கனிமரம் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

கல்தூணும் கனிமரமும் என்ற உங்கள் உரையை நான் அண்மையில் கேட்டேன். நான் ஐம்பதாண்டுகளாக உரைகளை கேட்டு வருபவன். என் வயது 84 . என்னல் இப்போது படிக்கமுடியாது. ஆகவே உரைகளைக் கேட்கிறேன். கீரன், கிரிதாரிப்பிரசாத் போன்ற பலருடைய உரைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த உரையின் அமைப்பும் வீச்சும் எனக்கு புதியவை.

மற்ற உரைகளெல்லாம் கணீரென்ற குரலில் இருக்கும். தெள்ளத்தெளிவான உச்சரிப்பு இருக்கும். பாடல்களை பலமுறை சொல்வார்கள். சொல்லவந்த கருத்தை தெளிவாக மீண்டும் சொல்வார்கள். ஆகவே ஓர் ஒழுக்கு இருந்துகொண்டிருக்கும். அதைக்கேட்டு பழகியவர்களுக்கு உங்கள் உரைகளைக் கேட்பது கடினம்.

உங்கள் குரல் மழுங்கலாக இருக்கிறது. கடைசிவார்த்தைகளை உச்சரிப்பதே இல்லை. குரல் அவ்வப்போது அப்படியே தாழ்ந்துவிடுகிறது. நல்ல பேச்சாளரின் குரல் கிடையாது. ஆகவே கூர்ந்து கேட்கவேண்டியிருக்கிறது. அதோடு, பல விஷயங்களை தொட்டுத்தொட்டுச் செல்கிறீர்கள். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குத் தாவிச்செல்கிறீர்கள். என் மகன் இந்த வீடியோவை அனுப்பி இது பறக்கும் குருவியை ஃபாலோ செய்வதுபோல கேட்கவேண்டும் என்று சொன்னான்.

ஆனால் கூர்ந்து கேட்கும்போது தெரிகிறது இவ்வளவும் ஒரிஜினலான சிந்தனைகளால்தான் உருவாகிறது சிக்கல் என்று தெரிகிறது. பல இடங்களில் புதிய சிந்தனைகளுக்கு பாய்ந்துவிடுகிறீர்கள். பல வரிகளை ஒருவகையான கவித்துவத்துடன் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உரைகளை கேட்டுத்தெரிந்துகொள்வதற்காக கேட்கக்கூடாது. கூடவே சிந்தனை செய்வதற்காகவே கேட்கவேண்டும்.

கல்தூணும் கனிமரமும் உரை கேட்கும்போது ஆங்காங்கே வந்த வரிகள்தான் சிந்தனையில் அதிர்வை உருவாக்கிக்கொண்டே இருந்தன. ஆனால் இரண்டாமுறை ஒட்டுமொத்தமாகக் கேட்டேன். அதாவது நீங்கள் எங்கே முடிக்கிறீர்களோ அங்கே இருந்தே கேட்டேன். அந்த உரை முழுமையான ஒரு கட்டுக்கோப்புடன் இருப்பது தெரிந்தது.

மதம் பண்பாடு என்பது போன்றவை ஒரு பிராஸஸ் என்கிறீர்கள். அதில் ஒரு பகுதி கல்லாகிக்கொண்டே இருக்கிறது. அந்த கல்வடிவம் அழகான கலை. ஆனால் அதில் உயிரில்லை. அந்த கல்மரத்திற்கு மூலமாக உள்ள கனிமரம் இன்னும் கலையாக ஆகவில்லை. ஆனால் அது உயிருள்ளது. இந்த இடம் வந்தபிறகே உரை புரியா ஆரம்பித்தது.

இந்த உரையிலே சிவலிங்கத்தை முதலில் நிறுவிய ஆதிமனுஷன் பற்றிய வரி புல்லரிக்கச் செய்தது. அதுதான் மரம் முளைக்கும் இடம் இல்லையா? நன்றி, ஜெயமோகன். ஆசீர்வாதங்கள்.

எம்.வி

முந்தைய கட்டுரைகாடு- படிமங்களை புரிந்துகொள்வது…கடிதம்
அடுத்த கட்டுரைபகடையாட்டம், ஒரு கடிதம்