சவார்க்கர், கடிதங்கள்

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

சவார்க்கர் கட்டுரை ஆங்கிலத்தில். மொழியாக்கம் ஐஸ்வர்யா. ஃப்ரண்ட்லைன்

திரு ஜெயமோகனுக்கு

பிரிட்டிஷாரின் வன்முறையில்லா அணுகுமுறை பற்றிச் சொன்னீர்கள். ஜாலியன் வாலாபாக்கில் போராடிய மக்கள் என்ன ஆயுதமா வைத்திருந்தார்கள்? இந்த புரட்டுகளை நிறுத்திக்கொள்ளுங்கள். இப்போது எல்லாருக்கும் வரலாறு தெரியும். ராமன் ராவணனிடம் அகிம்சை பேசவில்லை. வதம் செய்தான். அது ஞாபகமிருக்கட்டும்

செந்தில்குமார்

*

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரையில் பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்குச் சமானமாக சாவார்க்கரை முன்வைக்கும் சூச்சுமமன தந்திரம்தான் தெரிகிறது.

சந்திரா

அன்புள்ள நண்பர்களுக்கு,

இந்தவகையான கடிதங்கள் ஐம்பதுக்கும் மேல் வந்தன. உடைத்து உடைத்து எதையாவது எடுத்துக்கொண்டு பேசுபவை. சதிகளையும் சூழ்ச்சிகளையும் அரசியல் உள்நோக்கத்தையும் கண்டடைபவை. ஆச்சரியமென்னவென்றால் ஆங்கிலத்திலும் இதே வகை கடிதங்கள்தான் மிகுதி. ஒரு சின்ன கட்டுரையையே ஒட்டுமொத்தமாக வாசித்தறியமுடியாத நிலை.

அக்கட்டுரை ராமன் போர் செய்ததைப் பற்றி பேசவில்லை. ராணுவம் தேவையில்லை என்று சொல்லவில்லை. பிரிட்டிஷார் நல்லவர்கள் என்று சொல்லவில்லை. அது அரசியலில் வன்முறையின் யுகம் முடிவுக்கு வந்துவிட்டது என்கிறது. இது மக்களின் திரள்சக்தியால் மட்டுமே மாற்றம் நிகழமுடியுமென ஆகிவிட்ட காலம். ஆகவே பழைய வன்முறைக் காலகட்டத்தின் ‘வீரவழிபாட்டு’ மனநிலையில் இருந்து வெளியேறியாகவேண்டும் என்கிறது.

வீரர்கள் மக்களிடமிருந்து அன்னியமானவர்கள். அவர்களை மக்கள் கொண்டாடவே முடியும், கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் ஏகாதிபதிகளாவார்கள். அவர்களிடையே வீரம் என்னும் தீவிரம் இருக்கும் அளவுக்கு வரலாற்றுணர்வோ, சமநிலைப்பார்வையோ இருக்காது, ஆகவே அவர்கள் பெரும்பாலும் அழிவுகளையே கொண்டுவருவார்கள் என்கிறது. அடிப்படையில் எந்த வீரவழிபாடும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்கிறது.

இக்கருத்து மிக விரிவாகவே அக்கட்டுரையில் உள்ளது. அதை சிந்தனைப்பழக்கமுடையவர்கள் யோசிக்கலாம், மறுக்க வேண்டுமென்றால் மறுக்கலாம். ஆனால் அதைப் புரிந்துகொண்டவர்களிடம் மட்டுமே எனக்கு உரையாடல் உள்ளது. மற்றவர்கள் என்னைப்பொறுத்தவரை இல்லாதவர்களே.

ஜெ

முந்தைய கட்டுரைஅம்ம நாம் அஞ்சுமாறே!
அடுத்த கட்டுரைசதீஷ்குமார் சீனிவாசன் பேட்டி, கடிதங்கள்