செங்கோல், கடிதம்

New Parliament Building Inauguration.(photo:Twitter)

ஜனநாயகத்தில் செங்கோல்

அன்புள்ள ஜெ,

நீங்கள் திருவிதாங்கூர் அரசரின்‌ முன்பு அமராமல் நின்று பேசியதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். காந்தி அரையாடை பக்கிரி உடையுடன் தோன்றி அரசரின் இடத்தில் ஒரு சாமனியன் வரக்கூடுமென்ற எண்ணத்தை உண்டாக்கியதை, இ.எம்.எஸ் அலுவலகத்திற்கு பெட்டியுடன்‌ நடந்து செல்பவர் என்றும், காமராசர் எளிமை பற்றி கூறி இருந்தீர்கள். இவற்றைப் படிக்கும் போது சமீபத்தில் படித்த மனுபென் காந்தியின் நினைவுக்கோவை புத்தகம் ஞாபகம் வந்தது.

ஒரு முறை காத்தியவாட் பகுதியின் பாவ்நகர் சமஸ்தானத்தின் சிற்றரசர் காந்தியைப் பார்க்க வந்த சம்பவத்தை எழுதியிருப்பார். காந்தி மனுபென்னிடம் அரசரை வரவேற்பதைப் பற்றி அதிக கவனகொண்டிருந்தார். காந்தி அரசரைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்றததையும் உபசரிப்பதையும் கவனித்துக் கொண்டிருந்தவர் இவரை விட பெரிய மனிதர்கள், அரசர்களெல்லாம் காந்தியைச் சந்திக்கிறார்கள், ஆனால் பாபூ இவரை மட்டும் இப்படி உபசரிக்கிறாரே என்று வியந்து, அவரிடமே கேட்டிருக்கிறார். காந்தி அதற்கு “கல்விக்காக சில காலம் அரசரின் ஆள்கைக்குட்பட்ட நிலமான  பாவ்நகரில் தங்கி படித்திருக்கிறேன். அதனால் நானும் அரசரின் பிரஜை தானே. ஒரு பிரஜை அரசனுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தரவேண்டுமல்லவா?” என்று கேட்டிருக்கிறார்.

செங்கோல் கொண்ட அரசர்களின் யுகத்தையே முடித்து வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்த மனிதர், இந்த அரசரிடம் எப்படி உபசரிப்பு செய்திருக்கிறார் பாருங்கள் என்று வியந்தபடி முடித்திருப்பார் மனுபென்.

நன்றி.

கோ.கு.குமார்.

*

அன்புள்ள ஜெ

செங்கோல் பற்றிய கட்டுரை அருமையானது. மிக நேரடியானது. நாம் ஜனநாயகத்தில் இந்தவகையான ‘புனிதப்படுத்தல்கள்’ ‘தொன்மமாக்குதல்கள்’ ஆகியவற்றை கடந்தாகவேண்டியிருக்கிறது. ஆனால் அது இங்கே நம்முடைய பின்தங்கிய ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளுக்கு மிக அவசியமான ஒன்றாக உள்ளது.  நாம் செங்கோலை எதிர்ப்போம். அதேபோல ஒரு புராணப்படுத்தல் நம் தரப்பில் செய்யப்பட்டால் அது ‘மக்களிடம் சென்றடைவது’ என்று விளக்கிக்கொள்வோம். இதுதான் நடக்கிறது. எல்லாக் கட்சிகளும் மலர்க்கிரீடம், செங்கோல், ரதயாத்திரை என்று புராணநாடகங்களைத்தான் நடித்துக்கொண்டிருக்கின்றன.

ராஜேந்திரன் எம்

காஞ்சிபெரியவர் சொன்னாரா?

முந்தைய கட்டுரைபாலா, முன்று கதைகள்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விழா, மனுஷ்யபுத்திரன்