மைத்ரி மின்னூல் வாங்க
மைத்ரி வாங்க
சென்ற ஆண்டு வெளிவந்த அஜிதனின் மைத்ரி இளம்படைப்பாளிகள் எழுதிய நூல்களில் அண்மைக்காலத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஒன்று.
அஜிதன் ஒரு நாவலாசிரியனாக வருவான் என நான் எண்ணியதே இல்லை. என் வீட்டில் இலக்கியவாசிப்பில் அவனே கடைசியிடம். முதலிடம் என்றும் சைதன்யாதான். அவளுடைய இலக்கிய வாசிப்பின் விரிவும், சமரசமில்லாத பார்வையும் என்னை எப்போதுமே திகைக்கச்செய்பவையாகவே இருந்தன்.அஜிதனின் ஆர்வம் பறவையியல், தாவரங்கள் என விரிந்திருந்தது. பின்னர் அப்படியே அதே விசையுடன் சினிமா. பின்னர் மேலையிசை. அதன்பின்னர் மேலைத்தத்துவம்.
மூன்று ஜெர்மானியர்களின் உருவாக்கம் அவன் என நான் கேலியாகச் சொல்வதுண்டு. ஹெர்ஷாக், வாக்னர், ஷோப்பனோவர். அவர்கள்மேல் பித்துகொண்டு ஒவ்வொருநாளும் கிட்டத்தட்ட விழித்திருக்கும் நேரமெல்லாம் அவர்களுடனிருந்தான். அதற்கான வாழ்க்கைச்சூழலை நான் அமைத்திருந்தேன் என்பதில் பெருமையும் உண்டு.
மணி ரத்னத்துடன் திரைப்படங்களில் பணியாற்றினான். இறுதியாக, பொன்னியின் செல்வன் வரை. ஆனால் ஒற்றையிலக்குடன் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறானோ என்னும் ஐயமும் இருந்தது. ஷோப்பனோவரில் இருந்து நாகார்ஜுனருக்கு தாவுவது எல்லாம் எப்படி சாத்தியமென புரியவில்லை.
இந்த வரிசையில் அவனுக்கு இலக்கிய ஆர்வம் பெரும்பாலும் இருக்கவில்லை. தானொரு இலக்கியவாதி ஆவேன் என்னும் நினைப்பும் இருக்கவில்லை. 2020 கொரோனா காலகட்டத்தில்தான் பேரிலக்கியங்களை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தான் என தோன்றுகிறது. 2022ல் அவனுடைய முதல் புனைகதையே மைத்ரிதான்.
இன்று தொடர்ச்சியாக கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறான். அடுத்த சிறிய நாவல் விரைவில் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. மிகச்சிறிய, ஆனால் மிகத்தீவிரமான உணர்ச்சிகரம் கொண்ட நாவல். இன்னொரு சிறுகதை தொகுதியும் வரவுள்ளது.
மைத்ரி சென்ற ஆண்டே இரண்டு அச்சுகள் வெளிவந்தது. இப்போது இரண்டாம் பதிப்பு. அஜிதனுக்கென ஒரு வாசகர்வட்டம் உருவாக ஆரம்பித்துள்ளது. பெரும்பாலும் இளைஞர்கள். கதை என்று பார்த்தால் எளிமையான கட்டமைப்பு கொண்ட மைத்ரி அதன் உணர்வுகள் தத்துவநிலை நோக்கிச் சென்று மீண்டும் திரும்பி வரும் மயக்கநிலையாலேயே கலையாகிறது. மொழி அந்த மயக்கநிலையை நுட்பமாக நிகழ்த்துகிறது. அது எல்லாருக்குமான ஆக்கம் அல்ல. அதற்கு இத்தனை வாசகர்கள் இருப்பது ஆச்சரியம்தான்.