கதாநாயகி வாங்க
அன்புள்ள ஜெ
கதாநாயகி நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். அதை இணையத்தில் நாலைந்து அத்தியாயங்கள் வாசித்துவிட்டு தொடரமுடியாமல் விட்டுவிட்டேன். ஏனென்றால் அந்த நாவலின் கட்டமைப்பு அடுக்கடுக்காக உள்ளே செல்லக்கூடியது. அப்படிப்பட்ட நாவல்களை தொடராக வாசிக்க முடியாது. ஒட்டுமொத்தமாக ஒரே மூச்சில் வாசிக்கவேண்டும். பின்னாலும் முன்னாலும் சென்று வாசிக்கவேண்டும். அதற்கு புத்தகமே சிறந்தது. அச்சுப்புத்தகம் இன்னும் நல்லது,
பெண் உடல் மீதான வன்முறை என்றைக்கும் உள்ளது. அந்த வன்முறையை ரோமாபுரியில் இருந்து தொடங்கி பிரிட்டிஷ் காலம் வழியாக சமகாலம் வரை கொண்டுவந்து நிறுத்தும் நாவல். புனைவு என்பது எத்தனை சாத்தியங்கள் கொண்டது என்று காட்டுகிறது. உத்திச்சோதனை என இதைத்தான் பலரும் எழுத முயல்கிறார்கள். நீங்கள் அலட்சியமாகச் செய்துவிட்டீர்கள். பல நாவல்களில் பல அடுக்குக் கதைகள் வரும். ஆனால் அதற்கு வரலாறுசார்ந்த நோக்கம் இருக்காது. ஆகவே மண்டையுடைக்கும். இந்நாவலில் ‘காலந்தோறும் பெண் என்னவாக இருந்தாள்’ என்ற கருத்துக்காகவே இந்த அடுக்குகள் என வாசகனுக்கு தெரிகிறது.
அதேசமயம் அந்த உள்ளடுக்குகள் எல்லாம் மிகவும் கூர்மையாகவும் செறிவாகவும் இருந்தாலும் மேலே அவற்றை இணைக்கும் கதை மிக எளிய பரபரப்பான பேய்க்கதையாக இருக்கிறது. ஒரு தெளிவான நிலமும் வாழ்க்கையும் உள்ளது. அப்படி முதல் ’டிராயிங் ரூம்’ தெளிவாக இருந்ததனால் அதிலிருந்து பிரிந்துசெல்லும் வாசல்கள் வழியாக எளிமையாக சென்று திரும்ப முடிந்தது. அழகான ஒரு பயணம்.
நான் நாவலை இப்படிப் புரிந்துகொண்டேன். உடல்மேல் பெண்ணுக்கு ஆதிக்கமில்லை. அது பிறர் ஆதீனத்திலுள்ளது. ஆகவே அவள் சூட்சுமமாக ஓர் உடலை உருவாக்கிக்கொண்டு தன் வஞ்சத்தை நிறைவேற்றிக்கொள்கிறாள். அதன் வழியாக அவள் தன்னை நிலைநாட்டுகிறாள். அந்த சூட்சும பெண்ணை சந்திக்கும் ஆற்றல் ஆணுக்கு இல்லை. சரியா?
எஸ்.ஆர். பிரபாகர்