ஜனநாயகத்தில் செங்கோல்
அன்புள்ள ஜெ
உங்களை உறுதியான ஹிந்து என்று செங்கோல் கட்டுரையில் சொல்லியிருக்கிறீர்கள். அதைச் சுட்டிக்காட்டி ‘ஜெயமோகனின் முகமூடி கழன்றுவிட்டது’என்று என் நண்பன் ஒருவன் வாட்ஸப் அனுப்பியிருந்தான். அக்கட்டுரையில் அந்த வரி தேவையாக இருந்ததா?
ராஜ்குமார்
*
அன்புள்ள ராஜ்,
அந்த வரி என் அடையாளம். அக்கட்டுரையிலேயே சொல்லப்படுவதுபோல நான் இந்து, நாராயணகுருவின் மரபைச் சேர்ந்த அத்வைதி. அதில் எப்போதும் எந்த ஐயமும் மாற்றமும் இல்லை. அதைச்சொல்ல கூச்சமும் தயக்கமும் இல்லை .அதை முழுதுறச் சொல்வதே என் அறிவியக்கம். வேறென்ன?
இதுபோன்ற உச்சகட்ட அரசியல் மோதல் நிகழும் களங்களில் எப்போதுமே நிகழ்வது துருவப்படுத்தல், அதற்குரிய மிகையுணர்ச்சிகள், கோஷங்கள். ஒருபக்கம் இந்து என்றாலே இந்துத்துவ அரசியல்தான் என இந்துத்துவர்களின் குரல். அதன் எதிரிகளும் அதே வரியைத்தான் சொல்கிறார்கள். பாரதியஜனதாவையோ அல்லது அதைப்போன்ற இன்னொரு அரசியலியக்கத்தையோ எதிர்க்கவேண்டுமென்றால் இந்து மெய்மரபை ஒட்டுமொத்தமாக அழித்தாகவேண்டும் என ஓர் அரசியல்வாதி நினைப்பாரென்றால் அவருடைய அறிவுத்திறன் என்ன?
அரசியல் என்பது அதிகாரம், செல்வம் சார்ந்தது. அது பண்பாடு, ஆன்மிகம் ஆகிய தளங்களில் அழிவையே உருவாக்கும். அவை தனித்தே செயல்படவேண்டும். அவற்றின் அளவுகோல்களே வேறு. நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதை மட்டுமே. இந்தச்சந்தர்ப்பத்தில் இந்து வெறுப்பை கக்கும் பலர் மதவெறியையும் முகத்தையும் மறைத்துக்கொண்ட மாற்றுமதத்தவர் என்பதையும் நான் அறிவேன்.
ஜெ