து மதத்தின் சிறப்பு. ஏனென்றால் உண்மை என்பது ஒரே பார்வையால், ஒரே வழியால் அடையப்படக் கூடியது அல்ல என்று இந்துமதம் நம்புகிறது. ஆகவேதான் சைவம் வைணவம் என வேறுவேறு வழிகள். அந்த வழிகளுக்குள்ளேயே வெவ்வேறு உள்வழிகள். அவரவர் இயல்புக்கும் நிலைக்கும் ஏற்ப உகந்ததை தெரிவுசெய்யலாம்.

இந்த வேறுபாடுகளையும், இவற்றுக்குள் நிகழும் விவாதங்களையும் அழித்துவிட்டால் இந்துமதம் என்பது ஒற்றைபார்வை கொண்ட ஓர் அமைப்பாக ஆகிவிடும். ஒரு லிமிட்டட் கம்பெனி போல ஆகிவிடும். இந்துமதத்திற்கு அப்படி ஒரு மையமோ, அமைப்போ இதுவரை இருந்ததில்லை. ஏனென்றால் அது ஒரு ஞானமரபு. இயற்பியல் என்று சொல்கிறோமே அதுபோல ஓர் அறிவுத்துறை. அதற்குள் பல துணைப்பிரிவுகளும் பல கொள்கைகளும் இருக்கும். அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டேதான் வளரும்.

நீங்கள் பேசுவது அரசியல். உங்கள் அரசியலுக்காக எல்லாவற்றையும் ஒன்றே என்கிறீர்கள். ஒன்றுதான், ஆனால் ஒன்றுக்குள் பல உள்ளன. ஆதிசங்கரர் ஆறு மதங்களையும் ஒரே தத்துவக்கொள்கைக்குள் கொண்டுவந்தார். ஆனால் அவை ஒன்றே என ஆக்கவில்லை. இன்றும் ஆகவில்லை. ஆகப்போவதுமில்லை. அத்வைதிகளிலேயே எந்த ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யாதவர்கள் உண்டு. இந்த வேறுபாட்டை முன்வைப்பது பிளவுபடுத்துவது அல்ல.

ஒரு ஃபார்மஸிக்குள் பல மருந்துகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோய்க்குரியவை. ஒவ்வொரு வகை நோயாளிகளுக்குரியவை. அனைத்தும் மருந்தே. நீங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி ‘மருந்து’ என்று பெயர் போட்டு நோயாளிகளுக்கு அளிக்கமுடியாது. நண்பரே, சீனாவில் மாவொ சே துங் அனைவரும் நீலச்சட்டை போடவேண்டுமென ஆணையிட்டார். நீங்கள் செய்வதும் அதைத்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைசார்ல்ஸ் மீட்
அடுத்த கட்டுரைதுளிகளில் கனவு