மகாத்மா காந்தியும் மாதவிக்குட்டியும் – கே.சி. நாராயணன்

   கே.சி.நாராயணன் தமிழ் விக்கி

கே.சி.நாராயணனின் உலகம்

அரை நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட மாதவிக்குட்டியின் சுயசரிதை ”என் கதை”யை முன்வைத்து:

மகாத்மா காந்திக்கும் மாதவிக்குட்டிக்கும் இடையே என்ன உறவு? காந்திய விழுமியங்களை வாழ்க்கை முழுக்க கடைபிடிக்க முயன்ற ஒரு தம்பதியின் மகளாக பிறந்த மாதவிக்குட்டி காந்தியத்தை எப்படி அணுகினார்? அவரது சுயசரிதை காந்தியத்தைப்பற்றி எதையாவது சொல்கிறதா?

மாதவிக்குட்டியைப்போலவே சுகதகுமாரியும் காந்திய தம்பதிகளின் மகள்தான். தந்தை சுதந்திரப்போராட்ட வீரரும் கவிஞருமான போதேஸ்வரன். தாய் கார்த்யாயினி அம்மா திருவனந்தபுரத்தில் சமஸ்கிருத பேராசிரியர். சுகதகுமாரியின் கணவர் டாக்டர். கே. வேலாயுதன் நாயரும் காந்தியர்தான். சுகதகுமாரியின் “பிணம்” “பேயோட்டுதல்”  இரண்டும் அசாதாரணமான கவிதைகள்.

”பிணம்” கவிதை கனவு போல ஆகிவிட்ட பழைய காதலை கல்லறையில் புதைப்பது பற்றியது. இந்த கவிதையில் தன் மனதிற்குள் ஒரு பள்ளிக்குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதாக கவித்தன்னிலை உணர்கிறது. துள்ளி குதித்தும், ஏங்கி அழுதும், மீண்டும் மீண்டும் கோபப்பட்டும், பாய்ந்து ஓடி குப்புற விழுந்தும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் உயிர்த்துடிப்பான சின்னப்பெண். கவிதைசொல்லியின் சொற்கள்:

” ’நான்’ அந்த குட்டிப்பெண்ணின் வாயை மூடுகிறேன். கனவுகாணும் அந்த பெண்ணை கிள்ளி எழுப்பி “நான்” சொல்கிறேன், நீ எவ்வளவு அபத்தமானவள்! இப்படி கனவு காண்பதா உன் பணி? அதுவும் காதல்கனவு? இந்த சின்னப்பெண் தன் விழிகளை நிறைக்கும் ஒரே ஒரு முகத்தை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு பூவிதழலாக உதிர்த்துக்கொண்டு, யாமங்களை நறுமணத்தால் நிறைத்துக்கொண்டிருக்கிறாள், கஷ்டம்தான். இதை யாரும் அறியக்கூடாது. முன்பு எப்போதோ கொல்லப்பட்டவள், இன்றும் பாட்டு பாடி, கண்ணீர் சிந்தி, மாயை என்ற ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பதை உலகம் அறியக்கூடாது, இது பைத்தியக்காரத்தனம். நிறுத்து. ”நான்” அவளை திட்டினேன். ஆனாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை. அவளை ஒரு கல்லறையில் புதைத்து எடைமிகுந்த கற்பலகையால் அந்த கல்லறையை மூடிவிட்டேன். நன்றாக அழுத்தியும் மிதித்தும் நான் அந்த கல்லறையை மூடிவிட்டேன். இது போதாது. அந்த கல்லறையின் மேல் ஒரு மேஜையும் மேஜையின்மேல் புத்தகங்களையும் வைத்தேன். சுற்றிலும் பூச்செடிகள் வைத்தேன். இனி அந்த மேஜைக்கு அடியில் ஒரு குழிமாடம் இருக்கிறது என்பதை யாரும் அறியமுடியாது. அங்கிருந்துபடி நிமிர்வுடன் என் நூற்றுக்கணக்கான பணிகளை செய்கிறேன்.”

‘பேயோட்டுதல்’ என்ற மற்றொரு கவிதை. ‘ மனதில் பித்து நிறைந்த சின்னப்பெண்ணை எப்படி கொல்வது ‘ என்பதாக கவிதை தொடங்குகிறது. கவிதை சொல்லியின் சொற்கள்:

” இன்று என் துயரம் அந்த பெண்தான். அவளை கட்டிவைக்க வேண்டும். அவள் இருக்குமிடத்தை கண்ணீரால் தெளித்து மெழுகி தூய்மையாக்க வேண்டும். அங்கு ஒரு விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு களம் வரைந்து அவளை அங்கு தளைக்க வேண்டும். ஒரு மந்திரவாதியை கூப்பிட்டு, துர்மந்திரவாத சடங்கு செய்து அவளை ஆட்கொண்ட பேயை ஓட்டவேண்டும். பின் அவளை ஒரு பாலைமரத்தில் கட்டுவைத்து அவள் மார்பில், கையில், நாக்கில் இரும்பு ஆணி அடிக்கவேண்டும். அவள் அங்கேயே இருக்கட்டும். அவள் தொல்லை தருபவள், மரணமில்லாதவள், நேசிப்பவள். இனி அவளை நீயும், நானும் காணப்போவதில்லை. நிம்மதியாக இரு….”

இந்த கவிதைகளில் உள்ள “நான்” இப்படியான கடுமையான சடங்குகளை செய்வது யாருக்காக? ” யாருக்கும் தெரியக்கூடாது, உலகம் அறியக்கூடாது ” என்று கவிதையிலேயே அதற்கான பதில் இருக்கிறது. உலகின் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக ”நான்” இவ்வளவு கடுமையான ஆன்ம சுத்தீகரணத்தை செய்கிறது. இவ்வளவு கடுமையான சடங்குகளுக்கான காரணம் ஆன்மாவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது; உடலை, மனதை வருத்தும் நோன்புகள்; விழைவுகளை மனதினுள்ளேயே அணைத்துவிடுவது போன்ற காந்திய மதிப்பீடுகளின் பாதிப்பு என்று சொல்லமுடியுமா? இப்படிப்பட்ட மனதை வருத்தும் நோன்புகளோ, மனதை அழித்துக்கொள்வதோ மற்றொரு காந்திய தம்பதிகளின் மகளான மாதவிக்குட்டியில் இல்லை என்பதுதான் மாதவிக்குட்டியின் தனித்தன்மை. ”பிணம்” கவிதையில் உள்ளது போன்ற  மரணச்சடங்குகள் அவருக்கு தேவையில்லை. சுகதகுமாரியைப்போல ”உலகம் இதை அறியக்கூடாது” என்பதல்ல, உலகம் இதை அறியட்டும் என்பதுதான் மாதவிக்குட்டியின்  மனநிலை. நான் சொல்வது உண்மை என்ற முகவுரையுடன்தான் மாதவிக்குட்டியின் சுயசரிதையான “என் கதை” ஆரம்பிக்கிறது. இந்த சுயசரிதை முழுக்க முழுக்க உண்மையானது என்று ஒரு தரப்பும், இல்லை இந்த சுயசரிதை உண்மையான சம்பவங்களும் கற்பனையும் கலந்தது என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது. ஆனால், மாதவிக்குட்டி எழுதுகிறார்: ‘ உள்ளுர நான் என்னை ஊடுருவி பார்க்கப்போகிறேன். அடிப்படைவாதிகளின், ஒழுக்கநெறியாளர்களின், நலம்விரும்பிகளின் முணுமுணுப்பை கண்டுகொள்ளாமல் மிக உண்மையாக இந்த கதையை நான் எழுதுவதற்கான ஆற்றலையும், தைரியத்தையும் தர நான் ஸ்ரீகிருஷ்ணனை வேண்டிக்கொள்கிறேன். துஞ்சத்து எழுத்தச்சனைப்போல ஸ்ரீகிருஷ்ணனின் ஆசிகளை எதிர்நோக்கி மாதவிக்குட்டி தன் உடலைப்பற்றிய, தன் ஆன்மாவைப்பற்றிய காவியத்தை எழுதத்தொடங்குகிறார்.

காவியமா? ஆம், தன் சுயசரிதையை கவிதை என்றுதான் மாதவிக்குட்டி சொல்கிறார். மாதவிக்குட்டியின் சுயசரிதையை புனைவு, சுயசரிதை, உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்டது, கற்பனை கொண்டு எழுதிய பொய்க்கதை என பலவகையில் விளக்கப்படுகிறது. ஆனால் மாதவிக்குட்டி அதை கவிதையாகத்தான் நினைத்தார். ” நான் இதை கவிதை என்று சொல்ல ஆசைப்படுகிறேன். மனதிற்குள் திரண்டிருக்கும் இனிய கொந்தளிப்பு மேலெழுந்து வரும்போது அது உரைநடை என்ற திட்டவட்டமான வடிவத்தில் இருக்கும். சொற்கள் அவற்றின் இசைத்தன்மை இழந்துவிட்டிருக்கும். இருந்தாலும் இதை கவிதை என்றே அழைக்க விரும்புகிறேன்.’

இந்தியா முழுக்க இரண்டாம் உலகப்போரின் வெம்மை பரவிக்கொண்டிருந்த சமயத்தில் ( கவனியுங்கள், சுதந்திரப்போராட்டத்தின் வெம்மை என்று மாதவிக்குட்டி ஒரு இடத்திலும் சொல்வதில்லை) கல்கத்தாவிலிருந்து ”நாலாப்பாட்டு” வீட்டிற்கும் மீண்டும் கல்கத்தாவிற்கும் இடம்பெயர்வது ”என் கதை” யின் பேசுபொருளில்களில் ஒன்று. அவரது சுயசரிதையில் அந்த இரண்டு இடங்களின் தனித்தன்மையானவையாக இருந்ததற்கு காரணம் இரண்டு இடங்களிலும் காந்தி இருந்தார் என்பதுதான். மாதவிக்குட்டியின் அம்மா பாலாமணிஅம்மா முக்கியமான மலையாள கவிஞர், நோன்புபோல காந்திய விழுமியங்களை சொந்த வாழ்க்கையில் கடைபிடித்த பெண்களில் ஒருவர், ஒரு தவம்போல என்று மாதவிக்குட்டி அம்மாவைப்பற்றி சொல்கிறார். அப்பா வி.எம்.நாயர் ஒரு பெரிய பிரிட்டீஷ் வாகன கம்பெனியின் நிறுவனராக இருந்தும் வீட்டில் கதர் ஆடைதான் அணிந்துகொண்டார். வீட்டின் திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் அனைத்தும் கதர்தான். குழந்தைகளுக்கு வெள்ளைத்துணிதான் வாங்கிக்கொடுத்தார். அம்மா வெளுத்த அல்லது மஞ்சள் கலர்ந்த ஆடைகளை மட்டும்தான் அணிந்தார். அன்றைய பணக்காரர்களில் இப்படி ஆடம்பரமின்மையை நோன்புபோல கடைபிடித்தவர்கள் அவ்வளவாக இல்லை. ” எங்கள் குடும்பம் ஆதர்சனமான குடும்பம் என்றும், எளிய வாழ்க்கைமுறையால் நாங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஆகவேண்டுமென்றும் அப்பா சொல்வார்.” காந்திய விழுமியங்கள் அவ்வீட்டில் நிறைந்திருந்தது.

கல்கத்தாவிலிருந்து நாலாப்பாட்டு வீட்டிற்கு வந்தால் அங்கேயும் காந்தி இருந்தார். மாதவிக்குட்டியின் சுயசரிதையில் இப்படி எழுதுகிறார் நாலாப்பாட்டு வீட்டில் அம்மாவழி பாட்டி, சித்தி, முடக்குவாதத்தால் படுக்கையிலிருக்கும் பாட்டி, மற்றொரு பாட்டி, பெரிய தாய்மாமா (நாலாப்பாடு நாராயண மேனோன்), அவரின் அன்னை இவர்களுடன் ஏழாவதாக மகாத்மா காந்தியும் இருப்பார். மகாத்மாஜீ இப்படி சொன்னார், மகாத்மாஜீ அப்படி சொன்னார் என்று எந்நேரமும் அந்த வீட்டில் உள்ள பாட்டிகள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். வீட்டின் எல்லா அறைகளிலும் மகாத்மாஜீயின் புகைப்படத்தை மாட்டியிருந்தார்கள் ” எல்லாவற்றிற்கும் சாட்சியாக, வழிகாட்டியாக மகாத்மா காந்தி அந்த வீட்டில் வாழ்ந்தார். காந்தி குருவாயூர் சென்றபோது தங்கள் தங்க நகைகளை கழற்றிக்கொடுத்த தியாகவதிகள் அந்த பெண்கள். ” சித்தியும் வெள்ளை புடவை உடுத்தி காந்தியை பின்பற்றி எளிய வாழ்க்கை வாழ்ந்தார் ” மாதவிக்குட்டியின் குடும்பம் கல்கத்தாவிலோ, நாலாப்பாட்டு வீட்டிலோ எங்கே இருந்தாலும் சரி, அவர்கள் காந்தியின் ஆணைகளை, அவரது விழுமியங்களை, சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டவர்களாக நடந்துகொண்டனர்.

ஆனால் தொடக்கத்திலிருந்தே வேறு ஒரு உயிரினத்திற்கு பிறந்த குழந்தை என்பதுபோல மாதவிக்குட்டி இந்த மதிப்பீடுகளுக்கு வெளியே இருந்தார். சிறுவயதில் அவருடைய எண்ணங்கள்கூட காந்திக்கு எவ்வளவு எதிரானவை என்று அவர் சுயசரிதையில் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார்.  தீவிரமான எளிமையை வாழ்க்கைமுறையாக ஆக்கிக்கொள்ள என் அம்மா, அப்பாவிற்கு கற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியை நான் மௌனமாக சபித்தேன் இப்படி நடுங்கவைக்கும் தீவிரமான சொற்களை மாதவிக்குட்டி எழுதுகிறார். காந்திய விழுமியங்களுக்கு எதிராக தன் விருப்புவெறுப்புகளை பொத்திப் பாதுகாத்துக்கொள்ளும் இயல்பை கல்கத்தாவில் அவர்  சிறுவயதிலேயே பார்க்கமுடிகிறது. அம்மாவும் அப்பாவும் வெள்ளை உடைகள் அணிந்துகொண்டு தனக்கு அதேபோன்ற வெள்ளை உடைகளை அணியத்தரும்போது “ பொன்நகைகளை அணிந்து நல்ல பகட்டான நிறம்கொண்ட ஆடைகளை அணிந்து ஒரு வானவில்போல விருந்தினர்கள் முன் தோன்ற நான் ஆசைப்பட்டேன் ” என்று எண்ணியதாக எழுதுகிறார்.

அங்கே நாலாப்பாட்டு வீட்டிலும் அதேபோல விஷேஷமான உடைகளிலும் உணவுகளிலும் விழைவுகொண்ட ஒரு அ-காந்தியவாதி இருந்தார். அது மாதவிக்குட்டியின் பெரிய தாய்மாமா நாலாப்பாட்டு நாராயணமேனோன். கவிஞர், அறிஞர். ’ஆர்ஷஞானம்’, ’ ரதி சாம்ராஜ்யம்’ போன்ற நூல்களின் ஆசிரியர். அவருக்கு அந்த தறவாட்டில் இருந்த மதிப்பைப்பற்றி மாதவிக்குட்டி சொல்கிறார். வீட்டிற்கு உள்ளேயும் செருப்பு அணிந்துகொண்டுதான் அவர் நடந்தார். ” மாமா 8:30 மணிக்கு குளித்துமுடிப்பார். காலில் செருப்புடன் கோவிலுக்கு நடந்து போகும்போது எங்களைப்பார்த்து சிரிப்பார். சரியாக பன்னிரெண்டு மணிக்கு சாப்பிடுவதற்காக மட்டும் மாமா தெற்குபக்கம் உள்ள உணவரையில் நுழைவார். அவர் என்ன சாப்பிடுவார்? கிட்டத்தட்ட விருந்துபோன்ற சாப்பாடு. வெண்ணெய், தயிர், இரண்டு வகையான கூட்டுகறிகள், பொரியல், அப்பளம், உப்பும் மிளகாய்ப்பொடியும் போட்ட மாங்காய் ஊறுகாய் இப்படியான உணவு. மாமா எப்போதும் தலைவாழை இலைபோட்டுதான் சாப்பிட்டார். சில சந்தர்ப்பங்கள் ஒருமணிநேரம் சாப்பிடுவார். நிறைந்த முகத்துடன் சிவந்த விரல்நுனிகளால் ஒவ்வொரு பிடி சாப்பாட்டையும் அவர் சுவைத்து உண்பதை எனக்கு பார்க்கப்பிடிக்கும்”

நாலாப்பாட்டு நாராயண மேனோன் தினமும் சாப்பிட்ட உணவு 1940களில் சைவ உணவு சாப்பிடக்கூடிய உயர்ஜாதி இந்துக்குடும்பங்களில் மிகச்சிலரால் மட்டுமே சாப்பிட இயலக்கூடிய விருந்து சாப்பாடு. ” உணவில் மட்டுமல்ல உடையிலும் அவர் ஆச்சர்யப்படுத்தினார். மாமாவை பொறுத்தவரை பெண்கள் ஆடம்பரங்களை விரும்பவேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர். மாமாவின் மனைவி காளியபுறத்து பாலாமணி அம்மாவை எல்லா நாளும் விஷேஷமான உடையணிந்து தங்க ஆபரணங்களுடன்தான் நாலாப்பாட்டு தறவாட்டில் பார்க்கமுடிந்தது. அவரின் இனிய பண்புகளை, ஆடை அலங்காரங்களின் மினுமினுப்பை, ஒட்டோ தில்பஹர் (Otto Dilbahar) என்ற வாசனை திரவியத்தின் மணத்தையும் இப்போதும் என்னால் நினைவுகூறமுடிகிறது.”

உணவு, உடை, ஆபரணங்கள் போன்றவற்றில் நாலாப்பாடு நாராயண மேனோனுக்கு இருக்கும் ஆர்வத்துடன் கூடவே அவரின் இயல்பில் உள்ள ஒரு தனித்தன்மையும் மாதவிக்குட்டியின் ஆர்வத்தை தூண்டுகிறது. அது ஏழ்மையானவர்கள் மேல் அவருக்கு உள்ள வெறுப்பு. சொந்த தங்கையின் குழந்தைகளிடம் காட்டும் விஷேஷமான அன்பை ஒரு வாழ்க்கைமுறையாகவே கொண்ட மாமாவிற்கு மற்ற வீட்டு குழந்தைகளை சுத்தமாக பிடிக்காது. ஏழை குழந்தைகள் எங்கள் வீட்டுமுற்றத்தில் நுழைந்தால் உடனே தான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து தலை உயர்த்து ‘போ போ’ என்று கர்ஜிப்பார். பணவசதி இல்லாதவர்களுக்கு அளவுக்குமேல் இடம் கொடுக்கக்கூடாது என்பதுதான் மாமாவின் நம்பிக்கை”. உலகில் உள்ள எல்லா ஏழ்மையானவர்களுக்காகவும் சமர்ப்பணம் செய்யப்பட்ட விக்டர் ஹ்யுகோவின் லே மிஸிரபில்ஸ் நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்த நாலாப்பாட்டு நாராயண மேனோனின் மனவிரிவு அவரது சொந்தவாழ்க்கையில் இல்லை என்பது ஆச்சர்யப்படவைப்பது. ஆனால் லே மிசிரபில்ஸ் நாவல் வெளிவந்த 19ம் நூற்றாண்டில் பிரான்சிலும் ஏழ்மையானவர்களை அவர்கள் நிலையிலேயே நிறுத்த வேண்டும் , அவர்கள் மேல் இரக்கம்காட்டக்கூடாது என்ற அபிப்பிராயம்தான் பிரதானமாக இருந்தது என்று அந்த நாவல்பற்றி “The novel of the century” என்ற ஆய்வுநூலை எழுதிய டேவிட் பெல்லோஸ் (David bellos) சொல்கிறார்.

உணவில், உடையில் ஆடம்பரங்கள் கூடாது என்று காந்தி சொல்லிக்கொடுத்தார். உணவில் சர்க்கரையை காந்தி தவிர்த்தார். There is death in chocolate என்று காந்தி சொன்னார். சுவையானது எதையும் காந்தி தவிர்த்தார். காமத்தை குழந்தை பிறப்பிப்பதற்கான ஒரு உணர்வாகவே அவர் கண்டார். திருமணம் செய்துகொண்டவர்கள் தன் ஆசிரமத்தில் சகோதர சகோதரிகள் போல வாழவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். காதல் அவர் பட்டியலில் இல்லவே இல்லை. இவையெல்லாம் விழைவை அதிகரிக்கும் விஷயங்களாக பார்த்தார் காந்தி. அவருடைய வழிமுறை அனாசக்தி(விழைவுகளற்ற) யோகம்.

கே.சி.நாராயணன்

மாதவிக்குட்டியின் வாழ்க்கை அனாசக்தி யோகத்திற்கு வெளியே இருந்தது. புரவலர்களான, நீதியுணர்ச்சியை கடுமையான நோன்பு போல கடைபிடித்த கொண்ட என் தாய்தந்தையருக்கு நான் எப்படி மகளாக பிறந்தேன் என்று பல சந்தர்ப்பங்களில் நான் ஆச்சர்யப்பட்டதுண்டு. அவர்கள் குற்றமற்றவர்கள்.  பெண்மையுடன் தொடர்புடைய எல்லா சீர்கேடுகளும் என்னிடம் அளவுக்கு அதிகமாகவே இருந்தன. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அதீதமான பதற்றம்,  அழகிய பொருட்கள், நறுமணத்திரவியங்கள் மேலுள்ள பித்து, கேளிக்கைக்கான, பெருமிதம்கொள்வதற்கான அதீத விழைவு, வீர நிறைந்த ஆண்கள் மேலுள்ள வழிபாட்டுணர்வு – இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியின் தொனி இல்லாமல் தன்னுடைய உலகியல் சார்ந்த, பெண்மையுடன் தொடர்புடைய சீர்கேடுகளைப் பற்றி சொல்கிறார். இந்த பட்டியலில் சொல்லவில்லையென்றாலும் அவரது சுயசரிதையில் அவருக்கு உடல்மேல் உள்ள அதீதவிருப்பம் என்ற தீய இயல்பை அடிக்கடி பார்க்க முடியும். ” நான் மேல்சட்டையை கழற்றிவிட்டு கண்ணாடியில் பார்த்தேன், உருக்கொண்டுவரும் முலைகளை பார்த்ததும் புதையல் கிடைத்தது போன்ற நிறைவை அடைந்தேன்”.  ” திருமணத்திற்கு பிறகு என் முலைகளை கணவர் முதன்முறையாக பார்த்தபோது திகைத்து மௌனமாக நின்றுவிட்டார், அதன்பிறகு நான் அவற்றை பாதுகாப்பாக பொதிந்து வைத்துக்கொண்டு என் துருப்புசீட்டாக பயன்படுத்தினேன் ” பூப்படைந்த அனுபவத்தைப்பற்றி மாதவிக்குட்டி இப்படி எழுதுகிறார்: ” என் ஆடையில் முதல்முதலாக மாதவிடாய் குருதியை பார்த்ததும் நான் பயந்து கத்திவிட்டேன். என் வீட்டில் நான் தனியாக இருக்கும்போது சூரியவெளிச்சத்தில் நிர்வாணமாக நின்றேன். சூரியனை பார்த்ததும் என் கருப்பையை வளமாக ஆக்கக்கூடிய ஆண்தெய்வம் இவன்தான் என்று தோன்றியது. மஹாபாரதத்தில் வரும் குந்தி மேல் எனக்கு பொறாமையாக இருந்தது. குந்தியுடன் போட்டியிட்டு அவரை தோற்கடிக்க வேண்டும் என்று விழைந்தேன். சூரியனை அழைத்து வசீகரிப்பதற்காக நான் எனக்கான அந்தரங்கமான மந்திரங்களை உருவாக்கிக்கொண்டேன்.” 

சொந்த உடல்பற்றிய பெருமிதங்கள் இருக்கும்போதே ஒரு காலனியாதிக்க ஆட்சியில் குடிமகள் என்ற நிலையில் அந்த உடல் வெள்ளையர்களின் முன் அனுபவித்த அவமதிப்பைப்பற்றி மாதவிக்குட்டி சொல்கிறார். அன்று மாதவிக்குட்டி கல்கத்தாவில் இருந்தபோது மேபல் என்ற வகுப்பாசிரியை இருந்தார்: ” அவளுடைய சுருண்ட தலைமுடியை வருடவும் அவளைக்காணவும் தினமும் வந்த ஆர்ச்சி என்பவன் மேல் எங்களுக்கு பயம். அவன் கருப்பான தோல் கொண்ட என்னை வெறுப்புடன் மட்டும்தான் பார்த்தான். இனம் சார்ந்த மேட்டிமையின் குரூரத்தை அந்த பள்ளியில்தான் அனுபவித்தேன். ஆசிரியைகள் பொன்நிறமான தலைமுடியுடன், வெள்ளைத்தோலுடன் இருக்கும் குழந்தைகளை எடுத்து மடியில் வைத்துக்கொள்வார்கள், அவர்களை முத்தமிடுவார்கள். ஆசிரியைகள் ஒருமுறைகூட என்னை அருகே அழைக்கவோ, தொடவோ செய்யமாட்டார்கள். வெள்ளைத்துணியில் செய்யப்பட்ட தொளதொளவென்ற ஃப்ராக்கை அணிந்துகொண்டு வெள்ளைநிறமானவர்களுடன் சேர்ந்து நிற்கும்போது என் கருப்புநிறத்தை நினைத்து நான் பலவீனமானவளாக உணர்ந்தேன். ஏதோ ஒரு தீயதெய்வம் என் அண்ணாவின் மேலேயும் என் மேலேயும் சேற்றை தேய்த்து இந்த உலகத்திலிருந்து உந்தி வெளியேற்றியிருகிறது என்று நான் நம்பினேன். வெள்ளையர்களின் இந்த பண்பட்ட உலகில் நான் என்று சபிக்கப்பட்டவளாக இருக்கப்போகிறேன் என்று எண்ணிக்கொண்டேன்.”

இதைவிட நுண்மையாக எந்த ஒரு பெண் எழுத்தாளராலும் பிரிட்டீஷ் காலனியாதிக்க ஆட்சியில் தோல் நிறத்தால் அனுபவித்த அவமானத்தை விவரிக்க முடியாது. மாதவிக்குட்டியின் சிறுவயதில் காலனியாதிக்கத்தின் பண்பாட்டு மையங்களில் ஒன்றான கல்கத்தாவில் இந்தியர்களின் நிறம் மட்டுமல்ல அவர்கள் பேசும் இந்திய மொழிகளும் ஆங்கிலத்தின் முன் இதே தாழ்மையுணர்ச்சியுடன் நிற்கவேண்டி வந்தது என்று மாதவிக்குட்டி சொல்கிறார். ” எனக்கு நான்கு வயது இருக்கும். வீட்டிற்கு இரண்டு ஆசிரியைகள் வருவார்கள். மதியம் 3:30 மணிக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதற்காக மங்களூரை சேர்ந்த மிஸ். ஸெக்வீரா வருவார். மாலை மலையாளம் சொல்லிக்கொடுக்க கருப்புநிறம்கொண்ட நம்பியார் வருவார். ஸெக்வீரா எங்கள் வீட்டில் தன்னம்பிக்கையுடன் நடந்துகொள்வார். அப்பா அம்மாவுடன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருப்பார். நம்பியார் வந்தவுடனேயே அப்பாவின் கண்ணில்படாமல் எந்த சத்தமில்லாமல் சாப்பாட்டு அறையில் மறைந்து தப்பிவிடுவார். அங்கு சமையல்காரர்களுடன் என் மலையாள வகுப்பு நடைபெறும். ஸெக்வீராவிற்கு சீனப்பிங்கான் கோப்பையிலும் நம்பியாருக்கு டீ கிளாஸிலும் சமையல்காரன் டீ தயாரித்து கொடுப்பான். அன்று மலையாளமொழிக்கு நம்பியாரின் நிறமும் தாழ்மையுணர்ச்சியும் உள்ளதாக நாங்கள் எண்ணிக்கொண்டோம். ஆங்கிலப்பாடத்தில் ஆங்கிலேய குழந்தைகளை தோற்கடிக்கவேண்டும் என்பதுதான் எனக்கும் என் அண்ணாவுக்குமான இலக்கு.” இந்த இலக்கு எய்தப்பட்டுவிட்டது என்று நமக்கு தெரியும். மாதவிக்குட்டி உலகமெங்கும் அறியப்படும் கமலாதாஸ் என்ற ஆங்கில எழுத்தாளராக ஆனார்.

இளமையிலிருந்தே தான் மிக எளிதாக காதல்வயப்படுவது வழக்கம் என்று மாதவிக்குட்டி எழுதுகிறார். காதலும் அதற்கு அடிப்படையான காமத்தையும் பற்றி ஏதாவது கேட்டால் அதை சொல்லிக்கொடுக்க யாரும் இல்லை. காமத்தை புரிந்துகொள்ள தன் மாமா நாலாப்பாட்டு நாராயண மேனோன் எழுதிய ‘ரதி சாம்ராஜ்யம்’ என்ற நூலை வாசித்தேன் என்கிறார் மாதவிக்குட்டி. காதலைப்பற்றி அதிகாரப்பூர்வமாக சொல்ல மகாத்மா காந்தியாலும் முடியவில்லையே என்கிறார். ஆனாலும் அவர் கதைகளில் காதல் முக்கியமான பேசுபொருள். தன் சுயசரிதையில் பதினான்கு காதல்கள் பற்றி சொல்கிறார். முதல் அத்தியாயத்திலேயே மூன்று காதலர்கள் வந்துவிடுகிறார்கள். முதலில் அவருக்கு சிகிச்சை செய்யும் மருத்துவர். ”நான் அவரை ஆழமாக காதலித்தேன்.” என்கிறார். வேறு ஒரு காதலை இப்படி சொல்கிறார்: ” அச்சம் நிறைந்த பழுப்புநிற கண்களும், அழகான உடலும் கொண்ட ஒருவன் மேல் எனக்கு மெல்லிய காதல். கொஞ்ச காலத்திற்கு பிறகு அவன் இயல்புகள் எனக்கு சலிப்பூட்டின, நான் அவனை விட்டு விலகிவிட்டேன். பதினைந்து வயதில் நான் பூப்பெய்திய போது ஒரு இளைஞன் கேமிராவுடன் என் வீட்டிற்கு விருந்தினனாக வந்திருந்தான். அவன் என்னை விக்டோரியா மெமோரியலுக்கு முன்னால் நிறுத்தி ‘நீ அழகி’ என்றான். என் திருமணத்திற்கு அவன் வந்திருந்தான் ”. அப்படி வந்துபோய்க்கொண்டிருந்த காதல்களாலும், கணவனுடன் காமத்திலாடிய இரவுகளாலும் ஆனது தன் உடல் என்று மாதவிக்குட்டி சொல்கிறார். ” என் உடல் விருந்தினர்கள் வந்துபோய்க்கொண்டிருக்கும் ஒரு நாட்டிய அரங்கு போன்றது. கேளிக்கை விருந்து நடக்கும் பெரிய கட்டிடம் போன்றது. நடனக்கலைஞர்கள் ஆடினார்கள். இசைக்கலைஞர்கள் சங்கீதத்தை எழுப்பினார்கள். ஒவ்வொரு விருந்தினரும் இன்பத்தை, போகத்தை தேடியவர்கள்.”

காந்திய விழுமியங்களுக்கு வெளியே இருக்கும் அவர் வாழ்க்கை, சொந்த உடலை ஒரு நாட்டிய அரங்காக , இன்பத்தின் பிறப்பிடமாக ஆக்குவது- இந்த இரண்டு அடுக்குகளுக்கும் அப்பால் அவரது சுயசரிதை மூன்றாவது அடுக்கு நோக்கி நகர்கிறது. ஆன்மா சார்ந்தது என்றோ, உடல் சார்ந்தது என்றோ, கவிதை சார்ந்தது என்றோ சொல்லத்தக்க அந்த மூன்றாவது அடுக்கை நோக்கி அவரது சுயசரிதை உயர்கிறது. அந்த தளத்தில் சாராம்சமானவற்றை நிகழ்த்துவது அவரது உடலின்பம் அல்ல, உடலை அழிப்பது சார்ந்த கற்பனைகள்தான். ” கொஞ்ச நாட்களாக ஆஸ்பத்திரியில் பிரக்ஞை நலிந்த நிலையில் படுத்திருக்கிறேன். மரணத்தின் மணிமுழக்கம் என்று கவிஞர்கள் சொல்லும் விஷேஷமான, புனிதமான முழக்கத்தை நான் இரண்டுமுறை கேட்டுவிட்டேன். மூன்றாவது மணி அடிக்கும்போது என் ரயில் பிளாட்பாரத்தைவிட்டு துடிதுடித்தபடி முன்னே சென்றுவிடும் என்று நினைக்கிறேன். அதனால்தான் இதை இவ்வளவு வேகமாக எழுதுகிறேன்.” முழுக்கமுழுக்க காவியம்போன்ற இந்த துயரமான உணர்வுநிலையில் அவசரமாக எழுதப்படுவதால் தன் எழுத்து எவ்வளவுதூரம் வடிவமற்றதாக இருக்கிறது என்று மாதவிக்குட்டி சொல்கிறார்.

“ நான் இன்று ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் எழுதுகிறேன். தொழுநோயால் விரல்களை இழந்த ஒருவன் தன் குச்சிபோன்ற கைகளால் தட்டச்சு செய்வதுபோல, கூடை முடைவது போல நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். சொற்களின் போதாமை என் கலைப்படைப்பை எல்லைக்குட்பட்டதாக ஆக்குகிறது.” ஆனாலும், மிகக்குறைந்த சொற்களால் அவர் உருவாக்கும் வானம் முழுக்க அவ்வளவு நட்சத்திரங்கள் நிறைந்திருக்கின்றன. மரணம் கண்முன்னே இருக்க மருத்துவமனையில் படுக்கையிலிருக்கும்போதுதான் அவர் தன் சுயசரிதையான ”என் கதை”யை எழுதத்தொடங்குகிறார். நீரில் மூழ்கி இறப்பது போலத்தான் தன் நிலை என்று அவர் சொல்கிறார்- என்ன எழுதினாலும் மிக அருகிலியே இருக்கும் மரணத்தை ஒருமுறை பார்த்துக்கொள்கிறார். ” நீரில் மூழ்கி இறக்கப்போகிறவர்கள் மரணம் நெருங்கும்போகும் சில நிமிடங்களில் அவர்கள் வாழ்க்கையின் அத்தனை நிகழ்வுகளையும் முழுமையாக பார்த்துவிடுவார்கள் என்று நான் எங்கேயோ வாசித்திருக்கிறேன். நுரையீரலை நீர் ஆக்ரமிக்கும் நிமிடத்தில் ஞாபகசக்தி அதன் உச்சத்தை எட்டியிருக்கும்”. இவ்வாறு நீர் நிறைந்த நுரையீரலுடன், மூளை முழுக்க நினைவுகளுடன், கண் மரணத்தை உற்றுப்பார்த்தும்; காதுகள் மரணத்தின் புனிதமான மணியோசையை கேட்டும் படுக்கையிலிருந்த நாட்களுக்கு பிறகுதான் மாதவிக்குட்டி என் கதையை எழுதி முடிக்கிறார். அவரது சுயசரிதையில் மரணத்தின் நெடி நிறைந்த மூன்றாவது அடுக்கு காவியம்போன்ற படிமங்களால் ஒளிரக்கூடியது. இந்த சுயசரிதையை எழுதத்தொடங்கும்போது ஸ்ரீகிருஷ்ணனை பிரார்த்தித்தது பலனளித்திருக்கிறது. ஆஸ்பத்திரியின் தன் அறையை பற்றி எழுதுகிறார்: இது 565-வது அறை. சென்றமுறை வந்தது இதயத்திற்கும், நுரையீரலுக்கும். இங்கு எல்லோரும் என்மேல் இரக்கத்துடன் இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய அநாதைக்கு மிக ஆடம்பரமான மரணத்தை தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆஸ்பத்திரியின் ஒவ்வொரு படுக்கையிலும் பனி உருகி வழிகிறது. ஒவ்வொரு நோயாளியையும் தொந்தரவு செய்வது மரணபயம்தான் ”

அந்த தருணத்தில் தன் வாழ்க்கையை திரும்பப்பார்த்து அன்பிற்கான அவரின் அலைச்சல்களை மாதவிக்குட்டி நினைவுகூர்கிறார். ” நான் தேடிக்கொண்டே இருந்தேன். என் ஆதர்ச காதலனை, ராதையை தனியாக விட்டுவிட்டு மதுராவிற்கு சென்று அவளை மறந்த குரூரமான இதயம்கொண்டவனை. ஆண்களின் இதயத்தில் இழைந்திருக்கும் குரூரத்தைதான் நான் தேடிக்கொண்டிருந்தேன். என்னை முழு சுதந்திரத்தோடு இருக்க அனுமதித்த தாஸேட்டனை, நடுவயதைச்சேர்ந்த புத்திசாலியான என் வாசகர் ஒருவரை, என் ஆன்மாவிற்கு நெருக்கமாக இருந்த கார்லோவை  கைகளால் புறந்தள்ளிவிட்டு நான் ஏன் உலகின் எல்லா மூலைகளிலும் அன்பிற்காக தவித்தபடி அலைந்துகொண்டிருந்தேன்? நான் மறைமுகமானமுறையில் எதிர்பார்ப்பது என் அகங்காரத்தின் மரணத்தைத்தான். என் கழுத்தில் கயிற்றை இறுக்கும் ஆராச்சாரைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்” மரணமும், அன்பும் இணைந்த, ஆராச்சாரும் காதலனும் ஒன்றாக ஆகும் காவியம் போன்ற உலகில்தான் மாதவிக்குட்டி வாழ்ந்தார்.

வாழ்க்கையின் முழுமை என்பது என்ன? அதில் ஒழுக்கத்தின், அன்பின், படைப்பாக்காத்தின் பங்குதான் என்ன? அவரது சுயசரிதையில் மாதவிக்குட்டி இவற்றைப்பற்றி சொல்கிறார். இந்த உலகில் வாழ்ந்துகொண்டே மரணத்தின் உலகை உற்றுப்பார்த்து வாழ்வதைப்பற்றி அவர் எழுதுகிறார்: “ ஒரு காலை வாழ்க்கையிலும் மற்றொரு காலை இறந்தவர்களின் உலகிலும் வைத்திருப்பதுதான் ஒரு மனிதனால் கையாளமுடியக்கூடிய முழுமையான உலகம். அப்போது அவன் சமநிலையானவனாக உணர்கிறான். அந்த நிலையில் அவன் அடையும் தரிசனம் அடியற்ற ஆழம் கொண்டது ” எவ்வளவு  தீவிரமான சொற்கள்! இந்த தரிசனத்தை வைத்துதான் நம்முடைய ஒழுக்கநெறிகளின் ஆழமின்மையை மாதவிக்குட்டி புரிந்துகொள்கிறார். அழியும் ரத்தமும் சதையும் கொண்ட இந்த உடலை அடிப்படையாக்கொண்டதுதான் நம் ஒழுக்கநெறிகளும், விதிகளும். உடலுக்கு அப்பால் உள்ள அழிவற்ற ஆன்வாவிற்கு எந்த அடித்தளமும் இல்லை. இலக்கியவாதியின் முதல்கடமை அவனை அவனே ஒரு சோதனை எலியாக மாற்றிக்கொள்வதுதான். வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தப்பிக்க முயலவேண்டாம். மனித வாழ்க்கையின் எல்லாபக்கங்களையும் பதிவுசெய்வதுதான் அவன் கடமை. அவன் உடல் புழுக்களால் மட்கினாலும் அவன் எழுதிய சொற்கள் சில சந்தர்ப்பங்களில் அழிவின்மைகொண்டதாக ஆகிவிடும் ” இலக்கியவாதியின் சொல் ஏன் அழிவற்றது என்பதை அவர் விளக்குகிறார். “ இலக்கியவாதி எதிர்காலத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துகொண்டவன். அவன் பேசுவது உங்களுடன் இல்லை, உங்களுக்கு பின்னால் வரும் உங்கள் சந்ததிகளிடம்.”

அழகிய மணவாளன்

எந்த காந்திய விழுமியத்தையும், எந்த நோன்பையும், எந்த வலிமிகுந்த கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்காமல் இப்படி வெளிப்படையாக எழுதுவது ஒருவகையான ”strip tease” (ஆடைகளை ஒவ்வொன்றாக களைவது) என்று சொன்ன விமர்சகர்களிடம் மாதவிக்குட்டி தன் சுயசரிதையிலேயே பதிலளிக்கிறார். ஒரு நடனமங்கை நடனத்திற்குபிறகு சலங்கைகளை கழற்றி வைத்துவிட்டு, நடனத்திற்கான ஆடைகளை களைந்து அந்த நாட்டிய அரங்கிலிருந்தே விடைபெறுவது போன்ற சொற்கள் அவை. “ இப்படி வெளிப்படையாக எழுதுவது ஒருவகையான strip-tease என்று சிலர் என்னிடம் சொன்னார்கள். சரிதான். என் ஆடைகள், என் ஆபரணங்களை நான் முதலில் களைவேன். அதன்பிறகு இளம் தவிட்டு நிறம்கொண்ட இந்த தோலை நான் களைவேன். பின் எலும்புகளை நொறுக்குவேன். எலும்புகளுக்கு அப்பால் ஆழத்தில் நான்காவது பரிமாணத்தில் விஷேஷமான இருப்பிடம் எதுவும் இல்லாதது என் மிக அழகான ஆன்மா. அந்த ஆன்மாவாக இருந்து கேட்கிறேன்: உடல் என்ற ஆடையை களைந்து, முழுநிர்வாணமாக நிற்கும் என்னை நீங்கள் நேசிப்பீர்களா? ”

தமிழில் அழகிய மணவாளன்

முந்தைய கட்டுரைAsymptote, பிரியம்வதா
அடுத்த கட்டுரைநா.தர்மராஜன்