சுஜாதாவின் இறுதிநாட்கள்

லோகிததாஸ்

கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா எழுதிய இந்தக்கட்டுரை எனக்கு அவர் எழுத்துக்களில் மிகப்பிடித்த இரண்டாவது கட்டுரை – முதல் கட்டுரை அவர் தன் அப்பா பற்றி எழுதியது.

ஏ.கே.லோகிததாஸ் என்னிடம் அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருந்தது, இதயநோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ளலாகாது என. ஏனென்றால் அதைப்போல எளிய, இனிய மரணத்தை அளிப்பது வேறில்லை. அதை சரிசெய்துவிட்டு சிறுநீரகமோ பிற உறுப்புகளோ பழுதடைந்து வதைபட்டு இறப்பது பெரும் கொடுமை என்றார்.

அவருக்கு அந்த உறுதி இருந்தது. இதயத்தில் நாலைந்து அடைப்புகள். அவருடைய மருத்துவர் அவரை ‘ஒருமணி நேரம் மருத்துவமனைக்கு வந்துசெல்லுங்கள்’ என அழைத்துக்கொண்டே இருந்தார். என்னையும் அழைத்து அவரிடம் வற்புறுத்தும்படிச் சொன்னார். சிரித்தபடி “ஜெயமோகனுக்கு தெரியாதா, நான் அவருடைய மேஜைமேல் கிடப்பதாக இல்லை” என்றார்.

பீஷ்மர் என ஒரு திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தார். அதை முடித்தபின் வருவதாக டாக்டரிடம் சாக்கு சொல்லிக்கொண்டிருந்தார். அந்த திரைக்கதையை தொடங்கவே இல்லை. காலைநடை சென்று வந்தவர் தன் ஐம்பத்துநான்கு வயதில் அப்படியே மறைந்தார். புகழின் உச்சியில், இளமைத்தோற்றம் மறையாமலேயே. சென்ற ஜூனுடன் லோகி மறைந்து பதினான்காண்டுகள் ஆகின்றன.

அடிக்கடி அதையும் இக்கட்டுரையையும் நான் எண்ணிக்கொள்வதுண்டு. சுஜாதா இக்கட்டுரையில் சொல்வது லோகிததாஸ் சொல்வதன் நாசூக்கான வடிவம். என்னுடைய ஆழமான நம்பிக்கையும் லோகிததாஸுடையதுதான். பலவகையிலும் நான் அவருடைய மாணவன்.

நவீன மருத்துவம் மீதும் நவீன அறிவியல் மீதும் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் இந்திய மருத்துவர்கள் மீதும், இங்குள்ள மருத்துவத் தொழில்-வணிகம் மீதும் நம்பிக்கை இல்லை. சாவைப்பற்றிய அச்சத்தை பயன்படுத்தி நம்மை வழிப்பறி செய்யும் ஓர் அமைப்பு இங்குள்ள மருத்துவம். ஒருவன் தன் வாழ்நாள் முழுக்கச் சேமித்த மொத்தக் காசையும் கடைசிக்காலத்தில் மருத்துவமனைக்குக் கொடுத்து மேலும் சில ஆண்டுகள் காய்கறி வாழ்க்கையை, வதையை நீட்டித்துக்கொள்வது மடமை.

சுஜாதாவுக்கு சினிமா ஆர்வமுள்ள துறையே அல்ல. அது அவருக்கு தொழில் மட்டுமே. ஆனால் அவர் சினிமாவில் ஈட்டிய முழுப்பணமும் அவருடைய இறுதிக்கால சிகிழ்ச்சைக்கே செலவாகியது – இக்கட்டுரையிலேயே பணம் காலியாகி நிதியுதவி பெறுவதைப் பற்றிச் சொல்கிறார். அவர் சினிமாவில் ஆற்றிய பணி முழுக்க மருத்துவமனைகளுக்கும் டாக்டர்களுக்கும் கொடுப்பதற்காகத்தான் என்றால், அதன் வழியாக அவர் பெற்றது கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் நரக வாழ்க்கை மட்டுமே என்றால், அது என்ன அபத்தம்.

ஆரோக்கியம் என்பது நலமாக வாழ்வதும், செயல்புரிவதும்தான். இருந்துகொண்டிருப்பது ஆரோக்கியம் அல்ல. மூதாதையர் போல இயல்பாக விடைபெற ஒரு ஆன்மிக முதிர்வு தேவை. எனக்கும் வருமென நம்புகிறேன்.

எனக்கு எத்தனை நண்பர்கள் !

சுஜாதா

என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக் போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது. ‘அன்ஜைனா’ வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு ‘பைபாஸ்’ ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்து பத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது தெரியும். [பைபாஸ் என்பது இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் கரானரி ஆர்ட்டரிகளில் (Coronary Artery) நேரும் அடைப்பை, உடலின் மற்ற பாகங்களிலிருந்து குழாய் எடுத்து மாற்றுப் பாதை அமைத்து தைப்பது). டாக்டர் விஜயஷங்கருக்கு போன் செய்தபோது ‘வாங்களேன், ஒரு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்துவிடலாம்’ என்றார்.

எட்டு வருஷமாகியும் தோற்றம் மாறாமல் இருந்தார் விஜயஷங்கர் (தினம் ஒரு பைபாஸ் செய்கிறார்). டாக்டர் ராபர்ட் மோ என்கிற கார்டியாலஜிஸ்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் மணிப்பூர் மாநிலத்தவர். சீனர். ஆன்ஜியோ சமாச்சாரங்களில் திறமை மிக்கவர். அவர் எனக்கு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்து, இந்த நற்செய்தியை சொன்னார். “ உங்கள் இதயத்தில் முன்பு சரி செய்த நான்கு க்ராஃப்டுகளில் மூன்று அடைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு க்ராஃப்டில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ஆன்ஜியோபிளாஸ்ட்டி செய்வது நல்லது” என்றார்.

டாக்டர் மோ ஒரு மாநாட்டுக்காக ஆஸ்திரேலியா போய் வந்த கையோடு எனக்கு அந்த சிகிச்சை செய்தார். உடன் டாக்டர் நஜீபும் இருந்தார். ஆப்பரேஷன் நல்ல வெற்றி என்று எனக்கு சிடி போட்டு காண்பித்தார்.

எல்லாம் நலம் வீட்டுக்குப் போகலாம் என்று படுக்கையடிப் புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று என் சிறுநீரகம் (acute renal failure) பழுதடைந்து நின்று போய் விட்டது. விளைவு ராத்திரி ஒரே மூச்சுத் திணறல். மேல் மூச்சு வாங்கும் போது ஏறக்குறைய சொர்க்கத்தில் கின்னர கிம்புருடர்கள் “திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்“ என்று பாடும் ஆழ்வார்கள் சகிதம் தெரிந்தார்கள்.

இதில் இரண்டு வகை உண்டாம் – அக்யூட், க்ரானிக் என்று. எனக்கு கிடைத்தது அக்யூட். டயாலிசிஸ் செய்தால் சரியாகிவிடும். க்ரானிக் என்றால் மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரை டயாலிசிஸ் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமாம். ( நல்ல வேளை, எனக்கு இதில் ஒரு சின்ன அதிர்ஷ்டம்). சூழ்ந்திருந்த டாக்டர்கள் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன. அடிக்கடி மானிட்டரையும் கை கடிகாரத்தையும் பார்த்தனர்.

நெஃப்ராலஜிஸ்ட் டாக்டர் கே சி பிரகாஷ் அழைக்கப்பட்டார். அவர் உடனே எனக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றார். அப்போலோக்காரர்கள் என் மனைவியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ராத்திரியே அதற்கு ஏற்பாடு செய்தார்கள். (டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தை வெளியே கொண்டு வந்தது கழுவி பிறகு மறுபடி சிறுநீரகத்திற்கு அனுப்புவது).

இதற்காக, என் கழுத்தருகில் வெட்டு போட்ட டெக்னீஷியன் என் அருகே வந்து ” உங்க ஸ்டோரிஸ் எல்லாமே படிப்பேங்க. உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்…”

“காலையில் பார்த்துக்கலாமே…”

“காலைல எனக்கு டூட்டி முடிஞ்சு போயிருவேனே”

“டயாலிஸிஸ் ஓடிட்டு இருக்கு இல்லையா….இப்பவேவா?”

“இது என்னங்க ஜுஜுபி. பத்து நாளைக்கு ஒரு முறை ட்ரெயின் பிடித்து வந்து பண்ணிக்கிறவங்க இருக்காங்க. அங்க பாருங்க..”

ஹால் முழுவதும் டயாலிசிஸ் மெஷின்கள் அமைத்து பலர் மாத நாவல் படித்துக்கொண்டு டயாலிசிஸ் பண்ணி கொண்டு இருந்தார்கள். அப்படி ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பது தெரிந்தது.

மறுதினம் சந்தேகத்துக்கு இன்னொரு முறை டயாலிஸிஸ் பண்ணிக்கொண்டதும் சிறுநீரகம் பழைய நிலைக்கு திரும்பி பொன் வண்ணத்தில் சிறுநீர் கழிக்கத் துவங்கினேன். எனக்கு ஆன்ஜியோவுக்காக கொடுக்கப்பட்ட கறுப்பு திரவத்தினாலோ அல்லது கொலஸ்ட்ரால் எம்பாலிசத்தாலோ வந்திருக்கலாம் என்று என் சங்கடத்துக்குக் காரணம் சொன்னார்கள்.

ஒரு வாரம் ஐசியு-வில் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.அதன்பின் வீட்டுக்கு வந்ததும் மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. அதை விவரித்து அதை ஏற்படுத்தியவர் பெயரைக் கெடுக்க விரும்பவில்லை.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள் இவை – முடிந்தால் அட்மிட் ஆவதைத் தவிர்க்க வேண்டும். என் கேஸில் போல தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்துவிடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். முடிந்தால் அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள்.

எல்லோரும் நல்லவர்கள், திறமைசாலிகள். சிக்கல் என்னவென்றால் அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட் கிட்னியையே கவனிப்பார், ஹார்ட், ஹார்ட்டையே…சுவாச நிபுணர் சுவாசத்தையே. யாரவது ஒருவர் பொதுவாகப் பொறுப்பேற்றுச் செய்யாவிடில் அகப்படுவீர்கள். ஒவ்வொரு டாக்டரும் சிற்றசர்கள்போல குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கையருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் என்றால் ஏறிட்டுப் பார்ப்பார்கள்.இல்லையேல், தலைமாட்டு சார்ட்தான். “ஹவ் ஆர் யு ரங்கராஜன்?” என்று மார்பில் தட்டுவார் சீனியர். குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்.”ஸ்டாப் லாசிக்ஸ் …இன்க்ரீஸ் ட்ரெண்டால்…” என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார். அடுத்து, அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோ முறையோ – “யார் லாசிக்ஸை நிறுத்தியது?” இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்டு சிஸ்டர் என்னும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி.

இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம் – ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு விளைவும், பக்க விளைவும் உண்டு. ஒரு மாத்திரை கல்குடலாக்கி பாத்ரூம் எங்கிருக்கிறது என்பதே மறந்து போகும். மற்றொரு மாத்திரை இளக்கி குழாய் போலத் திறந்துவிடும். ஒரு மாத்திரை தூக்கத்தைக் கொடுக்கும். ஒன்று கெடுக்கும். ஒன்று, ஈறுகளை, பல்லை மறைக்க வைக்கும் அளவுக்குக் கொழுக்க வைக்கும், ஒன்று பல்லை உதிர்க்கும்.

ஒரு காலத்தில் ஒரு வேளைக்குப் பதினான்கு மாத்திரைகள் சாப்பிட்ட எனக்கு என்ன ஆகியிருக்கும்? ரகளை !

ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம். சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் கண்காட்சிப் பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில், கண்டவர் வந்து கண்டஇடத்தில் குத்தி ரத்தம் எடுத்து க்ளூகோஸ் கொடுத்து, பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து, ஆஸ்பத்திரியில் நிகழ்வது போல மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது.

அப்பல்லோ போன்ற ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கான அத்தனை கருவிகளும் உள்ளன. எனக்கே எடுத்த டெஸ்டுகள் ஆன்ஜியோகிராம், பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட்,ஒருநாள் விட்டு ஒரு நாள் எக்ஸ்ரே, ரீனல் ப்ரொஃபைல் டெஸ்ட், 1 அண்ட் 2 பிளட் டெஸ்ட், எட்டு மணி நேரம் மெல்லக் கொடுக்கப்படும் ஏதோ இன்ஜெக்ஷன், கால் வலிக்கு டாப்ளர் ஸ்கேன் …ஒவ்வொன்றுக்கும் மிகுந்த பொருள் செலவாகும். ஏழைகள் அணுக முடியாது. நானே உள்ளாடை வரை உருவப்பட்டு பெஞ்சு, நாற்காலிகளை விற்கும் நிலைக்கு வந்துவிட்டேன்.

டிஸ்சார்ஜ் ஆகும்போது டாக்டர் கே சி பிரகாஷ் ஒரு சிற்றிடி கொடுத்தார். “எல்லாம் சரியாயிடுச்சு. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு கிராம்தான் உப்பு, ஐந்நூறு மில்லிதான் தண்ணி.”

உப்பில்லாமல், தண்ணீரில்லாமல் உயிர்வாழ்வதற்கு இன்னொரு பெயர் உண்டு…நரகம்….

தாகம் என்றால் இப்படி, அப்படித் தாகம் இல்லை….டாண்டலஸ்ஸின் (Tantalaus) தாகம். (புரியாதவர்கள் ஹாய் மதனைக் கேட்கவும்)

ஆஸ்பத்திரியிலிருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு நான் வெளிவந்தபோது நான் இழந்தது பன்னிரண்டு கேஜி. பெற்றது, “எனக்கு இத்தனை நண்பர்களா? இத்தனை நலம் விரும்பிகளா?” என்ற பிரமிப்பு. என் மனைவியும், மகன்களும், என் மச்சினரும் மாற்றி, மாற்றி ட்யூட்டி பார்க்க, சினிமா நண்பர்கள் அனைவரும் வந்து ஆறுதலும், பொருளுதவியும் தந்தார்கள். பக்கத்துக்கு வார்டுகளில் படுத்திருந்தவர்கள் தங்கள் வியாதிகளை மறந்து என்னை விசாரிக்க வந்தார்கள். டாக்டர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், லாப் டெக்னீஷியன்கள், பெரும்பாலும் செல்வி என்ற பெயர் கொண்ட அரிதான தமிழ் நர்ஸுகள், அஃறிணையில், இனிமையாக பேசும் மலையாள நர்ஸுகள்,…எத்தனைப் பேர் !

‘நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்’ (திருவாய்மொழி) ஆன நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என யோசித்துப் பார்க்கிறேன். இவர்களுக்காக இந்தண்டை ஒரு துரும்பை எடுத்து அந்தண்டை போட்டதில்லை. ஒரு ஸ்டூலைக் கூட நகர்த்தியதில்லை. ஏதோ தமிழில் கிறுக்கினத்துக்கு இத்தனை மதிப்பா? இத்தனை சக்தியா?

உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும்;

உற்றார்கள் எனக்கிங்கெல்லாரும் என்னும்

என்ற திருவாய்மொழி வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

முந்தைய கட்டுரைதேவேந்திர பூபதி
அடுத்த கட்டுரைசெயற்கை நுண்ணறிவு, மகாபாரதம்