அரசியல், கடிதங்கள்

வாட்ஸப் வரலாறு

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

ஜனநாயகத்தில் செங்கோல்

அன்புள்ள ஜெ,

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

சாவர்க்கர் , செங்கோல் இரு கட்டுரைகளையும் வாசித்தேன். சமகால அரசியலில் கருத்துச் சொல்வதில்லை என்னும் உங்கள் பிடிவாதம் நல்லது. அதை அவ்வப்போது இப்படி தளர்த்திக்கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் புரியவைக்க விரும்பும் நுட்பமான சிலவற்றைச் சிதைத்து இல்லாமலாக்கிவிடும் தன்மை இவற்றுக்கு உண்டு. அப்புறம் உங்கள் விருப்பம்.

எஸ்.வி.ராஜாராம்

*

அன்புள்ள ஜெ

சவார்க்கர், செங்கோல் கட்டுரைகளை வாசித்தேன். இக்கட்டுரைகளில் நீங்கள் சமகால அரசியல் சிக்கல்களில் ஒரு தரப்பைச் சொல்லவில்லை. அதற்காக எழுதவில்லை. ஆனால் அவற்றை வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் வாசிக்கிறார்கள் அப்படித்தான் எதிர்வினையாற்றுகிறார்கள். ‘வாட்டெபௌட்டரி’கள்தான் இப்போதைக்கு அரசியல்விவாதங்களில் முக்கியமான தர்க்கமுறை. அப்போது எங்கே போனாய், அதைப்பற்றி ஏன் வாய் திறக்கவில்லை இது ரெண்டையும்தான் கேட்பார்கள். அதோடு, முத்திரை குத்துவார்கள். ஆனால் இப்படி ஒரு இஷ்யூ பேஸ்ட் விமர்சனத்தில்தான் சில அடிப்படைகளை நோக்கி கவனத்தையும் ஈர்க்கமுடியும்.

நவீன அரசியலில் வன்முறை என்பது (புரட்சி என்பது) காலாவதியான கருத்து, அது காந்தியால் முடித்துவைக்கப்பட்ட ஒன்று, ஆகவே வீரம் எல்லாம் அபத்தமான குணாதிசயங்கள் என்கிறீர்கள். வீரர்களைக் கொண்டாடுவது ஜனநாயகத்துக்கே எதிரானது என்கிறீர்கள். அந்த கருத்தின் நீட்சிதான் செங்கோல் பற்றிய கருத்தும். அந்த வகையான டெம்ப்ளேட்களே மனிதர்களை கேள்விக்கு அப்பாற்பட்டவர்களாக ஆக்கிவிடும் என்றுதான் இக்கட்டுரைகள் சொல்கின்றன.

அதோடு, நவீனத்துவம் அல்லது மாடர்னிஸம்தான் அடிப்படைவாதம் அல்லது பண்டமெண்டலிசத்திற்கான அடிப்படையே ஒழிய பழமைவாதம் அல்ல என்றும் பழமைவாதம் முழுக்கமுழுக்க வேறு ஃபினாமினன் என்றும் சொல்கிறீர்கள். இவையெல்லாம் விவாதிக்கவேண்டியவை. ஆனால் இந்த அரசியல் சூழலில் அவற்றை விவாதிக்க மாட்டார்கள். பெரிய இக்கட்டுதான் இது. கட்டுரைகளுக்கு நன்றி

ராஜேஷ் மகாதேவன்

முந்தைய கட்டுரைசதீஷ்குமார் சீனிவாசன்- 13 கவிதைகள்
அடுத்த கட்டுரைந. பாலபாஸ்கரன்