சவார்க்கர், கடிதம்

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

சவார்க்கர் கட்டுரை ஆங்கிலத்தில். மொழியாக்கம் ஐஸ்வர்யா. ஃப்ரண்ட்லைன்

அன்புள்ள ஜெ

அண்மையில் ஃப்ரண்ட் லைன் இதழில் ஐஸ்வரியாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்த உங்கள் சாவார்க்கர் பற்றிய கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியதை கண்டேன். இங்கே கல்கத்தாவில் அனைத்து களங்களிலும் அது பேசப்பட்டது. முக்கியமானவர்கள் பலர் அதற்கு எதிர்வினை ஆற்றியிருந்தனர். சட்டென்று உங்கள் பெயர்பலருக்கும் தெரிந்துவிட்டது.

நான் பலமுறை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளிவரவேண்டும் என்று. ஆனால் இந்த தலைப்புகளில் ஆங்கிலத்திலே ஏராளமாக கட்டுரைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று நீங்கள் எனக்கு பதிலெழுதினீர்கள். ஆனால் அப்படி ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலானவை ஆய்வாளர்கள், பேராசிரியர்களால் எழுதப்படுபவை. இங்கே தமிழில் அவர்கள் எழுதுவதை எவரும் படிப்பதில்லையோ அதைப்போல ஆங்கிலத்திலும் பெரும்பாலும் அவை படிக்கப்படுவதில்லை. அவர்களே ஒருவருக்கொருவர் படித்துக்கொள்ளவேண்டியதுதான்.

ஏனென்றால் எழுத்து ஒரு கலை. ஒரு வக்கீலின் வாதம் போல அல்ல அது. அதில் ஆத்மார்த்தமான ஒரு உணர்ச்சி இருக்கவேண்டும். அந்த உணர்ச்சியைச் சரியாக வெளிப்படுத்துவதற்குத்தான் எழுத்துக்கலையில் பயிற்சி தேவை. ஆனால் அது பயிற்சியால் வருவதுமல்ல. அது ஒரு இயல்பான திறமை.

இங்கே நீண்டகாலமாக ஓ.வி.விஜயன் எழுதிய மலையாள அரசியல்கட்டுரைகளை மலையாளத்திலிருந்து ஒருவர் மொழிபெயர்த்து வெளியிட்டுக்கொண்டிருந்தார். அந்த தலைப்புகளில் நூறு கட்டுரைகள் வந்தபிறகே ஓ வி விஜயனின் கட்டுரை வெளிவரும். ஆனாலும் அவர் கட்டுரைகளே படிக்கப்படும். ஏனென்றால் அவை எழுத்தாளர் எழுதியவை.

ஆங்கிலத்திலே எழுதுபவர்களிலே அருந்ததி ராய், ராமச்சந்திர குகா, சஷிதரூர் எல்லாம் எழுத்தாளர்கள். அவர்களின் குரலுக்குத்தான் வாசகர்கள் உண்டு. நீங்கள் எழுதும் கட்டுரைகள் ஆங்கிலத்தில் நிறைய வெளிவரவேண்டும்.

அ.கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைஇந்துமதம் காட்டுமிராண்டி மதமா?
அடுத்த கட்டுரைதுளிகள், பதிவு